எஸ். வி. வேணுகோபாலன்

வாசிப்பின் ரசனை எல்லை கடந்தது. புகழ் பெற்ற நாட்டிய மேதை மிருணாளினி சாராபாய் அவர்களிடம், “உங்களால் எப்போதாவது நாட்டியத்தைத் தவிர்த்து இருக்க முடியுமா, ஏன் அதை நிறுத்த முடியவில்லை?” என்று கேட்கப்பட்ட போது, “உங்களால் மூச்சு விடாது இருப்பதை யோசிக்க முடியுமா, எனக்கு நாட்டியம் அப்படித் தான்!” என்று அவர் அளித்த பதில் சிறப்பானது. வாசிப்பும் அப்படித்தான்.
பேருந்து நிறுத்தத்தில் அல்லது ரயில் நிலையத்தில் காத்திருக்கையில், பின்னர் வண்டி வந்து ஏறி அமர இடம் கிடைத்தாலும் சரி, நின்று கொண்டே தொடரும் பயணமானாலும் சரி வாசிப்பை விடுவதில்லை சிலர். பணிகளில் ஒவ்வோர் இடைவேளையிலும் புத்தகம் அல்லது வாசிப்பின் இடைவேளையில் மற்ற வேலைகள் என்பதான நிகழ்ச்சி நிரல் அவர்களுடையது. விடியற்காலை நேரம் அல்லது இரவு உறங்குமுன் என்று வாசிப்போர் உண்டு. போரில் விழுப்புண் படாத நாள் எல்லாம் தனது வாழ்க்கையில் வீணான நாட்கள் என்று ஒரு வீரன் கணக்கு வைத்துக் கொள்வது போல், படிக்க விட்டுப்போன நாள்கள் குறித்து வருத்தம் கொள்வோர் உண்டு.
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் வாசகர்கள் முக்கியமானவர்கள். ‘கேளாதவர்க்கும் சொல்லி நீங்கள் வாழியவே’ என்று வில்லிசைக் கலைஞர்கள் ‘வாழியவே பல்லாண்டுக் காலம்’ என்ற தங்கள் வாழ்த்துப் பாடலில் இசைப்பதுபோல், வாசிக்காதவர்க்கும் சொல்லி அவர்களையும் படிக்கத் தூண்டுவோர் உண்டு.
தொண்ணூறு வயது கடந்தவரான கல்வியாளர் ச சீ இராசகோபாலன் (எஸ். எஸ். ஆர்.) அவர்கள், அன்றாடம் வீட்டுக்கு வரும் நாளேடுகளையும் இணைய வழி கிடைக்கும் மின்னிதழ்களையும் வேகமாக வாசிப்பது மட்டுமல்ல, கட்டுரை ஆசிரியர்களுக்குத் தமது எண்ணங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் மூலம் தெரிவித்து வருபவர். எதிர்வினைகள் மிக முக்கியமானவை.
எண்பதுகளில் நான் எழுதிய கடிதத்தை இன்னும் வைத்திருக்கிறேன் என்கிறார் எழுத்தாளர் ஜா. மாதவராஜ். செம்மலரில் அவரது மண் குடம் எனும் அருமையான சிறுகதை வாசித்து எழுதியது அந்தக் கடிதம். இந்தியன் வங்கி உள்ளரங்க இதழான ‘இண்டிமேஜ்’ பத்திரிகையில் 1983ல் நான் எழுதிய ‘கிருஷ்ணபட்சத்து இராத்திரிகள்’ என்ற சிறுகதையைப் பாராட்டி என்னை வந்தடைந்த கடிதத்தை எழுதியவர் பின்னாளில் நெருங்கிய தோழராக அமைந்த விருதுநகர் எஸ். சி. மாரிக்கனி. அந்தக் கடிதம் ஏற்படுத்திய பரவசம் மறக்க முடியாதது. இலக்கிய விமர்சகர்கள் வல்லிக்கண்ணன், தி. க. சி. இருவரும் ஓயாது இளம் படைப்பாளிகள் எழுத்தை வாசித்து ஊக்கப்படுத்தி எழுதிய கடிதங்கள் எப்போதும் பேசப்படுபவை.
இசை ஞானமும், சிறந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படும் படைப்புகளை எழுதி வரும் நெல்லை மனநல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களோடு நட்பு மலரக் காரணம், 2011 ஜனவரியில் அவர் தி இந்து ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரைக்கு அனுப்பிய கடிதம் தான்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கணையாழி அலுவலகத்தில் கேட்டுப் பெற்ற முகவரிக்கு எழுதிய கடிதத்தை அப்போது பெற்றுக் கொண்டவரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிக நெருக்கமாக உணர்வோம் என்றோ, அவரது அடுத்தடுத்த படைப்புகள் தேடி வாசித்துக் கொண்டாடி எழுதுவோம் என்றோ, அவரது தலைமையிலான ஆசிரியர் குழுவில் இணைந்து ஓர் இதழில் பணியாற்றுவோம் என்றோ கூட யோசித்ததில்லை. ஒரு கனத்த மௌனத்தை, தவிப்பை, கொந்தளிப்பை அந்தப் படைப்பு நெஞ்சில் கிளர்த்தி விட்டிருந்தது.
ஓர் அறிவியல் ஆசிரியை தனது ஆய்வுப் புத்தகத்திற்கு எழுதும் முன்னுரை வடிவில் அமைந்திருந்தது அந்தக் கதை. பின்னர் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சக் கணக்கான பிரதிகள் அச்சாகி, எண்ணற்ற வாசகர்களைச் சென்றடைந்த பிரதி அது. ஒரே நேரத்தில் பல்வேறு விவாதப் பொருள்களை ஒரே ஒரு பாத்திரத்தின் வழி சமூக விமர்சனமாக எப்படி எழுத முடிந்தது என்பது தான் அந்தக் கதை ஏற்படுத்திய தாக்கம்!
பெற்றோர் அற்ற நிலையில் உறவினரால் வளர்க்கப்படும் ஓர் இஸ்லாமியப் பெண் குழந்தை தனது மேல் வகுப்புப் பிள்ளைகளின் கணக்குகள் போட்டுத் தருபவளாக, பள்ளி நூலகத்தில் புத்தகங்கள் வாங்கி வாசித்துச் சிவப்பு மையில் அடிக்கோடிட்டு அந்த விஷயங்கள் மீது தேடல் மிக்கவளாக, வகுப்பில் கேள்விகளை எழுப்பும் துணிவு மிக்கவளாக, அந்த அறிவார்ந்த ஆராய்ச்சி மனப்பான்மையைக் கொண்டாடத் தெரியாது குறுகிய வட்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களால் கண்டிக்கவும் தண்டிக்கவும் படுபவளாகத் தவிக்கும் ஒரு களத்தைக் கதாசிரியர் அதிர்ச்சிமிக்க பின்னணியில் வாசகருக்குக் காட்சிப்படுத்தி இருப்பார்.
திரும்பத் திரும்பத் தனது காப்பாளரைப் பள்ளிக்கு வரவழைக்க வைக்கும் ஒரு சிறுமியின் ‘அதிகப்பிரசங்கித்தனத்தை’ வீட்டார் எதிர்கொள்ளத் திணறும் நிலையில், ஒரு வித்தியாசமான ஆசிரியையின் கண்களுக்குக் கொஞ்சம் தாமதமாகப் புலப்படுகிறாள் இந்தப் பேதைச் சிறுமி. அந்தப் பேரன்புக்கு ஆட்பட்டு ஒரு குண்டூசியை விரல்களில் குத்தித் துளிர்க்கும் இரத்தத்தில் நோட்டுப்புத்தகம் முழுக்க அந்த ஆசிரியைக்குத் தனது நன்றியைப் பதிவிட்டு வைத்திருப்பதில் சிலிர்த்துப் போகும் ஆசிரியை, ஏன் பின்னர் பதட்டத்தோடும், ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான அழுத்தமான சுயவிமர்சனக் கண்ணீரோடும் ஒரு முன்னுரையை எழுத நேர்கிறது என்பது தான் ஆயிஷா எனும் படைப்பை முற்றிலும் மாறுபட்ட ஒரு வாசிப்பு அனுபவமாக வழங்குகிறது.
பெண் கல்வி, தாய்மொழியில் அறிவியல் கல்வி, தம்மின் தம் மாணவர் அறிவுடைமை மாநிலத்து ஆசிரியர்களுக்கெல்லாம் இனிது என்ற கொண்டாட்டமான கல்விச் சூழல், பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் உன்னதச் சமூகம் என்ற இலட்சியப் பொறிகளைத் தெறிக்க வைத்திருந்தார் இரா நடராசன்.
‘……உன் மாதிரி எத்தனை ஆயிஷாக்களை நாங்கள் இழந்திருப்போம்..நீ இறந்து போனாய். வயசுக்கு வந்த நாளோடு பள்ளிக்கூடம் விட்டு ஓடியவர்கள், எங்கேயோ ஓர் ஊரில் யாரோ ஒருவனுக்காகத் துவைத்துச் சமைத்துப் பிள்ளை பெற்றுப் போடுபவர்கள், ஆணின் பாலியல் பசிக்காகத் தன்னை விற்பவர்கள், முப்பது ரூபாய் சம்பளத்திற்காக வீடு பெருக்கி சாணி மெழுகுபவர்கள், வயல் கூலிகள், கட்டிடங்களுக்குக் கல் உடைக்கும் பெண்கள்…. அவர்களில் எத்தனை ஆயிஷாக்கள் உள்ளனரோ? தன் விஞ்ஞானக் கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு வேக வைத்துவிடும் அந்த நூற்றுக் கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்தப் புத்தகத்தைக் கண்ணீரோடு சமர்பிக்கிறேன்…’ என்கிற இறுதிப்பகுதி வாசகரை நீண்ட காலத்திற்கு அலைக்கழிக்க வைக்கக்கூடியது.
கதை அங்கே முடிவதில்லை, ஆயிஷா கேட்ட கேள்வியொன்றைச் சொல்லி ஆய்வுப் புத்தக முன்னுரையை முடிக்கிறேன் என்று அந்த ஆசிரியை எழுதுகிறார்: “மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம் நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் விஞ்ஞானி கூட வர முடியலையே, ஏன்?”
இங்கே கூட நிறுத்துவதில்லை நடராசன், இன்னும் ஒரு வரி இருக்கிறது: ‘இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தனது சொந்த வீடுகளின் இருண்ட சமையலறைக்குள் போய் அவர்கள் அதைத் தேடட்டும்’.
என்ன பளீர் என்ற சாட்டையடி இந்தக் கதை. பின்னர், தற்செயலாக ஒரு பதிப்பகத்தில் கிடைத்த அவரது சிறுகதைத் தொகுப்பு வெவ்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டோரது வாழ்க்கை குறித்த நுட்பமான உரையாடல்களை உள்ளடக்கிய சிறப்பான கதைகளை வாசிக்கக் கொடுத்தது. அந்தச் சிறுகதைத் தொகுப்பினைப் படித்ததும் அவரது அலைபேசி எண்ணைத் தேடிப் பிடித்துப் பேசிய முதல் உரையாடல் மறக்க முடியாதது.
படைப்புகளோடு உள்ள உறவு வாசிப்பின் ரசனைக்கேற்ப அமைவது. அடுத்தடுத்த வாசிப்புகள் தொடர்ந்தாலும், சில எழுத்துகள் ஆழப் பதிந்து விடுகின்றன. வாசகர் உரையாடலில் அவற்றின் பொறிகள் கலக்கின்றன. வாசகரது வாழ்க்கை அனுபவத்தின் இன்பத்தைக் கூட்டுகின்றன. நினைவில் தங்களைச் சேமித்து வைத்துக் கொண்டு மின்னிக் கொண்டிருக்கவும் செய்கின்றன.
வாசிப்பு தொடர்கிறது. ரசனையும் தொடரவே செய்யும். இளமைக் காலத்தில் இருந்து வாசிக்கக் கிடைத்த வாய்ப்புகளும், படிக்கக் கிடைத்த புத்தகங்களும் வழங்கிய அனுபவங்களின் மறுவாசிப்பாக, இந்தக் கொரோனா கொடுந்தொற்று முடக்க நேரத்தில் எதிர்பாராத ஒரு தருணத்தில் எழுத வாய்த்த இந்தத் தொடர் இங்கே நிறைவு பெறுகிறது.
எழுதத் தூண்டிய ஆசிரியர் இரா நடராசன் அவர்களுக்கும் தோழர் நாகராஜன் அவர்களுக்கும் தொடர்ந்து வாசித்து உடனுக்குடன் அழைத்துப் பேசியும், எழுத்து மூலமாகவும் அன்பு பாராட்டி வரும் தோழமை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகிறது.