சி. முத்துகந்தன்
தனிநபர், குடும்பம், சமூகம், அரசு என எல்லாவற்றிற்குள்ளும் கார்ப்ரேட்டின் தலையீடு என்பது இல்லாமல் இல்லை. கார்ப்ரேட்டின் முக்கிய குறிக்கோள் இவை எல்லாவற்றிலும் கடும்போட்டியை உருவாக்கி அதன்பொருட்டு அதிக லாபத்தைப் பெறுதல். எழுத்தாளர் நிகழ் அய்க்கணின் புதுவரவான “வெறுப்பு அரசியலின் முகம்” எனும் இந்நூலின் அடிநாதம் “அரசும் அதிகாரமும் எளியவர்களுக்கானதல்ல” என்பதைப் பல்வேறு தளங்களில் ஆய்ந்தறிந்து அதாவது 30 கட்டுரைகளாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நூலில் அமைந்திருக்கும் கட்டுரைகளின் தலைப்புகளே வாசித்தலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. முதல் கட்டுரை “பள்ளி மாணவர்களும் கல்வித் தொழில் நுட்பமும்” என்று தொடங்கி பாஜக வெறுப்பு அரசியலின் முகம், எளிமையான மக்கள் வலிமையான அதிகாரம், தொலைந்துபோன வாழ்வு, கல்விக்கு அழகு கசடற மொழிதல், நுகர்வியம், தொடர்கிறது துயரம், கசடாகும் மூளை வணிகமயமான விவசாயம், புகழ்பெற்றவர்கள்…என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்நூலில் உள்ள முப்பது கட்டுரைகளும் ஜனவரி 2019 முதல் ஆகஸ்ட் 2021 வரை உயிரெழுத்து, காக்கை சிறகினிலே, புக் டே, சமூக உயிரோட்டம், மானுடம் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
பெருந்தொற்றின் பொதுமுடக்க காலத்தில், குழந்தைகளின் வாழ்வு எங்ஙனம் கேள்விக்குறியானது. இங்கு 43.6% மாணவர்களுக்குச் சொந்தமாக கைப்பேசி இல்லாத சூழலில் அவர்களுக்கு இந்த இணைய வழிக் கல்வி எப்படி பயன்படக் கூடும் என்கிற கேள்விகளை தர்கபூர்வமாக அடுக்கிக் கொண்டே போகிறார்.
கிராமப்புற/மலைவாழ் மக்களில் பெரும் பகுதியினர் இன்னும் முதல் தலைமுறையினராகவே கல்விக்காகக் காத்திருக்கும் சமகால சூழலில், இப்படியான பெரும் முடக்கமானது பெரும் பின்னடைவே. நிகழ் அய்க்கணின் இந்நூல் மக்களுக்கு வெறுப்பை விளைவிக்கும் அதிகாரவர்க்கத்தின் செயற்கையான திட்டமிட்ட பெரும் சதிதான் இந்த “கொரோனா” எனும் பணக்கார நோய் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
வெறுப்பு அரசியலின் முகம் கோரத்தையும் அகோரத்தையும் மொத்த உருவமாக கொண்டுள்ளது. இன்றைய நவதாராளமய கொள்கைக்கு இதன் நுகர்வியமே மையமாக இருக்கிறது. பல நேரங்களில் இது அரசு, அதிகாரம், விசுவாசம் என்கிற அரூபத் தன்மையோடு நம்மை ஒரு பைத்தியக்கார மனநிலைக்கு இழுத்துத் தள்ளுகிறது. இந்நூல் கல்வி, மருத்துவம் எப்படி எட்டாக்கனியாக இங்கு சந்தை படுத்தப்பட்டுள்ளது. எதன்பொருட்டு அரசியல், ஊடகம், ஆன்மீகம் நமக்கு இவ்வளவு நெருக்கமாக ஆக்கப்பட்டுள்ளது என்கிற அடிப்படை செய்திகளைப் போகிற போக்கில் மிக யதார்த்தமாக சொல்லிச் செல்கிறது.
அரசியல் என்பது போட்டியை அடிப்படையாக வைத்திருக்கிறது. போட்டிக்குத் தொண்டர் தேவை. தொண்டருக்கு அடிப்படை ஓட்டு. ஓட்டினால் மட்டுமே இங்கு வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இதேபோல ஊடகம் என்பதும் அடிப்படையில் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. இதற்கு மையம் ரசிகர் அல்லது பார்வையாளர்கள். இதன்வழி, இதற்கு மேலும் மேலும் லாபம் மட்டுமே முக்கிய குறிக்கோளாகிறது. அடுத்து ஆன்மீகமும் அப்படித்தான். இது பக்தர்களைக் காணிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
நாம் மனமுவந்து தீர்மானிக்காத இம்மூன்றும் எதன்வழி நமக்கு மிக நெருக்கமாக ஆனது. யார்? சொல்லி எதனால் நம் மண்டைக்குள் இம்மூன்றும் ஆழப் புகுந்தது என்கிற கேள்விகளையும் அதற்கான எளிய பதிலையும் வைத்திருக்கிறது இந்த நூல்.
நுகர்வியம் எனும் கட்டுரையில் “இன்றைய நவதாராளமய கொள்கைக்கு நுகர்வியமே மையமாக இருக்கின்றது.

நுகர்வியமானது எப்போதுமே மாற்றத்திற்கும் புதுமைக்கும் முக்கியத்துவம் தந்து அதற்கேற்றவாறு தன்னை வளர்த்துக் கொள்வதாக உள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இதற்குப் பேருதவியாய்த் துணை நிற்கின்றன. நவீன உலகில் மக்களின் அன்றாட வாழ்வினை பாதிக்கக்கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்ததாகவும் நுகர்வியம் இருக்கின்றது” என்று பதிவு செய்கிறார்.
இன்று நகரமயமாதல், நுகர்வியம், டிஜிட்டல் மயமாகும் உலகம் என்பதெல்லாம் வளர்ச்சிக்கான படிநிலைகளாகப் பம்மாத்து காட்டுகிறதே அது யாருக்கானது? யாருடைய வளர்ச்சிக்கானது? என்பதெல்லாம் வெளிப்படை. ஆம் கார்ப்பரேட்டுகளின் முக்கிய குறிக்கோள் மக்களிடையே போட்டியையும் அதன்வழி பெருமுதலாளிகளுக்கு அதிகப்படியான லாபத்தையுமே ஏற்படுத்த வேண்டும். அதாவது மக்களின் மூளையைக் கசடாக்கும் தந்திரத்தையே இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனாலேயே நடிகர்களும் மக்களிடையே புகழ் பெற்றவர்களும் இவர்களுக்கான விளம்பரங்களின் முதுகெலும்பாக (தூதுவர்கள்) மாற்றப்படுகிறார்கள்.
புகழ் பெற்றவர்களின் வாயிலாகவே இந்த மண்ணையும் மக்களையும் சீரழிக்கிற வேலையைச் சாதுர்யமாகச் செய்ய வைப்பதன் மூலம் அவர்களது பேரும் புகழும் குன்றி முதலாளிகளின் வியாபாரமே முன்னிலைப் படுத்தப்படுகிறது. இத்தகைய போக்கால் அந்த வியாபாரப் பொருளின் தரம் தாழ்ந்தாலோ மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டாலோ அந்தப் புகழ்பெற்றவர்களே நம் கண்முன் வருவார்கள்.
முதலாளி அதே பொருளை வேறொரு வடிவத்தில் மாற்றி அப்போது புகழ் பெற்ற சிறப்புக்குரியவர்களை வைத்து அடுத்த சம்பவத்தைச் சிறப்பாக முன்னெடுப்பர். தீங்கை அனுபவிக்காத அவர்களால் நாம் ஒருபோதும் நன்மையைப் பெறப் போவதில்லை என்பது உறுதி.
எழுத்தாளர் நிகழ் அய்க்கணின் இச்சிறு சிறு கட்டுரைகளின் வழியே பரந்துபட்ட அறிவினை பல்வேறு பொருண்மைகளில் வாசகருக்கு ஏற்படுத்துகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் நவதாராளமயத்துடன் பாசிசக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட வலதுசாரி அரசியலும் கைகோர்த்து செயல்பட்டு சந்தையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இவையிரண்டும் சேர்ந்து, நுகர்வியத்தை வளர்த்தெடுக்கிறது. தேசத்தை- குடிமகனை கடனாளியாக்குகிறது.
பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குச் சமூகநீதி-ஜனநாயகம்- வளப்பகிர்வினை மறுக்கிறது என்று தெளிவுபடுத்தும் ஆசிரியர் “நவ தாராளமயமும் வலதுசாரி அரசியலும் சேர்ந்து, உலக மக்களுக்கு நான்குவித கொடும் அநீதிகளை இழைப்பதாக இருக்கின்றது. அதாவது பொருளாதாரச் சமத்துவமின்மை, கார்ப்பரேட் நிறுவன அதிகாரம், இன/சாதி பாகுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகும். கொரோனா வைரஸ்கூட இதனை உலக மக்களுக்குத் துல்லியமாக உணர்த்தி விட்டிருக்கிறது” என்று மிக அழுத்தமாகவே பதிவு செய்கிறார்.
இன்றைய இந்தியச் சூழலில், மத அரசியலும் நுகர்வியமும் ஒன்றிய அரசின் இரு கண்களாகிப் போனதை கண்கூடாக முன்னிறுத்துகிறார். மேலும் இத்தகைய போக்கு பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்று பல்வேறு கட்டுரைகளாகப் பதிவிட்டுச் செல்கிறார்.
இன்றைய இளைஞர்களும் பள்ளி/கல்லூரி மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய, பின் விவாதிக்க வேண்டிய முக்கிய நூலாக “வெறுப்பு அரசியலின் முகம்” இருக்கிறது என்பதில் ஐயமில்லை.