நிகழ் அய்க்கண்
கல்வியாளரான பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதியுள்ள நூலிது. இவர் வெளிநாடுகளிலும், இந்தியாவிலுள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தராகப் பணியாற்றியவர். அமெரிக்கா, மலேஷியா ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கின்றார். தற்போது, தமிழகஅரசின் கல்விக்கொள்கையை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக இருக்கின்றார்.
இந்நூலானது பத்து தலைப்புகளுடன், குறிப்பாக, சமூகம், தேசம், அரசியலமைப்பு, பொருளாதாரம், வாழ்வாதாரம் குறித்து தனது செறிவான கருத்துக்களை முன்வைக்கிறது. அவற்றினைப்பற்றி ஒவ்வொன்றாக சுருக்கித் தந்துள்ளேன்.
தேசிய உயர்கல்வித்தகுதிக்கட்டமைப்பின் உருவாக்கம் – உலகளாவிய அனுபவம்: தேசியக்கல்விக்கொள்கை 2020ஐ செயல்படுத்துகின்ற வழியில், பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து தேசிய உயர்கல்வித்தகுதிக்கட்டமைப்பு (NHEQF) எனப்படும் மற்றுமொரு வரைவை, இந்த நாடு பெற்றுள்ளது. இந்த வரைவானது, உயர்கல்வியில் தொழிற்கல்வி நுழைவை எளிதாக்கித்தருதல், கற்றல் விளைவுகளின் அடிப்படையில் பட்டம், டிப்ளமோ, சான்றிதழ் படிப்புக்களுக்கு வழிவகுத்து தரப்போகின்ற உயர்கல்வித்தகுதிகளை விளக்குதல், கிரடிட் பரிமாற்றம் மற்றும் சமன்பாடு போன்ற விவகாரங்களுக்கான எளிதான நெறிமுறைகளை உருவாக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது.
இத்தேசியத்தகுதி கட்டமைப்பை உருவாக்கியவர்கள், ஐரோப்பிய உயர்கல்விப்பகுதி (EHEA) எனப்படுகின்ற மிகப்பெரிய கட்டமைப்பின் அடிப்படையில் ஐரோப்பிய தகுதிக்கட்டமைப்பு (EQF), டப்ளின் விவரிப்பான்கள் எனப்படும் தகுதி குறித்த விளக்கங்களால் ஈர்க்கப்பட்டே உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகத்தெரிகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள் உள்ளிட்ட 48 நாடுகளிலுள்ள உயர்கல்வித்தகுதிகளுக்கு இடையிலான தரநிலைகள், தரம் மற்றும் நகர்திறன் ஆகியவற்றிலுள்ள ஒப்பீட்டை உறுதி செய்வதற்காகவே அந்தக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசாங்கமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் சேர்ந்து, அதன் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமலேயே, இந்திய நெறிமுறைகள், விழுமியங்களின் அடிப்படையிலான கல்வி, சந்தைசார்ந்த கல்வி, போன்ற தேசியவாதக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு இருக்கின்ற கட்டமைப்பை இப்போது உருவாக்கி அறிவித்துள்ளன.
கல்வி எப்போதும் சமூகத்தால் இயக்கப்படுவதாகவே இருந்து வருவதால், அது எப்போதும் பிராந்திய அளவிலே அதாவது, இன்னும் சரியாகச் சொல்லப் போனால், அரசியல் ரீதியாக மாநிலங்களாலேயே இயக்கப்பட்டு வருகின்றது.இந்திய ஒன்றியத்தைக் கட்டமைத்தவர்களும் அவ்வாறே கட்டமைத்தனர். அதற்குமாறாக, தற்போதைய புதியக்கல்விக்கொள்கை 2020 மூலமான தேசிய உயர்கல்வி தகுதிக்கட்டமைப்பானது, உயர்கல்வியில் கல்விசார் செயல்பாடுகளின் மீது ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரத்தை ஒருங்கிணைத்திடவே முயல்வதாகவே இருக்கின்றது.
தகுதி வகைப்பாடு மற்றும் இந்திய மக்கள் தொகையும், சமூக அமைப்பும்; இந்திய நிலைமையில், தகுதிக்கட்டமைப்பு என்பது நான்கு நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு இளங்கலைப்பட்டத்தை பெறுவதற்கென தொடர்ச்சிசான்றிதழ், டிப்ளமோ போன்ற கீழ்நிலைத் தகுதிகள் இலக்குகளாக இருக்கும் வகையிலான தொடர்ச்சியைக்கொண்டிருக்கக் கூடாது; கல்வியில் அடிப்படைச்செயலாக தோல்வியடைவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், வெற்றிபெறுவதற்கும் ஏற்ற கட்டமைப்பை மாணவருக்கு வழங்கிடவேண்டும்; தகுதி நிலையென்பதனை (MERIT) ‘ஹானர்ஸ்’, ‘ஆய்வு’ மற்றும் ‘சாதாரணமான’ என்பது போன்ற உயர்நிலை மற்றும் கீழ்நிலை எனும் வகைகளைக் கொண்டிருக்கக்கூடாது;
கற்றல் விளைவுகளின் விவரிப்பான்கள் (DESCRIPTORS) அனைத்துவகையான கல்வித்தேவைகள், பிராந்திய அல்லது உள்ளூர் மற்றும் சமூகத்தேவைகள் பொருந்தும் வகையில் வெளிப்படையாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் செய்துவிடுவதினால், சமூகத்தின் மேல்நிலையிலுள்ளவர்கள் உயர்கல்வியில் ஆதிக்கம் செலுத்தவும், பின்தங்கியுள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அமைந்துவிடும். நாட்டில் மாறுபட்ட அரசியல் கொண்ட, சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற சமூகத்தினை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக, பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, கல்வி உள்ளீடு மற்றும் சமவாய்ப்பு, சமபங்கு மற்றும் பொதுவான தகுதிக்கட்டமைப்பினை வழங்கிட வேண்டும்.
கற்றல் விளைவுகளா அல்லது போதனைகளா; தேசிய உயர்கல்வித்தகுதி கட்டமைப்பானது, வெவ்வேறு தகுதிநிலைகள், தேசிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்ற தர நிலைகள், ‘பட்டதாரி பண்புக்கூறுகள்’ என்று தனித்தனியான விவரிப்புகளின் தொகுப்பாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பானது, தகுதிகளுக்கான அந்தந்த நிலையைப்பொறுத்து இறுகிப்போன, குறுகலாக உள்ளமைக்கப்பட்ட கருத்துக்கள், நெறிமுறைகளைக்கொண்டு விவரிப்பான்களை வரையறுத்துக்கொடுக்கின்றது.
தகுதிக்கான விவரிப்புகளைப் பற்றிக்கூறும்போது, தங்கள் படிப்பின் மூலம் மாணவர்கள் வளர்த்தெடுத்திருக்க வேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்ற திறன்கள், திறமைகள், தகுதிகளைப் பெறுவதற்காக அவர்களால் நிரூபித்துக்காட்டப்பட வேண்டிய கற்றல் விளைவுகள் குறித்த அறிக்கையையே அந்த விவரிப்பான்கள் கொண்டிருக்கும். இந்த தகுதிக்கான விவரிப்புகளை ஐரோப்பிய, இங்கிலாந்து உயர்கல்விக் கட்டமைப்புடன் ஒப்பிடும்போது, இந்தியத்தகுதிக் கட்டமைப்பானது பல்வேறு வகைகளில் விசித்திரமாக திசைதிருப் பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக, பொதுவானது X குறிப்பிடப்பட்டது;
தேசியவாதம் (எதேச்சதிகாரம்) X உலகளாவியது (பன்முகத்தன்மை) என்றாகியுள்ளது. இதனோடு நில்லாது, மாணவர்கள் ஒட்டுமொத்தமாகவும், ஒவ்வொருமுறை இடையில் வெளியேறும் போதும்” வேலைவாய்ப்பிற்குதயாராக உள்ளது மற்றும் தொழில் முனைவோர் திறன்கள், மனநிலை கொண்டது” என்று ஒருவகை விளக்கத்தை உள்ளடக்கி, தகுதிகளை தொழில்மயமாக்குவதையே இக்கட்டமைப்பானது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது போதாதென்று, விழுமியங்கள் அடிப்படையிலான கல்வியினை, அதாவது “அரசியலமைப்பு, மனிதநேயம், நெறிமுறை மற்றும் தார்மீக விழுமியங்களையும் கற்றல் விளைவுகளின் ஒரு பகுதியாக, இவற்றினைப் பயிற்சிசெய்வதற்கான விருப்பத்தையும், திறனையும் பட்டதாரிகள் நிரூபிக்க வேண்டுமென்கிறது.
புதியக் கல்விக்கொள்கையின் விளைவுகளை தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்கும்போது, தேசிய அரசு மற்றும் அதன் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற குடிமக்களாக பட்டதாரிகளை உருவாக்குகின்ற செயலென்பது தெரியவரும்.
கல்விசார் கிரடிட் வங்கி (ஏபிசி) என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும். இது, மாணவர்கள் தங்களுடைய உயர்படிப்பில் பெறுகின்ற கல்விசார் கிரடிட்டுகள் அனைத்தையும் கணக்கில் கொள்வதாக இருக்கின்றது. மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்விசார் கிரடிட்டுகளை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் எடுத்துச்செல்வது; ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதை எளிதாக்குதல் போன்ற அடிப்படைகளின் மீதே, இந்த ஒழுங்குமுறை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
கற்றல் கொள்கையை அடிப்படையாகக்கொண்ட ஏபிசி முறையானது, மாணவர் ஒருவர் தன்னுடைய வசதிக்கேற்ப கற்றுக்கொள்ளவும், கல்வியை பாதியிலேயே கைவிடவும், தன்னுடைய விருப்பம், வசதிக்கேற்ப மீண்டும் தேர்வு செய்து கொள்ளவும் அனுமதிக்கிறது. இப்படியான செயல்களானது, கலைத்திட்ட இணக்கத்தை சீர்குலைப்பதாகவும், உயர்கல்வியினை வணிகமயமாக்குவதற்கும், உயர்கல்வியில் வெளிநாட்டுச்சேவைகளை எளிதாக்கித்தருவதாகவும், ஒன்றிய மேலாதிக்கத்திற்கானதாகவும், டிஜிட்டல் வசதியுள்ள மக்களுக்கான கருவியாகவும் இருக்கிறது. இப்படிச் செய்வதின் மூலம் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதும், ஜனநாயகம் மற்றும் பக்கச்சார்பின்மை என்பதும் கேள்விக்குள்ளாகி ஆபத்து மேலிடுகிறது.
பலகட்ட வெளியேற்றங்கள், தொழில்மயமாக்கல், தலைமுறைகளுக்கிடையிலான தொழில் நகர்வு: புதிய கட்டமைப்பானது மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பிலிருந்து வெளியேற்றுவதற்காக இருக்கின்ற உள்ளார்ந்த தடைகளைத்தாண்டிச் செல்லுமாறு செய்ய முற்படுகின்றன. படிப்பின் ஒருகட்டத்தில் தோல்வியுறும் மாணவர்கள் தங்கள் கல்வித்திட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். அதற்குப்பதிலாக, அவர்களுக்கு பணியிடத்தில் நுழைவதற்கான வழிகாட்டப்படும். அதாவது, இடைநிற்பவர்கள் பணியிடத்தில் சேர்ந்துகொள்ள உதவுவதற்காக இரண்டு மாதங்களுக்கு பத்து கிரடிட்டுகள் மதிப்புள்ள தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
இந்தியாவில், தங்களுக்குத் தகுதியான வேலையை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை தனிநபர்களின் சமூக நிலையே வலுவாகத் தீர்மானிக்கிறது.. உலகவங்கியின் 2021 அறிக்கையில்கூட, “இந்தியாவில், தொழில்சார் அடையாளம் மற்றும் சாதிப்படிநிலை போன்றவையே தொழில் தேர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறது.” இன்னும் சரியாகச் சொல்லப்போனால், மேல்நோக்கிய தொழில் நகர்வை சாதி அமைப்பு தடுக்கவே செய்கிறது.
இதுமட்டுமின்றி, திறன்களில் தலைமுறைகளுக்கிடையிலான மேல்நோக்கிய நகர்வைப்பெறுவதற்கு, மேற்குறிப்பிட்ட பெரும்பான்மையான பின்தங்கிய சமூகங்களுக்கு உதவிசெய்து, அதன்மூலம் அந்தச் சமூகங்கள் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டங்களுக்கு தலைமுறைகளுக்கிடையிலான தொழில்சார் நகர்வைப்பெறுவதை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய உயர்கல்வி தகுதிக்கட்டமைப்பு உறுதி செய்யுமா என்பதுதான் நம்முள் உள்ள முக்கிய கேள்வியாகும்.
இந்தக்கட்டமைப்பானது, சமூகத்திலுள்ள மேல் தட்டினருக்கும், சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கும் இடையிலான திறன் இடைவெளியை மறுக்கமுடியாத அளவுக்கு விரிவுபடுத்தப்போகிறது என்பது மட்டும் உண்மை.
இந்தக்கட்டமைப்பு 21 நூற்றாண்டின் மனித மூலதனத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது; தொடர்ந்து வளர்ந்துவருகின்ற நவீன இயற்பியல் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களே 21 -ம் நூற்றாண்டின் இரண்டாம் காலப்பகுதியிலிருந்து உற்பத்தி மற்றும் உற்பத்தி வழிமுறைகளை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியான சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவு, இணைய இயற்பியல் அமைப்புகள், ஆழ்ந்த கற்றல், இயந்திரக்கற்றல் போன்ற, நவீன இயற்பியல் மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான திறன்களும், அறிவும் கூட்டாக இணைந்து உற்பத்தி வழிமுறைகளை வரையறுப்பதில், முக்கியப்பங்கு வகிக்கும்.
இதனால் விளையும் பயன்களையும், வழக்கம்போல சமூகத்தின் மேலடுக்கிலிருப்பவர்கள்தான் அனுபவிப்பவர்களாக இருக்கப்போகின்றனர். இப்படி ஆகும்போது, ஏற்றத்தாழ்வு என்பது அதிகரிக்கவே செய்யும். இதிலிருந்து, தேசிய உயர்கல்வித்தகுதிக் கட்டமைப்பிடம் 21-ம் நூற்றாண்டின் மனித மூலதனத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருப்பதை உணரமுடிகிறது.

கட்டமைப்பின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை; நாடுதழுவிய அளவில் தரங்களை நிர்ணயிப்பதன் அடிப்படையில், தகுதிகள், கற்றல் விவரிப்பான்கள், கிரடிட் மேலாண்மை ஆகியவை குறித்த வேலைகளைத் தொடங்கிய ஒன்றியஅரசானது, மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் கைவைப்பதாக இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பானது, பட்டியல் 1,66 இன் நுழைவு மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் தர நிலைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்ணயித்தல் என்று, ஒன்றிய அரசாங்கத்திடம் உள்ள அதிகாரத்தைக் குறிப்பதாகவே கருதமுடியும். இந்த தேசிய கல்வித்தகுதிக்கட்டமைப்பானது, பட்டியல் எண் 2-ன் நுழைவு 32 –ல், அதாவது, மாநிலஅரசின் அதிகாரவரம்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மையப்படுத்தப்பட்ட கல்விசார் கிரடிட்வங்கி என்ற கட்டமைப்பின் மூலம், ஒழுங்குபடுத்தும் அளவிற்குச் சென்று, மறைமுகமாக தேசிய தரமதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ் குழு (NAAC) அங்கிகாரம் மூலம் மதிப்பீடு செய்வதாக இருப்பது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டமீறலாகவே இருக்கின்றது.
கட்டமைப்பின் சமூகப்பரிமாணம்; மாணவர்கள் சமூகப்பொருளாதாரம் மற்றும் பிற பாதகங்களின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட தகுதிக்கட்டமைப்பு மாணவர்களிடம் பாகுபாடு காட்டாமல் இருப்பதை உறுதி செய்வதென்பது மிகவும் சவாலானது.
இது மட்டுமல்லாது, பலதரப்பட்ட சமூகங்களைக்கொண்ட இந்தியாவில், எந்தவொருவகையான, தரப்படுத்தப்பட்ட அமைப்பும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்களை பாதிக்காவண்ணம் இருப்பதை தேசிய உயர்கல்வித் தகுதிக்கட்டமைப்பு உறுதிப்படுத்தித்தர வேண்டும்.
மிகவும் இறுக்கமாக, தரப்படுத்தப்பட்டவையாக இருக்கின்ற இந்தக்கட்டமைப்பில் உள்ள விவரிப்பான்கள், மாநில அளவிலான பல்கலைக்கழகங்கள் தங்களுடைய சொந்த பாடத்திட்டத்தைக்கூட வழங்கவில்லை எனும்போது, கல்வியானது எந்த அளவுக்கு அந்த சமூகங்களுக்கு ஏற்றவாறு சேவையாற்றும் என்பது கேள்விக்குறியே!.
பாடத்திட்டத்தை அரசியலாக்குதல்; ஐரோப்பிய நாடுகளின் தேசியத்தகுதி கட்டமைப்புகள் உருவாக்கிய பாடத்திட்டங்கள் அரசியல் பிரச்சனையாக மாறிப்போயுள்ளன.
இந்தியத் தகுதிக் கட்டமைப்பின் புதிய மொழியானது, விமர்சனச்சிந்தனை, பன்மைத்தன்மை, சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்திற்கு ஏற்ற இடமான பல்கலைக்கழகங்களை நிச்சயமாக முடக்கிடப்போகிறது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், தேசியவாதத்தை ஆதரிக்கின்ற எந்தவொரு அரசாங்கமும், தேசிய அரசின்கீழ் கலைத்திட்டங்களையும், கற்றல் நோக்கங்களையும் வகைப்படுத்துவதற்கான முயற்சிகளையே மேற்கொள்ளும் என்பதே உண்மையாக இருந்திருக்கின்றது. அந்த அரசாங்கங்கள் போலியான நாட்டுப்பற்றுக்கும், தேசியவாதத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டை அறியாமல் போலியான நாட்டுப்பற்று கொண்டவையாக மாறி, தங்களுடைய போலி நாட்டுப்பற்றுக் கோட்பாட்டின் அடிப்படையிலே குடிமக்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.
போலி நாட்டுப்பற்று என்பது பாசிசத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத்தருகின்ற அணுகுமுறையின் பழமையான வடிவமாகும். இது, போலி நாட்டுப்பற்று, பாசிசம் ஆகியவற்றிற்கு இடையே பேரின வாதத்தின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறது.அரசியலமைப்பு தேசம் (தேச அரசு), கருத்தியல் தேசம் ஆகியவை வெவ்வேறு நிறுவனங்களாகும்.
அரசியலமைப்பு தேசம் என்பது அரசியலமைப்பு மற்றும் அதன் சட்டகங்களால் உருவாக்கப்பட்டது. கருத்தியல் தேசமானது அதன் அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக, பரந்த அளவில் அதன் சமூக அலகுகளால் அமைக்கப்பட்டது. கல்வியின் அதிகாரவரம்பு கருத்தியல் தேசத்திற்கானதாக வரையறுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அரசியலமைப்பு தேசத்திற்காக அல்ல;
ஒரே பொதுவான கல்விக்கொள்கை பல கருத்தியல் தேசங்களுக்கு (சமூகங்களுக்கு) சேவை செய்திட இயலாது. எனவே, நாடு முழுவதும் பொதுவான கட்டமைப்பு, பொதுவான நுழைவுத்தேர்வு, ஒரேவகையிலான கல்விமுறை பின்பற்றப்படுவதென்பது சாத்தியமற்றது.
கல்விக்காக வாதிடுவதற்கும், அதனை மேம்படுத்துவதற்குமான தார்மீகஉரிமை கருத்தியல்தேசத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதனை எளிதாக்கி உறுதிசெய்து தருவது அரசியலமைப்பு தேசத்தின் கடமையாகும்