நிகழ் அய்க்கண்
சினிமா குறித்த தோழர் ஜமாலனின் மூன்றாவது நூலிது. இந்நூலின் நோக்கமே திரையியக்கம் குறித்த அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவதுதான் என்கிறார். இந்நூலானது மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்பகுதி கோட்பாட்டாக்கம் என்ற தலைப்பில், கோட்பாடுகள் குறித்த உரையாடல்கள், சினிமா உள்ளடக்கக்கட்டமைப்புக்கள் அதன் அழகியல், சமூகவியல், உளவியல் சார்ந்து, சினிமா ஒரு அறிதல் புலனாக செயல்படுவதையும், அதன் திரையாக்கம் இயல் உலகில் உருவாக்கும் உணர்வாக்கத்தையும் அடிப்படையாகக்கொண்டு எட்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.
அடுத்தப்பகுதி திரையாக்கம் என்கிற தலைப்பில், தமிழ், மலையாளம், இந்தி என இந்தியச் சினிமா மற்றும் பல உலக சினிமாக்கள் எப்படி நவீன சினிமா கோட்பாடுகள் வழியாக திரையாக்கமாக ஆக்கப்பட்டுள்ளன என்பது பற்றி, பதினைந்து கட்டுரைகள் வழியாக விவரித்துள்ளார். இறுதிப்பகுதியில், தற்கால சினிமாவில் உருவாகியுள்ள புதிய தொழில்நுட்பங்கள் வழியாக, மரபான முறையைக்கடந்து சினிமா எப்படி பின்னைய சினிமாவாக மாறியுள்ளது பற்றி ஐந்து கட்டுரைகளின் வாயிலாக விளக்கியுள்ளார்.
இவையாவற்றினையும் பற்றி விரிவஞ்சி மிகச்சுருக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சினிமா பார்க்கப்படுவதோ கேட்கப்படுவதோ இல்லை உணரப்படுகிறது. சினிமா திரையில் மட்டும் இயங்குவதில்லை உடலின் மூளை என்கிற திரையிலும் இயங்குகிறது. அதனால், உடலின் மூலக்கூறுகளின் இயக்கமாக உள்ளது.
இன்றைய இயல் உலகை, சினிமாவிற்கு முந்தைய, பிந்தைய என இரண்டாகப் பகுக்கலாம். இது வரலாற்றுக்காலப்பிரிவு அல்ல, வாழ்தலின் காலப்பிரிவாகும். வாழ்தலின் அனுபவங்கள் பிம்பங்களின் ஊடாட்டமாக மாறியதைக்குறிப்பதாகும். அறிதல்; மொழியிலிருந்து பிம்பங்களின் பதிவுறுத்தலாக வளர்ந்தது; புதியதொரு சிந்திக்கும் பழக்கம் உருவாகியது;
இப்பிம்பங்கள் செவ்வியல் கால வழக்கமான இயக்கமற்ற நிலை பிம்பங்களிலிருந்து இயங்கும் சலன பிம்பங்களாக மாறியது மட்டுமின்றி, கனவின் மற்றும் விருப்பின் பல வடிவங்களாக பிம்பங்களின் உற்பத்தி நிகழ்ந்தது. இதுவே சினிமா குறித்த அறிதலின் அடிப்படையாகும் என்கிறார்.
சினிமாவைப்பற்றிக்கூறும்போது, அது, வாழ்வைப்படைத்துக்காட்டுவது, யதார்த்தக்கண்ணாடியாக இயக்கத்தை திரையில் காட்டுவது, பொழுதுப்போக்கு அம்சங்களால் நேரத்தைக்கடத்துவது, கனவுத்தொழிற்சாலை, பெரிய முதலீட்டைக்கொண்ட நிறுவனம், விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவான கலை, கலையின் உயர்ந்த வடிவம் இப்படியாகப் பல வரையறைகளால் விவரிக்கப்படும் ஒன்றாக இருக்கின்றது.
சினிமாவின் அடிப்படை அலகு பிம்பங்களாகும். பிம்பங்கள் என்றவுடன் புகைப்படத்தின் நிலைப்பிம்பங்களின் சலனமாக சினிமாவைக் கருதிக்கொள்ளக்கூடாது. புகைப்படத்தின் பிம்பங்கள் மனிதவிழி எந்திரத்தின் தன்மை கொண்டவை. திரைக்கேமராவோ மனித விழியினைத்தாண்டி, காட்சிகளை பிம்பப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.
விழியால் பெறப்படும் பிம்பங்கள் மூளைக்குள் தொடர் சலனமாக திரைக்காட்சியாக்கப்படுவதுடன் இணைந்தது. சினிமாவின் பிம்பம் ஒலி – ஒளி வடிவில் இருப்பதால், யதார்த்த பிம்பத்தைவிட, புலன் நுட்பம் வாய்ந்ததாக; யதார்த்தப் பிம்பத்தை மீறியதாக உள்ளது.
மனிதர்கள் ஐம்புலன்களின் உணர்வுகள், இலக்கியங்கள் வழியாக மொழியாக உணரப்படும் ஆறாவது புலன் உருவாகி வந்துள்ளதைப்போல, சினிமா பிம்பப்புலன் என்கிற ஏழாவது புலனை உருவாக்கியுள்ளது. சினிமாவில் பார்வையாளர் கலப்பதன் வாயிலாக, சினிமா உருவாகுதல் நிகழ்கிறது. சினிமா பார்க்கப்படுவதில்லை மாறாக, சினிமா பார்வையாளருடன் நிகழ்கிறது.
திரையும் தரையும் மறைந்து ஒன்று கலந்துவிடும் அந்த இருள் உலகு மனிதசிந்தனையின் குறியீடு எனலாம். சினிமா என்பது மனித மூளைக்குள் திரையைக்கட்டமைத்த ஒரு நிகழ்வு. சினிமாதான் மனித கண்ணற்று இந்த உலகைப்பார்த்த முதல் எந்திரம்.
சினிமாட்டிக் மெஷின்ஸ் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும் எனும் கட்டுரையில், சினிமாதான் மூளையை ஒரு திரையாகக்கட்டமைத்து, ஒரு கதையை அல்லது கேட்பதை, மொழியை ஒரு காட்சியாக மாற்றியமைத்து மூளையில் அசைவியக்கமாக ஓடச்செய்கிறது. அவ்வகையில் மற்ற கலைகளை விட சினிமாவானது கலை, அறிவியல், தத்துவம் என்கிற மூன்றும் இணைந்த ஒரு செயல்பாடாகும் என்கிறார்.
சினிமாவை விழிப்புலன்களால் பார்த்தல் என்பது மூன்று விதமான செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதாவது, பார்த்தல், நோக்குதல், காணுதல் என்பதாகும். இதில், பார்த்தல் என்பது முற்றிலும் கேளிக்கை சார்ந்ததாகும். இது நுகர்வின் வழி மனிதஉடலை பண்டமாக மாற்றிக்கொண்டிருப்பவை. அடுத்து, நோக்குதல் என்பது, இங்கே, காமிராவின் கண்கள் என்பது பார்வையாளர்களின் கண்களாக இருப்பதால், கேமராவின் நோக்குநிலை என்பது பார்வையாளரின் நோக்குநிலையாக மாறிவிடுகிறது.
இறுதியாக, காணுதல் எனும்போது, காட்சிஎந்திரமும், காணும் எந்திரமும் காணுதல் என்கிற செயலால் இணைக்கப்பட்டு, அச்செயல் நிகழும்போது இயங்கத்துவங்குகின்றன. இவ்வியக்கத்தால் கவனித்தலில் துவங்கி, கவனிக்கப்படுதலாக உடலை மாற்றி, காட்சியாதலுக்கான உடல் அசைவுகளைப்பெற்று உருவாகும் ஒரு அசைவியக்கமே சினிமா எந்திரத்தின் செயல்பாடு என்கிறார்.
இந்தியச் சினிமாவானது, மதக்கண்காணிப்புக்கோபுரத்தின் நிழலில், அதன் அனுமதிக்கப்பட்ட பரப்பில்தான் தவழ்ந்து வளர்ந்ததென்றும், இதன் வியாபார வளர்ச்சியானது, இப்புராணக்கதையாடல்களை, சமூகக்கதையாடல்களாக மாற்றியமைத்ததால், அது ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றியது பற்றியும் விவரிக்கிறார். அதுமட்டுமல்லாது, இந்தியச்சினிமா உதிரியான தனிநபர்களை மக்கள்திரளாக மாற்றியது எனவும், ஒரேவித ரசனையை கட்டமைத்ததன் மூலம் மக்களை ஒரேவகையாக சிந்திக்கும்படி செய்திருக்கின்றது என்கிறார்.
சினிமாதான், இந்தியாவில் குடும்பங்கள், சாதிகள், மதங்கள், இனங்கள் தாண்டிய ஒரு மக்கள் திரளை உருவாக்கியது என்றும், வெகுஜன சினிமாவானது அரசியலால் உருவவமைக்கப்படுவது மட்டுமல்ல அல்லது அரசியலை உருவமைப்பது மட்டுமல்ல, அரசியலின் புதிய வடிவத்திற்கான மொழியை நிறுவுவதாக உள்ளதையும் பதிவு செய்கிறார்.
தமிழில் திராவிட இயக்கத்திற்கான மக்கள் திரளைக்கட்டமைத்தது தமிழ் சினிமாதான். திராவிட இயக்கம் உயர்கலைகளின் விளிம்பாக ஒதுக்கப்பட்ட சினிமாவை கையில் எடுத்து, விளிம்புநிலை மக்களைத் தங்கள் அரசியல் இயக்கத்திற்குள் கொண்டுவந்தது என்கிறார்.
உலக சினிமாவும் மசாலா சினிமாவும் பற்றிய கட்டுரையில், தற்கால சினிமாவானது, முதலாளிய வேட்கைகளை மனித உடலுக்குள் முதலீடு செய்வதையும், லாபநோக்கு கொண்டவையாக இருப்பதையும், நிலவும் சமூக அமைப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீள் கட்டமைப்பு செய்வதாக இருப்பதை பதிவு செய்கிறார்.
மலையாள சினிமா பற்றிக்கூறும்போது, தமிழ் உட்பட. இந்தியாவில் முதன்முதலாக, மரபான புராண தெய்வீக கதையாடல்களைக்கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் மலையாள சினிமாவின் துவக்கமே புராண இதிகாச நாடகக் கதையாடலாக இல்லாமல் சமூகப்படம் எனப்படும் சமூக வாழ்விலுள்ள பாத்திரங்களைக்கொண்டு படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகான காலத்தில், தமிழ் சினிமாவில் திராவிட இயக்கக்கருத்தியலின் ஆதிக்கத்தைப்போல கேரளாவில் கம்யூனிசக்கருத்தியலின் தாக்கங்கள் அச்சினிமாக்களை பாதிப்பதாக இருந்துவந்துள்ளது என்கிறார்.
கம்யூனிச – திராவிட சொல்லாடல்களுக்கு மாற்றுச்சொல்லாடல்களாக, பொருளியல் தளத்தில் உலகமயமாதலும், சமூகத்தளத்தில் நகர்மயமாதலும், அரசியல்தளத்தில் இந்துத்துவச்சொல்லாடலும் சேர்ந்து, ஒரு புதியவகைக் கண்ணோட்டத்துடன் திரைப்படங்களின் வழியாக உரையாடலுக்கு உட்படுத்தி வருவதைப்பற்றியும் விவரிக்கிறார்.
அடுத்து, இயல் இரண்டு, திரையாக்கம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சிமலை பற்றிக் கூறும்போது, நிலம், வர்க்கம், உலகமயமாதல் என்கிற சமூக அரசியலை, திரைப்படிமங்களாக காட்சிப்படுத்தியது பற்றியும், 96 எனும் திரைப்படமானது, தமிழ் வெகுஜன சினிமாவில் ஒவ்வொரு புதிய தலைமுறை பார்வையாளர்கள் வரும்போதும், நினைவு, ஏக்கம் என்கிற உணர்வில் விளையாடும் பாலின வேட்கையை திரைப்படிமமாக காட்சிப்படுத்தியிருப்பது பற்றியும் அலசுகிறார். இதோடு மட்டுமல்லாது, உலகின் அனைத்து பொருட்கள், நடவடிக்கைகள், கருத்தாக்கக்கங்கள் எல்லாம் படிமங்களாக அல்லது பிம்பங்களாக உள்ளவையே என்கிறார். சினிமா என்பது இந்தப்பிரபஞ்சத்தை துண்டாடி ஒரு படிமமாகக்காட்டுவதே எனவும் பதிவுசெய்கிறார்.
தாய்மையை தந்தமைகொண்டு மாற்றியுரைக்கும் திரை நாவல்: பேரன்பு எனும் திரைப்படம் குறித்து கூறும்போது, இத்திரைப்படத்தை ஒரு சினி – நாவல் என்று வகைப்படுத்தலாம். நாவல் என்பது எழுத்து மொழியிலான ஒரு இலக்கிய வடிவம். அதன் கதைகளைப் பயன்படுத்தி எத்தனையோ சினிமாக்கள் வெளிவந்துள்ளன.
அதில் நாவல் என்ற எழுத்து வடிவத்தை சினிமா என்ற திரை வடிவத்திற்கு கொண்டுவரும் சவாலை திரைக்கதை நுட்பத்தால் கொண்டுவருவதே ஒரு இயக்குநரின் அசாத்திய திறன். சினி நாவல் என்பது திரை ஒலி-ஒளிப்படிமங்களைக்கொண்டு எழுதப்படும் ஒரு கதைப்பிரதி என்கிறார்.

திராவிடப்பாரம்பரியங்களும், பின்னைய திராவிடப்பரம்பரைகளும் – சார்பாட்டா பரம்பரை பற்றிக்கூறும்போது, வரலாறு என்பது கடந்தகால உண்மை அல்ல. அது நிகழ்கால அரசியல் வழி கட்டமைக்கப்படும் கடந்தகாலமே. எனவே கடந்தகாலம் பற்றிய வரலாற்றுப்புனைவு என்ற ஒன்று இல்லை, வரலாறே ஒரு நிகழ்காலப் புனைவுதான்.
நிகழ்காலத்திலிருந்து, நிகழ்கால அரசியலுக்கான ஒரு கடந்தகாலத்தை உருவாக்குவதே வரலாறு என்பதால், வரலாற்றுச்சினிமா வரலாற்றிற்கு உண்மையாக உள்ளதா? என்பதைவிட, நிகழ்கால அரசியலுக்குகந்த கடந்தகால வரலாற்றை எப்படி கட்டமைக்கிறது என்பதே பார்வையாளர்களின் பாதிப்பிற்கு அடிப்படையாய் அமைகிறது என்கிறார்.
ஒளிரும் பாரதத்திற்காக பலியிடப்பட்ட மஹாத்மா ஹே ராம் எனும் அழித்தொழிக்கப்பட்ட பிரதி பற்றி கூறும்போது, வரலாற்றை அழித்தெழுதுதல் என்பது அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்திற்கான வரலாற்றை அழித்து அதன் உள்அமைப்பிற்குள் பதுக்கப்பட்டிருக்கும் வரலாற்றை எடுத்தெழுதுவதென்கிறார். இப்படமானது பின் நவீனத்துவ கதைகூறும் முறைகளில் ஒன்றாகும். பின் நவீனத்துவ சினிமாவின் பண்புகளைப்பற்றிக்கூறும்போது, ஆசிரியர் முக்கியத்துவமின்மை; காட்சிகளின் பன்மைத்துவம்;
கடந்தகாலம் மற்றும் நிகழ்கால எல்லைகளை அழித்தல்; மீ – யதார்த்தக்காட்சிகள்; நிகழ முடியாதவற்றை நிகழ்த்துதல்; பழமை பற்றிய ஏக்கம்; மையமற்ற தொடர் நிகழ்ச்சிகள் மூலம் வெவ்வேறு உணர்வு நிலைகளை உருவாக்குதல் என்பதாகும். இப்பண்புகள் யாவும் ஹே ராம் படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதை விவரிக்கிறார். இப்படத்தினைத்தவிர தலைவி,, இறைவி, டூ லெட், பக்திப்படம் பி.கே, மண்டோ, ரோமா, பேரன்பு, இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு, கற்றது தமிழ், கல்லூரி, அந்நியன், விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்கள் பற்றியும் அலசியிருக்கிறார்.
இயல் மூன்று, புத்தாக்கம் பகுதியில், பின்னைய – சினிமாவைப்பற்றிக்கூறும் போது, 2014 ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் உலகத் திரைப்படக்கலைஞர்களில் ஒருவரான குவாண்டின் டொர்ண்டினோ ஒரு அறிவிப்பினைச்செய்தார். அது, “சினிமா மரணித்து விட்டது” என்பதுதான். சினிமா தனது அரங்கு வெளியை இழந்து, மறுவெளியாக மற்றொரு உலகிற்குள் நுழைந்துவிட்டது.
டெல்யுஸ்-கட்டாரியின் கருத்தாக்கமான எல்லை -நீக்கம் மற்றும் மறு எல்லையாக்கம் ஆகியவற்றைக்கொண்டு சொன்னால், சினிமா தனது பெரிய திரை என்கிற அரங்கு வெளியை இழந்து, மாற்றுத்திரைகளான தொலைக்காட்சி, கணிப்பொறி, டேப்லெட், மொபைல் போன் என்பவைகளினால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது.
சினிமா பார்வையாளர்கள் தற்காலிக அகதிகளாக அரங்கில் அடைபட்ட நிலை மாறி, ஒரு உண்மையான புகழிடமாக மாறியுள்ளது. சினிமாவின் இந்தப் புதியதொரு நிலையே பின்னைய சினிமா நிலை என்கிறார். இதுதவிர, இஸ்லாமிய சினிமாவின் அழகியல், ஆன்மீகம், அரசியல் பற்றியும், அலைமருவும் காலத்திலிருந்து எண் மருவும் காலத்திற்கும் நகரும் சினிமா பற்றியும், தமிழில் சுய வடிவமைப்பை உருவாக்கிய திரைப்படங்கள் பற்றியும் ஆய்வுக்குட்படுத்தி தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
முடிவுரையில், “சினிமா யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக யதார்த்த நிகழ்வுகளை கதையாடலாக்குவதன் வழியாக யதார்த்தம் குறித்த உணர்வை மறுகட்டமைப்புச்செய்கிறது. யதார்த்தம் குறித்த புரிதலை சரி செய்வதாக உள்ளது. யதார்த்த நிகழ்வுகளை மெய்நிகராகக்(Virtualize) காட்டி, அதனை ஒரு மெய்மையாக(Actualize) மாற்றுகிறது என்கிறார். இனியும் சினிமா ஒரு காட்சி ஊடகம் மட்டுமல்ல, அது காட்சி எந்திரங்களாக உடலைக் கட்டமைக்கும்.; காணும் எந்திரங்களாக உடல்களை உருவாக்கும் ஒரு வடிவமாகும்.
