சா. ஜார்ஜ்டேவிட்
இன்றைய அரசியல் சூழலில் ‘திராவிட மாடல்’ என்கிற சொல்லாடல் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. இத்தகைய சொல்லுக்குச் சொந்தக்காரராகவும் முன்னோடியாகவும் விளங்கியவர் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார். ஆதிதிராவிடர், திராவிடர், தமிழன், தமிழ் பெளத்தம் போன்ற களங்களில் பன்முகப் பார்வையில் இயங்கி, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட பங்காற்றிய பெருமையும் பண்டிதரைச் சாரும்.
இத்தகைய சூழலில் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் தொகுப்பில் வெளிவந்துள்ள, “பண்டிதர் 175” எனும் நூல் கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும். இந்நூலில் பண்டிதர்: காலமும் களமும், பண்டிதர் முறைமை, பண்டிதருக்கு அப்பால், புனைகளம், ஆவணங்கள் எனும் ஐந்து பாகங்களில் மொத்தம் 25 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர் அன்பு பொன்னோவியத்தால் எழுதப்பட்ட ‘பண்டிதரும் பாபாசாகேப்பும்’ எனும் கட்டுரை, சமகாலத்தில் பாபாசாகேப்பின் வாயிலாகப் பண்டிதரைப் புரிந்து கொள்வதற்கும் அரசியல் மற்றும் சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளது. அதில் பலவகைப்பட்ட கடவுள் வழிபாடு குறித்துப் பேசும்பொழுது பார்ப்பனியத்தைச் சமரசமின்றி தோலுரித்துக் காட்டுகிறார்கள்.
மேலும் இலக்கியத்தைப் பார்ப்பனியம் அணுகிய விதத்தையும் அதன் வாயிலாக ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்த விதத்தையும் இருவரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அவ்வகையில் இவ்விருவரும் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலப் போக்குகளின் வாயிலாக, மிக நுணுக்கமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அணுகிய நபர்களாக உள்ளனர்.
வரலாற்றை அணுகும்போது மிகவும் கவனமாக அணுகவேண்டியது அவசியம். இங்கு சமத்துவத்தை வலியுறுத்தும் கோட்பாடு, அதற்கு எந்தவகையிலும் உடன்படா மற்றொரு கோட்பாடு என்ற இரு வகைமை உண்டு. இன்றைய காலகட்டத்தில் சமத்துவக் கோட்பாட்டைப் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒருசில பார்ப்பனர்களும் சாதி இந்துக்களும் தங்களை அறிவாளியாக வெளிப்படுத்துவதற்குப் பல்வேறு தகவல்களையும் மேலைநாட்டு மேற்கோள்களையும் காட்டி, ஒருவிதமான குழப்பத்தை உண்டாக்கி மந்த நிலைக்குத் தள்ளுகின்றனர்.
நூதனமுறையில் மிக இலாவகமாகத் தங்களின் பிரிவினைவாதக் கோட்பாட்டினைச் சமத்துவ கோட்பாட்டின் பெயரிலேயே வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போக்கினைக் கவனமாகக் கையாள்வதுடன் காத்திரமாக எதிர்க்க வேண்டியதும் அவசியம்.
இத்தொகுப்பில் வெளிவந்துள்ள ஆ.இரா. வேங்கடாசலபதியின், “அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி” மற்றும் வ. கீதாவின், “அயோத்திதாசரும் பௌத்த மறுமலர்ச்சியும்” எனும் இரு கட்டுரைகளும் பல்வேறு அரிய தகவல்களைத் தருகிறது. அதேவேளையில் ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதையும் தவிர்க்கவில்லை.
ஆ.இரா. வேங்கடாசலபதியின் கட்டுரையானது, வரலாற்றறிஞர் டி.டி. கோசாம்பி – அயோத்திதாசர் இருவருக்குமான சந்திப்பு குறித்தது. அதில் அவர்களிடையேயான சந்திப்பு குறித்த தகவல்கள் மிகக்குறைந்த அளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பின்னால் வரும் தகவல்கள் கோசாம்பிக்கும் சிங்காரவேலருக்குமான நட்பு, அவரின் இலங்கைப் பயணம் மற்றும் சென்னையில் சிறிது நாட்கள் தங்கியிருந்து, ‘சென்னை மகாபோதி சபை’ எனும் பெளத்த சபையுடன் பயணித்தமை, அதற்குப் பின்னர் வெறுப்புடன் பர்மா விகாரைக்குச் செல்வதைக் குறிப்பிட்டுச் செல்கிறது. இது ஒருவிதமான குழப்பத்தையே உண்டாக்குகிறது. மேலும் இக்கட்டுரை முழுவதும் மொழிபெயர்ப்பாக மட்டுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

எந்த சம்பவங்களுக்கான காரணத்தையும் சிறிதும் விளக்காது, இலக்கியம் பேசும் விமர்சகர்கள் அவர்களே இலக்கியவாதிகளாவது போல வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தொகுப்பவர்கள் வரலாற்றறிஞர்களாக மாறிவருகிறார்களோ என்கிற எண்ணம் இந்நூல் வாசிப்பின்வழி உண்டாகிறது.
வ. கீதாவின், “அயோத்திதாசரும் பௌத்த மறுமலர்ச்சியும்” எனும் கட்டுரையின் முடிவில் அயோத்திதாசர் பூர்வீக பெளத்தர்களை வகைப்படுத்தும் போக்கினை, அன்றைய நிலையில் உரிமைகள் கேட்டுப் பேசியும் எழுதியும் வந்த பெண்களின் நிலை போலத்தான் அயோத்திதாசரின் நிலையும் என ஒப்பீடு செய்கிறார். மேலும் தாங்கள் ‘உத்தமிகள்’ என்று நிரூபித்த பின்னர்தான், அக்காலகட்டத்தில் உரிமையைப் பெற முடிந்தது எனக் கூறுகிறார்.
இங்குதான் மிகப்பெரிய முரண் உண்டாகிறது; ஏனெனில் இந்த ஒப்பீடானது புனிதத்துவத்தைக் கட்டுடைப்பு செய்தவரின் பெயரிலேயே புனிதத்துவச் சாயம் பூசி, அதைக் கட்டுடைப்பு செய்வது போலாகி விடுகிறது. இப்போக்கு ஆய்வாளர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, தற்கால – எதிர்கால அரசியலுக்கு எந்தவகையிலும் பயன்தராது.
அயோத்திதாசப் பண்டிதர் சமத்துவச் சமூகம் உருவாக்க வேண்டி, அதற்குத் தடையாயிருந்த பார்ப்பனியப் புனிதத்துவத்தைத் தோலுரிக்க சில உக்திகளைக் கையாள்கிறார். அதைப் புனிதத்துவத்தைக் கட்டமைத்தல் என்ற அடிப்படையில் மட்டும் சுருக்கிப் பார்க்க இயலாது.
தமிழ் இலக்கிய ஆய்வுகளில் முக்கியமானதொரு பங்களிப்பை வழங்கியவர் ஆய்வாளர் ராஜ்கௌதமன். இவரின் “கிறித்துவ மதத்தைப் பெளத்தமாக்கல்” எனும் கட்டுரையில் அயோத்திதாசரின் பரந்துபட்ட சிந்தனையை மிகத்தெளிவாக, எந்தக் குழப்பமுமின்றி விளக்கியுள்ளார். அதேவேளையில் அறிவுப்பூர்வமான விமர்சனத்தையும் முன்வைக்கிறார். தற்கால ஆய்வுகளில் இம்மாதிரியான அணுகுமுறையே மிகவும் இன்றியமையாத தேவையாகவுள்ளது.
எழுத்தாளர் து. ரவிக்குமார் தனது வலைப்பக்கத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை ஆய்வுமுறைமைகளாக மாற்றம் செய்யவேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். இது அவர்களின் சிந்தனைகளை அடுத்தகட்ட நகர்வுக்கு எடுத்துச்செல்ல வழிவகுக்கும்.
திரு. ஞான. அலாய்சிஸ் தனது கட்டுரையில், தமிழ்ப் பெளத்தம் சார்ந்தும் அயோத்திதாசருக்குப் பின்னர் ‘தமிழன்’ இதழை நடத்தியவரும், புரட்சியாளர் அம்பேத்கர் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தவருமான திரு. ஜி. அப்பாதுரையாரின் பங்களிப்பு குறித்துப் பேசியதும் முக்கியமானவை. இவை தவிர்த்துப் பல முக்கியமான கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆக, அயோத்திதாசப் பண்டிதர் குறித்த ஆய்வில் இந்நூல் அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, இதுபோன்ற தொகுப்புகள் அதிகமாக வெளிவரும் வேளையில், அவை அடுத்தகட்ட அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.