நிகழ் அய்க்கண்
தோழர் ஜமாலன் 1984 முதல் மார்க்சியம், இலக்கியம், மதவாத எதிர்ப்பு, அரசியல், பின்காலனியம், பின் நவீனத்துவம், சினிமா உள்ளிட்ட துறைகளில் இயங்கியும் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதியும் வருபவர். ஜமாலனின் இந்நூலானது குடியாண்மைச்சமூகத்தினை முன்வைத்து, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது., அதாவது, குடியாண்மைச்சமூகத்தினுடன், அரசுசார நிறுவனங்களுக்கும்; அரசியல் பொறியமைவு; கருத்தியல்களுக்கும்; நுண்பாசிசத்திற்கும்; இந்துத்துவ அரசியலுக்கும், இடையிலான உறவு மற்றும் முரண்கள் பற்றி நுணுக்கமாக அலசுவதாக இருக்கின்றது.

குடியாண்மைச்சமூகம் பற்றி நூலாசிரியர் கூறும்போது, “உலகின் பிற நாடுகளில் குடியாண்மைச்சமூகம் என்பது, ஜனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முதலாளியக்கருத்தியலுடன் உறவுகொண்டது எனவும், ஆனால், இந்தியாவைப் பொறுத்தமட்டில், குடியாண்மைச்சமூகமானது இங்குள்ள வருண சாதியச்சமூகத்தை உடைத்தெறிந்துவிட்டு உருவான முதலாளிய ஜனநாயக அமைப்பல்ல” என்கிறார்.
இந்தியச்சமூகம் வலுவான சனாதனக் கருத்தியலைப் பேசும் மனுதருமக்கோட்பாட்டினை தனது உள்ளுரையாகக் கொண்டிருக்கின்றது. அது ஒரு ஜனநாயக சமத்துவக் குடியாண்மைச் சமூகத்தை வளரவிடுவதற்கு மாறாக, ஏற்றத்தாழ்வான படிநிலை சமத்துவ அமைப்பாக, ஒரு பழமைவாத வருண சாதியத் தன்மை கொண்டதாக அமைந்துள்ளதைப்பற்றி பேசுவதே இந்நுல்தொகுப்பு என்கிறார். “ அவற்றினைப்பற்றி கீழே சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் பற்றிய கட்டுரையில், முதலாண்மை வாழ மனிதர்கள் தேவையில்லை. நுகர்வோர்கள்தான் தேவை. அந்த நுகர்வை உருவாக்க கலாச்சார கட்டுமானம் தேவை. அதனை உருவாக்க வேண்டியது முதலாண்மை நிறுவனங்களின் முதல்பணியாக உள்ளது. அப்பணிகளை சர்வதேச அளவில் செவ்வனே நிறைவேற்றுபவைதான் ஊடகங்கள், நவீன கலை – இலக்கியங்கள், அமைப்புசாரா நிறுவனங்களாகும் என்கிறார்.
அரசியலின் அறமும் அறத்தின் அரசியலும் எனும் கட்டுரையில், அறமென்பதே மதிப்பீட்டின் அடிப்படையில் உருவாகிறது. மதிப்பீடு சமூக அதிகாரத்தால் உருவாக்கப்படுகிறது. இன்றைய முதலாளித்துவ மதிப்பீட்டில், அதன் அதிகாரம் சார்ந்த அறமே அறமாகவும், அதைப்பேசும் தத்துவமாக அறிவியலும் இருப்பதனைக் கூறுகிறார்.
அணுஆற்றலின் அரசியல் பற்றிக்கூறும்போது, அடிப்படை அறிவியல் எந்திரவியலாக வளர்ந்தபோது, சந்தை முதலாளித்துவம், ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்தது. எந்திரவியல் சார்பியல் எந்திரவியலாக வளர்ந்தபோது, ஏகபோக முதலாளித்துவம் உலக முதலாளித்துவமாக வளர்ந்தது. அது குவாண்ட எந்திரவியலாக வளர்ந்தபோது உலக முதலாளியம் துவங்கியது. அறிவியலின் வளர்ச்சி முதலாளியச்சந்தை நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒன்றாக உருவாகி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களிலேயே ஒரு உச்ச வடிவமாக அணுஆயுதம் இருப்பதை விவரிக்கிறார்.
ஊழலற்ற தேசிய அரசுகள் பற்றி கூறும்போது, முதலாண்மை நிறுவனங்கள் வருகையும் அவற்றால் கட்டுண்ட அரசுகளின் புதிய தாராளவாதக்கொள்கையும், அதன் உலகமயமாதல் என்பதனைப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து திசைதிருப்ப “எல்லாவற்றிற்கும் ஊழலே” காரணம் என்பதனை “பொதுஜன அரசியல் மனநிலை”யென கட்டமைக்கவேண்டிய தேவை அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எழுந்தது. அதனையொட்டி உலகின் பல தொண்டுநிறுவனங்கள் ஊழல் எதிர்ப்பினை முன்வைத்து அரசியல் இயக்கங்களாக மாறியவிதத்தினை விளக்குகிறார்.
“தை எழுச்சிப்போராட்டம்” பற்றி பகுப்பாயும்போது, வால்ஸ்ட்ரீட், அரபு வசந்த எழுச்சிகளின் மாதிரியையைப் பின்பற்றி இணையக்குழுக்களின் வழியாக மக்கள் திரளைக்கூட்டமுடியும் எனவும், இப்போராட்டமானது, அரசியல்கட்சிகளையும் அதனால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களைப் புறக்கணித்து, அரசியலற்ற ஒரு பண்பாட்டு மீட்பியக்கம் என்றளவிலான போராட்டமாக கொண்டுசெல்லப்பட்ட விதத்தினை விவரிக்கிறார்.
அரசியல் இஸ்லாமிலிருந்து இஸ்லாமிய அரசியலெனும் கட்டுரையில் மறைந்த எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூலின் படைப்புகளைப் பற்றி ஆராயும்போது, தமிழ் அறிவுச்சூழலானது, சில ஆண்டுகளாக கோட்பாடு எதிர்ப்பு, விமர்சன எதிர்ப்பு என்பதனைத்தொடர்ந்து திட்டமிட்டமைந்த திறனாய்வற்ற சமூகமாக மாறியிருப்பது; தமிழ் உணர்வுச்சூழலானது, பல ஆண்டுகளாக சினிமா – தொலைக்காட்சி – பிற ஊடகங்கள் என்பதற்குள் முடக்கப்பட்டுள்ள மக்கள் திரளாகியிருப்பது; அறிவும் – உணர்வும் இணைந்த தமிழிலக்கியச் சூழலில் ஊடகங்கள் உட்புகுந்து விஷமத்தையும் விஷத்தையும் பரப்பி, இலக்கியமற்ற வெகுஜன மாயையை, பொதுப்புத்திச் சிந்தனையை இலக்கியமாக ஆக்கியுள்ளதனை ரசூல் வெளிப்படுத்தியிருப்பதாகக்கூறுகிறார்.
இலங்கைத் தொடர்குண்டுவெடிப்பு பற்றியக் கட்டுரையில், தற்போதைய உலகமயச்சூழலில், தொடர்குண்டுவெடிப்புக்கள், ஒரு புதியப்போர் வடிவமாக மாறியுள்ளது எனவும், தற்கொலைத் தாக்குதலும், பயங்கரத்தை உருவாக்கும் வண்ணம் இலக்கற்று நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புக்களும், இன்று, ஒரு நாட்டின் சந்தைகளை, மூல வளங்களைக் கைப்பற்ற உலக முதலாளிய அமைப்பு உருவாக்கியிருக்கும் உளவுத்துறை வழியான ஒரு உள்நாட்டுப் போர்முறையே என்கிறார்.
“தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு” எனும் நூலுக்கு எழுதிய முன்னுரையில், அரசியல் நீங்கிய மக்களாக வாழ்ந்துவந்த சிறுபான்மைச்சமூகம், இன்று அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளதையும், அரசியல் மயப்பட்ட பெரும்பான்மைச்சமூகம் இன்று அரசியல் நீக்கம் பெற்றவர்களாகிவிட்ட சூழலினை அவதானிக்க முடிகிறது எனவும், 1800 வருடங்களுக்கு முன்பான தமிழகத்தில், நாகர்கள் சமணர்களாகி, சமணர்கள் இஸ்லாமியர்களாகி மாற்றம் பெற்ற வரலாற்றை நோக்கும்போது, நாகர்கள் என்கிற ஆதித்தமிழ்க்குடிக்குள் தமிழ் முஸ்லிம்களின் மூலத்தை, கொண்டுசெல்ல முடிகிறது என்கிறார்.
பிரேமின், காந்தியைக்கடந்த காந்தியம் என்கிற நூலினை ஆயும்போது, காந்தி ஒரு இந்துமதவாதி என்று நம்பப்பட்டுவந்த கருத்தாக்கத்தைக் கொட்டிக் கவிழ்த்து, அவர் எப்படி கிறித்துவ, சமண, பெளத்த மதங்களின் அறிதலைப்பெற்று ஒரு புதிய இந்திய – இந்துமதம் ஒன்றைக்கட்ட முயன்றார் என்பதனை விவரித்திருப்பதாகக் கூறுகிறார்.
பெயர்த்து உருவாக்கப்பட்ட பின் காலனிய நிலங்கள் எனும் கட்டுரையில், “காலனியம் விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, காலனிய எதிர்ப்பு, மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலைகளாக ஒருங்கிணையும் ஒரு புரட்சிகர சுய தன்னிலைகள் பற்றிய கோட்பாடே பின் காலனியக்கோட்பாடு” என விவரித்துச்செல்கிறார்,“
மூன்று காந்திகள் படுகொலையும் இந்துத்துவ பாசிச எழுச்சியும் எனும் கட்டுரையில்,
ஆர்.ஏஸ்.எஸ். கோல்வால்கர், இந்துத்துவச் சிந்தனையை எந்தவித வரலாற்று ஆதாரங்களுமின்றி, புராண, இதிகாச அடிப்படைகளில் உருவாக்கி, ஜெர்மானிய இனவாதத்துடன் ஒப்பிடத் தகுந்ததாக இந்துமதம் என்பதை, இனமாக மாற்றும் வேலையை, தனது பகட்டான மொழிகளில் கட்டமைப்பதையும், ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதாக இந்துத்துவாவை ஒரு கருத்தியலாக எப்படி வடிவமைக்கிறார் என்பதனையும் விவரித்துக்கூறுகிறார்.
“டிஜிட்டல் இந்துக்கள்” எனும் கட்டுரையில், பொது வாழ்வும், குடியாண்மைச்சமூகமும் பாசிசமயமாகிவரும் தற்போதையச் சூழலில், இந்துத்துவா நவதாராளவாதத்துடன் இணைந்து இந்தியர்களை “டிஜிட்டல் இந்துக்கள்’ என்ற புதிய மக்கள் திரளாக மாற்றுவதாகவும், இந்தியாவின் தனித்தன்மையான சமூகஅமைப்பும், உலக அரசியலில் உருவாகிவரும் நவதாராளமயமும் இணைந்து எப்படி இந்துத்துவ பாசிசமயமாகிவருகிறது என்பதனைப் புரிந்துகொள்வதற்கான தொகுப்பே ஆனந்த் லெல்டும்டேவின் “சாதியின் குடியரசு” எனும் நூல் எனப்பதிவு செய்கிறார்.
காஞ்சா அய்லய்யாவின் “நான் இந்து அல்ல” – இந்துத்துவா பற்றியக் கட்டுரையில், சாதியம், வர்க்கம் ஆகியவற்றின் இணைவிற்கான ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தைத் தரக்கூடியதாக உள்ளதென்றும், ஒரு சூத்திரனின் பார்வையில் எப்படி பெருவாரியான பிற்படுத்தப்பட்ட மக்கள் அடிமைகளாக மாற்றப்பட்டுச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை இந்நூலானது விவரிக்கிறது என்கிறார்.
பயங்கரவாதம் குறித்த உளவியல் கருத்தாக்கங்கள் குறித்த கட்டுரையில், இன்றைய புற உலகம், முதலாளிய சித்த பிரமையால் பார்க்கப்படுகிறது அல்லது முதலாளியம் உருவாக்கிய உலகைப்பார்க்கும் ஒரு பிறழ்ந்த மனநிலையே இன்றைய இயல்பான மனநிலையாகக் கட்டமைக்கப்படுவதனைப்பற்றி விவரிக்கிறார்.
காரல்மார்க்ஸ் – சமூக நனவிலியாகிவிட்ட சிந்தனையாளர் எனும் தலைப்பிலான கட்டுரையில், ‘மார்க்சியம்’ இன்று உலகளாவிய ஒரு சிந்தனையாக, சமூக மொழியில், சிந்தனையில், ஆழ்தளத்தில் இறங்கியுள்ளது பற்றியும், இன்றைய உலகின் எந்த மாற்றுச்சிந்தனையும் மார்க்சியத்துடன் ஒரு உரையாடலின்றி தன்னை முன்னகர்த்த முடியாதெனவும், மார்க்சியம் ஒரு அரசியல் நனவிலியாக, சமூக நனவிலியாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

லெனின்-வரலாற்றில் நிகழ்ந்த நடைமுறைப்பயிற்சி எனும் தலைப்பிலான கட்டுரையில், மார்க்சிய பகுப்பாய்வு அடிப்படையில் ஒரு சமூகத்தில் பொருளியல் ஆய்வை முன்னெடுப்பதும், அதன் அடிப்படையில் சமூகமுரண்களை உய்த்துணர்வதும், அவ்வாறு உய்த்துணரப்பட்ட முரண்களின் அடிப்படையில், வர்க்க அணி சேர்க்கைகளை உருவாக்குவதும், அவற்றைக்கொண்டு சமூக முரணைத் தீர்த்து சமத்துவச்சமூகத்தை அமைப்பதும் மார்க்ஸியத்திற்கான லெனினின் முக்கியப் பங்களிப்பாகும்.
முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி எப்படி ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக எண்ணற்ற மக்களை ஒடுக்குவதாக அமைந்துள்ளது என்பதைப் பகுப்பாய்வின் வழியாகவும், அதற்கான அரசியல் திட்டத்துடனும், அணி சேர்க்கையுடனும் ஒரு கட்சியை உருவாக்கி, அதனை வழிநடத்தி புரட்சியை நிகழ்த்தியவர் மாமேதை லெனின் என்கிறார்.
“நுண்பாசிசம்” பற்றிய உரையாடல் எனும் கட்டுரையில் இந்திய அரசானது தேசபக்தி என்கிறபெயரில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் மைக்ரோ பாசிசவாதியாகக் கட்டமைப்பதையும், பாசிச மனஅமைப்பைக் கட்டமைக்க ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருவதனை குறிப்பிட்டுச்சொல்கிறார். இந்திய சமூகப்பகுப்பாய்வாளர்கள், மார்க்சிய வர்க்கப் பகுப்பாய்வாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், ஐரோப்பியச் சமூகங்களில் சமத்துவமின்மையென்பது பொருளியல் ஏற்றத்தாழ்வு கொண்டதாகும். ஆனால் இந்தியாவைப் பொருத்தமட்டில், அதுவே படிநிலை சமத்துவமின்மையைக் கொண்டுள்ளதாக இருக்கிறதென்கிறார்.
இந்துத்துவ தேசத்தில் “இட ஒதுக்கீடும் உடல் முதலீடுகளும்” எனும் கட்டுரையில், இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை முடிவுகளில் ஒன்று, சாதிய இட ஒதுக்கீட்டினை ஒழித்துவிட்டு அதற்குப்பதிலாக பொருளியல் அடிப்படையில் இட ஒதுக்கீட்டினைக் கொண்டுவருவது என்பதுதான். பிப்ரவரி 2019 முதல், முற்பட்ட வகுப்பினரிலிலுள்ள ஏழைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில், பத்து சதவிகித இடஒதுக்கீடு அமலுக்குவருவதாக அறிவித்திருப்பதானது, வெறும் அரசியல் உத்தியானது மட்டுமல்ல, இட ஒதுக்கீடு சமூகநீதி உரிமைக்கு எதிரானதொரு, பொதுமக்களின் பொதுப்புத்தி சார்ந்த, ஒரு இந்துத்துவ இட ஒதுக்கீடு எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டும் முயற்சியே என்கிறார்.
“இந்துத்துவாவின் நுண்பாசிச உளவியல்” எனும் கட்டுரையில், தனிமனிதர்களின் முன்னுரிமைகள், அணுகுமுறைகள், புலனுணர்ச்சி மற்றும் அவர்களது சுயம் எனப்படும் தன்னிலைகளை வடிவமைத்தலே நுண்ணரசியல் எனவும். அதேபோல, தினவாழ்வை ஒழுங்கமைக்கும் அரசின் இறையாண்மைச் சட்டங்களை ஒரு உடலாண்மைச்சடங்களாக மாற்றிக்கொள்வதே நுண்பாசிசம் என்கிறார்.
இதேபோல, “இந்துத்துவ பாசிசத்தின் இருமுகங்கள்” எனும் கட்டுரையில், சீக்கியப்படுகொலைகள், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த படுகொலைகள், குஜராத் படுகொலைகள் ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியானவையென்றும், இந்நிகழ்வுகள் வெறுப்பரசியலினைப் பரப்பியதன் வழியாக நடந்தேறியதினை பதிவு செய்கிறார். அடுத்து, கொரோனா நுண்மி பெருந்தொற்றின் உடலரசியலெனும் கட்டுரையில், மக்களுக்கு நலவாழ்வு, சுகாதாரம் இவற்றினை உறுதிப்படுத்தாத அரசானது, தனது, அடக்குமுறைக் கருவியினைப் பயன்படுத்தி, மக்களையே மக்களுக்கு எதிரானவர்களாக மாற்றுவதையும் குறிப்பிடுகிறார்.
இதுமட்டுமின்றி, கர்மயோகியும் மர்மயோகியும் எனும் கட்டுரையில், தேர்தல், அரசு, அதிகாரமனைத்தும் பண உறவுகளாக லாபவேட்கையால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பது வெளிப்படையாக அம்பலப்பட்டுள்ளதெனவும், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் ரத்து;
பாபர்மசூதி இடிப்பு மீதான நீதியின் தீர்ப்பானது, இந்திய இறையாண்மையின் புது வடிவமாகிப்போனதையும், குடியுரிமைச்சட்டம் மூலம் இந்திய மதச்சார்பற்ற, குடியாண்மை சமூகத்தைத்தகர்த்து, மதவெறிகொண்ட சமூகமாக மாற்றுவதுதான். இதனை அணுமதித்தால், நாளை இந்திய அரசியல் சட்ட முகவுரையை மாற்றி, ஒரு இந்துத்துவ பாசிசக்குடியரசு என்றும் அறிவிப்பார்கள் என்கிறார்.
