திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022 சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை தூண்டில் – இனிய நந்தவனம் -தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின. இம்மாநாட்டை கல்வியாளர் செளமா ராஜரத்தினம் தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்குத் தொடங்கி, ஒன்பது அமர்வுகளாக நடைபெற்றன. இதில், தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஹைக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது வழங்குதல், ஹைக்கூ நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன.
இம்மாநாட்டில் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, பிருந்தாசாரதி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் தமிழ்நாடன், தங்கம்மூர்த்தி, மு.முருகேஷ், நந்தவனம் சந்திரசேகரன், அமரன், வதிலை பிரபா, பல்லவி குமார், கவிநிலா மோகன், முனைவர் ம.ரமேஷ், தனலெட்சுமி பாஸ்கரன், பா.தென்றல் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.
மாநாட்டு நிறையுரையாக கவிஞர் என்.லிங்குசாமி பேசுகையில், “ஹைக்கூ கவிதை எழுதுபவனின் மனநிலையானது உலகில் இருக்கும் எல்லா மனிதர்களின் மனநிலையிலிருந்தும் வேறுபட்டிருக்கும். அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்ற பார்வையும் மற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பும் மகிழ்ச்சியும் வித்தியாசமாக இருக்கும்
