ஸ்ரீதர் மணியன்
சரியானதொரு புரிதலினால் மட்டுமே வாழ்க்கை எதிர்வரும் தடங்கல்களைத் தாண்டிப் பயணிக்க முடியும். இதற்கு மனதின் செயல்பாடுகளைப் பற்றிய தெளிவு மட்டுமே உதவும். அவ்வகையில் இந்நூல் எதையும் மிகவும் கடினமான அறிவியல் மொழிப் பிரயோகமில்லாமல் மனதைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முனைகிறது… (நூல் குறித்து டாக்டர் ருத்ரன்).
மனித வாழ்வுடன் இரண்டறக் கலந்துள்ளது மட்டுமல்லாது அதன் அடிப்படையுமாக உள்ளது உளவியல். மனிதன் பகுத்தறிவு பெற்ற காலமுதல் மனித குலத்தின் நடத்தைக்கும் செயல்பாடுகளுக்குமான காரணத்தினை அறியவும், அதனைப் பகுத்துணரவும் முயன்று கொண்டே இருக்கிறான். சிந்தனையாளர்கள், உளவியல் வல்லுநர்கள், ஞானிகள் என இப்பட்டியல் நீள்கிறது. சாமானியரும் இதற்குட்பட்டவரே.

கற்றோர் கடினமான சொற்களால் இதற்கு விளக்கமளித்தால் அவன் தானறிந்த மொழியில் அதற்கோர் விளக்கத்தினைக் கூறி அதனைக் கடந்து செல்கிறான். இவ்வாறு வாழ்வின் அடியோட்டமாக அதனூடாகக் கலந்துள்ளது உளவியல். அருட்தந்தை சூ.ம. ஜெயசீலனின் ‘வாழ்வைத் திறக்கும் சாவி’ என்ற இந்நூல் இதைப் பற்றிப் பேசுகிறது.
பதினெட்டு தலைப்புகளில் இந்நூல் வாழ்க்கை குறித்தும் அதன் பின்னணியாக உளவியலையும் வாசகன் முன்வைக்கிறது. கட்டுரைகளில் பல உளவியல் கருத்தாக்கங்கள் எளிய முறையில் எடுத்தாளப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பல ஆங்கிலச் சொற்களுக்கு அருமையான தமிழாக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘தண்ணீர் தெளியட்டும்’ என்ற கட்டுரையில் தனிமை எவ்விதம் பயனுள்ளதாக, சிறப்பான தருணங்களாக மாறக்கூடும் என்பதனை கட்டுரையாசிரியர் விளக்குகிறார்.
வாழ்வில் பதிலளிக்கிறோமா அல்லது எதிர்வினை புரிகிறோமா என்பது ஒரு கட்டுரையில் வாசகன் முன் வைக்கப்படுகிறது. பதிலளிப்பது (response), சிந்தித்து அறிவின் துணை கொண்டு உணர்வு வயப்படாது செயல்படுவது, எதிர்வினை (react) புரிவதென்பது உணர்வுகளுக்காட்பட்டுப் பேசுவது என்பதொரு எளிய விளக்கத்துடன் கூறுகிறார் ஜெயசீலன்.
‘தலைமுறை இடைவெளி என்ற தலைப்பிட்ட கட்டுரையில் நிறைவு விரும்பிகள், (perfectionist), யதார்த்த விரும்பிகள், (realistic) என்னும் இருவகைப்பட்டவர்களது மனநிலை, அவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் என இப்பகுதி கூறுகிறது. இஸட் தலைமுறையினரது (Z generation) பண்புகளையும் இப்பகுதி நம்முன் வைக்கிறது. (Self-oriented perfectionist), தன்சார் நிறை கலைத்திறம் கொண்டோர், பிறர்சார் நிறை கலைத்திறம் கொண்டோர், (other oriented perfectionist), சமூகம் சார் நிறை கலைத்திறம் கொண்டோர், (social oriented perfectionist), என இக்கட்டுரையில் சுவாரசியமிக்க பகுதிகள் உள்ளன. இச்சொற்களுக்கான அருமையான தமிழ்ச் சொற்களையும் ஆசிரியர் தருகிறார். இப்பகுதி புதுமையானதாகவும் உள்ளது.

சமூகத்தில் ஊடகங்கள் அண்மைச் செய்திகள், சிறப்புப் பார்வை, மூன்றாவது கண் என பல தலைப்புகளில் செய்திகளை ஊதிப்பெருக்கி உண்மையினைத் தந்திரமாக மறைக்கும் நிலை குறித்தும் ஒரு கட்டுரை பேசுகிறது.
ஒரு வளர்ந்து வந்த, சாதனை புரிந்த ப்ரணவ் தன்வாதே என்ற இளம் கிரிக்கெட் வீரரின் வாழ்வில் இத்தகைய ஊடகங்கள் எத்தகையதொரு மோசமான, வலிமிக்கதோர் பாதிப்பை உண்டாக்கின என்பதை வாசகனுக்கு நூலாசிரியர் தருகிறார். ஊடக அறம் என்னும் கூறு இங்கு கேள்விக்குள்ளாவதும், கேலிக்குள்ளாவதும் சித்தரிக்கப்படுகிறது.
நேசபூமி என்ற பகுதி sympathy, Emapthy ஆகிய இரு பதங்களுக்கான வேறுபாட்டினை உணர்த்துவதுடன் ஒரு மனிதனின் தார்மீகக் கடமை மற்றும் அறத்தினைப் பேணுதல் குறித்து விவாதிப்பது சிறப்பு. ஒரு மனிதன் தன் வாழ்நாளைத் தொடங்கும் தருணத்தில் இந்த நாளை நான் எவ்வாறு வாழவேண்டும் என்ற வினாவுக்கான விடையுடன் தொடங்க வேண்டும் எனப் பதிவிடுகிறார் ஜெயசீலன். இதற்கு எடுத்துக்காட்டாக ஜப்பான் தேசத்தின் ஒக்கினாவா மாநில மக்களைக் காட்டுகிறார். இத்தகையதொரு மனநிலை அவர்களது வாழ்வில் மட்டுமல்லாது அவர்களது வாழ்நாளை எவ்வாறு அதிகப்படுத்துகிறது என்றும் கூறுகிறார்.
மனிதன் ஏற்படுத்தும் கூட்டுறவில் வாழ்வு செழிக்கிறது. பிறருடன் இணைந்து வாழ்வதிலும், (interpersonal) தன்னைத்தானே அறிவதிலும் (intrapersonal) செழுமை வெளிப்படுகிறது என்றும் எனவே, மாந்தர்களே வாழப்பழகுங்கள் எனக்கூறி ‘வாழ்வைத் திறக்கும் சாவி’ என்ற தனது நூலினை நிறைவாக்குகிறார் அருட்தந்தை. சூ.ம. ஜெயசீலன். இது மட்டுமல்லாது நிலை குத்திய சிந்தனை, (concrete thinking), இல்பொருள் சிந்தனை (abstract thinking) என்னும் உளவியல் சிந்தனை குறித்த கருத்துகளையும் நூலில் காணலாம்.
ஒவ்வொரு வாசகனும் இப்புத்தகத்தினை முழுமையாக உள்வாங்கி வாசித்தபின்னர் தன்னை சுயசோதனைக்கு உட்படுத்திக்கொண்டால் நடைமுறை வாழ்வின் பல பிரச்சினைகளுக்கு எளிய முறையில், எவரையும் காயப்படுத்தா வண்ணம் சிறந்த தீர்வுகளைக் கண்டடைய இயலும். இதுவே இந்நூலின் தனித்துவம் எனக் கூறலாம். தற்போதைய தலைமுறை குறித்து சமூகம் கொண்டுள்ள எதிர்மறையான பார்வையினை இப்புத்தகம் மாற்றியமைப்பதுடன் அவர்களது சிறந்த பண்புகளை பரந்துபட்ட கோணங்களில் விரித்துக் கூறும் பாங்கினை நூல் நெடுக ஊன்றி வாசித்தால் உணரவியலும். இக்கட்டுரைகளின் ஆகச்சிறந்த கூறுகளாக இதனை உறுதியாகக் கூறலாம்.
முனைவுபட்ட ஆய்வு மாணவரான ஜெயசீலன் இறைப்பணியாளர் மட்டுமல்லாது எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது ‘நம் குழந்தைகளின் வகுப்பறை’ நூல் 2017 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த நூல் விருதினைப் பெற்றதல்லாது கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது முன்னுரையில் தனது ஆசிரியரும், எழுத்தாளருமான ஜோல்னா ஜவஹர் குறித்து பதிவு செய்துள்ளார்.
ஜவஹரது மாணாக்கர்கள் அனைவருமே அவருக்கு ஏதாவதொரு வகையில் சிறப்பு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மனநல மருத்துவரான டாக்டர் ருத்ரன் இதற்கான அணிந்துரையினை அளித்துள்ளது நூலின் சிறப்பினை உணர்த்துவதாக உள்ளது.
