எஸ். வி. வேணுகோபாலன்

ஏப்ரல் 23: உலக புத்தக தினக் கொண்டாட்டங்கள், வாசிப்பு பற்றிய நம்பிக்கைகளைப் பெரிதும் புதுப்பித்து உள்ளன. கரூரில் கொட்டும் மழையை மீறியும் மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், எழுபது வயது கடந்தவர்கள் என புன்செய் புகழூர் நூலக வாசிப்பு அறைக்குள் சூழ்ந்த கூட்டம் இடையே மழை நின்றபோதும், பின்னர் கூட்டம் முடிந்த பின்னும் கூடக் கலையாத ஆர்வத்தோடும், தணியாத தாகத்தோடும் நண்பர்களோடு மகிழ்ச்சிப் பொழுது செலவிட்டதைப் பார்க்க முடிந்தது.
ஏப்ரல் 25 அன்று புதுமைப்பித்தன் பிறந்த நாள் கடந்தது. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பாடுகளை அப்படியே பிரதி எடுத்தாற்போல் எழுதும் ஓர் இலக்கிய மொழி சாத்தியமாகி இருந்த அற்புதமான படைப்பாளி அவர்.
புதுமைப்பித்தனை முதலில் அணுகியது அவரது அங்கத நடை, அசாத்திய எள்ளல் குரலுக்காக மிகவும் ரசித்த கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதை வழியாகத் தான். ஓட்டலில் இரண்டு கப் காப்பி ஆர்டர் செய்கிறார் பிள்ளை, கடவுளுக்கும் சேர்த்து! ‘தமிழை மறந்துவிடாதே, இரண்டு கப் காப்பிகள் என்று சொல்’ என்கிறார் கடவுள். காப்பி ஒன்று தான், கப்கள் தானே இரண்டு, இரண்டு கப்கள் காப்பி என்று கடவுளையே திருத்துவார் பிள்ளை. மனிதப் பிறவிகளின் பரிதாபம் நிறைந்த வாழ்க்கையை, அடுத்தவரை ஏமாற்றுவதாகத் தங்களை ஏமாற்றிக் கொள்ளும் அபத்தங்களை ஒரு கடவுளை வரவழைத்துக் காட்டி, அவருக்கே குமட்டல் ஏற்பட வைத்து விரட்டி வைப்பார் புதுமைப்பித்தன்.
‘சாப விமோசனம்’ ஓர் அதிர்ச்சிக் கதை. அதன் தொடக்கத்திலேயே எழுதி இருப்பார், ‘இராமாயண பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) போகலாம், அதை நான் பொருட்படுத்தவில்லை’ என! இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுதல் உண்டோ என்ற புகழ் வாய்ந்த கம்பர் செய்யுளில், கைவண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் என்று விசுவாமித்திரர் வியந்து பாராட்டிய இடம், இராமன் காலடி பட்டுக் கல்லாக இருந்த அகலிகை சாபம் நீங்கிப் பெண்ணாக உருவெடுத்தது! கணவன் உருவில் வந்து ஏமாற்றிய இந்திரனின் காமத்திற்கு இரையாகும் அகலிகை பின்னர் ஆற்றிலிருந்து திரும்பிவரும் கெளதமனின் சாபத்தால் கல்லாகிப் போனவள்.
இந்தக் கதையின் நீட்சியை மறுவாசிப்பு செய்து பார்த்த புதுமைப்பித்தன், பின்னாளில், இலங்கையிலிருந்து மீட்டெடுத்து அழைத்துவரப்பட்ட சீதையோடு அகலிகை உரையாடும் காட்சி வரை கொண்டு செல்கிறார். அயோத்தி மீண்டதும் தன்னைத் தீயில் இறங்கி பத்தினி என்று நிரூபிக்க வைத்ததைப் பகிர்ந்து கொள்கிறாள் சீதை. துடித்துப் போகிறாள் அகலிகை. ‘அவர் கேட்டாரா, நீ ஏன் செய்தாய்?’ என்று சீதையை வினவுகிறாள். ‘அவர் கேட்டார், நான் செய்தேன்’ என்கிறாள் சீதை அமைதியாக.
‘அவன் கேட்டானா?’ என்று கத்துகிறாள் அகலிகை. இந்த இடத்தில், புதுமைப்பித்தன், அவள் மனத்தில் கண்ணகி வெறி தாண்டவமாடியது என்று எழுதுகிறார்.
‘எனக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா?’ என்று சிந்திக்கிறாள். ‘உலகத்திற்கு நிரூபிக்க வேண்டாமா?’ என்று சிரிக்கிறாள் சீதை. ‘உள்ளத்திற்குத் தெரிந்தால் போதாதா, உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?’ என்று அகலிகை மூலம் புதுமைப்பித்தன் எழுப்பிய கேள்வி இன்று வரை எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் வெடிப்பதைக் காணமுடியும். வெறுத்துப் போகிறாள் அகலிகை, மீண்டும் கல்லாய்ச் சமைந்து விடுகிறாள். பல பத்தாண்டுகளுக்குமுன் இந்தக் கதையை அவர் படைத்திருந்தது எப்போது சிந்தித்தாலும் மலைக்கவைப்பது.

‘சிற்பியின் நரகம்’ ஆட்கொண்ட கதை. ஒரு சிற்பத்தை வடிப்பதைப் போலவே பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிறுகதை. இறை நம்பிக்கையில் ஊறிய சிற்பி சாத்தனும், நிரீசுவர வாதி (நாத்திகர்) கிரேக்க தத்துவ ஞானி பைலார்க்கசும் வாசகர் முன்னிலையில் உரையாடுவது போலவே நகரும் அந்தக் கதையின் அத்தனை பாத்திரங்களுக்கும் நுட்பமான செயல்பாடுகள் வழங்கப்பட்டிருக்கும்.
தனது சிற்பத்தின் வடிவமைப்பில் எந்தெந்த அபிநயத்தை யார் யாரிடமிருந்து எந்தெந்த தருணங்களில் பார்த்துப் பிடித்துக் கைகளுக்கு மாற்றிக் கொணர்ந்தேன் என்று சாத்தன் விவரிக்கும் இடம் அபாரமானது. நடராஜர் கால் மாற்றி ஆடும் நடனக் கோலத்தில் எப்படி நிற்பார் என்பதற்கு, அரசன் உத்தரவால் சிரச்சேதம் செய்யப்பட்ட நீலமலைக் கொடுங்கோலன் இடை துவண்டதில் பிடித்த பதம் அது என்று சொல்வான் சாத்தன்.
‘இந்தக் கலைப்படைப்பை என்ன செய்யப்போகிறாய்?’ என்று கேட்கிறான் பைலார்க்கஸ். ‘அரசன் கோயிலுக்கு’ என்கிறான் சிற்பி சாத்தன். வெறுத்து சபித்துக் கொட்டுகிறான் பைலார்க்கஸ்.
ஏன் என்பதைக் கதையின் அடுத்த சில பக்கங்களில் உணர முடியும். கோயிலுக்குள் அடித்துப் பிடித்துக் கொண்டு நுழையும் கூட்டம் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, மோட்சம் மோட்சம் என்று பெருங்குரல் எடுத்து இரைந்துவிட்டு வெளியேறுவதைப் பார்க்கிறான் சாத்தன். அதிர்ந்து போகிறான். ச்சீ பேய்க்கனவு என்று முடித்திருந்தாலும் அந்த அதிர்வு நிற்பதில்லை. ‘அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்’ என்னும் மகாகவியின் கவிதை வரிக்குப் பொருத்தமான கதை.
‘பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி’ பத்திரிகையின் வெள்ளிவிழா சிறப்பிதழ் கொண்டுவருகையில் ‘பொன்னகரம்’ சிறுகதையை அதில் சேர்த்திருந்தோம். மிக எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை மிகக் குறைந்த வாக்கியங்களில் எடுத்து வைக்கிறார் புதுமைப்பித்தன். ‘கற்பு கற்பென்று உலகோர் கதைக்கின்றாரே’ என்றான் மகாகவி. குடித்துப் போட்டுக் குதிரை வண்டி புரண்டு அடிவாங்கிப் படுத்திருக்கும் புருஷனுக்குப் பால் கஞ்சி வேண்டும்; மில் கூலி போட இரண்டு நாள் ஆகும் அவளுக்கு, என்ன செய்வாள் அம்மாளு? தண்ணீர் எடுக்கப்போகும் நேரத்தில், பஞ்சாங்கத்தின்படி வர வேண்டிய சந்திரன் மேகத்தில் மறைய, ஒரே கும்மிருட்டு. பக்கத்து சந்தில் அவள் மீது கண் வைத்திருக்கும் ஒருவன் வருகிறான் அந்தப் பக்கம். பால் கஞ்சிக்கு முக்கால் ரூபாய் தேற்றி விடுகிறாள் அம்மாளு. என்ன சொல்ல….
நிறைய இருக்கிறது இன்னும் வாசிக்க, புதுமைப்பித்தனைப் பற்றிப் பேச! ஆனால், செல்லம்மாள் கதை முற்றிலும் வேறு அனுபவத்தைத் தரும் வாசிப்பு.
இந்தக் கதையை இன்னும் படிக்கவில்லையா என்று ஒரு முறை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கேட்டபிறகுதான் வாசித்த கதை. முதல் வாசிப்பில் நேர்க்கோடாக முடிந்து விட்டது. ஆனால், மீண்டும் கையில் எடுக்கையில் ஏற்பட்ட தவிப்பு விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இரண்டு நாட்களில் மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க அது ஓர் அசாத்திய வழிநடைப் பயணம் என்று தோன்றியது. ஒரு திறந்த வெளியில் நடக்கும் நடைபோல் தெரியும், உள்மன வெளியில் துலங்காத இருளில் போடும் நடை அது.
மங்கலான வெளிச்சம், கொஞ்சம் மூச்சுத் திணறும் இடங்களைக் கடந்து ஒரு கதவைத் திறப்பதும், பாய்கிற வெளிச்சத்தையும், காற்றையும் மீண்டும் வெளியேற்றி இருளில் குடிவைத்துவிட்டுப் புறப்படும் ஆயாசமும், மீண்டும் அதற்கே மீள வேண்டிய நடையுமான கதை செல்லம்மாள்.

வாசகருக்கு வேண்டுமானால் அது துயர நடை. பிரமநாயகம் பிள்ளைக்கு அல்ல! அது அவரது வாழ்க்கைப் பாதை. அதன் திருப்பங்கள், மேடு பள்ளங்கள் (மேடாக நினைத்த பள்ளங்கள்), மயக்கங்கள், மயக்கத் தெளிதல் தருணங்கள் யாவும் அவரது அன்றாடப் பாடுகளில் அடங்கும். அதில் அதிர்ச்சியோ, ஆழ்மனக் கவலையோ, ஆசுவாசமோகூட ஏற்படாத நிலை. அதுதான் செல்லம்மாள் கதையின் அசாத்திய கட்டுமானம்.
தலைப்பில் இருக்கும் செல்லம்மாள், முதல் வரியிலேயே இறப்பில் தான் அறிமுகமாகிறாள். தன்னைப் பிரிந்து விடும் அந்த ஜீவன் குறித்த சிந்தனை மனைவியின் உடலைப் பார்க்கையில் தான் பின்னோக்கி ஓடுகிறது கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கு. அவளைத் தவிர வேறு யாருமற்ற வாழ்க்கை. அவளுக்கோ அவரையே பிடிபடாது நைந்துபோன உடலும், நோய்களுடன் போராட்டமும். அவருக்குப் பிடித்தமான உணவைச் சமைக்கும் போதே அவளை அவளது நோய் மயக்கமடைய வைத்துத் தரையில் கிடத்துகிறது. அவளுக்குப் பிடித்தமான நிறத்தில் சேலையை எடுத்து வைக்கும் அவருக்கோ, அதை அவள் பிரிவுக்குப் பின்னர் தான் அவளுக்கு அணிவிக்க முடிகிறது.
கணவன் மனைவிக்கு இடையேயான காதலை, பரஸ்பர நேயத்தை, பிடிமானத்தை எந்த விவரிப்பும் அற்று வாசகருக்குக் கடத்துகிறது கதை. அவள் இருந்த காலம் வரை அவளுக்குப் பல் விளக்கிக் குளிக்க வைத்ததன் தொடர்ச்சியில், அவளது உயிரற்ற உடலைத் தூக்கிச் சென்று குளிப்பாட்டி முடிக்கும்போதும் பிரமநாயகம் கலங்குவதில்லை. விடியல் நேரத்தில் வாசலில் செயற்கைக் குரலில் பிலாக்கணம் எழுப்புகிறாள் ஒருத்தி.
இரட்டைப் பிலாக்கணத்தை அதே போல் செயற்கையாக எழுப்புகிறார் சங்கு ஊதுகிறவர் என்று முடிகிற கதையில் அவளுக்கான விடுதலையை பிரமநாயகம் அங்கீகரிக்கும் இடம், வாசகர் எளிதில் கடக்க முடியாததாக இருக்கும். அவள் உடலை அவர் தொட்டுப் பார்க்கும் நேரத்தில் சுவரில் விரியும் பெரிய நிழலில் அவள் தொண்டையைப் பற்றி அவளுயிரை அவரே பறிப்பது போல் தோன்றும் என்று எழுதி இருப்பார் புதுமைப்பித்தன்.
செல்லம்மாள் துயரக் கதை அன்று. அப்படியான உணர்ச்சி தட்டும் வாக்கியங்கள் கதையில் எங்கும் தட்டுப்படாது. ஓர் உண்மையான வாழ்க்கையைப் பேசும் கதை. இயல்பான மனிதத்தை எந்த உயர்வு நவிற்சியும் செய்யாமல் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டிருக்கும் கதை. அதை வாசிக்கும்போது பீறிடும் துயரம், சமூகத்தின் மீதான அக்கறையை, விசாலப் பார்வையை நோக்கி உந்தித் தள்ளுமானால் அது அந்த இலக்கியத்தின் இயல்பான செயல்பாடு. புதுமைப்பித்தன் கொண்டாடப்பட வேண்டிய ஓர் அற்புதமான படைப்பாளி.