சக.முத்து கண்ணன்
எதை எழுதுகிறோம் என்பதிலும், யாருக்காக எழுதுகிறோம் என்பதிலும் நாம் தெளிவுடன் இருக்கிறோம். அடுத்த தலைமுறையையேனும் விழிப்படைய வைக்க நம்மிடம் இருக்கும் வீரியமிக்க ஆயுதம் புத்தகங்களே. அவற்றை குழந்தைகளிடம் சரியான வடிவில் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் பரிசோதனைகளும் நம்மிடம் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கின்றன. அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக புக் ஃபார் சில்ரன் 25 சிறார் இலக்கிய நூல்களை 44 வது கோவை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளது.
சிறார் இலக்கியச் செயல்பாடுகளில் இது மறுமலர்ச்சி காலம் எனலாம். தமிழில் முன்பிருந்த சிறார் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும், சிறார் இதழ்களின் எண்ணிக்கையும் இடைப்பட்ட காலங்களில் அருகி தற்போது மீண்டும் துளிர்த்து வருக்கிறது. புதிது புதிதாக சிறார் எழுத்தாளர்களும், கதை சொல்லிகளும், கலைஞர்களும், செயல்பாட்டாளர்களும் உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஓங்கில் கூட்டத்துடன் இணைந்து பத்து நூல்களும், புக் ஃபார் சில்ரன் தனியாக 15 நூல்களுமாக 25 சிறார் நூல்களை கடந்த ஜூன் 23ம் தேதி கோவை புத்தகக்கண்காட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெளியிட்டனர். ஒரு மாணவர் வெளியிட இன்னொரு மாணவர் பெற்றுக் கொண்டார். முதல் பிரதியைப் பரிமாறிக் கொண்ட இருவரும் அந்நூல் குறித்த தங்களது வாசிப்பனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
வாசித்ததில் பிடித்த சில கதைகளை, மேடையில் கூறினர். அவர்கள் மொழியில் கதை இன்னொரு பரிமாணத்திற்கு போயிருந்ததை ரசிக்க முடிந்தது. அதை எழுதிய எழுத்தாளர்கள் அகமகிழ அம்மேடை அர்த்தமுள்ள வெளியீட்டு உணர்வை அடைந்தது. மூத்த எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்க, தமிழ் சிறார் உலகின் மூத்த படைப்பாளி உதயசங்கர் முன்னிலை வகித்தார்.
பாலபுரஸ்கார் விருது பெற்ற யெஸ்.பாலபாரதி, தான் எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை பொதுவுடைமையாக்கி மக்களுக்கானதாக அறிவிப்பு செய்திருந்தார். புக்ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள அந்நூலை மிக அழகாக மாணவி யாழினி அறிமுகம் செய்து பேசியிருந்தார். ராணி குணசீலி எழுதிய ஊர் சுற்றலாம் பாடல் நூலிருந்து ஒரு பாடலை பழங்குடியின குழந்தைகள் அனுசுயா, புவனேஸ்வரி ஆகியோர் பாட்டாகவே பாட, கூட்டம் கைதட்டி உற்சாகமானது.
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கயிறு என்கிற சிறுநூல் சாதி குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறது. மேடையில் மாணவர்கள் அஷ்வின் குமார் , ஷெர்பர் ரோஹித் ஆகியோர் அக்கதையைச் சொல்லி உரையாடலைத் தொடங்கி வைத்தனர்.
யூமா வாசுகி எழுதிய தன்வியின் பிறந்தநாள் நூலை மாணவி மோனலிசா, ஈசா ஸ்ரீயும்,ஆயிஷா நடராஜன் எழுதிய காலநிலை அகதிகள் நூலை மாணவி கவியரசியும், அவர் எழுதிய இங்கிலிஷ் தவளை நூலை மாணவி தருணாவும், உதயசங்கர் எழுதிய நடனமாடிய ஆடுகள் நூலை மாணவி மதுமதியும், ச.முத்துக்குமாரி எழுதிய டாமிக்குட்டி நூலைப் பற்றி சுசீலாவும், ஹேமா பிரபா எழுதிய ஹம்போல்ட் நூலை நிதிஷ்ம், கமலாலயன் எழுதிய தண்ணீர் என்றொரு அமுதம் நூலை மாணவி தனுஸ்ரீ, தியாக சேகர் எழுதிய ஓரிகாமி நூலை மாணவர் அபிஷேக், ப்ரியன், அன்பு வாகினி எழுதிய சார்லஸ் டார்வின் கடற்பயணங்களால் உருவெடுத்த மேதை நூலை மாணவி திவ்யா, நா.பெரியசாமி எழுதிய கடைசி பெஞ்ச் கவிதை நூலை மாணவி யோகலட்சுமி, சரவணன் பார்த்தசாரதி எழுதிய சந்தைக்குப் போன பன்றிக்குட்டி நூலை மாணவி சந்தியா, பிரசண்டா மனோ எழுதிய ஆமையும் அதன் ஓடும் நூலை மாணவி தனுஷியா, சக.முத்துக்கண்ணன் எழுதிய புதுறெக்கை நூலை மாணவர் யோகேஸ்வரன், அறிவுக்கடல் எழுதிய இளைப்பில்லை காண் நூலை ஜெயவர்ஷினி – மதுமதி, இ.ப. சிந்தன் எழுதிய ஜானகியம்மாள் நூலை மாணவி கனிஸ்கா, கி.அமுதா செல்வி எழுதிய வால்முளைத்த பட்டம் நூலை மாணவி மேகலா என மாணவர் கூட்டம் கூடி மேடையை தன் வாசிப்பனுபவங்களால் அலங்கரித்தது. இப்படி நேரடியாக குழந்தைகளே பங்கேற்பதும் அவர்களை மையமாக வைத்து முழு நிகழ்ச்சியைத் திட்டமிட்டதிலும் பதிப்பாளர் நாகராஜன் தனித்துவம் பெறுகிறார்.
புக்ஸ் ஃபார் சில்ரன் சார்பில் சிறார் எழுத்தாளர்களுக்கான திறந்தவெளிக் கலந்துரையாடலும் அதே வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்கான புதிய வடிவில் நூலாக்கம் மற்றும் படைப்புகளின் மீதான புதிய பார்வையை முன் வைத்து சிறார் எழுத்தாளர்கள்: உதயசங்கர், ச.தமிழ்ச்செல்வன் , நீதிமணி, விஷ்ணுபுரம் சரவணன், ஆதி வள்ளியப்பன், எஸ்.பாலபாரதி, செ.கா., ச. முத்துக்குமாரி, சக.முத்துக்கண்ணன், சரிதாஜோ, ஈரோடு சர்மிளா, கிருஷ்ணா, நா.பெரியசாமி, கிருபா நந்தினிஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். தோழர் நாகராஜன் கலந்துரையாடலின் முடிவில் நிறைவுரையாற்றினார். மேலும் ஒரு புதிய தொடக்கத்திற்கு புக்பார்சில்ரன் தயாராகின்றது. நூலைக் கொண்டு சேர்க்க தோள் கொடுப்போம் தோழர்களே!