நேர்காணல்: கிருஷாங்கினி
சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்
தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு தளங்களில் பங்கெடுத்துள்ளீர்கள் – கவிஞராக, சிறுகதையாளராக, பதிப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, செவ்வியல் இசை, நடனம் -இவைகள் குறித்த கட்டுரைகள் என மிகப்பெரும் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். பொதுவாக உங்கள் வாழ்க்கை நாடகத்தில் உங்களை யாராக உணர்கிறீர்கள்?
காலத்தோடு பயணிக்கும்போது அது என்மேல் பதிக்கும் பாத்திரங்களை நான் மனப்பூர்வமாக ஏற்று நடித்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். எனது நிகழ்காலத்தை முழுவதுமாக வாழ்கிறேன். கவிதைகள், சிறுகதைகள் எல்லாம் க்ஷணப்பித்தம்; இசை, நடனம் லயிப்பு; பதிப்பாளராக கையைக் கடித்துக்கொண்டதுதான் மிச்சம். மொழிபெயர்ப்பு, என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளுகிறது. எழுத்து என்னை வாழவைக்கிறது, என்னோடு வாழ்கிறது.
நெல்லை அரிசியாக்கி அதில் எத்தனை வகை உணவு செய்து சாப்பிடுகிறோம். அரிசி வடித்த கஞ்சியை உப்பிட்டு பசியாற்றுவதிலிருந்து பழைய சோற்றை நீரூற்றி பசியாறுவதும், நொய்யைக் கஞ்சி காய்ச்சுவதும், கஞ்சியே ஒரு விருந்தாவதும், பிரியாணியும் என எத்தனை எத்தனை வகை? அரிசியில் சிற்றுண்டி வகைகள் வேறு. எந்த நிலத்தில் நெல் முளைக்குமோ அதே நிலத்தில் குழிபறித்து நீர் புகாமல் பூமியில் இட்டு அதை குழிநெல்லாக்குகிறோம். அது இரவில் திருட்டுப்போகாமல் இருக்க அதன் மீது கட்டிலைப் போட்டு உறங்குகிறோம். நெல் என்பது ஒன்றுதான். அதைப் போலவே சொல் என்பதும். ஏற்கனவே நான் கேட்டும் படித்தும் என் சேமிப்பில் என் மனதில் பதிந்த சொற்களை நான் என் படைப்புகளில் பயன் படுத்துகிறேன். கவிதையாக்க வேண்டும் என தோன்றும் கருவைக் கவிதையாக்கியும், சிறுகதையாக்க வேண்டும் என தோன்றும் கருவைச் சிறு கதையாக்கியும் இறக்கி வைக்கிறேன்.
இசை, நாட்டியம், ஓவியம் போன்ற இன்னமும் பல கலைகள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு எழுத்தாளன் தான் என்ன நினைக்கிறான் என்பதை வெளியில் சொல்லிவிடுவான். அவன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பலவற்றையும் தன்வரலாறாக இல்லாமலும்கூட படைப்பில் பதிவிட்டுவிடுவான். ஒரு ஓவியனோ, சிற்பியோ, இசைக் கலைஞனோ, நாட்டியம் ஆடுபவரோ இதைச் செய்ய முடியாது. தெரியாது. எனவே அவர்களின் கலைப் பயணத்தை, அதில் ஏற்பட்ட மாற்றங்கள், அதில் அவர்கள் புகுத்திய புதுமைகள், சாதிக்க நினைத்து முடியாமல் போனவை, சாதித்தவை இவற்றை வெளிப்படுத்தவே நான் இவற்றைத் தொடர்ந்து பதிவு செய்கிறேன். ஆனால், அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். இசைக் கலைஞர்கள் பாடிக்காட்டிவிடுவார்கள். அதை நாம் எழுத முடியாது. ஒரு ஓவியன் எண்ணத்தை வண்ணத்தில் இட்டு நிரப்பும் போது அவன் அறியாமலேயே வண்ணங்கள் கோடுகள் கருப்பொருட்கள் மாற்றம் அடையும். இத்தகைய கலைஞர்கள் பேசும் போது அதில் ஒரு தொடர்ச்சியே இருக்காது.

உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்; உங்கள் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக நான் கருதுகிறேன்.
என்னுடைய தாத்தா ஹெச். ராமசாமி அய்யர் பழனியில் 1800 களில் சொந்தமாகப் பள்ளி வைத்து நடத்தினார். தன்னுடைய சொத்துக்களை யெல்லாம் விற்று இருபது ஆண்டுகள் வரை அந்தப் பள்ளியை நடத்தினதாக அம்மா சொல்லி இருக்கிறார். தாத்தாவின் படம் பழனி ஹைஸ்கூலில் இருந்ததையும் பார்த்திருக்கிறேன். ஆனாலும் கடைசியில் தன்னால் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால் அதை அன்னிபெசண்ட்டிடம் இலவசமாகக் கொடுத்து விட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர். அவருடைய கையெழுத்தில் நீண்ட நீண்ட நோட்டுகளில் தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றிற்கு விளக்கம் எழுதி இருந்தவை, நீண்ட நாட்கள் வரை எங்கள் வீட்டில் இருந்தன. அதை ஒரு பொக்கிஷம் போலப் பாதுகாத்தோம். ஆனால், எனக்கு அதில் ஒன்றும் புரியாது. அவர் நீண்ட நோட்டுகளில் எழுதியதைப் பார்த்ததால்தானோ என்னவோ நானும் நீண்ட நோட்டுகளில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
தாராபுரத்தில் எங்கள் வீட்டிற்குப் பெரும் கர்நாடக இசைக் கலைஞர்கள் வருவார்கள். எனவே இசையும் பரிச்சயம். என் அம்மாவும்- பூரணி- கவிஞர். அண்ணா -ஞானரதம் இதழில் பங்கெடுத்துக்கொண்ட கே.வி. ராமசாமி கவிஞர். கலாஷேத்ராவுடன் சிறு வயது முதலே தொடர்பு கொண்ட குடும்பம் கணவர் நாகராஜனுடையது. அவர் என் மாமா மகன். எனவே சுற்றிச் சுற்றிக் கலைகள் இருந்து கொண்டே இருந்தன. ஆண்-பெண் குழந்தைகள் என்னும் பாகுபாடு கிடையாது. எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. நான் நினைத்திருந்தேன் இது போலத்தானே எல்லாவீடுகளும் இருக்கும் என. மேலும் ஏற்கனவே பார்த்த காட்சிகளை நடிப்பதுதானே வாழ்க்கை. ஒரு சிறுமி துண்டைப் போட்டுக்கொடு மேலாடையாக பாவித்து அம்மா வேடமிட்டு சமையல் செய்வாள். சிறு குச்சியை எடுத்துக் கொண்டு ஆசிரியையாவாள். அப்படித்தான் நானும் எழுதினேன். எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.
என் அம்மா 1935 ஆம் ஆண்டிலிருந்து 60 ஆண்டுவரை ஹிந்தி கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வது முடியாததால் ஹிந்தி மொழியை அவர் தனது ஆயுதமாகக் கொண்டார். அந்தக்காலத்தில் இது போன்ற ஒரு நிலையும் இருந்தது. நிறையப் பெண்கள் வீட்டிற்கு வந்து ஹிந்தி படிப்பார்கள். அவர், மொழியுடன் கூடவே பெண் விடுதலை சார்ந்த விஷயங்களையும் அவர்களுக்குக் கற்பிப்பார். மாதர் சங்கம் நடத்தினார். அதில் பெண்களை மட்டுமே வைத்து ஒரு முழுநீள நாடகமும் போட்டார். அதற்கு இசை அமைத்தவர் நாடகக் கலைஞர் ஆர்.எஸ் மனோஹரின் உறவினரான பஞ்சாபகேசன் என்னும் இன்றைய சின்னத்திரை நடிகர் டில்லி குமார். இது நடந்தது 1957இல்.
சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்ப்பாளர்- அம்மாவின் மாணவி. தன்னுடைய கடைசிக் காலம் வரை அம்மாவுடன் தொடர்பில் இருந்தார்.அவர் சாகித்ய அகாடெமி பரிசு வாங்கியபோது கூட அம்மாவிற்குப் புடவை வாங்கிக் கொடுத்து வணங்கிச் சென்றார்.
‘புஷ்பித்தல்’ என்னும் உங்கள் முதல் சிறுகதை கணையாழியில் வெளியானபோது, அக்கதை பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதையைப் படித்த போது அவளுக்குத் தோன்றியது போலவே எனக்கும் தோன்றியது இது போன்ற அனுபவம் எனக்கும் இருக்கிறது. ஓவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். இதை நான் ஏன் என் பாணியில் எழுதக் கூடாது என நினைத்தேன் அது ஒரு மன உளைச்சல் நிரம்பிய பொழுதுகள். உடலைப் பற்றி சொல்லிக்கொடுக்காத சமூகம். பருவமடைதல் இயற்கை என்ற புரிதலும் இல்லாது போயிற்று. நான் என் அனுபவத்தையும் அம்மா என்பவளின் பேறுகால ரத்தத்தையும், அபார்ஷன் கால ரத்தத்தையும் இணைத்தேன். எல்லாம் கண்ணால் கண்டவை. செங்கல் கட்டிகளைப் போல உதிரக்கட்டிகள். வலி வேதனை. தோட்டத்தில் குழி தோண்டிப் புதைக்கப்படும் ரத்தக்கட்டிகள். ‘புஷ்பித்தல்’ என்ற சிறுகதையாக அதை ஆக்கினேன். அது எப்படி எதிர் கொள்ளப்பட்டது என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
அம்பை சொல்லி இருக்கிறாள், அவளது முதல் சிறுகதைத் தொகுப்பு வந்து பத்து ஆண்டுகள் வரை எந்தவிதமான எதிர்வினையும் இல்லை என. முதலில் நாம் அத்தகைய எழுத்துகளை புரிந்துகொள்ள முயல வேண்டும். பிறகு ஜீரணிக்கவாவது முயல வேண்டும். மௌனம் கூட சம்மதம் அல்ல.
கவிதைகள் என்று நிறைய பேர் எழுதினாலும் வெகுசிலரே அந்தத் துறையில் வெற்றி பெறுகின்றனர்.
குறிப்பாக பெண் கவிஞர்கள் – கவிதைகளைக்குறித்து நிறைய பேசியாகிவிட்டது. நீங்கள் கவிஞராக ஓரளவு வெற்றி பெற்றதாக நினைக்கிறீர்களா?
கவிஞராகவும் அங்கீகாரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. வெற்றி பெற்றிருக்கிறேனா என்பது தெரியாது.எந்த ஒரு முயற்சிக்கும் ஓர் ஆரம்பம் என்கிற ஒன்று உள்ளது. உங்களது மொழிபெயர்ப்பு முயற்சி எப்போது ஆரம்பித்தது? என்ன தேவை உங்களை மொழிபெயர்க்கத் தோன்றியது?
எந்த ஒரு முயற்சிக்கும் தனக்குத் தெரிந்ததை வெளியில் சொல்லிவிடும் ஆர்வம் காரணமாக இருப்பதைப் போல நமக்குத் தெரிந்த இவற்றை மற்றவர்களுடனும் பகிர வேண்டும் என்ற விருப்பம்தான் காரணம்.ஹிந்தி முதுகலை படிக்கும்போது நவீன இலக்கியம் சார்ந்த, குவர் நாராணயணன் எழுதிய நசிகேதா என்ற கண்ட காவ்யம் எனக்குப் பிடித்தது. அது நசிகேதனை நவீனமாக வடிவமைத்திருந்தது. அதில் சில பகுதிகளை மொழிபெயர்த்தேன். அது சில இதழ்களில் வெளியும் வந்தது.
நீங்கள் இதுவரை எத்தனை நூல்களை மொழிபெயர்த்துள்ளீர்கள்? மொழி பெயர்ப்பிற்கு உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததாக கருதுகிறீர்களா?
எண்ணிக்கை எனக்குச் சரியாகத் தெரியவில்லை. உதிரிகள் தான் அதிகம். அவற்றைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும். எனக்கு படைப்பிலக்கியத்திலும் சரி. மொழிபெயர்ப்பிலும் சரி. கூடுதலாக தகுதிக்கு மேலாக அங்கீகாரம் கிடைக்கிறது என நான் நினைக்கிறேன்.
ஹிந்தியில் வெளிவந்திருக்கும் தலித் இலக்கியம், நாவல், கட்டுரைகள் கவிதைகள் என்று நிறைய மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வயதிலும் சோர்வின்றி இயங்கிக்கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பதில் உங்களுக்கிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?
தலித் இலக்கிய கட்டுரைகள் அடங்கிய சிறு தொகுப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. அதிலிருந்த ஒரு கட்டுரையில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்தும் தலித் இலக்கியங்களைப் பற்றியும் அதன் முக்கிய எழுத்தாளர்கள் பற்றிய பட்டியலும் இருந்தது. ஆனால். தமிழ் மொழியைப்பற்றிய எந்தப் பதிவும் இல்லை. எனக்குக் கோபம் வந்தது. ஏன் இல்லை? அறியாமையா அல்லது நிராகரிப்பா? அயோத்திதாச பண்டிதரிலிருந்து ஒரு பெரும் சங்கிலி தமிழில் இருக்கும்போது ஏன் அது அவர்களுக்குத் தெரியவில்லை என்ற ஆதங்கமும் எழுந்தது. அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். இதெல்லாம் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு. அத்துடன் இன்னமும் சில கட்டுரைகளையும் தமிழில் கொண்டுவர எண்ணினேன். பல கட்டுரைகளையும் தமிழாக்கமும் செய்துவிட்டேன். அந்த முதல் கட்டுரை சௌந்திர சுகன் சிற்றிதழில் வெளிவந்தது. சுகன் எந்தவிதமான தடையும் சொல்லவில்லை. பிரசுரித்தார்.
நிறைய பயத்துடன் மொழிபெயர்த்தேன். நிறையத் தயக்கமும் இருந்தது. என்னிடம் ஏற்கனவே இருக்கும் சொற்களைக் கொண்டுதான் நான் மொழிபெயர்க்கப்போகிறேன். அவைதான் மொழிபெயர்ப்பிலும் இடம்பெறும். ஆனால், என்னிடம் இருக்கும் சொற்கள் எப்படியானவை? பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களை அவமானப்படுத்தும் விதமாகவோ, முன்னரே என்னிடம் ஊறி இருக்கும் சொற்களையோ நான் பயன்படுத்தும்போது அவை எப்படிப்பட்ட பொருளைக் கொடுக்கும் என்ற பயமும் தயக்கமும்தான். நிறைய யோசித்துச் சிற்றிதழ்களுக்கு அனுப்பினேன்.
நீங்கள் இந்தி கற்றிருப்பதால் பிற மொழி இலக்கியங்களைக் கற்றிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவற்றுள் உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?
நான் ஹிந்தி படித்தேன். ஆனால் கற்பிக்கவில்லை. அதில் நவீன இலக்கியத்திற்கு இடமும் இருக்காது. பழைய இலக்கியங்களையே திரும்பத்திரும்பக் கற்பிப்பது சலிப்பைக் கொடுக்கும்.
ஹிந்திலிருந்து முன்னமேயே சில கவிதைகள் கட்டுரைகளை மொழிபெயர்த்து மஞ்சரியில் அவை பிரசுரமும் ஆகி இருக்கின்றன. மிகவும் சோம்பேறி நான். தொடர்ந்து எதையும் செய்ய மாட்டேன்.
கபீர் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்.
சிறுவயதில் நீங்கள் படித்த புத்தகங்கள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி…
எனக்கு இந்தக் குழந்தைகள் புத்தகங்கள் எனப்படும் அம்புலிமாமா, கண்ணன் போன்ற பத்திரிகைகளைப் படிக்கும் ஆர்வம் இருந்ததில்லை. அந்தக் கதைகளில் அரசன் வந்து காப்பாற்றுவான் என்றோ அல்லது ஆண்டவன் வந்து காப்பாற்றுவான் என்றோ இருக்கும். தீர்வுகள் பொருத்தமற்றதாய்த் தோன்றும். பிறகு நாம் எதற்கு என்றும் தோன்றும்.
அம்புலிமாமாவில் விக்ரமாதித்தனும் வேதாளமும் கதைகளில் போடப்பட்டிருக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும். ஒரு தோளில் வேதாளத்தைப் போட்டுக்கொண்டு, அதை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு, அந்த வேதாளம் துவண்டு கிடக்கும் நிலையில் இன்னொரு கையில் வாளுடன் ஒரு நீண்டவழிப் பாதையில் ஆள் அரவமற்ற வனப்பகுதியில் அவன் நடந்து செல்லும் போது அந்த நீண்ட பாதையில் நானும் கூடவே செல்வேன். நான் விக்ரமாதித்தனிடம் அந்தக் கத்தியைக் கொஞ்சம் உறையில் போட்டுவைக்க கேட்டுக்கொள்வேன். பிறகு அந்தக் கையை நான் பிடித்துக்கொண்டே அந்த வனத்தை கொஞ்சம் பயத்துடனும் ஆர்வத்துடனும் கடப்பேன். முடிவில்லாத நெடும் பாதை அது. இருபுறமும் செடிகொடிகளும் உயிரினங்களும் இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும் என்னிடம்.
தொன்னூறுகளில் தலித் இலக்கியம் வர ஆரம்பித்தது. அவற்றைப் படித்தீர்களா? அதை எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
ம்.. படித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். தேடிப் படிக்கவில்லை என்றாலும் கிடைத்தவற்றைப் படித்தேன். ஒரு புதிய உலகத்திற்குள் போவதுபோல் இருக்கும். பிந்நாட்களில் ஜெ. பாலசுப்ரமணியம் ஸ்டாலின் ராஜாங்கம், போன்றோரின் கட்டுரைகளை ஒரு ஆலாபனையைப் போன்று சில நாட்களுக்குப் படித்துக் கொண்டு இருப்பேன்.
அது எனக்கு ஒரு மனநிலையையும், தெளிவையும், புரிதலையும் கொடுக்கும். சிலசமயங்களில் மொழிபெயர்ப்புக்குப் பொருத்தமான சொற்களும் கூடக் கிடைக்கும். தன்வரலாறுகளை மொழிபெயர்க்கும்போது அதிலிருக்கும் வாழ்க்கையின் வலிகளை அவமானங்களை அப்பட்டமாக உணரும்போது அவை எனக்குள்ளும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். அவை படைப்பாளியின் மனதின் அடி ஆழத்திலிருந்து வெளியாகும் சொற்கள். மொழிபெயர்த்த பிறகும் அவை என்னுள் தங்கிவிடும். ஒரு படைப்பாளிக்குத் தன்னுடைய தன் வரலாற்றில் மட்டுமே வலி வேதனை ஊறி இருக்கும். ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு ஒவ்வொரு தன்வரலாறும் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டுவிடும்.
தலித் இலக்கிய மொழிபெயர்ப்புகளை வெளியிடுவதில் நீங்கள் என்னென்ன சிரமங்களைச் சந்தித்தீர்கள்?
ஒரு கட்டுரை முதலிலேயே சொன்னபடி சௌந்திர சுகனில் வெளியானது. யாரும் அதற்கான எந்தவிதமான எதிர்வினையையும், தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பற்றிய எதிர்வினை எதையுமே சொல்லவும் இல்லை. அது பற்றிய கோபமும் எழவில்லை.மீண்டும் சில கட்டுரைகளை -மொழிபெயர்ப்புகளை இன்னமும் சில பத்திரிகைகளுக்கு அனுப்பும் போதுதான் எனக்கு எதிர்வினைகள் வந்தன. நேரிலும் தொலைபேசியிலும் நிறைய அறிவுரைகளும் கூட வந்தன. முதலில் அவர்களின் பதிவு என்பது இந்தக் கட்டுரைகளை எங்கள் இதழில் பிரசுரிக்க மாட்டோம் என்பது.
தலித் பற்றிய எழுத்துகளை நாங்கள் இடம்பெறச் செய்வதில்லை என்று சொன்னார்கள். எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் சிலர், நீங்களோ நல்ல(?) சாதியில் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை. இதற்கென்று இதழ்கள் இருக்கின்றன. எழுத்தாளர்களும் இருக்கின்றனர். இந்த வேலையெல்லாம் விட்டுவிடுங்கள் என அறிவுரை வேறு. கொஞ்சம் கூட கூச்சமின்றி இருந்தது அவர்களின் பதில். எல்லோரும் நண்பர்கள்தான். ஆனால், இன்னமும் பல சிற்றிதழ்கள் இவற்றை மறுப்பற்றுப் பிரசுரமும் செய்தன. ஏன் இவர்கள் எழுத்தில் இருக்கும் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?
மேலும் “இது போன்ற எழுத்துகளை நீங்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் எழுத்தையும் நிராகரிக்க வேண்டி வரும் என்றனர். நான் ‘சரி, போட வேண்டாம்’ என்றேன்.
ஏனெனில் இதைப்போன்ற ஒரு அனுபவம் எனக்கு 2000 ஆம் ஆண்டு கிடைத்தது. நான் பெண்கள் கவிதைகளைத் தொகுத்தபோதும் பலருடைய அறிவுரைகளைக் கேட்டிருக்கிறேன். பயமுறுத்தல்களையும் கூட. அகாலத்தில் போன் செய்து தொல்லை கொடுத்தார்கள். இனி உங்களுடைய பெயரை படைப்பிலக்கியப் பட்டியலில் சேர்க்க மாட்டோம் என்றார்கள். ‘நான்,’சரி, சேர்க்க வேண்டாம்’ என்று கூறினேன். ‘எல்லாம் அலையுதுங்க’. என்றனர்.
இந்த மொழிபெயர்ப்பு சார்பான அறிவுரைகள் எனக்குள் ஒரு தீவிரத்தன்மையை உருவாக்கியது. எனவே மொழிபெயர்ப்பதில் முதல் இடம் இவற்றிற்கே எனத் தீர்மானித்தேன். ஒரு ப்ராஜெக்டாக வரும் மொழிபெயர்ப்புகளுக்கு இது பொருந்தாது.
ஆனாலும் இன்னமும் எனக்குள் ஒரு தயக்கம் இருக்கிறது. மிகவும் கவனத்துடன் இருக்கிறேன். நான் சில கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்கு முன்னதாக ஒரு ஆலாபனையைப் போல ரவிக்குமார் கட்டுரைகளை வாசிப்பேன்.,(இவர் தன்னுடைய ‘போதி’, ‘தலித்’ போன்ற இதழ்களில் தொடர்ந்து என்னுடைய கட்டுரைகளை பிரசுரம் செய்கிறார். நூல்கள் வெளியிடுகிறார்.) எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட, போஸ்டல் இண்டெக்ஸ் நம்பரைப் போல ஏரியா பிரித்துவிடுகின்றனர். இவற்றை எல்லாம் நாம் எப்போது உடைப்பது?
மொழிபெயர்ப்புகள் அந்தந்த மொழிகளின் சூழலையும் நிலைகளையும் புரிந்துகொள்ள உதவும் என்ற எண்ணத்தில்தான் நானும் தொடர்ந்து மொழிபெயர்க்கிறேன்.
இத்தகைய மொழிபெயப்புகளில் வரும் சில பழக்க வழக்கங்கள் புரியாமல் இருக்கும். அந்தந்த மொழி, சூழல் எல்லாம் அதில் இருக்கும். அவற்றை நான் நிச்சயமாக அனுபவித்ததில்லை. சிலரிடம் கேட்டுக்கொண்டு மொழிபெயர்ப்பேன். சில உணவு, திருவிழா போன்றவற்றையும் கேட்டுக்கொள்வேன். ( ஒரு கவிதையில், பண்டிட்கள் தன்னுடைய அப்பா இல்லாததால் நாலணா காசை அப்படியே தட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் என்றும் என் சட்டைப்பை எப்போதும் நாலணா காசுகளால் நிறைந்திருக்கும் என்றும் அதோடு துன்பங்களும் பையில் பொங்கி வழியும் என்றும் சொல்லி இருப்பார் கவிஞர். அந்த நாலணாவின் பொருள் எனக்குப் புரியவில்லை. அப்பா இல்லாத பையனிடம் காசு வாங்க மாட்டார்களோ என்னவோ. இது போல பலதும் புரியாது.) பெயர் தெரியவில்லை எனில் அதை அப்படியே எழுதிவிடுவேன். தமிழகத்தில் ஏற்கனவே பரவி இருக்கும் பகுத்தறிவு வாதத்தால் சாதியின் தாக்கம் கொஞ்சம் குறைவு என எண்ணுகிறேன். வடமாநிலங்களில் சாதியப் பாகுபாடு இன்னமும் தீவிரமாக இருக்கிறது என்பது என் நினைப்பு.
மேலும் தமிழில் இருப்பதைப் போல பட்டியலினத்தவர் என்று ஹிந்தியில் குறிப்பிடுவதில்லை. தீண்டத்தகாதவர், தலித், உயர்ந்த, தாழ்த்தப்பட்ட போன்ற சொற்களையே பயன்படுத்துவதால் நான் அதே சொற்களைப் பயன்படுத்துகிறேன்.
‘தரித்ர’’ என்ற வடமொழிச் சொல். பாலியில் தளித் என்று இருக்கிறது. தரித்திரம் என்பது ஏழ்மையைக் குறிக்கும் சொல்லே தவிர அது சாதி அல்ல. பாலி மொழியில் ‘ர’ உச்சரிப்பு மிகவும் குறைவு. தரித்திர என்ற சொல் ‘தளித்’- பாலியில் ள’ உண்டு- என்றாகி அது பின்னாட்களில் தலித் என்றாகி இருக்கிறது. இதை நான் அம்பேத்கர் எழுதி இருக்கும் பாலி இலக்கண நூலை மொழிபெயர்க்கும்போது கண்டேன். ‘தர்ம’ என்பது தம்ம என்றும், கர்ம என்பது கம்ம என்றும் (செயல்), மார்க்க என்பது மக்க (பாதை) என்றும், சூத்ர என்பது சுத்த (விதி, சூத்திரம்), என்றும் இருக்கும். ஆங்கிலத்தில் சாதாரணமாக சுத்த என்பது sutta என எழுதியிருந்தால் அது தமிழில் ‘சுட்ட’ என ஆகிவிட நேரும். இவைகளெல்லாம் மொழிபெயர்ப்பில் காணப்படும் சில சிக்கல்களாகக் காண்கிறேன்.
அம்பேத்கர் அவர்கள் எழுதிய, ஏறக்குறைய அனைத்து எழுத்துகளையும் மொழிபெயர்த்து விட்டார்கள். மொழிபெயர்க்கப்படாதது அவர் உருவாக்கிய பாலி மொழி அகராதி. அதையும் நீங்கள் ஏறக்குறைய மொழிபெயர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த வேலை நிறைவுற்றதா?
ராபர்ட் சீஸர் சைல்டர் -(12-2-1838–28-7-1876.) என்ற மேதை முதன்முதலாக பாலி அகராதியை உருவாக்கி இருக்கிறார். இவர் முதன் முதலாக பாலி பிரதியை 1869ஆம் ஆண்டு வெளியிட்டார். 1872 லிருந்து 1875 வரை பாலி அகராதியைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். அது வெளி வந்த வருடம் 1875. அதில் அவர் ஒவ்வொரு சொல்லையும் எந்த எந்த அகராதியில் எந்த எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்றும், சம்ஸ்கிருத சொல் எப்படி இருக்கிறது என்றும், அந்த சொல்கொண்ட சொற்றொடரையும் கூட எழுதி மிகத் தெளிவாக அழகாகத் தொகுத்திருக்கிறார்.
பாலி என்பது எந்த மொழியையும் சார்ந்தது அல்ல என்றும் அது ஒரு தனி மொழி என்றும் நிரூபிக்க மிகவும் பாடுபட்டவர். அவர் ஆங்கில அகர வரிசையில் பாலி சொற்களை, அதாவது a,b,c, என்ற வரிசையில் தொகுத்து இருக்கிறார். எனவேஅ,ஆ,இ,ஈ போன்ற வரிசையில் அது அமையவில்லை. இதுவே எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம். அதன் பின்னால் வந்த பாலி அகராதிகள் (பாலி- ஆங்கில அகராதி அக்கமஹா பண்டித ஏ.பி. புத்ததத்தா மஹாதேரா தொகுத்தது.
முதல் பதிப்பு 1957- இரண்டாம் பதிப்பு 1994) அகர வரிசையில் இருக்கின்றன. இதுவும் ஆங்கில எழுத்துகள் கொண்ட பாலி மொழியிலேயே இருக்கிறது. மேலும் ஆங்கில எழுத்துகள் 26 ஐக் கொண்டே எல்லாப் பாலிச் சொற்களையும் எழுதி இருக்கிறார். அதுவும் உச்சரிப்புக் குழப்பம் வராமல் இருக்க அந்த எழுத்துகளின் மேல் சில அடையாளங்கள் செய்து மிகத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார். ‘N’ எழுத்தின் மீது புள்ளி வைத்தால் அது ‘ங்’ என வரும், அதன் அடியில் புள்ளி வைத்தால் அது ‘ண்’ எனவும் அதன்மீது தலையில் ஒரு சிறு நெளி போல -‘~’ போல இட்டால் அது ஞ் எனவும் உச்சரிக்கும் வண்ணம் அது வடிவமைக்கப்படிருக்கிறது. ட, த, போன்ற எழுத்துகளுக்கும் வேறுபாடு காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
நா என்ற உச்சரிப்புக்கு ன மீது ஒரு சிறு கோடு இருக்கிறது. நெடிலுக்கு அந்த சிறு கோடு எல்லா எழுத்துகளுக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு எழுத்தின் மீது புள்ளி வைத்துவிட்டால் அது தமிழைப் போல புள்ளி வைத்த மெய்யெழுத்தாக ஆகிறது. தமிழைத் தவிர மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் க,ச,ட,த,ப என்ற எழுத்துகள் நான்கு வகைப்படும். அவற்றிற்கும் வேறுபாடுகள் காண்பித்திருக்கிறார். அவருடைய நீண்ட முன்னுரையையும் நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். ஏனெனில் அம்பேத்கர் இந்த அகராதியில் இருந்துதான் எடுத்து அதனுடைய பாலிச் சொற்களை எழுதுகிறார்;
இந்த அகராதிதான் அடிப்படை.- அம்பேத்கரின் முழுத்தொகுப்புகளில் அந்த 16 ஆம் எண் கொண்ட பாலி அகராதியைத் தயாரித்திருக்கிறார். அம்பேத்கருக்கு இந்த அகராதி நம் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கலாம். அந்த ஆங்கில எழுத்துகளை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக தேவநாகரி எழுத்துகளைப் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் சைல்டரின் அகராதி அறிஞர்களுக்கானது. அதை எளிமையாக்கி சொற்களுக்கான பொருளை மட்டும் எழுதி அதைக் கொண்டுவந்திருக்கிறார் அம்பேத்கர்.
மூலத்தில் சம்ஸ்கிருதச் சொல், சம்ஸ்கிருத அகராதிகளின் வகை என பல விவரங்கள் இருக்கின்றன. பாலிக்கு என தனியான எழுத்துகள் இருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இலக்கணமும் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட இலக்கண விதிகளே சொல்லப்பட்டு இருக்கின்றன. அம்பேத்கரின் அந்த மொழியின் மேதைமைதான் அவற்றை மக்களுக்குப் புரியும் விதத்தில் உருவாக்க வைத்திருக்கிறது. பாலிச் சொற்களின் சரியான உச்சரிப்பு கொடுக்க முயன்றிருக்கிறேன்.
அம்பேத்கரின் புத்தா அண்ட் ஹிஸ் தம்மாவை மிகச் சமீபத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தீர்கள், அது முடிந்துவிட்டதா?
ஆம், புத்தா அண்ட் ஹிஸ் தம்மாவையும் நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். (இதற்கு நான் கொரோனோவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.) அம்பேத்கரின் ஆங்கிலத்தோடு ஹிந்தியில் இருக்கும் நூலையும் ஒப்பிட்டுப் பார்த்து மொழியாக்கம் செய்துள்ளேன். ஆங்கில நூலில் இருக்கும் பாலிச் சொற்களின் உச்சரிப்பு சில சமயம் மாறியும் இருக்கலாம். மேலும் முடிந்தவரை பாலிச் சொற்களுக்கான பொருளும் இணைத்துக் கொடுத்திருக்கிறேன். இதை ஹிந்தியில் மொழிபெயர்த்தவர் பதத் ஆனந்த் கௌஸல்யாயன் என்ற பௌத்தத் துறவி. இவர் ராகுல சாங்கிருத்யாயனின் நண்பர்.
இருவருமாக இணைந்து பல வேலைகளைச் செய்திருக்கிறார்கள். இவருடைய ஹிந்தி மொழிபெயர்ப்பும் சிறப்பாக இருக்கிறது. இந்த நூல் பதிப்பிக்க தயார் நிலையில் இருக்கிறது. கொரோனா காலத்தில் மனம் கலங்கி இருக்கும் போது இந்த மொழி பெயர்ப்பு வேலை என் மனதிற்கு பெரும் அமைதியைக் கொடுத்தது. எப்போது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்க அது மனதிற்கு ஏதோ அமைதியைக் கொடுக்கும்.
ஒரு இலக்கண நூலோ அல்லது அகராதியோ முதன் முதலில் உருவானதிலிருந்து இன்னமும் மேம்படுத்தியோ அல்லது சீர்ப்படுத்தியோதான் உருவாக்குவார்கள். ஏற்கனெவே வந்ததில் திருத்தங்கள் செய்திருக்கலாம்.இது என் நினைப்பு.
அம்பேத்கர் தயாரித்துக் கொடுத்திருக்கும் அந்த அற்புதமான பாலி-ஆங்கில அகராதியை யார் வேண்டுமானாலும் தமிழாக்கம் செய்திருக்க முடியும். நான் அதில் செய்தது என்னவென்றால், அந்தப் பாலிச் சொற்களுக்கு ஒலிபெயர்ப்புச் செய்ததுதான். இதிலும் என் தனித் திறமை என ஏதும் கிடையாது. இன்னமும் இதை மேம்படுத்தியும் சீர் படுத்தியும் பலர் பின்னாட்களில் செய்வார்கள்.
உங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.. நீங்கள் படிப்பில் படு சுட்டியாக இருந்ததாக ஞாபகமா அல்லது என்னைப்போல் கடைசி பெஞ்ச்சா?
(சிரிக்கிறார்..) வீட்டின் வளர்ப்பு முறையில் என்ன கிடைத்தனவோ அவை ஆசிரியர்கள் மூலம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே என்றுமே ஆசிரியர்கள் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்ததில்லை. குட்டையாக இருந்ததனால் முதல் பெஞ்ச்.
பொதுவாக கலைஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிறையக் கலைஞர்களுக்கு தம்மைப் பற்றிய நேர்காணலோ பதிவுகளோ தமிழில் வருவதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை. ஆங்கிலத்தில் வந்தால் இன்னமும் வீச்சு அதிகம் என நினைப்பார்கள். சிலர் மறுத்தும் விடுவார்கள். சிலரைப் பல முறை தொடர்பு கொண்டு நேரம் வாங்க வேண்டும்.
ஏதோ எனக்கு ஆதாயம் என்பது போல் ஆரம்பிப்பார்கள். மேலும் இலக்கியவாதி மற்ற கலைகளில் ஆர்வம் காட்டுவதைப் போல மற்ற துறை கலைஞர்கள் நவீன இலக்கியத்தின் பக்கமோ மற்ற கலைகளின் மீதோ ஆர்வம் காட்டுவதில்லை. விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் அது குறைவு. ஏதோ கலையை அறை அறையாகப் பிரித்துப் பூட்டி வைத்து இருப்பதைப் போல தங்களை விலக்கிக் கொள்வார்கள்.
‘கலாக்ஷேத்ரா ருக்மிணி தேவி’ என்னும் நூல் வெளியிட்டீர்கள், அந்த அனுபவங்கள் குறித்துக் கூறமுடியுமா? அது 2018 இல் என்று நினைக்கிறேன்…
ஆம்,2018-இல்தான் ‘ கலாக்ஷேத்ரா ருக்மிணி தேவி’ என்ற நூல் கொண்டுவந்தேன், எங்களின் சதுரம் பதிப்பகம் மூலமாக. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருந்தேன். அதில் கலாக்ஷேத்ரா தோன்றிய விதம் அதன் வரலாறு, அவர்களின் நாட்டிய நாடகங்கள் போன்றவை அனைத்தையும் பதிவு செய்திருந்தார் சாரதா டீச்சர். இவர் அந்த நாட்களிலேயே திருமணம் தனக்கு சரியாக வரவில்லை என்று எண்ணி அந்த பந்தத்தை அறுத்துவிட்டு 1936-இல் கலாக்ஷேத்ராவிற்கு வந்து தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்தார். அந்த நூல் 80 களில் வந்திருந்தது. அப்போது கணிணி கிடையாது. அத்தனையையும் நினைவுக்குறிப்புகளிலிருந்து எடுத்துப் பதிவு செய்திருந்தார் டீச்சர்.
நாட்டிய நாடகங்கள் 1936 முதல் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன 26 நாட்டிய நாடகங்களில் வரும் அத்தனை பாடல்களையும், இயற்றியவர்களையும், அதன் ராகங்களையும், அதில் பங்கேற்றவர்களையும், அதற்கு இசை அமைத்தவர்களையும், நாட்டிய வடிவமான விதம், அது எப்படி காட்சி காட்சியாக வடிவமைத்திருந்தது என்பதையும் துல்லியமாக எழுதிவைத்திருந்தார்.
அந்த நாட்டிய நாடகங்களில் முதன் முதலாக பங்கேற்றவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன். கலாக்ஷேத்ராவின் புகைப்படக் கலைஞரான திரு நாச்சியப்பன் உலக புகைப்படக் கலைஞர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல. அவர் அனைத்தையும் ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவருடைய வாழ்நாளின் இறுதிப்பகுதியில் அவர் கோவிலூர் மடாலயத்தின் மடாதிபதியாக ஆகிவிட்டார்.
பல வெளிநாடுகளில் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தி இருந்தார். அவருடைய உதவியாளரின் அனுமதியோடு அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தினேன். கொத்தாக ஒரு பக்கமாக புகைப் படங்களை இட்டுவிடாமல், அந்தந்த நிகழ்ச்சியின் முன் அதன் புகைப்படம், இடம் பெறுகிறாற்போல அமைத்து புகைப்படங்களை ஆர்ட் தாளில் அச்சிட்டு இணைக்கச் செய்தேன். 50 அரிய புகைப்படங்கள் – ஒரு புகைப்படத்தை இணைப்பதற்கு 5 ரூபாய் ஆயிற்று. ஒரு நூலில் புகைப்பங்களுக்கு மட்டுமே 250 ரூபாய் ஆயிற்று. விற்பனை நூலக ஆர்டர் ஏதும் இல்லாமல் போனாலும்கூட மனநிறைவு இருக்கிறது. என் இந்த முயற்சிகளுக்கெல்லாம் தமிழ் வளர்ச்சித் துறை தொடர்ந்து உதவி செய்துவந்திருக்கிறது.
ஒரு தரமான சினிமாவின் காட்சிச் சதுரத்தினுள் தேவையற்ற எந்தப் பொருளும் சூழலும் அங்கு இருக்க கூடாது. அதைப் போலதான் நாட்டிய நாடகங்களிலும் உயிரற்ற பொருள்களும் கூட ஜீவித்து இருக்க வேண்டும், அங்கு. உயிருள்ள மனிதர்கள் கண்டிப்பாக ஜடம் போல நின்றுவிட கூடாது. ஜி.வி. அய்யருடன் நடந்த ஒரு உரையாடலின் போது அவர் தன்னுடைய ஒரு காட்சி சதுரத்தைப்பற்றி சொல்லிக் கொண்டு இருந்தார். ஒரு வீட்டின் கூடத்தில் இருக்கும் இரண்டு உட்காரும் பலகைகள். உட்கார்ந்து உணவருந்த உள்ளவை. அவை சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று வீட்டின் மனிதர் உணவருந்துவது. இன்னொன்று விருந்தாளிகள் வந்தால் உட்கார்ந்து உணவருந்த.
வீட்டின் மனிதர் அந்தப்பலகையை தினமும் எடுத்து எடுத்து சுவற்றில் சாய்த்து வைப்பதனால் அந்தச் சுவற்றில் பலகை ஒரு வடுவை உண்டாக்கி இருக்கும். இன்னொன்று அதிகமாக புழக்கத்தில் இல்லாததனால், அந்த வடு இருக்காது. இதை அவர் குறிப்பிட்டார். ஒரு சாதாரணமான விஷயத்திற்கு இத்தனை அக்கறை எடுத்துக்கொண்டு உன்னிப்பாக கவனித்துச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஆனால், அந்த உழைப்பு ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை நான் அன்று உணர்ந்தேன்.

உங்கள் பதிப்பகத் தயாரிப்பின் மூலம் வித்தியாசமான அனுபவங்களைத் தந்த வேறு ஏதேனும் புத்தகத்தைப் பற்றிக் கூறமுடியுமா?
ஆம், சதுரம் பதிப்பகத்தில் இதைப் போலவே நாங்கள் பதிப்பித்த இன்னொரு நூலையும் பற்றி நான் இங்கு குறிப்பிட நினைக்கிறேன். நாகராஜனின் ஓவியங்களுடன் என் கவிதைகள் வெளியிடப்பட வேண்டும் என தஞ்சை ப்ரகாஷ் மிகவும் ஆசைப்பட்டார். அதற்கான செலவு முழுவதும் தானே ஏற்றுக் கொள்வதாயும் சொன்னார். எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், தஞ்சை ப்ரகாஷ் 2000ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். நீண்டகால நண்பர் அவர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து அந்த நூலை நாங்கள் 2007ஆம் ஆண்டு கொண்டு வந்தோம். அதுதான் ‘கையெழுத்தில் கவிதைகள்’.
மனிதர்களின் கைவிரல் தடங்கள் ஒன்று போல இருக்கவே இருக்காது. அதைப் போலவே ஒவ்வொரு மனிதனின் முகச்சாயலும் தனித்தனிதான்.
எத்தனை கோடி மனிதர்கள் ஆயினும் அதே கண்கள், மூக்கு, வாய் என்றாலும் கூட ஒவ்வொன்றும் வேறு வேறுதான். தனித்துவம் வாய்ந்தது. கையெழுத்தும் ஒருவருடையதைப் போல இன்னொன்று இருக்காது. முயற்சி செய்து போலி கையெழுத்து இடுவதை விடுங்கள். இன்றையக் காலகட்டத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வு எழுதுவதையும் தவிர கையெழுத்து என்பது பயன்பாட்டிலேயே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஓலைச் சுவடியும் கூட யாரோ ஒருவரின் கைகளால் எழுதப்பட்டதே.
எனவே நானும் நாகராஜனுமாக ஒரு முயற்சி செய்தோம். அவர் ஓவியர். கையெழுத்தும் அழகாக இருக்கும். அவர் எனது கவிதைகளைக் கையால் எழுதி அதை அப்படியே அச்சாக்குவது என. ஜெராக்ஸ் எடுப்பது அல்ல. இந்த முடிவு எடுத்த பிறகு கவிதைத் தேர்வு நடந்தது. வரிசையாக நீளமான கவிதைகள் வராமலும், வெறுமனே சின்னச்சின்ன கவிதைகளாக கோர்க்காமலும் வரிசைப்படுத்தினோம். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் அல்லது ஆரம்பத்திலும் ஓரங்களிலும் கோட்டொவியங்கள் இடம் பெறச்செய்தோம். ஆனால், இது சாமான்ய பணி அல்ல. தாளில் அந்தப் பக்கத்தில் ஒரு எழுத்துப் பிழை ஏற்பட்டாலும் கூட முழு தாளையும் மறுபடியும் உருவாக்க வேண்டும். ஏனெனில் அது கல்வெட்டைப்போல. அடித்தல்கள் திருத்தல்கள் இருக்கக் கூடாது. ஏறக்குறைய ஒரு ஆண்டு தொடர்ந்து எழுதினார். கவிதை வரிகள் நெருக்கடியாக இருக்கவும் கூடாது. கோட்டோவியங்களை அழுத்திவிடவும் கூடாது.கண்களுக்கு நெருக்கடியையும் கொடுக்க கூடாது.
2007-இல் இந்த நூலைக் கொண்டுவந்தோம். இதையும் அச்சில் சாதித்துக் காட்டியவர் சேகர் ஆஃசெட் உரிமையாளர். அவர் எங்களை பெரிதும் ஊக்குவித்து அந்த ஒவ்வொரு தாளையும் புகைப்படம் எடுத்தார். அப்போதெல்லாம் இந்த ஸ்கேனிங் கிடையாது. மேலும் புத்தக வடிவமும் கூட ஏ.4 சைஸில். அவற்றை இணைத்து நூலாக்கித் தந்தார். இது மிகவும் புதிய முயற்சி என்றும் சொன்னார்கள். நிறையச் செலவாயிற்று. ஒரு பக்கத்திற்கு இத்தனை வரிகள் இருக்க வேண்டும், நூலின் அளவு மாறுபட்டிருக்கிறது என அற்பமான காரணங்களால் எந்த நூலக ஆணையும் கிடைக்கவில்லை. இப்படி ஏதோ தோன்றியதைச் செய்தது சதுரம் பதிப்பகம். இவற்றை எல்லாம் யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள். மேலும் நான் சுடச்சுட விற்பனையாகும் எழுத்தாளர் இல்லை என்பது நன்றாகவே தெரியும். யாரிடமும் போய்க்ககேட்கவும் விருப்பமில்லை.
இப்போது புத்தகம் பதிப்பிப்பதை நிறுத்திவிட்டோம். ஒன்று மூப்பு. இரண்டாவது கொரோனோ நோயால் சேகர் ஆஃப்செட் உரிமையாளரின் மரணம். இன்னொரு காரணம் சொந்த வீடு இல்லாததனால் ஓவியங்களையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு அலைய முடியவில்லை. உரிமையாளர்களின் சொற்கள் பொறுக்க முடியவில்லை. சோபா, கட்டில், ஏ.சி., சாப்பாட்டு மேஜை எதையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நாகராஜன் ஒரு ஓவியத்தை ஸ்டாண்டில் இட்டுவைத்துவிட்டு வரைந்து கொண்டிருக்கும்போது நான்கு காலடிகள் பின்னால் வைத்து அந்த ஓவியத்தைப் பார்க்க இடம் வேண்டும். என் மகள் நாட்டியம் ஆடி பயிற்சி செய்து நான்கு காலடிகள் முன்னும் பின்னுமாக நடந்து போய் விஸ்தாரமாக ஆட இடம் வேண்டும். வளம் என்பது வீட்டிலிருக்கும் பொருட்கள் அல்ல.
அம்பை உங்களது நெருங்கிய நண்பர். சமீபத்தில்கூட அவரைப் பேட்டிஎடுத்து வெளியிட்டிருந்தீர்கள். அவரது எழுத்துகள் எல்லாம் படித்திருப்பீர்கள். அவர் எழுதிய ஏதேனும் ஒரு சிறுகதை வாசிப்பைக் குறித்த உங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியுமா? அம்பை இப்போதுகூட சென்னை வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்….
அம்பையின் சிறுகதையான ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ 1971 ஆம் ஆண்டு கணையாழியில் வந்தபோதே வாசித்திருக்கிறேன். புதிய சொல்லாடல்கள். அதுவரை எழுதிவந்த பெண் எழுத்தாளர்களிலிருந்து மாறுபட்டு வாழ்க்கையை அப்படியே அப்பட்டமாக எழுதும் முறை, அந்த சொற்களின் தெரிவு, அதிலிருக்கும் தெளிவு. துணிச்சல், கோபம் எல்லாமே மிக அற்புதமாக இருந்தன. எனக்கும் என் அம்மா கவிஞர் பூரணிக்கும் கூட. ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற தலைப்பு என்னவோ மிகை என்று தோன்றியது.
கதையின் கருவைவிடவும் தலைப்பு உரத்து இருந்தது. (இன்றும் மறுபடியும் வாசித்தேன். அதே கருத்துதான். ஒரு படைப்பாளி தனக்குத் தோன்றிய சொற்களை இடவும், தலைப்பை இடவும் முழு உரிமையும் உண்டு. அதைப்போலவே ஒரு வாசகனுக்கும் இருக்கிறது என நினைக்கிறேன். பின்னாட்களில் இன்னமும் அருமையான பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார், அம்பை. ஆனாலும் தமிழ்ச்சூழலில் அம்பையின் முன்னொட்டுப் போல ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ உருவாகி விட்டது. அது எனக்கு மிகவும் வருத்தமே.