இரா. தெ.முத்து
இயக்குநரும் தோழருமான வெங்கடேஷ் சக்ரவர்த்தி உடன் இருபதாண்டு கால தொடர்பு உண்டு. அவர் SFI வழியாக 1975 களில் அவசரநிலைக் காலத்தில் ஓர் இடதுசாரியாக மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளராக தன் பயணத்தை சென்னையில் தொடங்கியவர். அம்மா, சகோதரி தமிழ்த்திரையில் இருந்த பொழுதும் தமிழ்சினிமா குறித்த ஆக்கப்பூர்வமான விமர்சனக் கண்ணோட்டம் கொண்டவர். உலகப்படங்கள் உள்ளூர்ப்படங்கள் பற்றி தெளிவான ஞானம் கொண்ட அலட்டிக் கொள்ளாத இயல்பான ஆளுமை சாக்ஸ்.

வளர்ச்சி எனும் பெயரில் அரசு எந்திரங்கள் அழித்தொழித்த சென்னை மாநகர் எளிய மக்களின் குடியிருப்புகள் பற்றி அவர்களின் சிதைந்த வாழ்வு பற்றி உயர்நீதிமன்றத்திற்கு எதிரே சிறுகடை வியாபாரம் கூடாதென ஆயிரக்கணக்கான சிறுகடைகளை அள்ளி அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் கார்கள் அணிவகுக்கலாம் என பரிந்துரைத்த நீதிமன்றத்தின் elite சார்புத்தன்மை உள்ளிட்டு பல விடயங்கள் பற்றி தான் எடுத்த Chennai: The Split city docudrama படத்தில் அக்கறையோடு பதிந்தவர்.
எல்.வி.பிரசாத், SRM நிறுவனங்களில் அவர் பணியாற்றிய காலம் வரை தொலைபேசியில் பேசிக் கொள்வதும் நேரடிக் கூட்டங்களில் அவரை பேச வைத்து அவர் பார்வையை பகிர்வதுமான வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்.வெங்கடேஷ் சக்ரவர்த்தி 2018 வாக்கில் தெலங்கானா போன பின்பும் சில முறை போனில் பேசி இருக்கிறோம். சென்னை மாநகரத்தின் வளர்ச்சியின் பெயரால் எளியமக்கள் வாழ்வு சிதைக்கப்படுவதற்கு எதிரான ஆயுதமாக The split city படத்தை சில பகுதிகளில் திரையிட்டு எதிர்ப்புணர்வை உருவாக்கும் பொருட்டு பேசி இருக்கிறோம்.
“நிச்சயம் செய்வோம்” என்றார். சென்னையை, அதன் வீதிகளை, அதன் மக்களை உள்ளன்போடு நேசித்தவர்.அவர் பால்யத்தில் வாழ்ந்த தியாகராய நகர் மேத்தா தெரு பற்றி, அதன் பக்கத்துத் தெருக்கள் பற்றிய பல தகவல்களை சுவாரசியமாக என்னோடு 2016 வாக்கில் பகிர்ந்து கொண்டார்.
புதுச்சேரியில் அவர் வீடு தேடிய காலம் வரை அவரைப் பின் தொடர்ந்தேன். கொரோனா காலம் அனைவரையும் பின் தொடர்ந்தது. இறுதி ஓராண்டு அவரோடு தொடர்பில்லாது போய் விட்டது. ஜூலை 26 சாக்ஸின் மரணம் நிகழ்ந்து விட்டது. 72 வயதிருக்கலாம். சாகும் வயதில்லை.சாவை யாசித்த வாழ்வின் மீதான அசூயைப் பார்வை கொண்டவரும் இல்லை சாக்ஸ். ஆனாலும் மரணம் நிகழ்ந்து விட்டது.
சமூக அக்கறை -கூருணர்வு கொண்ட படைப்பாளிகள் திரைப்பட ஆளுமைகள், திரைப்பட ரசனையாளர்கள், சென்னை ஆர்வலர்கள் மனங்களில் என்றும் வாடாமலரென இருப்பார் தோழர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி