ஜமாலன்
“தனது நாட்டிலேயே அன்னியக் கலாச்சாரத்தை விதைக்க முயற்சிக்கும் முறை தவறிப் பிறந்த கூட்டத்திற்குப் பெயர்தான் அறிவுஜீவிகள்”
– சுதர்சன் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் சர்சங்சாலக் (பக். 486)
“ஜெர்மனியில் நாஜி இயக்கம் எப்படி வளர்ந்தது என்பது எனக்கு ஓரளவு தெரியும். பொதுவாக அதிக புத்திசாலித்தனம் இல்லாத வாழ்க்கையில் எதுவும் கிடைக்காதது போன்ற நிலையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்களையும், பெண்களையும் மேலோட்டமான அலங்காரங்களைக் காட்டியும், கறாரான கட்டுப்பாட்டை வளர்ப்பதாகச் சொல்லியும் நாஜி அமைப்பு ஈர்த்தது.

நாஜி அமைப்பின் கொள்கைகளும், செயல்பாடுகளும் எளிமையாகவும், எதிர்மறையாகவும், அதிகமாக மூளையைப் பயன்படுத்தத் தேவையில்லாதவையாகவும் இருப்பதால் அந்த இளைஞர்களும் நாஜிக்கட்சியை நோக்கி நகர்ந்தனர்.
நாஜிக் கட்சி ஜெர்மனியை அழிவுக்கு இட்டுச்சென்றது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் இந்தியாவில் பரவி வளர நாம், அனுமதித்தால் அவை நாட்டிற்கு பெரும் சேதம் விளைவிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நிச்சயமாக இதிலிருந்து இந்தியா தப்பிப் பிழைத்துவிடும். ஆனால், அது கடுமையாகக் காயப்பட்டு விடும். அதிலிருந்து குணமடைய நீண்டகாலம் ஆகும்.” –
ஜவகர்லால் நேரு (பக். 158)
இடதுசாரிப் பதிப்பகமான Left World வெளியிட்ட “The RSS A Menace to India” என்ற ஏ.ஜி. நூரானியின் ஆங்கில நூலை தமிழில் ‘பிரண்ட்லைன்’ ஆசிரியராக இருந்தவரும், இடதுசாரிச் சிந்தனையுள்ள சிறந்த பத்திரிக்கையாளருமான தோழர் ஆர். விஜயசங்கர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சுமார் 824 பக்கங்களுக்கு ஒரு மாபெரும் நூலை தமிழில் கொண்டுவந்துள்ள அவரது அசாத்தியத் திறமையையும், அதனை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள பாரதி பதிப்பகத்தின் முயற்சியையும் முதலில் பாராட்ட வேண்டும்.
காரணம், இந்நூல் இந்திய ஒன்றியத்தை தங்களது சதிச்செயல்கள், இரட்டை நாக்குகள் மற்றும் சிலந்திவலைப்போன்ற பல்வேறு வலைப்பின்னல் அமைப்புகள் வழியாக அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை தங்களது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கத்தின் தோற்றும் துவங்கி இன்றுவரையிலான அதன் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள ஒரு நூல். இடதுசாரி மற்றும் இந்திய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிய வேண்டிய ஒரு ஆவணத்தொகுப்பு.
“கருத்தியல் மக்களைச் சென்றடைந்தால் பௌதீக சக்தியாக உருவெடுக்கிறது” என்றார் கார்ல் மார்க்ஸ்.
அது இந்திய ஒன்றியத்தில் மார்க்சியக் கருத்தியலுக்கு நிகழவில்லை என்றாலும், எதிர்மறையாக ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவக் கருத்தியலுக்கு மிகச்சரியாக பொறுந்துகிறது என்பதை விவரிக்கும் ஒன்றே ஏ.ஜி. நூரானியின் இந்நூல். ஆர்.எஸ்.எஸ். குறித்த இந்தப் பகுப்பாய்வை வாசிக்கையில் மார்க்சின் சமூகவிஞ்ஞானக் கருத்தாக்கம் மிகச்சரியாகப் பொருந்தக் கூடியதாக உள்ளது.
ஒரு நூற்றாண்டாக தனது ரகசிய இயக்கத்தின் மூலம் “இந்துத்துவா” என்ற ஒற்றைக் கருத்தை தொடர்ந்து இயக்கத்தில் வைத்து மக்களிடம் பரவலாக்கியுள்ளது. மற்ற கட்சிகள் அரசியல் இயக்கத்திற்கு ஆட்களை, தேர்தலுக்கு வாக்கு வங்கிகளை உருவாக்கியபோது, இவ்வியக்கம் மட்டுமே தொண்டர்படை என்றபெயரில் ஒரு குண்டர்படையை உருவாக்கி அதனை பாரம்பரியம், பண்பாடு, மதம், ஆன்மிகம், தெய்விகம், புராணம் என்று மூளைச்சலவை செய்து வளர்த்து வைத்துள்ளது. இந்த இயக்கம் “சமுதாயத்தைத் திரட்டி ஸ்தாபனமாக்குவதை” (பக்.413) நோக்கமாகக் கொண்டது.
அதன் வேட்கை வெறும் அதிகாரம் மட்டுமல்ல. ஒரு பழமைவாத மதவெறி கொண்ட மனிதர்களை உருவாக்குவதே. அவர்களை வைத்து இன்று புலனாகாமல் உள்ள வேதகால மனுவாத நால்வருண சனாதன பிராமணியமத அமைப்பை மீண்டும் வரலாற்றில் உருவாக்குவதே. சமத்துவம் பேணும் நாகரிக மனித வரலாற்றை துடைத்தழித்து, பழைய “பொற்கால” புராணிக அமைப்பை உருவாக்குவதே. அதற்காக இந்திய மனிதர்களை மதஎந்திர மனிதர்களாக மறுஉருவாக்கம் செய்வதே.
அத்தகைய மதஎந்திர மனிதனை உருவாக்க அது பல மதக்கலவரங்களை உருவாக்கி உள்ளது. இந்திய ஒன்றியத்தில் நடந்த பல மதக் கலவரங்களுக்கு இந்த அமைப்பே காரணம் என்று அரசாங்கத்தின் உளவுத்துறை பலமுறை சான்றுகளுடன் ஆவணமாக வெளிப்படுத்தியுள்ளதை இந்நூல் பக். 226-228ல் தரவாக முன்வைக்கிறது.
தொடர்ச்சியான மதக்கலவரங்களின் வழியாக, சமூகத்தில் மதவெறுப்பை ஊட்டி மத துருவமயமாக்கலை நிகழ்த்துதல், அதன் வழியாக இயக்கத்தை அப்பகுதிகளில் உருவாக்கி வலுப்படுத்துதல். இப்படி ஒரு பாசிச ஆலமரமாக வேர்பரப்பி நிற்கிறது உலகளாவிய அளவில். இந்திய சமூகத்தின் அடிப்படையாக உள்ள பல கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள், பல வழிபாடுகள், பல வாழ்க்கைமுறைகள் கொண்ட பன்மைத்துவ சமூகத்தை ஒற்றை மதம் அதாவது ‘இந்து’ மதம் என்றும் அதனையே ஒற்றை இனம் என்பதாக இயல்பிற்கு முரணானதொரு கருத்தியலால் ஆன மதவெறி மனித எந்திரங்களை படைப்பது.
இந்திய மனிதர்களின் ஆன்மிகம், ஆத்மா, மனித உள்ளுணர்வு என்பதெல்லாம் அது கூறும் இந்த மனித எந்திர விழைச்சை உருவாக்கவே. நால்வருண எந்திரங்களாக மொத்த சமூகத்தை படைத்துவிட்டு, மேலே பிராமணர்கள் அமர்ந்துகொண்டு வாழ்வதற்கான ஒரு வேதகால மற்றும் பிராமணர்கள் ஆண்ட சமூகத்தைப் படைப்பதே அதன் நோக்கம். இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பிராமணர்களே. இவர்கள் ஆப்கானிலிருந்து முகலாய மன்னர்களால் விரட்டி அடிக்கப்பட்டு இந்திய கொங்கன் எனப்படும் கோவாகடற்கரை வழியாக இந்தியாவிற்குள் வந்தவர்கள்.
பிற்காலத்தில், மராட்டிய சிவாஜியின் ஆட்சியில் பேஷ்வாக்களாக உயர்பதவி வகித்தவர்கள். ஆங்கிலேய காலனி ஆட்சி பீமா கோரேகானில் தலித் சேனாக்களைக் கொண்டு தோற்கடித்து இவர்களை ஒடுக்கியது. இவர்கள்தான் இழந்த தங்களது அதிகாரத்தை மீட்க இந்து மத மீட்பு என்ற பெயரில் 1925ல் ஆர்.எஸ்.எஸ். என்ற இயக்கத்தைத் துவக்கியது என்று வரலாறு கூறுகிறது.
உண்மையில் இதனை ஒரு அரசியல் அதிகார மாற்று இயக்கமாக மட்டுமே கருதக்கூடாது. இது மனிதர்களை அடிமைகளாக மாற்றியமைக்க முயலும் ஒரு அமைப்பு. அதைதான் அவர்கள் கலாச்சார இயக்கம் என்றும், கலாச்சாரமே சமூகத்தின் உயிரோட்டம் என்றும் அதனை ஒற்றைத்தன்மைக் கொண்டதாக மாற்றுவும் முயல்கிறார்கள். அதற்காக இந்திய அரசியலையும், அரசையும், அரசாங்கத்தையும் எப்படிப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிவதற்கான ஒரு “பைபிளாக” இந்நூல் உள்ளது என்பதே இதன் முக்கியத்துவம்.
இந்துத்துவக் கருத்தியலை விடாப்பிடியாக நின்று முரட்டுத்தனத்துடனும், மூர்க்கத்துடனும் இந்திய ஒன்றியத்தில் பரவலாக்கி அதனை ஒரு அரசியல் சொல்லாடலாக எப்படி மாற்றியது? என்பதை அறிய இந்நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டும். நூற்றாண்டைத் தொடப்போகும் அவ்வமைப்பு மனப்பூர்வமாக நாசிச ஹிட்லரையும், பாசிய முசோலினியையும் தங்கள் அரசியல் வழிகாட்டியாகக் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதோடு, அவர்களுக்கு இத்தகைய ஆசையை உருவாக்கியதே அந்த அமைப்புதான் என்பது மிகையாகாது. இவர்கள் மேற்கத்தியபாணி நாசிசம், பாசிசத்தைப் பின்பற்றலாம், ஆனால், இந்தியச் சமூகம் மேற்கத்திய நவீனத்தைப் பின்பற்றுவது மட்டுமே தேசவிரோதச் செயல் என்பார்கள்.
வாய்கிழிய சுதேசி அரசியல், பாரதம் உலக வழிகாட்டி, ஜகத்குரு, உலகப்பேரரசு என்று பீற்றித் திரிவார்கள். இடதுசாரி சக்திகள் எதிர்மறையாக தாங்கள் எப்படி ஒரு இயக்கத்தை அதன் ஒழுங்கமைப்புடன் கட்டமைப்பது என்பதை படிக்க இந்நூல் உதவும். தனிமனிதர்களையும், அதன் தலைவர்களின் பிம்பத்தையும் முன்னிலைப்படுத்தாமல் “அரசியலை ஆணையில் வை” என்ற லெனினியக் கோட்பாட்டின்படி, தன்னை ஒரு கருத்தியல் சார்ந்த அரசியல் இயக்கமாக அது வளர்ந்தவிதத்தை அறியவும் உதவும்.
ஆக்கபூர்வமாக உலகின் மிகப்பெரும் மனிதவள ஆற்றலைக் கொண்ட (அதை வலதுசாரி சிந்தனை மக்கள் தொகை பெருக்கம் என்று கூறும்) இந்திய ஒன்றியத்தின் முன்னேற்றத்தையும், மனிதகுல வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு அமைப்பின் சதித் திட்டங்களை (அதை தான் மகாபாரதக் கிருஷ்ணன் பாணியில் ராஜயுக்தி என்பார்கள்) புரிந்து கொள்வதற்கான ஒரு நூல்.
3000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய பிற்போக்கு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தை நிகழ்த்த முனையும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.. “பாரம்பரியம்” “பரம்பரை” “தந்தையர் நாடு” (பித்ரு பூமி), “புண்ணிய பூமி” (மாத்ரு பூமி), ஆன்மிகம், வளர்ச்சி என்றெல்லாம் பல வாய்ஜாலங்களைக் காட்டி வரலாற்றில் மனிதகுல அழிவை நிகழ்த்திய ஜெர்மானிய பாசிசம், இத்தாலிய நாசிசத்தை மீண்டும் வரலாற்றில் நிகழ்த்தி ஒரு பேரழிவை உருவாக்க முனையும் ஒரு இயக்கம்.
முதலாளியத்தின் தொழில் வளர்ச்சி அடைந்த அந்நாடுகளில், முதலாளியக் கட்டமைப்பின் அடிப்படை அலகான இனம் என்பதை, இனவெறியாக மாற்றிய வெறுப்பு அரசியலை, காலனியத்தால் வளர்ச்சி என்ற பெயரில் வீங்கிப்போன இந்தியச் சமூகத்தில் மதம் என்பதை இனமாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். படும்பாட்டையும் அதை நோக்கி இந்திய பாமர மக்களை இழுத்துச் சென்ற வரலாறுமே இந்நூல்.
காலனியம் ஒருங்கிணைத்த இந்திய ஒன்றியத்தை ஒரு தேசியமாகக் கட்டுவதற்கு பாரத நாடு என்ற ஒரு புராண வரலாற்றைக் கட்டமைத்து, முதலாளிய இனவாதத்தை, இந்திய மண்ணிற்கு ஏற்ப மதவாதமாக மாற்ற முயன்ற கதை. அதற்கான அரசியல் நாடகங்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நூல். அதனை முழுமையாக பல உண்மையான ஆவணங்கள், நிகழ்வுகள், அரசியல் நகர்வுகள், இயக்கப் பின்னணிகள், தலைவர்களின் பேச்சுகள், சமகாலப் பத்திரிக்கைகளின் செய்திகள், ஆங்கிலேய காலனிய எஜமானர்களின் அரசாங்கக் குறிப்புகள் வழி புரிந்துகொள்ள உதவும் ஒரு நடுநிலையான ஆவணமாக உள்ளது.
நடுநிலை என்றால், அவ்வியக்கத்தை எந்நிலையிலும் கொச்சைப்படுத்தாமல் மிகவும் நிதானமான ஒரு அணுக்க வாசிப்பின்வழி எழுதப்பட்டுள்ளது. காரணம், எழுதும் எந்த ஒரு சிந்தனையாளரும், எழுத்தாளரும் சமநிலை குலைந்துவிடக்கூடிய அளவிற்கு தனது இயக்கப் பணிகளை நடத்திய ஒரு அமைப்பை சரியான வரலாற்றுப் பார்வையுடன் வெளிப்படுத்துகிறது இந்நூல். ஒரு பத்திரிக்கையாளருக்கே உரிய பொறுப்புடன் இதனைச் செய்துள்ளார் ஆசிரியர் நூரானி.
தன்னை ஒரு பண்பாட்டு இயக்கம் என்று வரி ஏய்ப்பு செய்ய வருமானவரி அமைப்பின் முன் உறுதியளிக்கும் இந்த இயக்கம், இந்திய ஒன்றியத்தின் அரசியலை, பிரதமரை, குடியரசுத்தலைவரை, மக்கள் யார் வாழவேண்டும், யார் சாகவேண்டும், யாருக்கு குடியுரிமை தருவது என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது ஒரு அவலமுரண். இந்த பொய் நாடகத்தில்தான் இந்நூல் துவங்குகிறது. ஆனால், அவ்வியக்கத்தின் இன்றைய வரலாறுவரை விரிவாகப் பேசுகிறது. அரசிடம் வருமான வரிஏய்ப்பு செய்ய பொய் சொல்லும் இந்த அமைப்புதான், தேசபக்தி என்பதை தனது உயிராதாரம் என்று முழக்கமிடுகிறது. அந்த பக்தியின் பின்னுள்ள பொய்மையை, வெறுப்பை, ஏமாற்றுத்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
ஆர். எஸ். எஸ். துவங்குவதற்கு முந்தைய அதற்கான கருத்தியல் பின்புலத்தைக் கட்டமைப்பதற்கான சொல்லாடல் உருவாக்கம் நிகழ்ந்த காலனியக்காலத்திய வரலாற்றிலிருந்து இன்று இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் ஒரு அதிகார அமைப்பாக மாறியுள்ளதுவரை விரிவாகப் பேசுகிறது. 25 அத்தியாயங்களில் அந்த அமைப்பின் நூற்றாண்டுகால வளர்ச்சியை விவரித்துச் செல்கிறது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நாக்பூரில் 1923ஆம் ஆண்டு நிழ்ந்த ஒரு கலவரத்திற்குப் பிறகு 1925ல் டாக்டர் ஹெட்கேவரால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய அமைப்பே ஆர்.எஸ்.எஸ். அது அதற்கு முந்தைய இந்துத்துவக் கருத்தியலை உருவாக்கிய சாவர்க்கரை தனது தத்துவ வழிகாட்டியாகக் கொண்டு, ஒரு இந்துத்துவ இயக்கமாக வளரத்துவங்கியது. அது துவங்கிய நோக்கமே இந்திய ஒன்றியத்தை இந்துத்துவமாக மாற்றுவதற்கும், அதனை மக்களிடம் கொண்டுசெல்வதற்கும், பயிற்சிபெற்ற ஒரு படையை உருவாக்குவதே.
ஜெர்மானிய பாசிசத்தைப்போல ஒரு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இயக்கமே ஆர்.எஸ்.எஸ். என்கிற தெளிவுடன் துவக்கப்பட்ட இயக்கம். இன்று அது அதன் வளர்ச்சியில் ஒரு முக்கியப் பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்திய ஒன்றியத்தை பாசிசத்தை நோக்கி நகர்த்துவதற்கான அனைத்து முனைப்புகளையும் அது துவங்கி வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டுள்ளது.
இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியவை உருவானதற்கான பின்புலத்தைக் கட்டமைத்த லாலா லஜபதிராய், சாவர்க்கர் மற்றும் ஆரிய சமாஜம் என்பதிலிருந்து வரலாற்றைத் துவக்குகிறார் ஆசிரியர். இந்த அமைப்பின் மூலத்தைத் தடம் கண்டு விவரிக்கத் துவங்குகிறார். இந்து, இந்துமதம் என்கிற கருத்தாக்கம் ஆங்கிலேயக் காலனியத்தால் கட்டமைக்கப்பட்டு, அதற்கான ஒரு ஆதாரச் சொல்லாடல்புலத்தை எப்படி காங்கிரஸ் அமைப்பிற்குள்ளும் வெளியிலும் குறிப்பிட்ட சில தலைவர்கள் உருவாக்கினார்கள் என்பதை அவர்களது பேச்சுகள் மற்றும் ஆவணங்கள் வழியாக எடுத்துரைக்கிறார்.
அவரது ஆய்வுப்பார்வையின் விளைவாக இவ்வரலாற்றின் ஆதாரங்களாக நேர்மறையான மற்றும் எதிர்மறையான தரவுகள் அனைத்தையும் ஆராய்ந்து தனது திறனாய்வு நோக்கில் முன்வைக்கிறார்.ஆனால், இந்நூலில் இந்து அல்லது இந்துமதம் என்ற வரையறைகளைக் குறித்து அவர் ஆராயவில்லை. காலனியத்தை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் அமைப்பு ஆங்கிலேய வரையறையான முஸ்லிம், கிறித்தவர்கள் அல்லாத பிறர் இந்து என்ற வரையறையை ஏற்றுக்கொண்டு, அதனை தனது அரசியல் சக்தியாக திரட்ட முயன்றது.
காங்கிரஸ் அமைப்பிற்குள் லாலா லஜபதிராய் உள்ளிட்ட இந்துமகாசபையின் கருத்தியலைக் கொண்டவர்கள் இந்து என்பது பெரும்பான்மை மக்களைக் குறிக்கும் ஒற்றைச் சொல்லாக பாவித்தனர். ஒருபுறம் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்று கூறும் இவர்கள் மற்றொருபுறம் உலகில் பிறப்பவர் அனைவரும் இந்துக்களாகவே பிறக்கிறார்கள் என்று முரணபாடாக பேசுகிறார்கள். அதன் ஒரு அதீத விளைவாக, இந்து என்பதை ஒரு இனமாக மாற்று முயலும் ஒரு அமைப்பே ஆர்.எஸ்.எஸ். அதற்காக அது இனம் என்ற வரையறையை மாற்றுகிறது.
இந்து மதம் இனவாதமாக மாறுவதே இந்துத்துவம். அதாவது இந்து மதத்தின் பன்மைத்தன்மையை (அப்படி ஒரு வாதத்திற்கு சொன்னால்கூட), ஒற்றைத்தன்மையாச்க சுருக்குவதன்மூலம் அதனை ஒரு இனமாக மாற்ற முயல்கிறது. சாவர்க்கரின் கருத்துக்களை முன்வைத்து மதம், இனம் என்ற இந்த வாதம் இந்நூலில் அரசியல் அடிப்படையில் பேசப்பட்டுள்ளது. ஆனால், அதனை கோட்பாடு, கருத்தியல், வரலாறு அடிப்படையில் ஆராயவில்லை. இனவாதம் என்பதே ஒரு காலனியச் சொல்லாடல் மற்றும் கருத்தாக்கம்தான். அதனைத் தங்களது அரசியல் அடிப்படையாகக் கொள்கிறார் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலின் வழிகாட்டி, அதன் தத்துவ ஆசான் சாவர்க்கர்.
இந்தியாவில் இஸ்லாம் வந்தது தென்னிந்தியாவான கேரளாவில்தான் என்பதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் (பக்.34). ஒற்றைவரியாக இது கூறப்பட்டாலும், இது குறித்து பல ஆதாரங்கள் உள்ளன. அவை தமிழில் நூலாக்கமும் பெற்றுள்ளன. கி.மு. 1000 முதல் கி.பி. 1200 வரை இந்தியாவில் இந்து மன்னர்கள் ஆண்டார்கள் என்று அதனை இந்து காலகட்டம் என்றும் குறிக்கும் காலனிய வரலாற்றாளர் ஜேம்ஸ் மில்லின் ஆய்வை ரொமிலா தாப்பரின் வரலாற்றுக் கருத்தை எடுத்துக்காட்டித் தகர்க்கிறார். இந்திய வரலாற்றை இந்து வரலாறு, முஸ்லிம் வரலாறு, பிரிட்டிஷ் வரலாறு என்று காலனிய வரலாறு முன்வைத்த பிரிவினைதான் இந்துத்துவச் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்ததை இந்நூலின் வாசிப்பின் வழி அறிய முடிகிறது.
இந்து என்பதை ஒரு வம்சமாகவோ, முஸ்லிம் என்பதை (துருக்கி, பாரசீக, அராபியர்கள் ஒன்றாக மாற்றும் நிலை) ஒரு வம்சமாகவோ வரலாற்றில் வாசிப்பதே தவறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். இது ஒரு முக்கியமான கருத்தாகும்.அதாவது முகலாயர்கள், துருக்கிகள், பாரசீகர்கள், அரேபியர்கள் அனைவரும் ஒரு முஸ்லிம் மத ஆட்சியை இங்கு உருவாக்கவில்லை. மாறாக, ஒரு மன்னராக ஆண்டார்கள். அதில் இந்து மன்னர், முஸ்லிம் மன்னர் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லை.
மன்னர்களின் வர்க்க குணாம்சமே அதற்குக் காரணம். அதனால்தான் சாவர்க்கர் சாமர்த்தியமாக “நமது எதிரிகள் மூன்று பேர். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று குறிப்பிடுகிறார்”. காரணம், கம்யூனிசம் மதங்களின், மன்னர்களின் பின் உள்ள வர்க்க குணாம்சத்தை முன்வைக்கிறது. கருத்தியலின் அரசியலை, அரசியலின் பொருளாதார நலனை அம்பலப்படுத்துகிறது. அடிப்படையில் பாசிசம் கம்யூனிசத்தை தனது மதவெறுப்புடனும், இனவெறுப்புடனும் இணைத்துக் கொள்வதற்கான காரணம் இதுவே.
இஸ்லாமிய வெறுப்பாக இவர்கள் கட்டும் வரலாற்றின் போலித்தனத்தை, அதனுள் உள்ள அதிகார வெறிகொண்ட அரசியலை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. இவர்கள் மதவெறுப்பாளர்கள் மட்டுமல்ல; மனிதகுல வெறுப்பாளர்கள் என்பதையும் வாய்ப்புள்ள இடங்களில் வாசிப்பில் புரிந்துகொள்ளும்படி செய்கிறார். ஹர்சர் என்ற இந்து மன்னரே பல கோவில்களை இடித்துள்ளார். அதற்கென்று தனி நிர்வாக அதிகாரிகளை வைத்திருந்தார் என்பதை ரொமிலா தாப்பரைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் வெறுப்பின் வேர்களாக முஸ்லிம்கள் கோவிலை இடித்தார்கள் என்பதற்கான அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஆவணங்கள் வழியாகவே அவர்களது வரலாறு எத்தனை சதித்தனமானது என்பதை அம்பலப்படுத்துகிறது என்பதே இந்நூலின் முக்கியம்.
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் வரலாறு, நடைமுறை, செயல்பாடுகள், இயக்கப் பின்னணி, அதற்குச் சாதகமாக அது அமைத்துக் கொண்ட சூழல், சமரசங்கள், பல பொய்களை, புளுகுகளைக் கூறி தனது இயக்கத்தைக் கட்டமைப்பதில் மட்டுமே குறியாகக் கொண்ட நேர்மையற்றத்தனம், இந்திய காலனியகால அரசியல், பிரிவினை, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் என அனைத்தையும் விரிவாக விவரிக்கிறது. அந்த அமைப்பைப் புரிந்து கொள்வதற்கான ஒரு ஆவணமாக, கையேடாக மட்டும் அல்லாமல் ஒரு இயக்கத்தை ராணுவ நேர்த்தியுடன் இலக்கை நோக்கி கட்டமைப்பதற்கான அனைத்து சந்தர்ப்பவாத அரசியலையும் கையாளும், பயன்படுத்திக் கொள்ளும் இயக்கப் பின்னணியையும் அறிமுகப்படுத்துகிறது.
தன்னை ஒரு கலாச்சார இயக்கம் என்று கூறிக்கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து ரகசிய ஆசைகளையும், வேட்கைகளையும் அதற்கான வெறித்தனமான செயல்களையும் விவரிக்கிறது. மகாபாரதக் கிருஷ்ணனும், சகுனியும் இணைந்து ஒரு அரசை உருவாக்கினால் அந்த அரசே இந்துத்துவ அரசாக இருக்கும். காரணம்
ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிபெற்ற ஆட்களை அனைத்து அரசியல் இயக்கங்களிலும் இணைத்தோ, ஊடுருவச் செய்தோ இன்று ஒரு பெரும் ஆக்டோபஸாக வளர்ந்த வரலாற்றின் நுட்பத்திட்பங்களை இந்நூல் நேர்மையாக அறிக்கையிடுகிறது.
அறிமுக உரையில் ஏ.ஜி. நூரானி அவர்கள் பேக்கன் என்பவர் குறிப்பிடும் ஒரு குறிப்பைத் தருகிறார். “எதையும் மறுதலிப்பதற்காகவும், நிரூபிக்கவும் படிக்காதீர்கள். எதையும் நம்பி ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருதியும் படிக்காதீர்கள். பேசுவதற்காகவும், உரையாற்றுவதற்காகவும் படிக்காதீர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்திப்பதற்காக படியுங்கள்.” இந்நூல் அத்தகைய வாசிப்பிற்கு நியாயம் செய்துள்ளது.
வாசிப்பவர்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் தனது கருத்தைத் திணிக்காமல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி, எதிரும் புதிருமாக முன்வைக்கும் ஒரு எழுத்துமுறையைக் கையாண்டுள்ளார். வாசிப்பவர் அந்த இயக்கத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும்படி விட்டுவிடுகிறார். எந்த ஒரு இடத்திலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து தரக்குறைவான கருத்தையோ, விதந்தோதலோ, வசைபாடுதலோ இன்றி தகவல்களை சரியாகத் திரட்டி, வாசிப்பவர் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்யட்டும் என்ற மனநிலையுடன் எழுதியுள்ளார்.
ஒரு பத்திரிக்கையாளருக்கு உரிய நடையில், உரிய அறத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். எப்படி ஒரு அச்சுறுத்தலான அமைப்பாக, இந்தியாவின் எதிர்காலத்தை இருளடையச் செய்யும் ஒன்றாக உள்ளது என்பதை வாசிப்பில் உணரும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அவ்வமைப்பு இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், ஏன் உலக மக்களுக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
இது ஒரு முக்கியமான ஆவணத்தரவாக உள்ளது. இந்நூலின் பின்னிணைப்பில் சுமார் 200 பக்கங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுதிமொழி, அமைப்புச் சட்டம், முக்கியமான காலக் கட்டங்களில் அத்தலைவர்கள் இந்திய அரசுடனும், அரசியல் தலைவர்களான நேரு, படேல், இந்திரா போன்றவர்களுடன் நடத்திய கடிதப் பரிமாற்றங்கள். அவ்வமைப்பு தடை செய்யப்பட்ட அறிக்கை, பல்வேறு வழக்குகள் குறித்த குறிப்புகள் என நேரடியாக ஆவணங்களே இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. அவ்வகையில் அவ்வமைப்பை ஆதியோடு அந்தமாகப் புரிந்துகொள்ள இந்நூல் ஒரு முழுமையான வரலாறற்றுப் பெட்டகமாக அமைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1972ல் இந்திரா காந்தி அவர்களுடன் நட்புறவு பாராட்டி அதன் தலைவர் கோல்வால்கர் தொடர்ந்து கடிதப் பரிமாற்றத்தை வைத்துக் கொண்டிருந்ததை இந்நூலில் குறிப்பிடுகிறார். அந்த அத்தியாயத்தின் இறுதிப்பகுதி இப்படி முடிகிறது. “அதற்குப்பின் நடந்த சம்பவங்கள் நாட்டைப் பெறும் குழப்பத்தில் ஆழ்த்தின. இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டது. இதில் பலனடைந்தது ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். அது நீண்டநாள் எதிர்பார்த்திருந்த அரசியல் மரியாதையை நோக்கி ஓரளவு முன்னால் நகர்ந்தது.” (பக். 241)
அந்நகர்ச்சி அது இதுவரை பரப்பிவந்த “தேசபக்தி இயக்கம்” என்பதை மக்கள் மத்தியில் காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதாவது அதன்பின் வந்த அவசரக் காலத்தில் இவ்வமைப்பு தீவிரமாக இயங்கி காங்கிரஸ் அழிவிற்கான முதல் புள்ளியை வைக்கத் துவங்கியது. அவ்வியக்கம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு “தேசபக்தி இயக்கம்” என்ற கருத்துருவாக்கத்திற்கு அந்த அவசரக்கால நடவடிக்கை வாய்ப்பாக அமைந்தது.
காங்கிரஸ் பேரியக்கத்தின் அழிவைத் துவக்கியப் புள்ளி இந்த அவசரக்காலத்தை இந்திரா காந்தி அறிமுகப்படுத்திய காலமே.
ஆர்.எஸ்.எஸ். ஆரம்பம் முதல் ஒரு கண்காணா பார்வைக்குப் புலப்படாத அமைப்பாக காங்கிரஸில் உள்ளார்ந்து இருந்துள்ளதை இந்நூலின் ஆழ்பிரதியாக வாசிப்பில் அறியமுடிகிறது. ஏற்கனவே ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதைப்போல மூன்று காந்திகளின் பச்சைப் படுகொலைதான் இந்த இயக்கத்தின் வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது.
முதலில் தேசத்தந்தையாகக் கருதப்பட்ட மகாத்மா காந்தி படுகொலை நிகழ்ந்தது. அதை ஒட்டி இவ்வியக்கம் இந்திய அளவில் பரவலான கவனத்தைப் பெற்றது. அது எதிர்மறையாக இருந்தாலும், இவ்வியக்கத்தின் அடிப்படையே எதிர்மறை வழியாக விளம்பரங்களைப் பெறுவதே. சான்றாக குஜராத் படுகொலைகள் எப்படி பிரதமர் பதவிக்கு மோடிக்கு ராஜபாட்டையாக மாறியதோ அப்படி. குஜராத் படுகொலை மற்றும் மோடியின் பிரதமரான கதை குறித்தும் பல ஆதாரங்களுடன் ஒரு தனி அத்தியாயமே எழுதியுள்ளார் நூரானி அவர்கள்.
இரண்டாவது படுகொலை இந்திரா காந்தி படுகொலை. அது காங்கிரஸின் உறுதித்தன்மையக் குலைத்தது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஒரு பலமாக மாறியது. காரணம் இந்திராவின் அவசரக்கால நடவடிக்கை உருவாக்கிய ஜனதாகட்சி, ஜனசங்கம் ஒற்றுமையான எதிர்நிலை அக்கட்சிக்கு ஒரு அரசியல் நிலையை (அந்தஸ்தை) உருவாக்கியிருந்தது. அது எப்படி உருவானது என்பதையும் இந்நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விவரிக்கிறது.
குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் மக்கள் இயக்கத்தை அரசியலில் காங்கிரஸை பலவீனப்படுத்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் இயக்கமான ஜனசங்கம் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எப்படி இந்திராவுடன் நெருக்கமாக இருந்தார்கள், அவசரக்கால நடவடிக்கையை ஆதரித்தார்கள் என்பதையும், அவசரக் காலத்தின் காங்கிரஸ் கதாநாயகனாக வலம் வந்த “இளவரசர்” சஞ்சய் காந்திக்கும், ஜனசங்க தலைவர் ஹன்ஸ் ராஜ் குப்தாவிற்கும் இருந்த ரகசிய உறவை ஆதாரங்களுடன் தருகிறார் (பக்.256).
அதன்பின் ஜனதாவின் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்ற ஜனசங்கம் வழி ஆர்எஸ்எஸ் மற்றொரு நிலை உயர்வைப் பெற்றது. அதன்பின் ஜனதாவை உடைத்துவிட்டு வெளியேறியது. இந்திரா தனது அவசரக்காலத் தவறுகளை உணர்ந்து எண்பதில் மீண்டெழந்தபோது, அவரது படுகொலை நிகழ்கிறது. இப்படுகொலை சீக்கிய விரோத மனோபாவத்தை வளர்த்தது என்றாலும், அதன் எதிர்விளைவாக இந்துத்துவ மனநிலையையும் வளர்க்க உதவியது.
ஆர்.எஸ்.எஸ். இந்தச் சூழலைப் பயன்படுத்தி ஜனசங்கத்தை பாரதிய ஜனதாவாக மாற்றியது. அதன்பின் மீண்டும் காங்கிரஸ் போர்பஸ் ஊழல் பிரச்சனையை மையமாக வைத்து வி.பி.சிங். ஆட்சியமைக்க பாரதிய ஜனதாவை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்படை களத்தில் இறங்கியது. அதில் ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்த அவ்வமைப்பு, வி.பி.சிங்.கின். மண்டல் பரிந்துரைக்கு எதிராக மந்தீர் பிரச்சனையைக் கையில் எடுத்து தனது அடுத்தகட்ட மூர்க்கமான வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டது. காங்கிரஸ் எதிர்ப்பிற்கு அது பயன்படுத்திய ஒரே ஆயுதம் ஊழல் என்றாலும், உள்ளிருந்து காங்கிரஸை அது அழித்தது என்பதே வரலாறு.
மூன்றாவது படுகொலை ராஜிவ் காந்தி. இப்படுகொலை காங்கிரஸ் இயக்கத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதுவதாக ஒரு உறுதிமிக்க தலைவரற்ற இயக்கமாக மாற்றியது. அதன்பின் வந்த நரசிம்மராவ் ஆட்சிதான் இந்த அமைப்பின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துத் தந்தது. பாபர் மசூதி இடிப்பும் நிகழ்ந்தது வரலாறு. ஆக, காங்கிரஸ் இயக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அடிப்படைகளை அது உருவாக்கியது என்றால், காங்கிரஸ் ஆதரவு முதலாளியச் சக்திகளுக்கு எதிரான முதலாளிகளை கையில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் ஆதரவு முதலாளியச் சக்திகளையும் வளைத்தது என்பதே வரலாறு. இந்த உள் வரலாற்றை இந்நூல் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், உண்மையில் அம்பானி, அதானி போன்ற இந்திய கார்பரேட் முதலாளியம் வளர உதவியதே பிஜேபி அமைப்பின் அடித்தளம்.
இவ்வாறாக, காந்திகளின் படுகொலையும், ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கம் என்ற பெயரில் உருவான ஜெயபிரகாஷ் நாராயண், வி.பி.சிங் மற்றும் அண்ணா ஹசாரே ஆகியோர்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். இந்நூல் இவ்வரலாற்றினை வரிசைப்படுத்திக் கூறாமல் பரவலாக வாசிப்பில் உணரும்படி சுட்டிச் செல்கிறது. இந்நூலாசிரியரின் குறிப்பான கவனம் அவ்வியக்கத்தின் பல்வேறு அறிக்கைகள், தலவர்களின் பேச்சுகள் இவற்றில் உள்ள முரண்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதிலேயே உள்ளது.
“வரலாற்று அனுபவம் நான்கு உண்மைகளை நிரூபிக்கிறது. 1. 1885லேயே தேசம் மதச்சார்பின்மைக் கொள்கையைத் தழுவிக் கொண்டது. 2. சரியாக அதேநேரத்தில் தலை தூக்கிய இந்து மீட்புவாதம் இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் உருவாகக் காரணமாக இருந்தது. 3. இந்த இயக்கங்கள் அவை பிறந்த போதிலிருந்தே இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியத்துடன் போர் புரியத் துவங்கிவிட்டன. 4. அவை விடுதலைப்போரில் பங்கேற்கல்லை, மாறாக, காங்கிரஸை ஓரத்தில் தள்ளுவதற்காக அல்லது ஒழிப்பதற்காக, பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தன.” (பக்.116) என்று கூறும் நூரானி அவர்களின் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. இன்று அவை காங்கிரஸை ஒழித்துவிடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.
இன்று இந்தியாவில் பா.ஜ.க. ஒவ்வொரு மாநிலக்கட்சிகளாக ஒழித்துவருவதை காண்கிறோம். அது எதிர்த்து அழிப்பதைவிட இணைந்து அழிப்பதே அதிகம். இவை ஒரு நீண்டகாலத் திட்டமிடலின் அடிப்படையில் நடக்கிறது என்பதை இந்நூல் விலாவாரியாகச் சொல்லிச் செல்கிறது. அப்படி ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் அதன் பல மட்டத் தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இந்த வரலாற்றிற்கான நகர்வுகளை அந்த அமைப்பு எப்படி நகர்த்தியது என்பதை ஆவணங்களின் மற்றும் அந்த தலைவர்களின் பேச்சுகள், நேர்காணல்கள், பத்திரிக்கை, செய்திகள், அடிப்படையில் விவரிக்கிறார். இவரது தரவுகளின் சேகரிப்பு அசாத்தியமானதாக உள்ளதை இந்நூல் முழுக்க வாசிக்க முடிகிறது.
ஆர்.எஸ்.எஸ். உலகிற்கே ஒரு அச்சுறுத்தல் என்பதை அதன் “ஜகத்குரு”, “விஷ்வகுரு” என்ற கருத்தாக்கங்களின் வழியாகவும், அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு கற்பனாவாதத்திலும் எப்படி திளைக்கிறது என்பதை விவரிக்கிறது. அந்த கற்பனாவாதம் “உலகில் பிறப்பவர்கள் அனைவரும் இந்துக்களே” என்றும் “இந்து இந்தியா உலகத்தின் ஜகத்குரு அல்லது விஷ்வகுரு (உலகத்தலைமை) ஆகும்” (பக்.480-81) என்று, உலகம் முழுவதையும் இந்துமயமாக்க வேண்டும் என்றும் அதன் தலைவர்கள் பேசுவதை சுட்டிக்காட்டுகிறார். அதற்குதான் அவர்கள் அணுகுண்டு ஆய்வுகளை முன்னின்று நடத்துவதும், அதன் அடிப்படையில் உலகையே அச்சுறுத்த முனைவதும்.
இடதுசாரி இயக்கம் தவறவிட்ட பண்பாடு சார்ந்த வாழ்வியலுக்கான முக்கியத்துவத்தை சரியாக கையில் எடுத்து தனது அரசியலை ஒரு பண்பாட்டு வாழ்வியலாக மாற்றிய ஒரு உடலரசியல் சார்ந்த அமைப்பே ஆர்.எஸ்.எஸ். உடலரசியல் என்பது ஒரு மனித உடலிற்குள் தனது அரசியலை முதலீடு (Invest) செய்வதன் மூலம் தனது அரசியல் அதிகாரத்தைப் பெறுதல். மொத்த மனிதர்களையும் ஒரு கருத்தியல் சார்ந்த உடல்களாக மாற்றுதல். அதாவது மதஎந்திரங்களாக மனிதர்களைக் கட்டமைப்பது. ஆன்ம விடுதலை, மோச்சம், ஒரு புனித உள்ளடக்கம் உள்ள இந்து மனிதர்கள், உலகிற்கு வழிகாட்டி என்ற கற்பனையை உருவாக்கி வெறிகொண்ட மதவாத எந்திரங்களை உருவாக்குவது.
அமைப்பு வழியாக இந்துத்துவ வெறிகொண்ட எந்திரங்களையும், பரவலான பொதுமக்களை மதஎந்திரங்களாகவும் மாற்றுவதமே இவ்வமைப்பின் உடலரசியல். அதனால்தான் இந்துத்துவ பாசிசம் மக்களின் ஏற்பைப் பெற்ற ஒன்றாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை மதவாதியாக உணரத் துவங்கியவுடன் ஒரு மத எந்திரமாக மாறும் நுண்பாசிசமாக உருவாகிறது. அது எந்த மதமாகவும் இருக்கலாம். அதாவது ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு மதவாத போர் எந்திரமாகக் கட்டமைப்பதே இந்த அமைப்பின் மிகப்பெரும் அச்சுறுத்தல்.
இந்துத்துவ அரசியலை முதலீடாகக் கொண்ட தன்னை ஒரு அரசியல் சார்பற்ற பண்பாட்டு இயக்கம் என்று கூறுவதன் வழியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வளர்ந்த வரலாற்றை ஆவணப்படுத்துகிறது இந்நூல்.
அந்த அமைப்பு பண்பாடு என்று இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவத்தை மறுத்து ஒரு பாசிசமயமாதலுக்கான வாழ்வை பாரம்பரியம், பண்பாடு என்று கட்டமைக்க முயல்வதற்காக அது இந்திய ஒன்றியத்தின் அரசியல் பரப்பில் ஆடிய ஆட்டமே அதன் வரலாறாக உள்ளது. தனது நோக்கத்தை நிறைவேற்ற எந்த ஒரு தீவிரநிலைக்கும், படுகொலைக்கும், தில்லுமுல்லு, இரட்டை நாக்கு, பல்வேறு சதிகள், பலகுரலில் பேசி அரசியலைக் குழப்புவது தனது உள்நோக்கத்தை மறைத்து அரசியல் சூதாடுவது என இந்திய ஒன்றியத்தை ஒரு மகாபாரத குருச்சேத்ரமாக மாற்றிய கதைதான் இந்த நூல். அந்தக் கதையின் அனைத்து அரசியல் முடிச்சுகளையும் அதன் ஆவண ஆதாரங்களுடன் அவிழ்க்க முன்வைக்கிறது இந்நூல். சான்றாக, மாலேகான் குண்டுவெடிப்பு இந்துத்துவ பயங்கரவாதம் என்று பரவலாக பேசப்பட்டவுடன், அதனை மூடிமறைத்து ஊடகங்கள் மௌனமாக்கியதைக் கூறலாம்.
மதன்மோகன் மாளவியாவின் ஹிந்து பணாரஸ் பலகலைக்கழகமே இவ்வியக்கத்தின் தத்துவ வரலாற்றிற்கு அடிப்படைகளை உருவாக்கியதைப் பற்றிப் பேசுகிறது. அதிலிருந்துதான் பெரும்பாலான இந்துத்துவவாதிகள் உருவாகி வெளிவந்துள்ளனர். குறிப்பாக அவர்களது தத்துவ மூட்டைகளுக்கு ஆசானான குருஜீ எனப்படும் கோல்வால்கர் அப் பல்கலைக் கழகத் தயாரிப்பே. இந்திய வரலாற்றில் இந்து மன்னர்கள் கி.மு. 1000 – கி.பி. 1200 வரை ஆண்டார்கள் என்றும் அதன்பின் அந்நியப் படை எடுப்பு இந்தியப் பண்பாட்டைச் சீரழித்து கலப்புப் பண்பாடு உருவாகியது என்பதான ஒரு ஆதாரமற்ற வரலாற்றை முன்வைப்பதை சுட்டுகிறார் (பக்.35).
இப்படியான பல பொய்யான வரலாறுகள் சாகாக்களில் சொல்லி்க் கொடுக்கப்படுவதின் விளைவாகவே மோடி போன்றவர்கள் பல பொய் வரலாற்றை எந்தக் கூச்சமும் இன்றி பொதுமேடைகளில், உலகத்தலைவர்கள் மத்தியில் பேசுகிறார்கள். சான்றாக, முகலாய மன்னர்கள் இந்து மன்னர்களை எதிர்த்துப் போர் செய்யும்போது முன்வரிசையில் பசுக்களை நிறுத்தி வைத்ததால் இந்து மன்னர்கள் பசு புனிதம் என்று தாக்காமல் தோல்வியடைந்தார்கள் என்று மோடி பேசுவதன் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் (பக். 494). இப்படிப் பல பொய்களை வரலாறாகக் கட்டமைக்க அவர்கள் அறிவு, பண்பாட்டு, வரலாறு சார்ந்த நிறுவனங்களை முழுக்க காவி சிந்தனையாளர்களைக் கொண்டு நிரப்பியுள்ளதை, நிறுவனங்கள் மற்றும் அதற்கு நியமிக்கப்பட்ட நிறுவனர்கள், அவர்களது காவிப் பின்னணி என தகவல்களை அள்ளித் தருகிறார் நூரானி.
சாவர்க்கர் முன்வைத்த இரண்டு முக்கியமான கருதுகோள்களை முன்வைத்து விவாதிக்கிறார். இன்று சாமான்ய இந்து மக்கள் அறியாத, படித்த இந்து மக்கள் கள்ளமௌனம் சாதிக்கும் புள்ளிகள் அவை. 1. இந்துத்துவமும் இந்து தர்மமும் ஒன்றல்ல (பக்.38) 2. இந்துமதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல (பக். 42) அடிப்படையில் சாவர்க்கர் ஒரு நாத்திகர். ஆனாலும் அவர் இந்துமதக் கடவுள்களை, ஆலயங்களைக் காப்பவராக ஒரு தோற்றத்தை தனது அரசியல் சுயலாபத்திற்காக உருவாக்கினார்.
இந்துமதத்தின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்ற தோற்றத்தைத் தரும் ஆர்.எஸ்.எஸ். அடிப்படையில் பெரும்பான்மை இந்திய மக்களுக்கோ அல்லது இந்து மதத்திற்கு நலன் பயப்பது அல்ல. சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்துவர்களை ஓர் அச்சமூட்டும் பேயாக காட்டி, அனைத்து இந்திய பெரும்பான்மை மக்களை ஒரு தாழ்வு மனப்பான்மையில், அச்ச உளவியலில் வைத்திருக்கும் ஓர் இயக்கம்.
அடிப்படையில் அவ்வியக்கம் இந்திய தேசியக் கொடிக்கு மாற்றாக “பக்வா ஜண்டா” என்கிறக் காவிக் கொடியையும், இந்திய அரசியல் சட்டத்தை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தங்களது சனாதன மனுவாத வருண அடிப்படை சட்டங்களைக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டது. ஏன், இந்துக்கள், நவீன சிந்தனை உள்ளவர்கள் இவ்வியக்கத்தின் பின் திரளுகிறார்கள் என்ற கேள்வியை நூல் முழுவதும் எழுப்பிச் செல்கிறார்? அவர்களிடம் இவ்வியக்கத்தின் நேர்மையற்ற தன்மையை, இரட்டைவேடத்தை அம்பலப்படுத்தும் நோக்கிலேயே இந்நூல் எழுதப்பட்டள்ளது.
அதற்கான உளவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தவில்லை, அது ஆசிரியரின் நோக்கிற்கு அப்பாற்பட்டது. என்றாலும், அந்த உளவியல் ஆய்விற்கான தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. வெறுப்புணர்வு அவ்வமைப்பினைக் கட்டியமைத்து அதிகாரத்தில் இருந்து காத்து வருபவர்களின் ஆழ்தள உளவியலாக அமைந்துள்ளது. அவர்களது எதேச்சதிகார பாசிச மனப்போக்கு எந்த எல்லைக்கும் போய் எந்தப் பொய்களையும் சொல்லி, நேர்மையற்ற முறையில் அதிகாரத்தை அடைவது மட்டுமே என்பதை நிகழ்வுகள் வழியாக உணர்த்துகிறது இந்நூல்.
இயக்கத் தோற்றம் துவங்கி அதன் திரிசூல அமைப்புகளான பா.ஜ.க. வி.எச்.பி, பஜரங்தள் ஆகியவையும், அந்த அமைப்பினை சூத்ரதாரியாக இருந்து அதை ஆர்.எஸ்எஸ். கட்டுப்படுத்தும் விதத்தையும் இந்நூலைவிட சிறப்பாக மற்றொரு நூல் விவரித்துவிடும் என்று தோன்றவில்லை. அவர்களது வியப்பைத்தரும் கட்டமைப்பையும், அடிமட்டத்திலிருந்து உயர் அதிகார அமைப்புவரையில் அவர்கள் அதிகாரத்திற்கு அடிபணியும் பாசிச மனம் அமைப்பாக திரளும் பாங்கும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும் ஒரு இயக்கம். சிறுவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள், சாமியார்கள் என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அமைப்புகள் வைத்து, ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலை உருவாக்கியுள்ளனர்.
இவ் வலைப்பின்னலை அதன் துவக்கம் மற்றும் வளர்ச்சி, அதன் செயல்கள், அது உருவாக்கிய நிகழ்வுகள் என மிக நுட்பமாக விளக்குகிறது இந்நூல். ராமர் கோவில் பிரச்சினை எப்படி உருவாக்கப்பட்டது அது ஏற்படுத்திய விளைவு, அதனை முன்வைத்து பிரதமராக எண்ணிய அத்வானியின் கதை என வாசிப்பதற்கு அலுப்பூட்டாத வண்ணம் எழுதப்பட்டுள்ளது.
அத்வானியின் எழுச்சியும் வீழ்ச்சியும் மிக நுணுக்கமான விவரங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். எப்படி தன்னைமீறி ஒரு தலைமை பிம்பம் உருவாகிவிடாமல் பாதுகாக்கிறது என்பதையும், அதை உணர்ந்த தலைவர்கள் எப்படி அவ்வியக்கத்தின் இரட்டை நாக்கு ஊதுகுழலாக உள்ளனர் என்பதையும் விளக்கும் விதம் அருமையாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக அத்வானியால் முன்னணிக்கு வந்த மோடி, அத்வானியை வீழ்த்திய கதை ஒரு அரசியல் திரையாக்கமாக எழுதிக்காட்டியுள்ளார். மோடியின் கதை குறித்தும் விரிவாக விவாதிக்கிறார். தற்காலம்வரை அந்த வரலாற்றைத் துல்லியப்படுத்தியுள்ளார். ஒரு அரசியல் பார்வையாளருக்கு இந்த நிகழ்வுகளின் பின்னுள்ள அரசியலை அறிவதற்கான ஒரு கையேடாகவே எழுதப்பட்டுள்ளது.
அசோகர். அக்பர், நேரு என இந்திய வரலாற்றில் மதச்சார்பற்ற பேரரசுகளை உருவாக்கியவர்களை, பன்மைத்தன்மையை, கலப்பு பண்பாட்டை முன்னெடுத்தவர்களை எதிர்ப்பதில் குறியாக ஏன் இந்த அமைப்பு உள்ளது? என்பதை அறிவதற்கு இந்நூல் வாசிப்பு அவசியமானது. சங் என்ற சொல்லிற்கான விளக்கம் (பக். 82), இஸ்லாமியர்களை “யவனப்பாம்புகள்” என்று தனது வெறுப்பைக் கக்கிய ஹெட்கேவர், ஆண்மையவாத இந்து தேசியம் என்ற ஒரு பாசிசக் கருத்தாக்கத்தை தினசரி சாகா என்கிற பயிற்சி வழி உருவாக்குகிறார்.
1925ல் 5நபர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இயக்கம் இன்று, அது நாடுதழுவிய அளவில் வளர்ந்து விரிந்துள்ளது 2015-ல் 51,335 சாகாக்கள், 55,000 கிராமங்களில் பரவியுள்ளது (பக். 487), சமூகவலைதளத்தில் 1.5 லட்சம் பின்பற்றுபவர்கள் கொண்ட இயக்கமாக உள்ளது. உலகஅளவில் 38 நாடுகளில் கிளை உள்ளது (பக்.489).
“பெரும் தொழிலதிபர்களுக்கு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். மீதும் பின்னர் ஜனசங்கம், பிஜேபி மீதும் எப்போதுமே ஒரு கனிவான பார்வை இருந்தது” (பக்.314) என்று குறிப்பிடுகிறார் நூரானி. பெருமுதலாளிகளின் வளர்ச்சியால் உருவான உள்முரண்களில், பழையவகைப்பட்ட முதலாளிகளை ஓரங்கட்டி இந்திய கார்பரேட் முதலாளிகள் உலக அளவில் தங்கள் முதலீடுகளைசக் கொண்டுசென்று, உலகமய முதலாளிகளாக மாறுவதன் ஒரு துவக்கமே இன்றைய இந்துத்துவ பாசிசத்தின் மார்க்சியம் கூறும் உள்கட்டுமானம் அல்லது அடித்தளம். இதுதான் பாஜகவின் அரசியல் பொருளாதாரம்.
சங் பரிவார் அமைப்புகள் தனது கருத்தியலால் அடைய முடியாத வெற்றியை உலகமய கார்பரேட் நிறுவனங்களின் இந்திய முகவர்களும், இந்திய பெருமுதலாளிய கார்பரேட்டுகளும் உருவாக்கித் தந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சமூகத்தை உருவாக்க ஒரு பாசிச அரசு எந்திரம் தேவை. அதனை ஆர்.எஸ்.எஸ். மோடிவழியாக நிறைவேற்றித் தந்துள்ளது. அதன்பின்னுள்ள இந்திய தேசியவாதம் பேசும் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக அதிலும் சில குடும்ப ஆதிக்கத்திற்குக் காட்டிய விசுவாசத்தின்வழி மோடி தலைமையில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா பரவலாக்கம் நிகழ்ந்து வருகிறது.
ராமர்கோவில் பிரச்சினையின் முழுவரலாற்றை விவரிக்கும் ஆசிரியர் அதனை வர்ணிக்கப் பயன்படுத்தும் உருவகம் “காற்றில் கலந்த நஞ்சு” என்பதே. அந்த நஞ்சு இன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மைவாதம் என்கிற சொல்லாடலாக வலம் வருகிறது. இத்தகைய சூழலில், அனைத்து ஜனநாயக உணர்வு உள்ளவர்களும், சாதாரண மக்களும் இதனை வாசிப்பதின் வழியாக நம்மைச் சூழ்ந்துகொண்டுவரும் இருளை, அது தரப்போகும் பேரச்சத்தை, இரத்தப் பலிகளை உணரமுடியும்.
நேருவும், அம்பேத்கரும் கூறியதைப்போல ஒரு எதிர்காலமற்ற, உடைந்து சிதறக்கூடிய, ஆழமான காயப்பட்ட ஒரு இந்தியாவை உருவாக்காமல் இவ்வியக்கம் ஓயப்போவதில்லை. அதனால் மக்கள் இந்த இயக்கத்தின் உண்மை முகத்தை அதற்குள் ஒழிந்துகொண்டுள்ள நச்சரவங்களை, அவற்றின் தீ நாக்குகள் தீண்டத் துடிக்கும் உடல்களை என அனைத்தையும் அறிவது அவசியம்.
இது இன்று உலகைச் சூழ்ந்துள்ள ஒரு பேரபாயம். ஜெர்மானிய பாசிசத்தால், இத்தாலிய நாசிசத்தால் இறந்தவர்களில் அதிகம் தூய ஆரிய ரத்தம் கொண்டவர்கள்தான். ஜெர்மானிய பாசிசம் உலகை அச்சுறுத்தியதைப்போல, இந்துத்துவ பாசிசமும் உலகின் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்த ஒரு அலாரமாக வெளிவந்துள்ளது இந்நூல். இது முக்கியமாக அனைத்து மக்களும் குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். நம்மை காக்க வந்த கடவுள்போன்ற பேரியக்கம் என்ற எண்ணம் உள்ளவர்கள் வாசிக்க வேண்டும். காரணம் அதன் உண்மை முகம் என்ன? என்பதை உணரத்தக்க வகையில் ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்.
இதனை பொறுப்புடன் மொழிபெயர்த்த தோழர் விஜயசங்கர் அவர்களது மொழிநடையும், சரளமாக இதனை மூலமொழியில் எழுதியதைப்போல வாசிப்பிற்கு எளிமையாக ஆக்கித் தந்துள்ளார். அவரது கடின உழைப்பை எப்படிப் பாராட்டினாலும் தகும். ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே வராமல் தந்துள்ளார். பல இடங்களில் அவரது அரசியல் அறிவும், கலைச்சொல் தேர்வும் இலகுவாகவும், வாசிப்பில் இடறாமலும் அமைந்துள்ளது.
இந்த முக்கியமான ஆவணத்தை, நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயம் தனது அரசியல் கடமையைச் செவ்வனே நிறைவேற்றியள்ளது.