ஒவ்வொரு புரட்சிக்கும் எழுச்சிக்கும் பின்னே ஒரு மக்கள் இயக்கமும் அதன் ஊடாக ஒரு மக்கள் இலக்கிய இயக்கமும் இருக்கும். – மக்சீம் கார்க்கி
உண்மையான இலக்கியம் சாதாரண மக்களின் மனசாட்சியைப் பிழிந்து தர வேண்டும்.
-அய்குங் (சீன மக்கள் கவிஞர்)
மக்கள் இலக்கியத்தின் மகத்தான வேர்கள் ஒடுக்கப்பட்டுப் பேரழிவுக்கு உட்பட்ட 1975ல் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிரான கால எழுச்சியாகப் பெரும் போர்ப் பறையாய் கிளம்பிய இயக்கம் நமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். அதன் வரலாறு நம் ரத்தத்தால், வியர்வையால், பெருந்தியாகங்களால் கட்டப்பட்ட எழுச்சி வரலாறு ஆகும்.
இன்று தெருக்கூத்து கிராமிய கலைஞர்கள் முதல், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், மக்கள் எழுச்சி பேச்சாளர்கள், இசைஞர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என – மனித இன மேம்பாட்டு கலாச்சாரப் போராளிகள் ஒன்றிணைந்து, மனித நேயத்திற்கு ஆதரவாக களம் புகும் மக்கள் படையாய் மிளிரும் இயக்கம் தமுஎகச. 1971ல் செம்மலர் இதழின் கவிதை, சிறுகதை, கட்டுரை என எழுதியோரை அணிதிரட்டி மார்க்சிய வழிகாட்டி தோழர் என்.சங்கரய்யா எழுச்சி மிக்க பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார். மூன்றே இலக்குகள்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் கலை-இலக்கிய வடிவங்களை அங்கீகரித்துப் பாதுகாப்பது.
- மிகப்பழமையான கலை-இலக்கிய வடிவங்களை கலாச்சாரப் போராளிகளாக இருந்து மீட்டெடுத்தல்
- மக்கள்-இலக்கியப் படைப்பாளிகளை ஒன்றுதிரட்டுதல்
இதன் தொடர்ச்சியாய் தமிழகத்தில் பட்டிதொட்டிதோறும் சங்கங்களாக திரண்டவர்கள் நான்கே ஆண்டுகளில் 1975ல் பிரமாண்ட முதல் மாநாடாகி புரட்சிகர மக்கள் இயக்கமாக ஜூலை மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் உருவாக்கம் பெற்றது நமது தமுஎச.
பிரெஞ்சுப் புரட்சியின் நீட்சியாக வடிவெடுத்த தொழிலாளர் வர்க்க கலை இலக்கிய மகாசங்கம் போல் எழுச்சிகர மக்கள் யதார்த்தவாத படைப்பாளிகளான ஸ்டென்தால், கலாச்சாரம் புரட்சியின் இலக்கிய அணியை எழுச்சியுற வைத்த புரட்சிக் கவிகளான செங்டுக் ஷியு, ஷெங் சாவோலின் மற்றும் மாசேதுங் போல மாபெரும் ரஷ்யப் புரட்சியின் எழுச்சிக் கலை இலக்கிய ஜாம்பவான்களான மக்கள் எழுத்தாளர் மக்சீம் கார்க்கி, ஜார்ஜ் பிளகனோவ் போல.. கியூப மக்கள் விஜோஸ் மார்ட்டிபோல…
அன்று நம் தமிழகத்தில் தமுஎசவை வழி நடத்திட தோழர் கே.முத்தையா, கு.சின்னப்பபாரதி என பொது உடைமைப் போராட்ட எழுத்துச் சிற்பிகள் இருந்தனர். கூலித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், அவர்களது உரிமைகள், மகளிர் விடுதலை, தலித் விடுதலை என பொது உடைமை இயக்கத்தின் தூணாக இருந்து தமுஎகச செய்த பணிகள் ஏராளம்.
கருத்தியல் தளத்தில் இயங்கும் ஒப்பற்ற அமைப்பாக தமுஎகச தன் முகம் என்று பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய புரட்சிகர முகங்களை முன்வைத்தபோது மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய விடுதலை ஒளிக்கீற்றுகளை பந்தமாய் ஏந்தி நின்றுள்ளது. படைப்பாளி என்பவர் சமூகத்தின் மனசாட்சி என்கிற பொதுக் கருத்தில் உறுதியாகி இயங்கும் படைப்பாளிகளின் குரலாய் நிமிர்ந்து நிற்கிறது தமுஎகச.
படைப்பாளிகளுக்கும் படைப்பு சுதந்திரத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கிளர்ந்தெழும் முதுகெலும்புள்ள சமரசமற்ற இயக்கமாக தமுஎகச இருந்து வருகிறது.
இன்று நம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் மதவெறி காவி பயங்கரவாதத்திற்கு எதிராக சமத்துவ சமதர்ம மதசார்பற்ற சிறுபான்மை, தலித், மகளிர் உரிமைக் குரலாக தனித்து முழங்குகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன் எப்போதையும் விட இன்று தான் தமுஎகசவின் தேவை ஆழமாக உணரப்படுகிறது. உலகையே அச்சுறுத்தும் பொது எதிரியான கார்பரேட் ஏகாதிபத்தியத்தை வீழ்த்திட, உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்குத் துணை நிற்க, மதவெறி ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட, பேச்சுரிமை, எழுத்துரிமை காத்திட நமக்கு இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நம்பிக்கைத் தரும் பேரொளியாகத் திகழ்கிறது.
தனித்துவம் நமது உரிமை! பன்மைத்துவம் நமது வலிமை! எனும் முழக்கத்தோடு மார்த்தாண்டத்தில் கூடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு பெறு வெற்றி அடைய வாழ்த்துகிறோம்.