பேரா. ஆ. சிவசுப்பிரமணியம்
ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை முன்நிறுத்திச் செயல்படும் ஒரு கலை இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் ஏனைய அமைப்புகளின் செயல்பாடுகளில் இருந்து வேறுபட்டடதாகவே அமையும். இவ்வகையில் த.மு.எ.க.சங்கமானது கற்றல் கற்பித்தல் என்ற இரண்டையும் தன் குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவருகிறது.

ஓர் இடதுசாரி இயக்கத்தின் கலை இலக்கிய அமைப்பின் அடிப்படைச் செயல்பாடாக அமைவது வெகுமக்கள் தொடர்பு. இவ்வகையில் வழக்கமான பொதுக் கூட்ட வடிவத்தை மட்டுமின்றி கலைஇரவுகள் வழி அது மக்களை ஈர்த்துள்ளது.
நம் பாரம்பரியக் கலைகள், நாட்டார் இசை வடிவம், நவீன இசைவடிவம், தெரு நாடகம் என்பனவற்றின் கலவையாய் அமைந்து பொழுதுபோக்குத் தன்மையாகச் சுருங்கிப்போகாது சமூக உணர்வை ஊட்டி வளர்த்தலில் இதன் பங்களிப்பு இருந்தது.
தன் இயக்கத்தின் செயல்வீரர்களுக்கு அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் பலதரப்பட்ட பயிற்சி முகாம்களை (நாட்டார் வழக்காறு, சங்க இலக்கியம்,தற்கால இலக்கியம், குறும்படத் தயாரிப்பு) நடத்தியுள்ளது. இதன்வழி புதிய சிந்தனைப் போக்குகளை வளர்த்தெடுத்ததுடன், தோழமை உறவுகளை வலுப்படுத்தவும் செய்துள்ளது. இப்பணிகளுக்கேற்ற வகையில் திறந்தவெளி அரங்கக் கூட்டம், அறைக்கூட்டம் என்பனவற்றைத் தேர்வு செய்துநடத்தியமை குறிப்பிடத் தக்கது.
இளம் ஆய்வாளர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தும் வகையிலும், மூத்த எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் பரிசுகள் வழங்கிவரும் செயல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
கலை இலக்கியத் துறை சார்ந்தும் சமுகம் சார்ந்தும் அவ்வப்போது உருவாகும் சிக்கல்கள் தொடர்பாகக் கள்ள மௌனம் காக்காது தன் கருத்தை அறிக்கைகள் ஆர்ப்பாட்டங்கள் வழி வெளிப்படுத்திவரும் செயல் இதன் தனித்துவமான அடையாளமாக விளங்கி வருகிறது.