வே.தூயவன்

“இந்த முறை திருப்பூர் புத்தகத் திருவிழாவுக்கு வந்தவர்களில் இளம் பெண்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் இலக்கிய நூல்களை அதிகமாக வாங்கிச் சென்றதாக விற்பனையாளர் ஒருவர் கூறினார். குறிப்பாக, வளர் இளம் பருவப் பெண்களிடம் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருவதை இதன்மூலம் உணர முடிகிறது” என்றார் தோழர் அ.நிசார் அகமது. திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக புத்தகத் திருவிழாவை திருப்பூரில் நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்து முன்னத்தி ஏர் ஆக, உடன் பயணித்து வரும் நிசார் அகமதுவின் வார்த்தைகள் மிகைப்படுத்தியவை அல்ல.
அதிகாலை முதல் இரவு கடந்தும் மக்கள் உழைத்துக் கொண்டே இருக்கும் நகரம் திருப்பூர். வெளிநாட்டு ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் என ரூ.60 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நடைபெறும் இந்த பரபரப்பான நகரத்தில் மக்கள் ஆசுவாசமாக ஓய்வெடுத்துக் கொள்ளத்தான் வழியில்லை. கிடைக்கும் வார விடுமுறை நாட்களிலும் உருப்படியாக பொழுதுபோக்கவும் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை. இந்த சூழ்நிலையில்தான், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருப்பூர் புத்தகத் திருவிழா மக்களின் வாழ்க்கையில் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக கலந்துவிட்டது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல் இந்த நகரத்து மக்களின் ஆரோக்கியமான பண்பாட்டுச் சிந்தனைக்கும், பொழுது போக்கவும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்த விழா.
கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக 2020, 2021 இரு ஆண்டுகள் புத்தகத் திருவிழா நடத்த முடியவில்லை. அதனால்தானோ என்னவோ, இந்த ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டபோது, தவித்த பறவைகள் தாகம் தீர்க்க தண்ணீர்குளம் நாடி வருவதைப் போல, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்துவிட்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் ஓவியம், கட்டுரை, கவிதைத் திறனை ஆர்வமுடன் வெளிப்படுத்தினர். ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 11 நாட்கள் கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் 95 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. புத்தகத் திருவிழா என்றாலே திருப்பூரின் முக்கிய பிரமுகர்கள் பலர் ஆர்வமுடன் கரம் கோர்த்து இதன் வெற்றிக்காக சகல வகையிலும் உதவி செய்வது மரபாக மாறிவிட்டது.
திருப்பூரின் அடையாளமாக இருக்கும் பின்னலாடை தொழில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே சீரான வேகத்தில் செல்லவில்லை. பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்த தொடர் நெருக்கடிகளை சந்தித்து நிலையான வளர்ச்சி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்பு இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையிலும் உள்ளது. பெரும்பாலும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் புத்தகங்கள் வாங்க வருகின்றனர். எனவே திருப்பூர் சந்திக்கும் நெருக்கடியின் தாக்கம் புத்தகத் திருவிழாவிலும் இருக்கும் என்று வரவேற்புக்குழுவினர் அனுமானித்தனர். எனினும் புத்தகம் வாங்குவதையும், வாசிப்பதையும் இயல்பான பழக்கமாக மாற்றிக் கொண்ட ஒரு பகுதியினர் தயக்கம் இல்லாமல் புத்தகங்களுக்குச் செலவிட்டதை இந்த கண்காட்சியில் காண முடிந்தது. அதேபோல் வாசிப்பு, கல்வி சார்ந்த அறிவியல் உபகரணங்கள் விற்பனையும் குழந்தைகளை அதிகளவு ஈர்த்தது.
இங்கு வந்த பார்வையாளர்கள், வாசகர்கள் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அவரவர் விருப்பம், தேவைக்கு ஏற்ற புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த காலங்களில் தன்னம்பிக்கை, தன் முன்னேற்றம் குறித்த நூல்கள் அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறது. ஆனால் இம்முறை அப்படி எந்த ஒரு தனிப்பொருள் குறித்த புத்தகங்களும் அதிகமாக விற்பனையானதாக சொல்ல முடியாது. எப்போதும் வாசகர்களை ஈர்க்கும் பொன்னியின் செல்வன் நாவல் இம்முறை வழக்கத்தை விட அதிகமாக விற்பனை ஆனது. அதே சமயம், சிறுகதை, கவிதை, நாவல், அறிவியல், அரசியல், வரலாறு, ஆன்மிகம் என பலவித நூல்களும் பரவலாக விற்பனை ஆனது என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். சுற்றுப்புறச் சூழல் நூல்கள் அதிகமாக விற்பனை ஆனது, சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை உணர்த்தியது.அதேபோல் மருத்துவ விழிப்புணர்வு நூல்களும் விற்பனை கூடியுள்ளது.
11 நாட்கள் புத்தகத் திருவிழாவில் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சி தவிர்த்து மற்ற 10 நாட்களும் கருத்தரங்கம், பட்டிமன்றம், விருதாளர்களுக்குப் பாராட்டு, பரிசளிப்பு விழா என மாலை நேர சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் மிக கன மழை பெய்தது. இரண்டாம் நாள் நிகழ்வாக புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத அரங்கம் மேடையில் தொடங்கி நடைபெற்றபோதே கனமழை பெய்ததால், கண்காட்சி வளாகத்திற்குள் மாற்றப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், குழந்தை இலக்கிய படைப்பாளி உமாநாத் விழியன், கவி வெற்றிச் செல்வி, பவா.செல்லதுரை, ஜி.பாலச்சந்திரன் ஐஏஎஸ், சிற்பி பாலசுப்பிரமணியம், பாரதி கிருஷ்ணகுமார், கே.சுப்பராயன் எம்.பி., ஊடகவியலாளர் ஜென்ராம் ஆகியோர் ஒவ்வொரு நாளும் அற்புதமாக கருத்துரை வழங்கினர். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இரண்டு பட்டிமன்றங்களும் நடத்தப்பட்டன.

பசியை வெல்வதற்காக மனிதர்கள் நடத்திய போராட்டமே மனிதகுலத்தின் வரலாறு, காலத்தின் ஊடே பயணிக்கும் வல்லமையை புத்தகங்கள் தருகின்றன என்றார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் மாலை நேர நிகழ்வுகளில் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகளைச் சாரமாக தொகுத்துச் சொல்வதென்றால், தமிழர்கள், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறு, அதன் அறிவியல் பூர்வமான தத்துவ தரிசனம், மேம்பட்ட வாழ்க்கை நிலை, உயர்ந்த கருத்துகள், தொன்று தொட்டே தொடரும் ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றை திருப்பூர் மக்களின் மனங்களுக்குள் கடத்துவதாக இருந்தன. பழம் பெருமைகளை பேசிச் செல்வதாக இல்லாமல், இன்றைய காலத்தின் சவால்களையும் குறிப்பிட்டுக் காட்டினர்.
இதை வெல்வதற்கு சக மனிதர்களிடம் நிபந்தனை இல்லாமல் அன்பு செலுத்த வேண்டும், வாழ்க்கையின் சாரத்தை கற்றுணர்ந்து கொள்ள புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று தெளிவாக வழிகாட்டக் கூடியதாகவும் இருந்தது. நம் கடந்த கால வாழ்வின் சிறப்புகளை உணரும்போதுதான் இன்றைக்கு நாம் வாழும் காலத்தை சூழும் ஆபத்தை உணர்ந்து, சரியான பாதையில் பயணித்து, அர்த்தமுள்ளதாக ஆக்கி, நல்லதொரு எதிர்காலத்தை படைத்துருவாக்க முடியும் என்ற செய்தியை திருப்பூர் புத்தகத் திருவிழா ஆயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது.
11 நாள் பண்பாட்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மொத்தம் ரூ.1.25 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை ஆகியிருக்கிறது. அன்பை விதைக்கும் அடுத்த புத்தகத் திருவிழா விரைவில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பதிவு செய்து 18ஆவது புத்தகத் திருவிழாவுக்கு பிரியா விடை கொடுத்தனர் திருப்பூர் மக்கள்.