இயக்குநர் சீனு ராமசாமி
கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்குமுன்னே நான் கற்கத் தொடங்கிய இடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.திருப்பரங்குன்றம் அதன் வேராக எனக்கு இருந்தது. இலக்கியக் கனவை, சமூகப் பொறுப்பை அறத்தின் பால் உண்டான ருசியின் செம்மையை சினிமா பற்றிய மயக்கமற்ற விழிப்புணர்வோடு கூடிய காதலை அது வளர்த்தது.

வீடு மறந்து பெருமையோடு எங்கள் நாட்கள் நகர்ந்தது. மேடை நாடகம், கவிதை ,தொடர்ந்து வாசித்தல், கிளை கூட்டங்கள், நிதி வசூல் தோழர்களுடன் அரட்டை மக்களோடு இருக்கிறோம் என்ற கம்பீரம் என என் நாட்கள் ஓடின. அப்படித்தான் த.மு.எ.க.ச. கூட்டத்தில் ஆசான் பாலுமகேந்திரா அவர்களைக் கண்டேன்.பின்பு அவர் வழியே வந்தேன், சரண்புகுந்தேன்.
கலை யாவும் மக்களுக்கே என்ற முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோட்பாடு தான் என் ஒட்டு மொத்த கலை வாழ்வின் வெளிப்பாடு. மக்களை சந்தித்தல், மக்களோடு இருத்தல், மக்கள், கலை இலக்கியம் ,ரசனை வளர்த்தல் என எழுத்தாளர் சங்க செயல்பாடுகள் ஒரு கலைஞனுக்கு இன்றியமையாதது.