ச.சுப்பாராவ்
ஒரு தேசத்தின் புத்தகங்களே அதன் ஆன்மாவை, அதன் கலாச்சாரத்தை, நாகரீகத்தை பிரதிபலிக்கக் கூடிய மிக முக்கியமான ஆவணங்கள். ஒவ்வொரு நாட்டிலும் அவை ஏராளமாக இருக்கக் கூடும். ஆனால் யாரேனும் ஒருவர் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவற்றை சேகரித்து, வகைப்படுத்தி வெளியுலகிற்குக் காட்டும் வரை அந்தப் புத்தகங்கள் காட்டும் அந்த தேசத்தின் உண்மையான முகம் வெளியில் தெரியாமல், ஏகாதிபத்திய வரலாற்றாளர்கள் சொல்வதே அந்த தேசத்தின் வரலாறாக, அந்த மக்களின் கலாச்சாரமாக, பண்பாடாக பதிவாகி விடும்.

மலம் கழித்தால் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியாமல் , துடைத்துப் போட்டுவிட்டுத் திரிந்து கொண்டிருந்த வெள்ளையர்கள் இப்படித்தான் யாருடைய கலாச்சாரமும் தெரியாமல் வெள்ளையர் அல்லாதோர் அனைவரையும் காட்டுமிராண்டிகள் என்றார்கள். இஸ்லாம் சகிப்புத் தன்மையற்ற மதம் என்றார்கள். அதிலும் ஆப்ரிக்க முஸ்லீம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆப்ரிக்க தேசமான மாலியின் கதையும் அதுதான்.ஆனால், மாலியின் டிம்பக்டூவில் கிடைத்த சுவடிகள் அவர்களது கட்டுக்கதைகள் அனைத்தையும் தூள் தூளாக்கின. அந்த சுவடிகளைச் சேகரிப்பதையும், அவற்றைக் காப்பதையுமே தன் வாழ்நாள் பணியாகச் செய்து வரும் டிம்பக்டூவின்
உ.வே.சாவான டாக்டர் அப்துல் காதர் ஹைதாராவின் கதைதான் The bad ass librarians of Timbuktu என்ற நூல். புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜோஷுவா ஹாமர் எழுதியது.
சஹாரா பாலைவனத்திற்கு அருகே உள்ள டிம்பக்டூ ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இஸ்லாமியக் கலாச்சாரத்தின், கல்வியின் மையமாகத் திகழ்ந்தது. அப்போதே டிம்பக்டூவில் மிகப் பெரிய பல்கலைக்கழகம் இருந்தது. உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் சட்டம், இலக்கியம், விஞ்ஞானம் படிக்க அங்கு வந்தார்கள்.
11, 12ம் நூற்றாண்டுகளில் டிம்பக்டூவின் மக்கள்தொகையான 100000ல் நான்கில் ஒரு பங்கு இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து படிக்க வந்த மாணவர்கள்தான் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அக்காலத்தில் காகிதம் இத்தாலியின் வெனிசிலிருந்துதான் வரும். வெனிஸ் காகிதத்தில் வாட்டர்மார்க்காக சிலுவை இருக்கும். இது இஸ்லாமியர்களுக்கு சங்கடமாக இருந்தது. எனவே டிம்பக்டூ சுற்று வட்டாரங்களில் காகித ஆலைகள் உருவாகின. 12ம் நூற்றாண்டில்.
டிம்பக்டூவிற்கு அருகில் இருக்கும் ஃபெஸ் நகரத்தில் 472 காகித ஆலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அக்காலத்தில் பைண்டிங் பற்றி அவர்களுக்குத் தெரியாது. எழுதப்பட்ட காகிதங்களை ஒன்று சேர்த்து ஒரு தோல் உறையில் வைத்து கட்டி வைத்துக் கொள்வார்கள். மற்ற பொருட்களின் வியாபாரத்தை விட சுவடிகள் வியாபாரம் தான் டிம்பக்டூவில் லாபகரமாக இருந்ததாம். உப்பை வடக்கில் வாங்க வேண்டும். வெள்ளியை வெள்ளைக்காரன் நாட்டிலிருந்து வாங்கலாம். ஆனால், கடவுளின் வார்த்தைகளை, அறிவின் பொக்கிஷங்களை டிம்பக்டூவில் மட்டுமே வாங்க முடியும் என்று மிகப் பழமையான ஒரு சூடானியப் பாடல் சொல்கிறது.
அச்சுத் தொழில் நுட்பம் இல்லாததால் பிரதி எடுத்துதான் புத்தகம் தயாரிக்க வேண்டும். டிம்பக்டூவில் பிரதி எடுப்போருக்கு எப்போதும் வேலை இருந்தது. ஒரு புத்தகத்தை பிரதி எடுக்க சுமார் இரண்டு மாத காலமாகும். தினமும் 150 வரிகள்தான் பிரதி எடுக்க முடியும். இவர்களுக்கு சம்பளத்தை தங்கக் கட்டிகளாகத் தந்தார்கள்.
எடுக்கப்பட்ட பிரதிகளுக்கு மெய்ப்பு பார்ப்போருக்கும் தங்கக்கட்டி தான் சம்பளம்! பிரதி எடுக்க ஆரம்பித்த நாள், முடித்த நாள், எந்த இடத்தில் வைத்து பிரதி எடுக்கப்பட்டது, யாருக்காக, யார் பிரதி எடுத்தார், யார் மெய்ப்புப் பார்த்தார் எல்லாவற்றையும் கடைசி சுவடியில் குறித்து வைத்தார்கள். இதனால், இன்று ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு சுவடியின் காலத்தையும் கணக்கிடுவது மிக எளிதாக உள்ளது,இப்படியான ஊரில் வீட்டுக்கு வீடு நூலகம் இருந்தது.
மம்மா ஹைதாரா என்ற அறிஞர் ஒருவர் டிம்பக்டூவில் மதக்கல்வி ஆசிரியராக இருந்தார். அவரிடமும் பெரிய நூலகம் இருந்தது. டிம்பக்டூவின் சுவடிகள் பற்றி அறிந்த யுனெஸ்கோ அப்பகுதியின் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் விதமாக அங்குள்ள சுவடிகள் அனைத்தையும் சேகரித்து, அவற்றை பாதுகாக்க முடிவு செய்தது. இதற்காக அஹமத் பாபா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹயர் லேர்னிங் அண்ட் இஸ்லாமிக் ரிசர்ச் என்ற நிறுவனத்தைத் துவக்கியது. இதற்கான நிதியின் பெரும்பகுதியை குவைத், சவுதி அரேபிய அரச குடும்பத்தினர் ஏற்றனர். லிபியாவின் கடாஃபி கூட உதவினார். மம்மா ஹைதாராவை சுவடிகளை சேகரித்துத் தரும் பணிக்கு அமர்த்தியது. அவர் விரைவில் இறந்து விட, அந்தப் பணி அவரது மகனான அப்துல் காதர் ஹைதாராவிற்குத் தரப்பட்டது.
அப்துல் காதர் களத்தில் இறங்கினார். பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த சுவடிகளை விற்க யாரும் முன்வரவில்லை. அப்துல் வேறொரு வழியைக் கையாண்டார். அந்தப் பகுதிக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதை செய்து தந்தார். பள்ளிவாசல் கட்டித் தந்தார். பள்ளிக்கூடம், மருத்துவமனை எல்லாம் அமைத்துத் தந்தார். பதிலுக்கு அப்பகுதி மக்கள் அவரவர் வீட்டில் உள்ள சுவடிகளைத் தந்துவிட வேண்டும். இது நல்ல பலனைத் தந்தது. அதில் தான் எத்தனை சுவையான புத்தகங்கள்.
தொழுகைக்கான திசையை ட்ரிக்னாமென்ட்ரியைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்பது எப்படி? என்றொரு புத்தகம். லீப் வருடம் எப்படி கணக்கிடப் படுகிறது என்று ஒரு புத்தகம். முழுக்க முழுக்க மான்தோலிலேயே எழுதப்பட்ட குரான்.. மீன் தோலில் எழுதப்பட்ட ஒரு புனித நூல். 28 பாகங்கள் கொண்ட அரபி மொழி அகராதி ஒன்று. எல்லாம் 12, 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை! சில நாடோடி இன மக்களிடம் வேறு மாதிரியாக பண்டமாற்றும் செய்தார் அவர்.
ஒரு நாடோடிக் குழுவிற்கு 50 ஆடுகள், 2 கோவேறு கழுதைகள். 10000 டாலர் பெறுமான அரிசி, தானியங்கள், துணிமணிகள் தந்து, 3 ஒட்டகங்கள் சுமக்கக் கூடிய அளவு புத்தகச் சுவடிகளை வாங்கி வந்தார். சுவடிகளை வாங்க அவர் காரில் செல்ல மாட்டார். காரில் சென்றால் சுவடியின் உரிமையாளர்கள் அவற்றைத் தரமாட்டார்கள். எளிய இஸ்லாமியனாக கோவேறு கழுதையில்தான் செல்வார். அப்போதுதான் அந்த மக்கள் தம்மிடம் உள்ளவற்றைத் தர ஒப்புக் கொள்வார்கள்.
ஒரு கட்டத்தில் தனக்கான தனி நூலகத்தையும் உருவாக்கிக் கொண்டார். உலகெங்கும் பயணித்து சுவடி சேகரிப்பு, பாதுகாப்பிற்காக நிதி திரட்டினார். இந்த நூல்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவை இது வரை மேற்கத்திய அறிஞர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாம் சகிப்புத் தன்மையயற்ற மதம் என்ற கருத்தாக்கத்தை உடைத்தன. அதே போல் ஆப்ரிக்க மக்களுக்கு அறிவு கிடையாது, கலாச்சாரம் கிடையாது என்ற மேற்கின் கருத்தாக்கத்தையும் அடித்து நொறுக்கின.

எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த போது, மாலியில் இஸ்லாமிய தீவிரவாதம் தலையெடுத்தது. அல்கொய்தா தீவிரவாதிகள் நாட்டின் பல இடங்களைப் பிடித்தார்கள். டிம்பக்டூ நகரம் அவர்கள் வசம் வந்தது. அவர்கள் ஷரியா சட்டப்படி ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். மதம் சாராத நூல்கள், மதச் சார்பற்ற நூல்கள் தேவையில்லை என்று நினைத்தார்கள். அந்த ஊரின் தலைமை காஜியை அழைத்து டிம்பக்டூவின் சுவடிகளை எல்லாம் எரித்து விட்டால் என்ன? என்று கேட்டார்கள். தன் வாழ்நாள் சேகரிப்பிற்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் அப்துல் காதர்.
ஊரில் பாதி நேரம் ஊரடங்கு. அப்துல் காதர் தன் மருமகன் தலைமையில் ஏராளமான இளைஞர்களைத் திரட்டினார். ஊரின் சுவடிகள் அனைத்தையும் பல நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் வீட்டில், அக்கம் பக்கத்து ஊர்களில் ஒளித்து வைப்பது என்று முடிவு செய்தார். அதைச் செயல்படுத்த இந்த இளைஞர்களைப் பயன்படுத்தினார். இந்த இளைஞர்கள் தினமும் 50 முதல் 80 டிரங்குப் பெட்டிகளை வேறு வேறு கடைகளில் வாங்கினார்கள். ஒரு தொண்டர் 2 அல்லது 3 பெட்டி வாங்குவார். சில நாட்களில் டிம்பக்டூவில் இனி வாங்குவதற்கு டிரங்க் பெட்டியே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பிறகு எண்ணெய் பீப்பாய்களை வாங்கி, அதை டிரங்காக மாற்றினார்கள். அவற்றில் சுவடிகளை அடுக்கினார்கள்.
தினமும் இரவு 9 மணிக்கு ஊரடங்கு. 7 முதல் 9 வரை மக்கள் வேண்டியவற்றை வாங்க வேண்டும் என்பதால் காவலர்கள் கடுமை காட்ட மாட்டார்கள். எனவே அந்த நேரத்தில் தொண்டர்கள் சுவடிகள் நிறைந்த டிரங்க் பெட்டிகளை ஐமுக்காளத்தில் சுற்றி, கோவேறு கழுதை வண்டிகளில் ஏற்றி, ஊர் மக்கள் பலரின் வீட்டில் ஒளித்து வைத்தார்கள். அக்கம்பக்கத்து ஊர்களுக்கு படகுகளில் எடுத்துச் சென்று ஒளித்து வைத்தார்கள். இப்படியாக ஒரே மாதத்தில் 377000 சுவடிகளில் 90 சதவிகிதத்தை ஒளித்து வைத்து விட்டார்கள். ஆனால் இதைச் செய்வதற்கு மிகப் பெரியதாக திட்டமிட வேண்டியதாக இருந்தது.
எத்தனை கோவேறு கழுதை வண்டிகள் தேவைப்படும்? எத்தனை நாட்களுக்குத் தேவை? யார் வண்டி ஓட்டுவது? யார் பெட்டிகளை ஏற்றி இறக்குவது? எந்தெந்த சுவடிகள் யார் யார் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலை யார் குறித்து வைத்துக் கொள்வது? யார் வீட்டில் எந்த சுவடியை ஒளித்து வைப்பது என்று எவ்வாறு முடிவு செய்வது? இதற்கு எவ்வளவு செலவாகும்? என்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மிக கவனமாகத் திட்ட மிட வேண்டியதாக இருந்தது. இந்த சுவடிகளை இவ்விதமாக குறுகிய காலத்தில் காப்பாற்றுவதற்கு 7 லட்சம் டாலர் தேவை என்று கணக்கிட்டார் அப்துல் காதர். ஆனால் பணம் ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை.
உலகெங்கிலும் உள்ள பல அறக்கட்டளைகள், நிறுவனங்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தன.
இதனிடையே பிரெஞ்சுப் படைகள் அல்கொய்தா தீவிரவாதிகளை மாலியிலிருந்து விரட்டுவதற்காகக் களமிறங்கின. அல்கொய்தா இதை எதிர்பார்க்கவில்லை. அல்கொய்தாவின் வீரர்களால் (இதில் ஏகே 47ஐ ஏந்திய 8 வயது, 10 வயது சிறுவர்கள் எல்லாம் உண்டு!) முறையான ராணுவத்தை எதிர்கொள்ள முடியவில்லை. இந்தப் போராட்டத்தின் விளைவாக, கலாச்சார நடவடிக்கைகளில் தலையிட்டு, புத்தகங்களை எரிப்பது போன்ற வேலைகளில் இறங்குவதற்கு அவர்களுக்கு நேரமில்லாமல் போனது. எனினும், தோல்வி நிச்சயம். ஊரை விட்டு ஓடிவிட வேண்டும் என்று முடிவெடுத்த போது, சுவடிகள் விஷயத்தில் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று களமிறங்கினார்கள்.
சாங்கோரில் இருந்த அகமத் பாபா மையத்தின் சுவடிகளை அப்துல் காதர் கோஷ்டியினர் இன்னும் அப்புறப்படுத்தாத நிலையில் அவை அவர்கள் கண்ணில் பட்டன. அங்கு 4202 சுவடிகள் இருந்தன. எல்லாம் 14, 15ம் நூற்றாண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட இயற்பியல், வேதியியல், கணித நூல்கள். அல்கொய்தா தீவிரவாதிகள் அவற்றில் ஒன்றை பாக்கி விடாமல் அனைத்தையும் கொண்டு வந்து நடுரோட்டில் போட்டு எறித்தார்கள். மேலும் சில முக்கியமான, கிடைத்தற்கரிய 10600 சுவுடிகள் அந்த மையத்தின் நிலவறையில் இருந்த தகவல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதால் அவை தப்பின.
சுவடிகளைக் காக்கும் வாழ்வின் நெடும் பயணத்தில் அப்துல் காதர் இழந்தவை ஏராளம். அவருக்கு இரண்டு மனைவிகள். ஆனால் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக அமையவில்லை. உடல் நலம் மிகவும் குன்றியது. இருந்த போதிலும் அவர் தன் நாட்டின் அறிவுப் பொக்கிஷங்களைக் காப்பது மட்டுமே தனது பணி என்ற ஒற்றை நினைப்போடு தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
அல் கொய்தாவினரால் அவரது உயிருக்கு பல முறை ஆபத்து வந்த போதும் எப்படியோ தப்பினார். ஆனால் உயிர் பயத்திற்காக ஒரு நாளும் தனது வேலையிலிருந்து பின்வாங்கவில்லை. டிம்பக்டூ பிரெஞ்சுப் படையினரால் விடுவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் சுவடிகள் தமது பாதுகாப்பான வீட்டிற்குத் திரும்பின. இன்று அப்துல் காதரின் நூலகத்தில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கையால் எழுதப்பட்ட சுவடிகள் இருக்கின்றன. இப்போது அவற்றை மின்னூலாக்கும் பணிகளும் நடக்கின்றன.
டிம்பக்டூ என்றுமே இஸ்லாமின் கலாச்சார செழுமையின் உச்சத்தில் இருந்த நகரம். இஸ்லாமின் ஒரு மோசமான வடிவம் அந்த நகரை, அதன் ஆன்மாவை அழிக்கப் பார்த்தது. ஆனால், இஸ்லாமியக் கலாச்சாரத்தின் பாரம்பரிய சக்தி அப்துல் காதர் ஹைதாரா போன்ற புத்தகக் காதலர்களுக்கு எந்த சமரசமும் இன்றி, எவருக்கும் அஞ்சாமல் தம் பணியைச் செய்யும் தார்மீகத் துணிச்சலைத் தந்தது. அதன் மூலம் தனது கலாச்சாரத்தின் மேன்மையை அது தானாகவே காப்பாற்றிக் கொண்டது.
உலகெங்கும் அறிவை, சிந்தனையை நசுக்குவதை தம் குறிக்கோளாகக் கொண்ட பாசிச சக்திகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஹைதாரா போன்ற எளிய மனிதர்கள் தம் பிடிவாதமான அறிவுத் தாகத்தால் அவற்றைத் தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.