ச.சுப்பாராவ்
வாசிப்புப் பழக்கம் பற்றி நிறையவே எழுதப்படுகின்றன. அவை பொதுவாக இரண்டு வகைகளாக இருக்கின்றன. ஒன்று நீங்கள் சாவதற்குள் வாசிக்க வேண்டிய 500 அல்லது 1000 புத்தகங்கள், எனது வாழ்க்கையை அல்லது பலரது வாழ்க்கையை அல்லது உலகத்தையே திருப்பிப் போட்ட புத்தகங்கள் என்ற வகைமை. மற்றொன்று தனது வாசிப்பு அனுபவத்தை சொல்லும் ரகம்.

நானறிந்த வரை முதல் ரகம் சற்றே உயரமான மேடையில் நின்று கொண்டு தம்பிகளா, நான் சொல்வதை எல்லாம் கொஞ்சம் படித்து உருப்படப் பாருங்களேன் என்ற ரகமாகவும், இரண்டாவது வகை புத்தகங்கள் நான் இப்படி இப்படி, இந்த இந்த மாதிரி படிப்பேங்க… நல்லா ஜாலியா இருக்கும் என்று நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சொல்வது மாதிரியும் இருக்கும். அதாவது நான் அவற்றைப் படிக்கும் போது இவ்விதமாக உணர்கிறேன் என்றும் சொல்லலாம். சமீபத்தில் நான் படித்த Joe Queenan எழுதிய One for the books அந்த இரண்டாவது வகைமை புத்தகமாக என்னை வெகுவாக ஈர்த்தது.
குவினன் நல்ல வாசகர். எழுத்தாளர். பல புகழ் பெற்ற பத்திரிகைகளில் தனது வாசிப்பு அனுபவம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். குவினன் இந்த கட்டுரைகளை எந்தவித இலக்குமின்றி தன் வாசிப்பு அனுபவத்தை, புத்தகங்கள் பற்றிய தனது எண்ணங்களைப் பதிவு செய்வது என்பதை மட்டுமே மனதில் கொண்டு எழுதியிருக்கிறார்.
எனவே ஒரு முழு தொகுப்பாக, குறிப்பிட்ட ஒரு விஷயத்திற்கு அழுத்தம் தந்து அதன் பின்னணி, அதில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன் எதிர்காலம் என்பது போல் எதுவுமின்றி காலை வாக்கிங் செல்லும் போது நண்பர்களிடம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களை மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டே செல்வோமே அந்த மாதிரி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆனால், ஆங்காங்கே அவர் சொல்லிச் செல்வது நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. சில விஷயங்கள் நம்மைக் கவனித்து அவர் சொன்னது போலும், சில விஷயங்கள் நமக்காகச் சொன்னது போலும் இருக்கின்றன.
குவினன் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 புத்தகங்கள், அதிகபட்சமாக 200 புத்தகங்கள் வாசிப்பவர். ஒரே சமயத்தில் 15 புத்தகங்களை வாசிப்பவர். எனினும் வாசிப்பு, புத்தகங்கள் தேர்வு குறித்து கடுமையான விருப்பு வெறுப்புகள் கொண்டவர். சுயமுன்னேற்ற நூல்கள், தொழிலதிபர்கள் எழுதும் நூல்களைப் படிக்க மாட்டார். நான் வடை மடித்துத் தரும் காகிதத்தில் உள்ளதைக் கூட வாசிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லும் வெறி பிடித்த வாசகரல்ல. எல்லா நேரங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் வாசிப்பவர். ஆனால் கழிப்பறையில் வாசிக்க மாட்டாராம். அங்கு உட்கார்ந்து வாசிப்பது படைப்பாளியை அவமதிப்பது போல் தோன்றுமாம்.
காரணம் புத்தகம் சொல்லும் விஷயம் புனிதமானது என்று நினைப்பதோடு, புத்தகமே புனிதமான விஷயம்தான் என்று நினைப்பவர் அவர். தினமும் புத்தகங்களுக்கு இரண்டு மணி நேரமும், பத்திரிகைகளுக்கு இரண்டு மணி நேரமும் ஒதுக்குவார். ஆனால் ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாகத்தான் தினமும் படிப்பார். குவினனுக்கு இப்போது வயது 72. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வீட்டு வேலைகள் நிறைய செய்யப்படாமல் கிடக்கின்றன என்று ஒரே ஒரு மாதம் எதுவுமே வாசிக்காமல் இருந்திருக்கிரார். அந்த மாதத்தில் வீட்டிற்கு புது 3டி தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். புது ஸ்மார்ட் போன் வாங்கினார்.
புது லாப்டாப், பிரிண்டர் வாங்கிப் போட்டார். தன்னிடமிருந்த குறுந்தகடுகளை எல்லாம் பிரித்து அடுக்கி வைத்தார். அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் ரோமிற்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஒரு ஆல்பம் தயாரித்தார். பல முறை அழைத்திருந்த 75 நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு இது மாதிரியான பிரேக் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டிற்கு வெள்ளையடித்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி எப்போது டிவி, போன் எல்லாம் புதிதாக வாங்கப் போகிறாரோ?
ஆனால், வாசிப்பிற்கு புது புது யோசனைகளை, திட்டங்களைப் போட்டு செயல்படுத்திக் கொண்டே இருப்பார். அவரது அந்தத் திட்டங்களை எல்லாம் இந்த ஆண்டு நிறைய வாசிக்க வேண்டும் என்று உறுதி ஏற்கும் வாசக அன்பர்கள் செயல்படுத்திப் பார்க்கலாம். ஒரு வருடம் வாங்கி வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற இலக்கோடு உட்கார்வார். அடுத்த வருடம் மனதுக்குப் பிடித்த புத்தகங்களை இரண்டாம் முறை படிப்பது என்று தீர்மானித்துக் கொண்டு களத்தில் இறங்குவார். அந்த ஆண்டு புதிய புத்தகம் எதையும் தொட மாட்டார். மற்றொரு ஆண்டில், நண்பர்கள் பரிசாகத் தந்தவற்றை மட்டும் படிப்பது என்று முடிவு செய்து, பரிசாக வந்த புத்தகங்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக படித்து முடித்து விடுவார்.
ஒரு ஆண்டில், இந்த வருடம் முழுக்க 200 பக்கத்திற்கு குறைவான பக்க அளவு உள்ள புத்தகத்தை மட்டும் படிப்பது என்று தீர்மானம். மற்றொரு வருடம் 600 பக்க புத்தகத்தை மட்டும் படிப்பதாக தீர்மானம். இன்னொரு ஆண்டு முழுவதும் நூலகம் போய் கண்ணை மூடிக் கொண்டு ஒரு புத்தகத்தை தொட வேண்டியது, அதை எடுத்து வந்து படிக்க வேண்டியது என்று ஒரு புது ஐடியாவை செயல்படுத்தினார்.
மற்றொரு ஆண்டில் இது நமக்குப் பிடிக்காதோ என்ற சந்தேகத்தில் படிக்காமல் வைத்திருந்த புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் படித்து முடித்தார். ஓராண்டிற்கு மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் மட்டும். மற்றொரு ஆண்டு முன்பு படித்து முடிக்காமல் பாதியில் நிறுத்தியிருந்த புத்தகங்கள் மட்டும். இப்படி விதவிதமான வழிமுறைகளைக் கையாண்டதால் ஆண்டுக்கு அவர் 100 முதல் 200 புத்தகங்களைப் படித்திருக்கிறார்.
நானும் இவ்வாறெல்லாம் பல திட்டங்கள் தீட்டியதுண்டு. இப்படித் திட்டங்கள் தீட்டும் போது நாம் அறியாத பல புத்தகங்கள், பல படைப்பாளிகள் நம் கண்ணுக்குத் தென்படுவார்கள். இந்த ஆண்டு கூட நான் தமிழ் வரலாற்று நாவல்களை அதிகம் படிப்பது என்றொரு முடிவெடுத்தேன். கல்கி, விக்கிரமன், சாண்டில்யன், நா.பா, கோவி.மணிசேகரன் என்று பிரபலங்கள் சட்டென்று மனதில் தோன்றினார்கள். ஆனால், தேடிப் பார்த்தால் கடந்த பத்து, இருபதாண்டுகளில் புதிது புதிதாய் எத்தனை எத்தனை வரலாற்று நாவலாசிரியர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய வியப்பாக இருந்தது.
எல்லா பிரபல படைப்பாளிகளும் ஒன்றிரண்டு சரித்திர நாவல் எழுதுவது ஒருபுறமிருக்க, சரித்திர நாவல் மட்டுமே எழுதுவேன் என்று எழுதுபவர்களும் புதிதாய் வந்திருக்கிறார்கள். உதயணன், கோகுல் சேஷாத்திரி, திவாகர், சக்திஸ்ரீ, காலச்சக்கரம் நரசிம்மா என்று புதியவர்கள் ஒருபுறம். கௌதம நீலாம்பரன், ஜெகசிற்பியன், அகிலன், ர.சு.நல்லபெருமாள் போன்றோர் எழுதிய பழைய சரித்திர நாவல்கள். பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. குவினன் போல் நான் பிடிவாதமாக எனது முடிவை செயல்படுத்தவில்லை என்பது வேறு விஷயம் என்றாலும், இது போல் ஒரு திட்டம் வைத்துக் கொண்டு படிப்பது ஒரு நல்ல வழிதான் என்று தோன்றியது.
ஒரு வகைமைக்கே இப்படி என்றால், ஒவ்வொரு வகைமைக்கும் ஒரு பட்டியல் போட்டால் எப்படி இருக்கும்? சில நூறு வருடங்களுக்குமுன், அச்சிடப்பட்ட அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்று வெறி கொண்டு படிக்க ஆரம்பித்தால், மூன்றாண்டுகளில் அந்த இலக்கை அடைந்து விட முடியும். சற்று மெதுவாக வாசிப்பவர் என்றாலும் ஐந்தாண்டுகளில் படித்து முடித்துவிட்டு, அடுத்து புதிதாய் என்ன வரப்போகிறது என்று காத்திருக்கலாம். இன்றைய நிலைமை அப்படியல்ல. அதற்காக பெரிதாக வருத்தப்படவும் வேண்டாம் என்கிறார் குவினன்.
தேர்ந்தெடுத்துப் படித்தால் வாழ்நாளில் 2,138 புத்தகங்களில் நாம் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகங்களைப் படித்து முடித்துவிடலாம் என்கிறார் அவர். ஆண்டுக்கு சுமார் 150 புத்தகம் படிக்கும் அவர் ஏதோ ஒரு பெரிய கணக்கீடு செய்து இந்த 2,138 புத்தகங்களில் எவை எவற்றை எந்த எண்ணிக்கையில் படிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். 500 தலை சிறந்த கிளாசிக்குகள். 500 சுமார் ரக கிளாசிக்குகள். 500 அதிகம் பேசப்படாத, ஆனால் அற்புதமாக எழுதப்பட்ட புத்தகங்கள். 500 இதில் எதிலும் சேராத ரகம். 168 முதல் தரக் குப்பை. 500, 500 என்று ரவுண்ட்டாக சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 168 என்ற எண்ணிக்கையை எவ்வாறு முடிவு செய்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை பின்னாளில் இந்த எண்ணிக்கை குறித்த விவரங்களை அவர் தரலாம். நண்பர்கள் தத்தமது 2138ல் அவர் சொல்வது போன்ற கிளாசிக்குகள் உள்ளனவா? இல்லை எல்லாமே முதல்தரக் குப்பைதானா? என்ற பகுப்பாய்வு செய்து அதை சரிசெய்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

ஆனால், குவினன் புத்தக வாசிப்பு பற்றி பெரிய ஆய்வுகள் பலவற்றை நடத்தி இருக்கிறார். படிக்கும் பழக்கம், புத்தகங்கள் பற்றிய விருப்பு வெறுப்பு, உங்களால் மறக்க முடியாத புத்தகம் என்று வாசிப்பு, புத்தகம் தொடர்பாக நிறைய கேள்விகளை தனது பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர் என்ற பலவிதமான நண்பர்களில் 75 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேட்டார். அவர்கள் தந்த பதில்கள் வாசிப்பு பற்றி குவினனுக்கு பெரிய வெளிச்சத்தைத் தந்தன.
புத்தக வாசிப்பு தவிர குவினன் உலகெங்கும் எழுத்தாளர்களின் வீடுகளை, கல்லறைகளைத் தேடித் தேடிச் சென்று பார்த்திருக்கிறார். அதற்கும் எப்படியோ நேரம் ஒதுக்கியிருக்கிறார். புத்தகத்தின் கட்டுரைகள் எழுதப்பட்ட நேரத்தில் அவர் உணர்ந்தவை என்பதற்கு மேல் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாதவை, random thoughts என்பதால் எல்லா கட்டுரைகளிலும் வாசிப்பு பற்றி, புத்தகங்கள் பற்றி ரத்தினங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. தான் ரத்தினங்களைச் சிதறியபடி செல்கிறோம் என்ற உணர்வின்றி அவர் பாட்டுக்குச் சிந்தியபடி செல்கிறார். நான் ஆங்காங்கே என் பை கொள்ளும் மட்டும் பொறுக்கி உங்களுக்கும் கொஞ்சம் தருகிறேன்.
Girl with the dragon tattoo நாவல் ஸ்வீடனில் 27 மில்லியன் பிரதிகள் விற்றதாம். அதாவது ஸ்வீடனின் குடிமக்கள் ஒவ்வொருவரும் மூன்று பிரதிகள் வாங்கி இருக்கிறார்கள்!
நீங்கள் வாசிக்கும் புத்தகத்தில் உங்களுக்குப் பிடித்த வரிகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அது அந்த படைப்பாளிக்கு நீங்கள் செய்யும் ஆகப் பெரிய மரியாதை.
விடுமுறை நாட்களில் வீட்டில் குழந்தைகளை கட்டாயப்படுத்தி வாசிக்க வையுங்கள். எந்தக் குழந்தையும் தானாக டானிக்கைக் குடிக்காது!
மின் புத்தகம் வந்த பிறகு அச்சுப் புத்தகத்தை திட்டுவது அதிகரித்து விட்டது. அவை இடத்தை அடைக்கின்றன என்கிறார்கள். சரிதான். ஈஃபிள் கோபுரமும், சிஸ்டைன் சாப்பலும், கலோசியமும் இடத்தை அடைத்துக் கொண்டுதான் ஊருக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கின்றன. இடித்துத் தள்ளிவிடலாமா?
பொதுவாக வாசகர்கள் 60ம் பக்கத்தில் தான் புத்தகத்தை மேற்கொண்டு படிக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். எனவே 60ம் பக்கம் வரும் போது சற்று தம் கட்டி படித்து அதைக் கடந்து தொடர்ந்து படித்துவிடுங்கள்.
கடல், வானம் ஆகியவை தாம் இருக்கும் விதத்திலேயே தனிச் சிறப்பானவை. அவற்றை சிறப்பானவைகளாக ஆக்க தனியாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை. புத்தகங்களும் அவ்வாறே. அவை தம்மளவிலேயே தனிச் சிறப்பானவைதான்.
நல்ல வாசகர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளை நேசிப்பவர்களாக இருப்பார்கள். பழைய புத்தகக் கடைக்குச் செல்வது, அங்கு போய் புத்தகங்களைத் தேடுவது, தனக்கென்று விசேஷமாக ஒரு பழைய புத்தகக் கடையை வைத்திருப்பது, அந்தக் கடைக்காரருடன் ஒரு தனி நட்பைப் பேணுவது என்பதெல்லாம் புத்தகக் காதலர்களின் கல்யாண குணங்களில் ஒன்று. குவினன் மிகப் பெரிய புத்தகக் காதலர் என்றபோதும், அவருக்கு பழைய புத்தகங்கள் பிடிப்பதில்லை. பழைய புத்தகம் வாங்கினால் அதனால் எழுத்தாளனுக்கு ஒரு லாபமும் இல்லையே… முடிந்த வரை புது புத்தகமே வாங்குங்கள் என்கிறார்.
குவினனின் இந்த புத்தகத்தில் நிறைய வரிகளை நாம் வாசிப்பு குறித்த பேச்சில், எழுத்தில் மேற்கோள் காட்ட முடியும் என்றாலும், குவினன் ஓரிடத்தில், “வாசிப்பு என்பது மராத்தான் ஓடுவது மாதிரிதான், நாம் ஓடுவது முதலிடத்திற்காக அல்ல. நம்மால் எவ்வளவு முடிகிறது என்பதைப் பார்ப்பதற்காகத் தான்” என்று சொல்வதுதான் இந்தப் புத்தகத்தில் எனக்கான செய்தியாக நான் எடுத்துக் கொண்டேன்.
வாசிப்பு எனும் மராத்தானில் கூட்டத்தோடு கூட்டமாக நானும் ஓடுகிறேன் என்பதே பெருமைதானே!