வீ. பா. கணேசன்
இந்திய சமூக விஞ்ஞானக் கழகம், சென்னை, பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை ஆய்வாளர் பிரிவுடன் இணைந்து கடந்த மே 14 அன்று இயக்கவியல் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது.
இந்த நிகழ்வின் தொடக்கமாக, வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவை ஆற்றிய டாக்டர். டி. ஜெயராமன் இயக்கவியலின் அவசியம்: இன்றைய பார்வையில் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்விற்கு கேரள மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் டாக்டர். வி.கே. ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

தோழர் வி.பி. சிந்தனின் பன்முக ஆளுமைத் திறனை விவரித்துக் கூறிய ராமச்சந்திரன், குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மார்க்சிய புரிதலுக்காக அவர் எடுத்துக் கொண்ட அதீதமான அக்கறையை நினைவு கூர்ந்தார். அவரது புரட்சிகரமான போராட்ட வாழ்க்கையின் எதிர்நீச்சலுக்கு இடையிலும் தத்துவம், கொள்கை, சிந்தனை ஓட்டம் குறித்த நூல்களை ஆழமாகப் படித்து தன் அறிவின் வரம்பை அறிவியல் ரீதியாகத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்ட வி.பி.சிந்தன் தன் அறிவுச் செழுமையை அன்றைய மாணவர்களிடையே கடத்துவதில் மகத்தான வெற்றி பெற்றார் என்றும் அவர் தனது தலைமையுரையில் புகழ்ந்துரைத்தார்.
வி.பி.சிந்தன் நினைவாக சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஜெயராமன், இயக்கவியலின் இன்றைய அவசியம் குறித்து விவரிப்பதற்கு முன்பாக, தனது மாணவப் பருவத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் வி.பி.சிந்தனின் வழிகாட்டுதலின்கீழ் தான் செயல்பட்டு வந்ததை நினைவு கூர்ந்தார். மிகச் சிறிய மாணவர் குழுக்களின் மீதும் தனிக்கவனம் செலுத்துவதில், அவர்களை தத்துவார்த்த ரீதியாக பயிற்றுவிப்பதில் அவருக்கு ஈடிணையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்க்சிய தத்துவம் குறித்தும், இந்திய தத்துவ மரபு குறித்தும், இந்திய வரலாறு குறித்தும் அவர் எடுத்த வகுப்புகள் தனித்தன்மையோடு இன்றளவும் நினைவில் இருந்து நீங்கா வண்ணம் இருந்து வருகிறது என்றும் டாக்டர் ஜெயராமன் தனது முன்னுரையில் குறிப்பிட்டார்.
தனது சொற்பொழிவில் டாக்டர் ஜெயராமன் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை நீடித்து வரும் இயக்கவியலின் சிறப்புத்தன்மைகள் குறித்து சுட்டிக் காட்டினார். முதலாவதாக, இயக்கவியல் என்ற கருத்தாக்கம் எவ்வாறு உருப்பெற்றது என்பதை எடுத்துக் காட்டிய அவர், எவ்வாறு இயக்கவியலானது பொருள்முதல் வாதத்தின் இன்றியமையாத ஓர் அம்சமாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டினார்.
அடுத்து இன்றைய அறிவியலுக்கும் அதன் ஆய்வுகளுக்கும் எவ்வாறு பொருள்முதல்வாதம் அடிப்படையான ஒன்றாக அமைகிறதோ, அதைப் போன்றே தத்துவார்த்த அடிப்படையிலும் இயக்கவியல் பார்வையானது அறிவியல் மற்றும் அதன் ஆய்வுகளுக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குவதை எடுத்துக் காட்டினார்.

இறுதியாக, இயக்கவியலின் மூன்று முக்கிய விதிகள் குறித்த எங்கெல்ஸின் எழுத்துக்களை மேற்கோள் காட்டிய டாக்டர் ஜெயராமன், இயக்கவியலின் மூன்று விதிகளுக்கு இடையேயான உள்ளார்ந்த உறவுகள் குறித்த எங்கெல்ஸின் கருத்தாக்கத்தினை வலியுறுத்தும் வகையில் மார்க்ஸின் அரசியல் பொருளாதாரம் குறித்த ஆய்வுகளில் இருந்து ஒரு சில உதாரணங்களையும் முன்வைத்தார்.
நம் அன்றாட வாழ்வில் இயக்கவியலின் இன்றியமையா பிணைப்பை சுட்டிக் காட்டிய டாக்டர் ஜெயராமன் இந்தியாவின் தத்துவ வரலாற்றில் இயக்கவியல் ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்ட தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ராகுல் சாங்கிருத்தியாயன், ராமகிருஷ்ணா பட்டாச்சார்யா போன்ற அறிஞர்களை அடியொற்றி புதிய தலைமுறை அறிஞர்களின் தேவையை சுட்டிக் காட்டினார். இந்திய சமூகம் குறித்த முழுமையான புரிதலை பெறுவதற்கு இளம் தலைமுறையினர் இயக்கவியல் பார்வையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தத்துவம் பயிலும் மாணவர்களிடையே இயக்கவியலின் வரலாற்றை அறிமுகப்படுத்தி, அதன் அவசியத்தை விதைத்த வகையிலும், இதர பார்வையாளர்களின் சிந்தனை ஓட்டத்தை மேலும் விரிவடையச் செய்யும் நிகழ்வாகவும் இந்த ஆண்டின் வி.பி. சிந்தன் நினைவு சொற்பொழிவு அமைந்திருந்தது என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
டாக்டர் ஜெயராமன் அவர்களின் இந்த ஆங்கில சொற்பொழிவை பாரதி புத்தகாலயத்தின் இண்டியன் யூனிவர்சிடி பிரஸ் பிரிவு ஒரு சிறு நூலாக வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.