ஆயிஷா இரா.நடராசன்
- அமில தேவதைகள்
தமிழ்மகன்
மின்னல்காடி – பக். 161, விலை. ரூ. 160/-
தமிழில் குறிப்பிடத்தக்க அறிவியல் புனை கதை எழுத்தாளர்களில் ஒருவர் தமிழ்மகன். தினமணி, குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன் என பல இதழ்களில் பணியாற்றிய பத்திரிகையாளரும்கூட, ஆபரேசன் நோவா, வனக்காட்சி என்று ஒன்றிரண்டு வாசித்திருக்கிறேன். இந்த நூல் அமிலதேவதைகள் அறிவியல் சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு.
இத்தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் தமிழின் சிறந்த அறிவியல் புனைவுகள் என்று சான்றளிப்பேன், குறிப்பாக கிளாமிடான் கதை. தமிழ்மகனின் ஆகச் சிறந்த கதை. எதிர்காலத்தில் விவசாயம் செய்பவர்கள் அரசு மற்றும் கார்ப்பரேட்களால் தொழில் நுட்பத்தால் தனி உயிரியாகவே மாற்றி பெரும் வெளியில் சிறைபடுவார்கள் என்பது நம் இந்திய விவசாயிகளின் எழுச்சி போராட்ட பின்னணியில் வாசித்தபோது நெக்குருகவைத்த அனுபவம்.
அமில தேவதைகள், பெண்டியம் மனிதர்கள், எதிர்மென் அரக்கன், கால பிம்பம் என்று விரியும் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சமூக பார்வையில் அறிவியல் வளர்ச்சியை பாடி ஆடுகிறது. நோவா கதையை நாம் தனித்து குறிப்பிட வேண்டும். தமிழ்மகனின் ஆகச் சிறந்த அறிவியல் தொகுப்பு இது. - தேன்கூடு
அழ. வள்ளியப்பா (தொ. உமையவன்)
நிவேதிதா பக். 120, ரூ.110/-
நெல்லை சு. முத்து, திருக்குறள் பதிப்பகம் பக். 87 ரூ.60/-
குழந்தைக் கவிஞர் என்றே அறியப்பட்ட அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டில் வெளிவந்த படைப்பு. இத்தொகுப்பில் நம் புதிய தலைமுறை கொண்டாட அவரது 100 பாடல்கள் உள்ளன. உழவுக்கவி என்று புகழ்பெற்ற உமையவன் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் குழந்தைக் கவிஞர் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்தார். தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிகளில் மழலையர் இடையே இப்பாடல்கள் மிகப் பிரபலமாக இருந்தது.
இன்று இந்த கணினி, ஐ-பாட் யுகத்தில் திரைப்பாடல் காலத்தில் அழ.வள்ளியப்பாவை திரும்ப எடுத்துச் செல்வது மிகவும் சிக்கலான வேலை. ஆனால் தேவையானதும்கூட அழ. வள்ளியப்பாவின் மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், பழையகதை புதிய பாடல் என்பன போன்ற நூல்களில் இருந்து 100 பாடல்களை தேர்வு செய்து படங்களுடன் வெளியிட்டு இருக்கிறார்.
மழலையர் பாடல், ஒலி நயப்பாடல், வினா- விடைப் பாடல், சுவை பாடல், கதைப் பாடல் என எத்தனை எத்தனை வகையான பாடல் என வியந்து போகிறோம். அழ.வள்ளியப்பாவின் நகைச்சுவை பாடல்கள் இன்று படித்தாலும் சிரிப்பு வருவது தனிச்சிறப்பு. நூற்றாண்டு கண்ட மகா. கவிக்கு ஆகச் சிறந்த மகுடம் இந்தத் தொகுப்பு. - எனது ஆண்கள்
நளினி ஜமீலா, மொ.பெ: ப. விமலா
காலச்சுவடு-ரூ. 190/-
காலச்சுவடுபதிப்பக சமீபத்திய நூல்களில் என் மனதை மிகவும் பாதித்த புத்தகம் இது. பாலியல் தொழிலாளர்களாக இருக்கும்படி சமூகத்தின் ஆகக்கீழான அவல நிலைக்கு வீழ்த்தப்பட்டவர்களின் குரல்கள் எங்குமே பதிவு பெறுவது கிடையாது. சினிமாவில்கூட அவர்கள் கதாநாயகனுக்கு புனிதர்பட்டம் தரவும் கேளிக்கை நகைச்சுவைக்காகவும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறார்கள். பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் தன் வரலாறு வெளிவந்து கேரள பண்பாட்டு உலகை உலுக்கியது.
மலையாளிகள் மட்டுமல்ல நமது அனைவரின் வாழ்விலும், சமூகத்திலும் நிலவும் பாசாங்கு போலி ஒழுக்க சார்பு இவற்றை நூல் அம்பலப்படுத்துகிறது. இந்த நூலில் அவர் பெண்களின் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் பகடி செய்கிறார்.
இது நளினி ஜமீலாவின் சாதாரண வாக்குமூலம் அல்ல. நம் சமூகத்தின் வக்கிரங்கள், கபடங்கள், அநீதிகள் யாவற்றையும் அப்பட்டமாக தோலுரிக்கும் ஆணமாக மிளிர்கிறது. விமலாவின் தத்ரூபமான மொழிபெயர்ப்பும் நூலுக்கு அணி சேர்க்கிறது. - கருப்பும் நீலமும்
அ. சாரதாதேவி, குண.சந்திரசேகர், இக்லாஸ் உசென்
கருஞ்சட்டைபதிப்பகம் பக்:165 ரூ.150/-
பொதுவாக தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் இருவரையும் சமூக விஞ்ஞானிகள் என்றே அழைப்போம். ஏனெனில் இச்சமூகத்தில் மாற்றவே முடியாது என இருந்த தலித்் மக்களை செருப்பு அணியக் கூடாது. பொது நிகழ்வுக்கு வரக்கூடாது, பொது கிணறில் நீர் அருந்தக்கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது போன்ற சாதிய ஒடுக்குமுறை சட்டங்களுக்கு எதிராக அவற்றை தகர்த்தெறியும் சிந்தனையை போராட்டத்தை சமூகத்தில் ஊன்றியவர்கள்.
சாதியை காப்பாற்ற நால்வருணத்தை காப்பாற்றிட அதற்கு இந்துத்வா என்று பெயரிட்டவர் சாவர்க்கர். 1923இல் அவர் இத்தாலிய பாசிசம் ஜெர்மானிய நாசிசம் மற்றும் இந்திய பார்ப்பணியம் என மூன்றையும் ஒன்றிணைத்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டது. இன்று நம் நாட்டின் இறையாண்மைக்கே அது அச்சுறுத்தலாக வளர்ந்து நிற்கிறது. அதனை எதிர்த்து வெல்லும் ஒரே வழி கறுப்பு, நீலம், சிவப்பு மூன்றையும் ஒன்றிணைத்து போராடுவதே ஆகும்.
வெங்காயம் இணைய இதழில் வெளிவந்த பெரியாரிய அம்பேத்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல், குண.சந்திரசேகர், சாரதா தேவி, பேரா.கருணானந்தன், சரவணபெருமாள், தமிழ் பொன்னி என பலரது பங்களிப்பு இத்தொகுப்பை பெரியாரிய அம்பேத்கரிய பாடநூலாகவே செதுக்கி உள்ளது. - 16 வயதினிலே
ரமாதேவி ரத்தினசாமி
பாரதி புத்தகாலயம் பக்: 32 ரூ.25/-
ரமாதேவி சராசரி ஆசிரியை அல்ல. சிறப்பு வகுப்பு எனும் டியூஷன் நடத்தி சம்பாதிக்காமல் மாணவர்களுக்காக சிந்தித்து பெண் குழந்தை கல்வி மகளிர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பேசிவருபவர். ஜிவோ (அரசு உத்திரவு)களை மனப்பாடம் செய்து தனது வருமானத்தை புள்ளி விவரமாக்கும் வாத்தியார்கள் மத்தியில் ஐ.நா.சபை வரை சென்று யூனிசெஃப், யுனஸ்கோ, உலகவங்கி என முழங்கி வருபவர். 16 வயதினிலே சின்ன சின்ன அழகான எட்டு கட்டுரைகளை கொண்ட நேர்த்தியான தொகுப்பு.
முதலில் இந்த நூலில் 16 வயதினிலே விடலைப்பருவம், வயசுக் கோளாறு, பிஞ்சிலே பழுத்தது, வளரிளம் பருவம் போன்ற சொல்லாடல்கள் பலவற்றை எதிர்கொள்ளும் நாம் இவை யாவுமே பதின்பருவத்தினை குறிக்கும் தமிழ்ச் சொற்களா என வியந்து போகிறோம். “சின்ன புள்ளைக வெள்ளாமை வீடு வந்து சேராது” என்ற சொல்லடைவை தகர்க்கும் மூன்றாம் கட்டுரை மிக அருமை.
டீன் குழந்தைகள் டெரிபிள் டீன் அல்ல. அவர்கள் டாலண்டட் டீன் என்பதை இந்த புத்தகம் சான்றுகளுடன் அறிவியல்பூர்வமாக நிறுவுகிறது. பல உளவியல் அறிஞர்களின் தத்துவார்த்த பின்னணியில் இந்தியாவின் பெருமக்கள் தொகையாக நிரம்பி கிடக்கும் பதின்பருவ குழந்தைகளை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் பொக்கிஷம் இது. - இருட்டு அறை!
ஆர்.கே. நாராயண் (த. கிருஷ்ண சுவாமி)
விகடன் பிரசுரம், பக். 267, விலை 90/-
நம் தமிழகம் தந்த அற்புத ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே. நாராயண் 1938இல் எழுதிய புதினம், இருட்டு அறை (Dark Room) பெண்ணிய சிந்தனையும் சமூகப் பார்வையும் கொண்ட படைப்பு. அவரது நூற்றாண்டில் விகடன் இதை வெளியிட்டுள்ளது. அந்த காலத்தில் (40களில்) விகடனில் வாரா வாரம் தொடர் கதையாக வந்ததாம்.
சாவித்திரியின் கணவன் ரமணி கொடுமைக்காரன். இரு குழந்தைகளுக்கு தாயான பிறகும் தன் மனைவிக்கு தருவது சொல்லொண்ணா துயரங்கள் அடி உதை அவமானங்கள்தான். தனது கஷ்டங்களை எல்லாம் ஒரு இருட்டறையில் சொல்லிச் சொல்லி அவள் அழுவாள். தனது இங்கிலாந்து இன்சூரன்ஸ் ஆபீசில் புதிதாக சேர்ந்த
சாந்தாபாய் என்பவளை தனது கணவன் சுற்றி சுற்றி வருவதை அறிந்து துடிக்கிறாள் சாவித்திரி.
அவளது தற்கொலை முயற்சியும் தோற்கிறது. இங்கே வந்துவிடு, நான் பார்த்துக் கொள்கிறேன் … கோவில் பூசாரிக்கு அவள் கொடுக்கும் பதில் அற்புத சாட்டையடி. தமிழில் எழுதப்பட்டது போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் கிருஷ்ண சுவாமியை பாராட்ட வேண்டும். அந்தக் கால ஓவியர் ரவியின் கோட்டோவியமும் அழகு. - கைத்தறியும் கணிப்பொறியும் (அறிவியல் கட்டுரைகள்)
முனைவர் பெ. சசிகுமார்
பாரதி புத்தகாலயம் பக்: 96, விலை. 90/-
சசிகுமார் இன்றைய அறிவியல் எழுத்துலகில் புதிய ஊற்று. நம்பிக்கை தரும் அற்புதமான 15 கட்டுரைகள் இந்த அறிவியல் தொகுப்பில் உள்ளன. அன்றாட அறிவியலை அதன் நுணுக்கங்களோடு சுவாரசியமாக சொல்கிறார். இன்று அறிவியல் எழுதுவது ஒரு அர்த்தத்தில் மிக மிக சிரமம். ஒரு நூல் மேல் நடப்பதுபோல. சற்றே தப்பினால் வெறும் பாடநூல் ஆகிவிடும். அப்புறமாக வழுக்கினால் வெறும் கூகுள் தகவல் பதிவாகி விடுகிற அபாயம் உண்டு. அதனிடையே ஒரு அதிசய பயணமாக கட்டுரைகளை எழுதிட ஒரு வகை படைப்பு சக்தி தேவை. அது சசிகுமாருக்கு கை வர பெற்றமை மகிழ்ச்சி தருகிறது. இந்த நூலில் உள்ள சென்னிமலை ஜக்காடு விரிப்புகள் வழியே கணினியின் வரலாறு பேசும் கட்டுரையை நாம் ஒன்பதாவது வகுப்பு பாடத்தில் வைக்க வேண்டும். திரி நலன் விவசாயம், மீதி வண்டி அறிவியல், காலாவதி அறிவியல், உடலே ஒரு அடுப்பு என்பன தன் மகன் எழுப்பிய கேள்விகள் வழியே மலர்ந்த கட்டுரைகள் என்கிறார், அருமை. அறிவியல் என்பது ஆய்வகத்தில் இருக்கிறதா பள்ளி பாடத்தில் இருக்கிறதா என்றால் அது நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் இருக்கிறது என்பதே உண்மை. இஸ்ரோ விஞ்ஞானியான சசிகுமார் ராக்கெட் பற்றி மட்டுமே பேசாமல் எல்லா அறிவியலையும் பேசுவது அவரை அபூர்வ நட்சத்திரமாக்குகிறது. - ஆஸாதி
சுதந்திரம்- பாசிசம்- புனைவு
அருந்ததி ராய்
த.ஜி.குப்புசாமி
காலச்சுவடு, விலை. ரூ 275/-
ஆஸாதி எனும் சொல்லுக்கு காஷ்மீரி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தம். காஷ்மீரின் வீதிகளில் ரத்த ஆறு ஓடுகிறது. அதற்கிடையே ஆஸாதி எனும் முழக்கங்கள் ஓயவில்லை. அதை புத்தக தலைப்பாக வைத்து மிகச் சிறப்பான கட்டுரைகளை அருந்ததிராய் எழுதி தொகுத்திருக்கிறார். காஷ்மீரின் சிறப்பு சட்ட அந்தஸ்தை ரத்து செய்து அனைத்து அரசியல் தலைவர்களையும் வீட்டுக் காவலில் வைத்தது பாஜக அரசு. அந்த மாநிலமே முடங்கியது. இணையத் தொடர்பைக்கூட துண்டித்தார்கள். காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு வெறித் தாண்டவம் ஆடியது. ஊடகங்கள் மவுனம் காத்தன. உயிர் பலிகள் பொருளாதார நெருக்கடிகள். இந்த சூழலில் கொரோனா பெருந்தொற்றும் சேர்ந்து கொண்டது.
வலுப் பெறும் பாசிசம் உலகளாவிய எதேச்சதிகாரம், இவற்றின் நடுவே சுதந்திரம் (ஆஸாதி என்பதன் பொருள் என்ன என்பதை சிந்திக்கும்படி இந்த நூல் நம்மை தூண்டுகிறது. காவி அரசியலின் உண்மையான முகத்திரையை கிழிக்கும் ஆற்றல் மிக்க கட்டுரைத் தொகுதி.) - தரையில் நட்சத்திரங்கள்
ரவி பிரகாஷ்
விகடன் பிரசுரம் பக்: 96 ரூ.45/-
டிஸ்லெக்ஸியா எனும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் பற்றிய முழுமையான நூல் இது.
இந்த குறைபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி திரைப்படமான தாரே ஜமீன்பர் பற்றிய கட்டுரையோடு அது தொடங்குகிறது. படம் பலரையும் விரிவாக சென்று அடைந்துள்ளது. இதனால் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் பற்றி இன்று பலர் அறிந்துள்ளனர்.
பிரிங்கால் மார்கன் எனும் பொதுநல மனநல அறிஞர் 1896இல் முதன் முதலில் டிஸ்லெக்சியாவைப்பற்றி எழுதினார். ஆரம்பத்தில் வாசிப்பு திறனின்றி இருப்பது எழுத்துக்களை எழுதுவதில் சிக்கல் போன்றவை மனவளர்ச்சி குறைபாடு என்று கருதப்பட்டது.இன்று டிஸ்லெக்சியா ஒரு கற்றல் குறைபாடு மட்டுமே. வாசிப்பு மற்றும் எழுதுதலை கண்காணித்து நாம் அதனை அறியமுடியும். அதற்கென்று கல்வியில் சில நுணுக்கமான மாறுதல்களை செய்தால் போதும்.
ரவிபிரகாஷ் நூலை மிகவும் அவசியமாக எழுதிச் செல்கிறார். தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பிரபல மாணவர்களின் டிஸ்லெக்கிஸியா பற்றிய மாணவர்களின் நேரடி பதிவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. - தமிழர் ஆடற்கலை
ம.செ.இரபிசிங் / ஆர்.அகதா
பாரதி புத்தகாலயம் பக்:120 ரூ.120/-
இந்த நூல் மகத்தான ஆய்வு ஒன்றில் தொகுக்கப்பட்ட ஆய்வுத் திரட்டு. அதிலும் பாரம்பரிய நடனத்தில் குறிப்பாக தமிழ்நாட்டுப்புற நடன கலையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர்
ம.செ.இரபிசிங் மற்றும் கலைமாமணி குற்றாலம் மு.செல்வத்திடம் பத்தாண்டுகளாக நடனம் பயின்று, வாய்ப்பாட்டு வீணை என பல்துறை வித்தகராக இருக்கும் அகதாவும் இணைந்து இந்த அரிய நூலை படைத்திருக்கிறார்கள்.
தமிழர் நடனத்தின் தொன்மை, தொல்காப்பியமும், நடனமும், சங்ககாலமும் அப்போது ஆடப்பெற்ற நடனங்களும் என்று அடுத்தடுத்து தொகுத்து அவர்கள் வழங்கும் முறை பல்வேறு தகவல்களுடன் மிளிர்கிறது. நடனத்திற்கு என்றே இலக்கணநூல் கண்ட மரபு தமிழ் மரபு. சாத்தனார் எழுதிய கூத்தநூல், அறிவனார் எழுதிய பரதசேனாதிபதியம் எனும் பண்டை நூல்கள் அடுத்தடுத்து விவரிக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் நடன காப்பியங்களாகவே இருக்கின்றன. களப்பிரர் காலத்தில் பவுத்த சமண மதம் சார்ந்த சீவகசிந்தாமணி எப்படி நடனம் பற்றிய குறிப்புகளை தருகிறது என்பதும் விரித்துரைக்கப்படுகிறது.
ஐரோப்பியர் காலம் முதல் தற்காலம் வரை தமிழின் ஆடற்கலை பற்றிய சிறப்பு குறிப்புகள் சிந்திக்க வைக்கின்றன. இந்த நூலை அரசு இசைப்பள்ளி முதல் பல்கலைக்கழக இசை நடன பாடத்தில் சேர்க்கவேண்டும் என்று அணிந்துரையில் சொல்லப்பட்டுள்ளது. நான் வழிமொழிகிறேன்.