வே. மீனாட்சிசுந்தரம்
“உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் உலகளவில் விலைகளைத் தூண்டிவிட்டன, ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்த வருவாயில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படும் பொருளின் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். (REUTERS புது தில்லி மே 20, 2022 19:39 IST)
இந்திய பாமரர்களாகிய நம்மை பாதிப்பதாக கூறப்படும் யுக்ரேன்-ரஷ்ய மோதலைப்பற்றி செய்தி நிறுவனங்கள் தருகிற தகவல்கள் வரலாற்று போக்கை அறியாதவர்களை வெகுவாக குழப்புகின்றன.

உண்மை எதுவென்று தெரியாமல் தவிக்கிறோம் இந்த தவிப்பை போக்கி பொய்யர்கள் கூறும் மெய் எது, மெய்யான மெய் எதுவென்று, கண்டிட இ.பா. சிந்தன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “ உக்ரைனில் என்ன நடக்கிறது”? 110 பக்க புத்தகம் உதவுகிறது. ஊடக தகவல்களால் எழும் பல கேள்விகளுக்கு பதில்கள் இதிலே அடங்கியுள்ளன.
உக்ரேனை தனதுடமையாக்க ரஷ்யா யுத்தம் தொடங்கியதென குற்றம் சாட்டலாமா?, மறுபக்கம் யுக்ரேனில் வசிக்கும் ரஷ்ய மொழி பேசும் வம்சாவளியினரை அழித்தொழிக்கும் ஃபாசிச போக்கை அகற்ற எடுக்கும் நடவடிக்கையே தவிர பொதுமக்களை தாக்கும் யுத்தமல்ல என்று ரஷ்யா கூறுவது மெய்தானா? உக்ரேனை நேட்டோ ராணுவ கூட்டில் சேர்த்து ரஷ்யாவை சுற்றி ராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா வெகு நாட்களாக காய்களை நகர்த்துகிறது. ரஷ்யா அதை தடுக்க வேறு வழியில்லாமல் படை யெடுக்கிறது என்று கூறப்படுவது மெய்தானா?
உலக நாடுகளின் ஒத்துழைப்பில்லாமல் ஏகாதிபத்திய நேட்டோ ராணுவ கூட்டை உடைக்க முடியுமா? உலக நாடுகளின் ஒத்துழைப்பை உருவாக்க முயலாமல் ரஷ்யா படை யெடுப்பது சரிதானா? அல்லது ரஷ்ய படையெடுப்பே ராணுவக் கூட்டுகளுக்கு எதிராக உலகை நாடுகளை திருப்பும் முயற்சியின் முதல்படி என்பது சரிதானா? நட்பு நாடான சீனா ரஷ்யாவை ஆதரிக்காமல் நடு நிலை என்று அறிவித்ததின் மர்மமென்ன?
உக்ரேன் அரசாங்க நிர்வாகத்தில் ஜனாதிபதியே அதிகாரம் படைத்தவர். ஜனாதிபதி தேர்தலில் அந்நிய தலையீடே ஜனாதிபதிகளை பந்தாடும் நிலைமை ஏற்பட்டது என்பது சரிதனா?
எதனால்தான் அரசியல் இயக்கங்களிலே பங்கு பெறாத அரசியல் தலைவர்களை கேலி செய்கிற ரஷ்யாவிலும் பிரபலமான ஸ்டாண்டிங் காமெடியன் ஜெலன்ஸ்க்கி ஜனாதிபதியானார்?
வட அட்லாண்டிக் ராணுவ கூட்டில் சேராமல் நடுநிலை வகிக்கப் போவதாக கூறி வெற்றி பெற்றவர் பின் ஏன் பல்ட்டி அடித்தார்.? அதனுடைய உற்பத்தி கட்டமைப்பு சோவியத் ஒன்றிய உறுப்பினர் நாடாக இருந்த காலத்தில் உருவானதாக இருந்தும் ரஷ்யாவோடு பகைமை உறவை வளர்ப்பது யார்?
உக்ரேன் ராணுவமும், ரஷ்ய ராணுவமும் சில போர் முனைகளில் சமரசம் செய்வதையும் சில இடங்களில் வெறித்தனமாக மோதுவதையும் கேள்விப்படுகிறோம் உண்மையா? ஏன் இந்த இரட்டை நிலை?
இந்த யுத்தம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடக்கிற போர் என்று கூறமுடியுமா? 1874இல் ஐரோப்பிய சாம்ராஜ்யவாதிகள் காலனி ஆதிக்க ஒப்பந்தப்படி உலகை உருட்டுவது தங்களது கையில் இருக்கவே காலனிகளை பிடிக்க மோதுவதில்லை என்ற முடிவிற்கு வந்து காலனிகளை பங்கீடு செய்தனர்.
1945க்குப் பிறகு காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்தது. சோசலிச முகாம் பரவுவதை தடுக்கவே ராணுவ கூட்டை அமைத்தனர் 1987இல் சோசலிச முகாமே எடுபட்ட பிறகு ராணுவ கூட்டு எதற்கு?
நேட்டோ ராணுவம் யூகோஸ்லாவியாவை ஈராக்கை, லிபியாவை ஏன் துவம்சம் செய்தது? அமெரிக்க படைத்தளம் 80 நாடுகளிலும் தீவுகளிலும் ராணுவதளம் இன்றும் இருப்பது ஏன்?
உலக மய சூழலால் உருவான பொருளாதார சக்கரத்தை சுழற்றும் குளோபல் சப்ளை செயினை இந்த யுத்தம் அறுத்துவிட்டதாக கூறுவது சரிதானா? அல்லது ஏற்கெனவே சப்ளை செயின் கடன் சுமையால் பலகீனப்பட்டு கிடக்கிறது. இந்த யுத்தம் கடைசி துரும்புதான் என்று கூறுவது சரியா?
ராணுவ கூட்டு கலைக்கப்பட வேண்டும் என்பது சரியா? நேட்டோ ராணுவம் இல்லையென்றால் சீனா உலக நாடுகளை அடிமைப்படுத்திவிடும் என்பது உண்மையா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் “நறுக்” கென்ற விடைகளை இந்த புத்தகம் தருகிறது. நூறு ரூபாய் கொடுத்து வாங்குங்கள் படியுங்கள். ஆசிரியரை உற்சாகப்படுத்துங்கள்! பாரதிபுத்தகாலயம் நீடித்து அறிவுச் சொத்தை வழங்கும் பணி செய்ய உதவுங்கள்!
