ஸ்ரீதர் மணியன்
வரலாறு மனிதனுக்கு மட்டுமல்லாது மனித சமூகத்திற்கே அவசியமானது. உண்மையான வரலாற்றின் பக்கங்கள் பள்ளிப்புத்தகங்களிலோ, நூலாகவோ எழுதப்படுவதில்லை. வணிக நோக்கத்திற்காகவே அவை சுவாரசியமிக்கதாக புனையப்படுகின்றன. அவ்வாறல்லாது முறையான ஆய்வு செய்து அதன் வாயிலாகத் திரட்டப்பட்ட தரவுகளுடன் தனது புனைவினையும் இணைத்து ஆனந்தவல்லி‘ என்ற வரலாறு மற்றும் சமூக நாவலாக லக்ஷ்மி பாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.
உடல் உழைப்பிற்கு ஆண் அடிமைகள், உடல் தேவைக்கு பெண் அடிமைகள். இத்தகைய இழிநிலை மனித இனம் தோன்றிய நாளிலிருந்து தொடங்கியது.. இதனைத் தனது நூலின் அடியோட்டமாகக் கொண்டுள்ளார். ஆனந்தவல்லி இவரது முதல் நாவல் என்பது சற்றே வியப்புக்குரியதாக உள்ளதனை நிச்சயம் இங்கு குறிப்பிட வேண்டும்.

இயல்பாக வரலாறு குறித்த புனைவென்றால் கதை மாந்தர்கள் அனைவருமே இலக்கண மொழியில் உரையாடுவதனையே தமிழ் வாசகப் பரப்பு கண்டுள்ளது. ஆயினும், ஆனந்தவல்லி எனும் இப்புனைவுப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப புழங்கு மொழியில் பேசுவது குறிப்பிடத்தக்கது மாத்திரமன்றி கதைக்கு சுவையினையும் சேர்க்கிறது. இது புனைவுடன் நெருடல் ஏதுமல்லாது வாசகனை கதைப்போக்குடன் ஒன்றிச் செல்ல துணை செய்கிறது.
கதை இடம் பெறும் காலத்தில் பேசப்பட்ட சொற்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப் பரப்பில் இடம் பெறாத பல சொற்களையும் பிணைத்து இதனை உருவாக்கியுள்ளார் படைப்பாளியான லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
இது மராட்டிய அரச குடும்பம் குறித்த புனைவா, ஆனந்தவல்லி, அவளது கணவனான சபாபதியின் கதையா அல்லது தன் மகன் சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமென விழையும் ஒரு தந்தையின் கதையா என அறுதியிட்டுக் கூறவியலாது ஒரு கதைக்குள் பல கதையாகக் கிளைந்து வரும் படைப்பாக ஆனந்தவல்லி மலர்கிறது. வாழ்வு நெடுக அந்தப்புரத்தின் அந்தகாரத்தில் அடைந்து கிடக்கும் அடிமைகளில் ஒருத்தியாக ஆனந்தவல்லி இக்கதையில் தோற்றம் கொள்கிறாள். தான் யாருக்குப் பணி புரிகிறோம் என்பதையே அறியாத பேதைப் பெண்ணாக அவள் இருக்கிறாள்.
தன்னை தனது தந்தை மீட்டுச் செல்ல வருவார் எனவும் அவள் நம்புகிறாள். இத்தருணத்தில் வறுமை காரணமாக குடும்பத்தில் இருக்கும் பெண்களை பெற்றோர்கள் அரசிடமே விற்றுப் பணம் பெறும் அவலமும் வெளியாகிறது. தனது குடிகளின் நிலையினை மேம்படுத்திட கடப்பாடு கொண்ட அரசே இத்தகைய வணிகத்தில் ஈடுபடுபவதனையும் நூலாசிரியர் பதிவாக்குகிறார்.
ராணிமார்கள் அல்லது தனது மேற்பார்வையாளர்களான ‘அக்காக்கள்‘ என்றாவது வெளியில் செல்லும்போது மட்டுமே இத்தகைய ஏவல் பெண்டுகள் வெளி உலகைக் காண இயலும். அவ்வாறே ஆனந்தவல்லியும் என்றாவது ஒரு நாள் வெளியுலகினைப் பார்க்க விரும்பும் அறியாப் பெண்ணாக இக்கதையில் உருவாக்கப் பட்டிருக்கிறாள்.
தனது இந்நிலை குறித்து அரசரிடம் முறையிடலாம், தனது பாட்டன் வயதையொத்த அவர் தனது நிலையினை உணர்ந்து கொண்டு அதற்கு நல்லதொரு முடிவினைத் தருவார் என்ற அவளது நம்பிக்கை அரசரது பள்ளியறைக்குள் நுழைந்ததும் பொய்த்துப் போகிறது. இதனை இயல்பாக ஏற்றுக் கொண்டு, புதிய ஏவல் பெண்கள் தற்கொலைக்கு முயலும் தருணத்தில் ஆனந்தவல்லியான மீனாட்சி கூறும் சொற்கள் கவனிக்கத்தக்கவை.
சமகால உலகில் வல்லுறவிற்கு ஆளாகி மன உளைச்சலினால் தங்களை மாய்த்துக் கொள்ளும் பெண்களுக்கும், கற்பு எனக்கூறித் திரியும் கலாச்சாரக் காவலர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்தாக இதனை படைப்பாளி லக்ஷ்மி பாலகிருஷ்ணன் வாசகன் முன்னும், சமூகத்தின் முன்பும் வைக்கிறார். தனது இணை எவ்வாறிருப்பினும் அவளுடன்தான் தனது வாழ்க்கை எனக்கூறும் துணிவு கொண்ட ஆண் மகனாக சபாபதி படைக்கப்பட்டிருப்பதும் மிக்க சிறப்பு.
அது போன்றே வரலாற்றுப் புதினங்களில் அரசியர் அலங்கார ஆடை ஆபரங்களுடன் சித்தரிக்கப்படுவதே வழமையாகக் காணப்படும் கூறாகும். மாற்றாக இங்கு அரசகுல மகளிரது மனப்புழுக்கங்களையும், ஆற்றாமைகளையும் இந்நாவல் பேசுகிறது. கூடுதலாக எண்ணற்ற பெண்களின் கதைகளும் இக்கதையில் ஊடாடி வருகின்றன.
வளரிளம் பெண்ணான மீனாட்சி பற்றி முறையாக அறிந்து கொள்ளாது சொற்பத் தொகைக்கு வாங்கும் அவளை அரண்மனைப் பொறுப்பாளரான மோஹிதே, மீனாட்சியின் உறவினர்களிடம் அவளை திருப்பியனுப்பிடத் துணிவு கொள்ளாது அது குறித்து பின்னர் மனவிசாரப்படுவது நகைமுரணாகிறது.
மேலும், தங்களது பொருளாசைக்காக எதனையும் செய்யத் துணியும் கும்பினி அதிகாரவர்க்கத்தின் மனப்போக்கினை இந்நாவலில் காணலாம். நியாயாதிபதிகள், மேன்மையான நாகரிகத்தினை உலகிற்கு வழங்கியவர்கள் எனப் பெருமை பேசித்திரியும் வெள்ளையரின் தந்திரங்கள் ‘வணிகம்‘ எனும் தோல் போர்த்தி பெண்களை வாங்கி அரசர்களுக்கு அனுப்பிடும் வக்கிரமான அவலமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் இக்கதையில் பேசப்படுகிறது. கவர்னர் அலுவலக ஊழியனின் கூற்றாக இது கதையில் சபாபதியிடம் கூறப்படுகிறது.
‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்‘ என்னும் கூற்று இப்படைப்பின் வாயிலாக மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது. தனக்கான வாழ்வினை தன் இணையுடன் வாழத்துடிக்கும் எளிய மனிதனான சபாபதி எனும் இளைஞனின் வாழ்க்கைக்கான போராட்டமாகவும், இது குறித்து ஏதுமறியாத வெள்ளந்தியான பெண்ணாகவும் மீனாட்சி இருக்கிறாள்.
அரசுப்பணியிலிருப்பதால் தன் மனைவியை எளிதாக மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் சபாபதி தன் முயற்சிகளைத் தொடங்குகிறான். இருப்பினும் சாமானியர்களின் கோரிக்கைகள் எத்துணை நியாயமானதெனினும் தங்களது சுயநலனுக்கு ஊறு விளைவித்தால் அது தள்ளுவதற்குரியதே எனும் அதிகார வர்க்கத்தின் நிலைப்பாட்டினை இக்கதை மெய்ப்பிக்கிறது.

சபாபதியின் மனு குறித்துப் பேசும் ரெசிடென்ட்டிடம் அரசர் ஒரு முறை விற்கப்பட்ட அடிமையை – பெண் அல்ல – அடிமையினை மீண்டும் உரியவரிடம் ஒப்படைப்பது வழக்கமில்லை, அது தனது தனிப்பட்ட அதிகாரத்திற்கும், விருப்பத்திற்கும் உரியது எனப் பதிலளிப்பது இங்கு கவனிக்கத்தக்கது. கும்பினி அரசிடம் மானியம் பெற்று அரசர் எனப் பெயரளவில் ஆட்சி செய்யும் அவரே தானும் ஒரு வகைமையில் அடிமையே என உணர மறுக்கும் மதியீனத்தையும் இங்கு காணலாம்.
ஆங்கிலக் கல்வி பயின்றவரான மன்னர் உடன்கட்டை ஏற விழையும் தனது தாயின் முடிவைத் தடுக்கத் திராணியற்று அதற்குத் துணை நிற்பதும் மற்றொரு நகைமுரண். நிறைவாக்கிட மராட்டிய மன்னர்களின் வரலாறு மட்டுமல்லாது அவர்களது அதிகாரப் போட்டிகள் மற்றும் படிப்படியான வீழ்ச்சி உள்ளிட்ட பல அம்சங்களை இப்புனைவு தன்னுள் அடக்கியுள்ளது.
நூலாசிரியர் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் சிறுகதை, கட்டுரை, கவிதை என இலக்கிய பரப்பில் இயங்கி வருகிறார். தனது முதல் முயற்சியான ஆனந்தவல்லி எனும் புதினத்தின் வாயிலாக சிறந்ததொரு கதை சொல்லியாக உருவெடுத்துள்ளார்.
பல கதை மாந்தர்களுடன் தஞ்சை அரசின் வரலாற்றுப் பதிவுகளுடன் திகழும் இப்படைப்பு வாசகனுக்கு நிச்சயம் மாறுபட்டதொரு வாசிப்பனுவத்தினை அளிக்கும். பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக இப்புனைவு களம் காண்கிறது.