ச.சுப்பாராவ்
எழுதுவதிலேயே மிகவும் சிரமமான காரியம் முதல் பத்தியை எழுதுவதுதான் என்றார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். நூற்றுக்கு நூறு உண்மை. அதனால்தான் இந்தக் கட்டுரையின் முதல் பத்தியை எழுதுவதற்கு கவிஞர். மு.மேத்தா ஒருமுறை சொன்னது போல வெள்ளைத்தாள் வீதியில் என் பேனா வெகுநேரமாக நொண்டியடித்துக் கொண்டிருந்தது.

இரண்டு வரிகளுக்குள் இரண்டு மேற்கோள்களைப் பார்த்ததும் புத்திசாலி வாசகர்கள் இக்கட்டுரை எதைப் பற்றியது என்று ஊகித்திருக்கக் கூடும். ஆம்… இது நான் சமீபத்தில் படித்த வாசிப்பு, புத்தகங்கள், எழுத்து ஆகியவற்றைப் பற்றிய மேற்கோள்களின் தொகுப்பான The Quotable Book Lover புத்தகம் பற்றியதுதான். பென் ஜாக்கப்ஸ் மற்றும் ஹெலினா ஜால்மர்சன் தொகுத்தது.
லெனின் பிறந்த நாளுக்கு புத்தகப் பரிசு கேட்டது, கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? தனியான ஒரு தீவில் விட்டால் என்ன கொண்டு செல்வீர்கள்? ஒரு சிறைச்சாலை மூடப்பட்டால், எது திறக்கும்? இப்படியான மேற்கோள்களை மட்டுமே கடந்த 10 -15 ஆண்டுகளாக வாசித்து வந்த நிலையில் மேற்படி புத்தகம் கிடைத்ததும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. வேகமாக ஒரு முறை, கட்டுரை எழுதுவதற்காக ஒரு முறை, எழுதுவதற்கு உட்காரும் முன் அடிக்கோடிட்டவற்றை மட்டும் ஒரு முறை என படித்த போது ஒரு பெரும் உண்மை எனக்குத் தெரிந்தது.
மேற்கோள்களைப் படித்து மேடையில் ஆடம்பரமாகப் பேசி கைதட்டு வாங்குதல், பிரமாதமாக கட்டுரை ஒன்றை எழுதி பாராட்டுப் பெறுதல் ஆகியவற்றோடு நின்று விடாமல் அவற்றையும் அன்றாட வாழ்வில் நமது அனுபவத்தையும் சற்று ஒப்பிட்டு, மனதிற்குப் பிடித்த மேற்கோளை நடைமுறைப்படுத்த முயன்றால் உண்மையாகவே நமது நடவடிக்கைகளில் மாற்றம் வரும் என்பதே அது. இந்த தொகுப்பில் எத்தனை எத்தனையோ அற்புதமான மேற்கோள் வரிகள். ஆச்சரியமான தகவல்கள். சில மேற்கோள்கள் காட்டிக் காட்டித் தேய்ந்து போனவை. பல நாமறியாத புதியவை. இன்னும் சில கேலியும், கிண்டலுமானவை.
முன்னுரையில் தொகுப்பாசிரியர்கள் இந்தப் புத்தகத்தில் எங்குமே நீங்கள் மின்நூல்கள் பற்றி, மின் வாசிப்பு பற்றிய மேற்கோள்களைப் பார்க்க முடியாது என்கிறார்கள். இன்னுமே மின்வாசிப்பு பற்றிய தயக்கம் உலகம் முழுக்கவே இருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஃபேஸ்புக்கிலும் கூட, அச்சுப் புத்தகத்தை உயர்த்தி எழுதும் பதிவிற்குக் கிடைக்கும் விருப்பங்களின் எண்ணிக்கையை விட மின்புத்தகத்தைக் கிண்டல் செய்து போடும் பதிவிற்குக் கிடைக்கும் விருப்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இன்னும் 100 -200 வருடங்கள் கழித்து மின்புத்தகங்கள் பற்றிய மேற்கோள்கள் நிறைய வரக்கூடும். எனினும், அவை மின்புத்தகங்களில் மட்டுமே இடம் பெறும்!
புத்தகங்களைப் புகழ்ந்து, எழுதும் கலை பற்றி, பதிப்பாளர்கள் பற்றி, புத்தக சேகரிப்பு பற்றி, நூலகங்கள் பற்றி என்று விதவிதமான தலைப்புகளில் தொகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மேற்கோளின் கீழும் சொன்னவர் யார், அவர் எந்த ஆண்டு பிறந்து, எப்போது மறைந்தார், தரப்பட்ட மேற்கோள் இடம் பெற்ற அவரது படைப்பின் பெயர் போன்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன. வாள்முனையை விட பேனா கூர்மையானது என்ற மேற்கோள் கோடிக்கணக்கானவர்களால் மேற்கோள் காட்டப்பட்ட கூர் இழந்த ஒன்று என்றாலும் அதைச் சொன்னவர் யார் என்று இந்தப் புத்தகத்தில்தான் அறிந்தேன். எட்வர்ட் ஜார்ஜ் புல்வர்- லைட்டன் என்பவர். இவர் 1801ல் பிறந்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் காலனி நாடுகளுக்கான அமைச்சராக இருந்தவர்.
தான் என்ற அகந்தை, அழகியல் உணர்ச்சி, வரலாற்று உந்துதல், அரசியல் நோக்கம் என்ற நான்கு காரணங்களுக்காகவே புத்தகங்கள் எழுதப் படுகின்றன என்று ஜார்ஜ் ஆர்வெல் சொன்னது தொகுப்பில் இருக்கிறது. மோசமான புத்தகமும் ஒரு நல்ல புத்தகத்திற்கான அதே அக்கறையான உழைப்புடன்தான் எழுத்தாளனின் ஆன்மாவிலிருந்து வெளிவந்திருக்கிறது என்கிறார் ஆல்டஸ் ஹக்ஸ்லி. இப்படி நினைத்து நான் எத்தனையோ புத்தகங்களை வாங்கி பணத்தையும், நேரத்தையும் வீணடித்ததுண்டு. சரி, ஒரு படைப்பாளியின் மனசு இன்னொரு படைப்பாளிக்குத் தானே தெரியும்?
இந்தப் புத்தகத்தில் வாசிப்பு, புத்தகங்கள், எழுத்தாளர்கள் சிறப்புகளைப் பற்றி அறநெறி போதனைகள் போல் சொல்லப்பட்ட மேற்கோள்களைவிட நக்கலும், நையாண்டியுமாகச் சொல்லப்பட்டவை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ரசனை என்ற அளவோடு நின்றுவிடாது அதுபற்றி யோசிக்கவும் வைக்கின்றன. பல மேற்கோள்கள் ஒரு வாசகனாக, எழுதுபவனாக என்னை நிறுத்தி வைத்து கிண்டல் செய்தன. என்னைப் பார்த்துப் புன்னகைத்தன.
ஒவ்வொரு புதுப் புத்தகத்தையும் நீங்கள் எழுதும் போது, இது வரை உங்களுக்கு இருந்த வாசக ரசிகர்களில் சிலரை இழப்பீர்கள் என்று ஆன்ட்ரி கைட் என்பவர் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு புது புத்தகம் என்ன ஐயா! ஒவ்வொரு கட்டுரைக்கும் இது பொருந்துமே! இந்தக் கட்டுரைக்கு நமக்கு எத்தனை வாசக ரசிகர் இழப்போ? என்ற யோசனையைத் தவிர்க்கவே முடியவில்லை. புன்னகையோடு பக்கத்தைப் புரட்டினால் நிலவு ஒளி வீசுவதாக என்னிடம் சொல்லாதீர்கள்… உடைந்த கண்ணாடித் துண்டில் பட்டுத் தெறிக்கும் ஒளியைப் பற்றி எழுதுங்கள் என்கிறார் எனது ஆசான் செகாவ்.
அவரது துப்பாக்கி மேற்கோளை விட இது மிக அற்புதமாகப் பட்டது. நீண்ட நேரம் யோசித்து செகாவ் எதை எழுதச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட போது பேரின்பமாக இருந்தது. புத்தகங்களில் இரண்டு வரை உண்டு. ஒரு வகை யாருமே படிக்காதது. மற்றொரு வகை யாருமே படிக்கக் கூடாதது என்கிறார் ஹெச்.எல்.மென்கென். உண்மைதான். ஆனால், சமயத்தில் நாம் எழுதுவது ஒரே சமயத்தில் இந்த இரண்டு வகையாகவும் அமைந்துவிடும் கொடுமையும் நடக்கிறதே?
வாசிப்பு குறித்து அழகழகான மேற்கோள்கள் நிறையவே இருக்கின்றன. மக்களை வாசிக்க வைப்பது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. அதற்காக முகாம்கள், புத்தகக் கண்காட்சிகள், தள்ளுபடிகள், பரிந்துரைகள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள், இன்னும் ஆசிரியர்களை வாசிக்க வைப்பது, மாணவர்களை வாசிக்க வைப்பது, குழந்தைகளை வாசிக்க வைப்பது என்று ஒரு குழுவுக்கான தனியான யோசனைகள், உத்திகள்… எத்தனை எத்தனையோ… தனிநபர்களும், இயக்கங்களும் விடாமல் முயற்சி செய்து வரும் இமாலயப் பணி இது.
நானும் கூட வாசிப்புப் பழக்கம் குறித்து இரு சிறு நூல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், இந்தப் புத்தகத்தில் வாசிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஜேம்ஸ் தர்ப்பர் கூறிய அருமையான ஒரு யோசனை உள்ளது. “நான் புத்தகத்தின் முதல் வரியின் இடதுபக்கத்தின் முதல் வார்த்தையிலிருந்து ஆரம்பித்து வலது பக்கமாக வாசித்துக் கொண்டே செல்வேன். அனைவருக்கும் இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறேன்,“ என்கிறார்.
ஆமாம்… எடுத்து வாசிக்க ஆரம்பிப்பதுதானே வாசிப்பு வசப்படுவதற்கான ஒரே வழி! அதற்கு வேறு என்ன குறுக்கு வழி இருக்க முடியும்? களப்பணியாளர்களிடம் வாசிப்பு குறைவாக இருப்பது பற்றி எனக்கெல்லாம் எப்போதுமே சிறு மனக்குறை உண்டு. இவர்கள் எல்லாம் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்தார்கள் என்றால் இவர்களது பணி இன்னும் சிறப்பாக இருக்குமே என்று நினைப்பதுண்டு.
இயக்கப்பணிகளில் தீவிரமாக இயங்கும் தோழர்கள் சிலரிடம் இந்தக் குறையை பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவர்களும் பாவம், பெரும் குற்றம் செய்தது போல் “ஆமாம், தோழர்,” என்று தலைகுனிந்து நிற்பார்கள். இந்தப் புத்தகத்தில் மால்கம் எக்ஸ் சொல்லியிருக்கும் ஒரு மேற்கோள் என் எண்ணத்தை மாற்றியது. “வெள்ளைக்காரர்களோடு நான் நாள்தோறும் வீதிகளில் சண்டை போட வேண்டிய அவசியம் மட்டும் இல்லாதிருந்தால், நானும் என் வாழ்க்கை முழுக்க நிறைய வாசித்துக் கொண்டே இருந்திருப்பேன்,“ என்று சொல்லியிருக்கிறார். பெரு முதலாளிகளோடும், ஜாதி, மத வெறியர்களோடும் அனுதினமும் போராடும் என் சக மால்கம் எக்ஸுகளுக்கு இந்தத் தொல்லைகள் இல்லாது, அமைதியான வாழ்க்கை அமையும்போது அவர்களும் வாசிக்கத்தான் போகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
குறுக்குவழி என்றவுடன் மற்றொரு கிண்டலான மேற்கோள் நினைவிற்கு வருகிறது. 20000, 30000 புத்தகங்களைப் படித்து முடித்து செரிமானம் செய்தவர்கள் இங்கு மட்டுமல்ல, வெள்ளையர் தேசங்களிலும் உண்டு போல.. “நான் ஒரு ஸ்பீட் ரீடிங் வகுப்பில் சேர்ந்து வேகமாக வாசிக்கக் கற்றவன். டால்ஸ்டாயின் போரும், அமைதியும் நாவலை இருபதே நிமிடங்களில் படித்து முடித்து விட்டேன். அது ரஷ்யாவைப் பற்றியது என்று தெரிந்து கொண்டேன்,“ என்கிறார் உட்டி ஆலன்… அமெரிக்காவிலும் ஒரு அண்ணாமலை! க்ரெளசோ மார்க்ஸ் என்று என்னைப் போல் ஒருவர். “தொலைக்காட்சிப் பெட்டி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டில் அதை யார் ஆன் செய்தாலும், நான் அடுத்த அறைக்குப் போய் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். என்னை அதிகமாக வாசிக்க வைக்கிறது அது,” என்கிறார்.
வாசிப்பது பற்றி மட்டுமல்ல… எழுதுவது பற்றியும் ஏகப்பட்ட மேற்கோள்கள்… ஈ.எல்.டாக்டாரோவ் (புனைப்பெயரோ?) என்பவர், “ எழுதத் திட்டமிடுவது எழுதுவதல்ல.. ஆய்வு செய்வது.. நீங்கள் எழுதப் போவது பற்றி பிறரிடம் பேசுவது…. எதுவும் எழுதுவதாகாது.. எழுதுவது மட்டுமே எழுதுவது என்ற கணக்கில் வரும்,” என்கிறார். ஆமாம்.. எழுத்தாளர்கள் பாதி நேரம் எழுதுவதைத் தவிர மற்றவற்றைத் தானே செய்கிறோம்! டான் மார்ஜின்ஸ் என்பவர், “நான் எழுதும் போது சிந்திப்பதே இல்லை. யாராலும் இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில், அதுவும் இரண்டையும் ஒழுங்காகச் செய்ய முடியாது,” என்கிறார். கிண்டலென்றாலும் நிஜம்தான்.
எத்தனையோ பேர் கதை மிஷின் காத்தவராயனாக எதையும் யோசிக்காமல் எழுதித் தள்ள, நாமும் படித்து நேரத்தையும், காசையும் வீணடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிண்டல்களுக்கு நடுவில், ஒரு எழுத்தாளருக்கு அனுபவம், கூர்ந்து கவனிக்கும் திறன், கற்பனை மூன்றும் வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்று குறைந்தாலும், மற்ற இரண்டும் சேர்ந்து அந்தக் குறையை சமன் செய்து விடும், என்று வில்லியம் ஃபாக்னரின் சீரியஸான அறிவுரை ஒன்றும் வருகிறது.

வாழ்வின் எந்தவொரு பெரிய பிரச்சனையையும் ஒரு மணிநேர வாசிப்பு தீர்த்து வைத்துவிடும் என்ற பிரெஞ்சுத் தத்துவஞானி மான்டெஸ்க்யூவின் வார்த்தைகளை அறிவதற்கு முன்பாகவே நான் என் துயரங்களை எல்லாம் வாசிப்பின் மூலமே தீர்த்து வந்திருக்கிறேன். ஜோசப் பிராட்ஸ்கி, “புத்தகங்களை எரிப்பதை விட பெரிய குற்றம் வாங்கியவற்றை வாசிக்காமல் இருப்பது” என்று சொல்லும் போது, எனது To Be Read அலமாரியில் நிரம்பி வழியும் புத்தகங்களைப் பார்த்து துயரடைகிறேன்.
எட்வர்ட் டி கான்கோர்ட் புத்தகத்திற்கு இயல்பான எதிரி செய்தித்தாள் தான் என்று சொல்லும் போது, வாசிப்பின் நேரத்தை செய்தித்தாள் தின்பதை சரியாக உணர்ந்தேன். சிரில் கனோலி நீங்கள் ஒரு பெஸ்ட் செல்லர் எழுத வேண்டும் என்பதில்லை. பத்து வருடம் கழித்துப் பேசப்படும் அளவிற்கு ஒன்றை எழுதினால் போதும் எனும் போது மனம் தன்னையறியாமல் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் புத்தகங்களைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கிறது.
வாசிப்பு, புத்தகம், எழுத்து பற்றிய மேற்கோள்கள் எனும்போது, பதிப்பாளர் பற்றி இல்லாமல் இருக்குமா? உலகம் முழுக்க பதிப்பாளர்கள் ஒரே இனமாகத் தான் இருக்கிறார்கள். ரேமாண்ட் சாண்ட்லர் சொல்கிறார் – “நீங்கள் அவரிடம் வியாபாரம் பேசும் போது, அவர் வியாபாரம் பற்றி சிறிதும் கவலைப்படாத இலக்கிய ஆர்வலராக, அறிவுஜீவிக் கனவானாகப் பேசுவார். நீங்கள் அறிவு ஜீவியாக பேச ஆரம்பிக்கும் அடுத்த நொடி அவர் பக்கா வியாபாரியாகப்
பேசுவார்.”
மேற்கோள் காட்டப்படுவதற்காகவே பிறவி எடுத்து, எழுதியவரான மார்க் ட்வைனின் ஒரு மேற்கோளோடு முடிக்கிறேன். “என் புத்தகங்கள் நீரைப் போன்றவை. சில பெரிய மேதைகள் வைன் தயாரித்து விற்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் நீர்தானே தேவை?”
இந்த வைன் தயாரிக்கத் தெரியாதவனுக்கு மிக மகிழ்ச்சி தந்த வரிகள் இவை.