
2022, அக்டோபர் 2, மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று அரும்பு சிறார் நூலரங்கத்தின் திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
காலை 10.30க்கு விழா தொடங்கவிருந்த நிலையில், ஏற்கனவே கூட்டம் கூடத் தொடங்கி இருந்தது. சிறார்களும், சிறுமியர்களும் அங்கும் இங்கும் ஓடிப் புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொண்டிருக்க, அப்பாக்களும், அம்மாக்களும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் ஏற்கனவே புத்தக விற்பனையைத் திறந்து வைத்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
சரியாகப் பத்தரை மணி அளவில் அரங்கம் முழுதும் நிறைந்து இடம் பற்றாத நிலை ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் முக்கிய அழைப்பாளர்கள் கோபாலகிருஷ்ண காந்தியும், இயக்குனர் வெற்றிமாறனும் வந்து விட, முழு உற்சாகத்துடன் திறப்புவிழா தொடங்கியது. வாசலில் முதலில் நூலரங்கை கோபாலகிருஷ்ண காந்தி திறந்து வைக்க, உள்ளே டிஜிட்டல் ஸ்டூடியோவை இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.
எழுத்து அசுரன் ஆயிஷா நடராசன் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த அரங்கம் ஒரு கனவு என்றும் அதை இன்று தோழர் நாகராஜன் நனவாக்கி இருக்கிறார் என்றும் சரியாகக் குறிப்பிட்டார் ஆயிஷா. மதுரை புத்தகத் திருவிழாவில் ஒரு சிறுவன் கேட்ட கேள்விதான் இதற்கு விதை என்பதையும் விளக்கினார். தொடங்கிய காலத்திலிருந்து சிறிது சிறிதாக வளர்ச்சி பெற வைத்து இன்று இந்த அளவுக்குக் கொண்டு வந்த தோழர் நாகராஜனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
அடுத்தபடியாக இன்றைய டிஜிட்டல் உலகில் படிக்கும் பழக்கம் குறைந்து வருவதையும், அதை மாற்ற வேண்டிய நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டிப் பேசினார் வெற்றிமாறன். குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்றால், பெற்றோர் முதலில் அதைச் செய்ய வேண்டும், அதைப் பார்த்துத்தான் பிள்ளைகளும் கற்கும் என்பதை சரியாகச் சொன்னார். பின்னர் பேசிய கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கமும் இந்த முயற்சியை மனம் நிறையப் பாராட்டினார்.
முதல் விற்பனையை சிறார் புத்தகங்களைக் கொடுத்து வெற்றிமாறன் தொடங்கி வைக்க, உடனடியாக ஆயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக் கொண்டார் திரு சேது சொக்கலிங்கம்.
பின்னர் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் கவுரவிக்கும் நிகழ்வு தொடங்கியது. மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் கலந்து கொண்டனர். அதிலும், காந்தி பிறந்தநாளன்று அவரது பேரன் கையால் சால்வை பெறுவது என்பது எவ்வளவு பெரிய பேறு! வெற்றிமாறனின் கையால் நினைவுப் பரிசு. நினைவுப் பரிசு பேனா நிப்பைப் போலவே செய்யப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. ஒரே நாளில் அதை மட்டுமின்றி, அதன் கீழ் பெயர் முதற்கொண்டு ஒட்டித் தயார் செய்திருந்தது பெருமகிழ்ச்சியை கவுரவிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் அளித்தது.
தோழர் மாலதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. அதன்பிறகு திரு.ஆயிஷா நடராஜன் அவர்கள் அங்கு வந்திருந்த பல சிறார்களின் பங்களிப்பைப் பாராட்டி அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சி நடைபெறவிருந்ததைக் கேட்ட தோழர்.இவள்பாரதியின் மகன் முதல்வன் மேஜிக் க்ளேவில் அரும்பு என்ற சொல்லை மிக அழகாகச் செய்து கொண்டு வர, அது அந்த வாயிலிலேயே ஒட்டப்பட்டிருந்தது சிறப்பு.
மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி அவர்களின் மகன் மிகச்சிறப்பாகப் பாடல் பாடி அசத்தினான்.அங்கு விழாவின் நடுவில் கலந்து கொண்டிருந்த லவன், குசன் என்ற சகோதரர்களான இரு சிறார்கள் மிகவும் சிறந்த முறையில் கவிதை படித்து அசத்தினர். விரைவில் அவர்களது கவிதைத் தொகுப்பை வெளியிடுவதாக அவர்கள் கூறியதும் கூட்டமே ஆர்ப்பரித்து அவர்களைப் பாராட்டியது. விழா முடிந்தாலும், கூட்டம் கலையவில்லை. வந்திருந்த எழுத்தாளர்களும், குழந்தைகளும், பெரியவர்களும், மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு செல்ஃபிக்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர். பாரதி புத்தகாலயம் மேலும் ஒரு மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது. நாமும் இணைந்து பயணிப்போம்
