தமிழக முதலமைச்சரின் அடுத்தடுத்த வாசிப்பு திட்டங்கள் வளம் மிக்க புத்தக மாநிலமாய் நம் தமிழகத்தை பூத்தெழ வைக்கும் நோக்கங்களை கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. புத்தக பூங்கா திட்டம் உட்பட பலவும் வாசகர், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வாசகர், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஒரு சமூகத்தை விழிப்புணர்வும், மனித நேயமும் வேற்றுமையில் ஒற்றுமையும் காணும் நல்லிணக்க சமூகமாக மாற்ற வாசிப்பே சிறந்த வழி என்று முழங்கிய சீர்திருத்தச் செம்மல் ராஜாராம் மோகன்ராயின் 150வது பிறந்த ஆண்டு இது.
நாடெங்கும் பட்டி தொட்டிகளில் மக்களை எழுத்தறிவு கொண்டவர்களாக ஆக்கி அங்கெல்லாம் ஒரு நூலகத்தை அமைக்க அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு புதுமை வேண்டுகோள் விடுத்தவர் அவர். பெண்ணடிமை சமூகமாக, பார்ப்பன மதவெறி மண்ணாக இருந்த காலத்தை பொது மத விடுதலை சமூகமாக கற்பனை செய்து பிரம்மசமாஜ எழுச்சிகளை விதைத்தவர் அவர். இந்தியாவில் கையில் ஒரு புத்தகத்தோடு சிலை வைக்கப்பட்ட முதல் வாசிப்பு வெறியர் ராஜாராம் மோகராய்தான். விதவை திருமணம் செய்து கொண்டவர். இறக்கும்போது அன்றே அந்த 1833இல் தனது சொந்த வீட்டு நூலகத்தில் ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தவர். இந்திய அளவில்…
இந்திய அளவில் இன்றும் நூலக எழுச்சித் திட்டங்கள் எல்லாம் அவர் பெயரிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. பன்னிரண்டாயிரம் புத்தகங்களை தான் இறக்கும் சில நாட்களுக்கு முன் புதுதில்லி பொது நூலகத்திற்கு வழங்கிய அண்ணல் அம்பேத்கர் எனும் மாமேதை ராஜாராம் மோகன்ராயை ஆங்கில மொழி வெறியராக காந்தி உட்பட பலர் சித்தரித்ததை எதிர்த்தவர்.
கொல்கத்தாவில் இந்திய அறிவியல் கழகத்தை (Indian Assosiation For Cultivation of Science) அமைப்பை ஏற்படுத்திய மக்கள் மருத்துவர் மஹேந்திரலால் சர்க்கார் சேகரித்த ஆறாயிரம் அரிய புத்தகங்களை அவரது மகன் நில்ரத்தன் சர்க்கார் அன்றைய பிரதமர் நேருவிடம் ஒப்படைத்தபோது அந்த மொத்த புத்தக குவியலில் தான் வாசிக்காத புத்தகங்கள் என்று நேரு சில நூல்களை தேடி எடுத்து வாசித்துவிட்டு பொது நூலகத்தில் இணைத்தது வரலாறு.
வெள்ளையர்களின் காவல்துறையிடம் சிக்காமல் தனது மீன் விற்கும் கூடைகளின் அடியில் புத்தகங்களை கடத்தி புதுமை வாசிப்பு இயக்கம் நடத்திய சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சோவியத் நாட்டிற்கு தலைவர் லெனின் அவர்களின் புத்தக சேகரிப்பு இயக்கத்திற்கு எழுநூறு புத்தகங்களை அனுப்பி மாஸ்கோ நூலகத்தில் தோழர் சிங்காரவேலர் கலெக்ஷன் என்றே இன்றும் பாதுகாக்கப்படுவது வரலாறு. பயணத்தில் புத்தகம் வாசிப்பது வேறு.
புத்தகங்கள் வாசிக்கவே ரயிலில் பல மணிநேரம் நீண்டதூரம் பயணம் செய்த மாமனிதர் மக்கள் விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் ஆயிரக்கணக்கான புத்தகக்குவியலை இன்றும் நாம் கோவை ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தின் நூலகத்தில் காண்கிறோம். அந்த நூல்களின் சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூலில் மக்கள் விஞ்ஞானி தான் வாசித்து அடிக்கோடுகளிட்டு எழுதிய அற்புதமான சுய வாசிப்பு குறிப்புகள் தனித்து குறிப்பிட வேண்டியவை.
வாசிப்பின் புரட்சிகர வாசலை புரட்டிப் போட்ட பொது உடைமைக் கவி ஜீவா, வாசிப்பின் அடையாளமாகி புத்தகம் வாசிப்பதுபோல சிலைகண்ட நம் நாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா இந்த வரிசையில் பல்வேறு நூலகத் திட்டங்கள் அண்ணா நூலகம் விருதும் புத்தக ஆதரவு அரசாணைகள் எனத் தொடர்ந்து வாசிப்பின் முதல் அடையாளமாக தன்னையும் இறுதி மூச்சுவரை புத்தக வாசிப்பிற்கே அர்ப்பணித்த கலைஞர் கருணாநிதி வரை நடந்த அறிவின் எழுச்சிப் பயணத்தை தொடரும் தமிழக அரசின் பள்ளிகளில் நூலகம் தோறும் நல்ல இலக்கிய இதழ்கள்… என தொடர்ந்து புத்தக பூங்கா திட்டம் வரை புத்தகம் பேசுகிறது இதழ் யாவற்றையும் வரவேற்கிறது.
புத்தகப் பூங்காவாக முழு தமிழகத்தையும் மாற்றிட பட்டி தொட்டிகளில் எல்லாம் புத்தக கண்காட்சி எனும் நமது எழுச்சிமிக்க இயக்கம் தொடரட்டும்.