எமிலி பர்ன்ஸ் | தமிழில்: பேரா. வ. பொன்னுராஜ்
பாரதி புத்தகாலயம் | ரூ.90
நிகழ் அய்க்கண்
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எமிலி பர்ன்ஸ் (1889-1972). மார்க்சிய சிந்தனையை எளியமுறையில் கற்பிக்க எழுதிய புகழ்பெற்ற நூல்களில் ஒன்றுதான் இது. இந்நூலானது எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதிகளில் குறிப்பிட்டுள்ளனவைப்பற்றி சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளது.
உலகம் ஓர் அறிவியல் பார்வை எனும் பகுதியில், மார்க்சியம் என்பது நாம் வாழும் இந்த உலகம் குறித்த, மனிதசமூகம் குறித்த பொதுவான கோட்பாடாகும். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மனிதசமூகம் நேற்றைக்கு எப்படியிருந்தது, இன்றைக்கு எப்படியிருக்கிறது, நாளைக்கு எப்படியிருக்கும் என்பதனை ஆய்வு செய்தனர். புற உலகில் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைப்போல, சமூக மாற்றங்களும் சில குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டே நடக்கின்றன என்கிற முடிவுக்கு அவர்களினது ஆய்வு இட்டுச்சென்றது. இம்முடிவானது, சமூகம் குறித்த மனித அனுபவங்களின் அடிப்படையிலான ஓர் அறிவியல் கோட்பாடு உருவாக வகை செய்தது.
சமூக வளர்ச்சி குறித்த அறிவியல் அணுகுமுறையானது, மற்றபிற அறிவியலைப்போல, அனுபவங்கள், வரலாற்று உண்மைகள் மற்றும் நம்மைச்சுற்றியுள்ள உலகத்தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது. எனவே மார்க்சியம் என்பது முடிந்த முடிவான கருத்தாக்கம் அல்ல. மார்க்சியம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும் புதிய உண்மைகளுடன் பொருத்திப் பார்க்கப்படுகிறது.
சமூக வளர்ச்சி விதிகளைப்பற்றி கூறும்போது, மனிதகுல வரலாறு பொதுவாக, தேசங்களுக்கிடையேயான போர்களின் வரலாறாகவும், முடிசான்ற மன்னர்கள், படைத்தளபதிகளின் வரலாறாகவும் முன்வைக்கப்படுகிறது.
வரலாறு குறித்து அத்தகைய அணுகுமுறையை மார்க்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை. வரலாறு என்பது மக்களைப்பற்றியதாகவும், தன்னிலும் மேலாக, மக்களை முன்னிலைப்படுத்தும் தனிநபர்களின் வரலாறாகவும் அதாவது, மக்கள் இயக்கங்களின் வரலாறாகவும் இருப்பதுதான் வரலாற்றின் அறிவியல் என்கிறது மார்க்சியம்.
வர்க்கம் என்பது, ஒரேமாதிரியான வழியில் தங்கள் வாழ்வாதாரத்தைத்திரட்டும் மக்கள்திரளாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பண்ணையடிமை நிலத்தில் தன் உழைப்பைச் செலுத்தி உற்பத்திச் செய்கிறார், மன்னனும், நிலப்பிரபுக்களும் அவ்வுழைப்பினைப் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினைத் திரட்டுகிறார்கள். பண்ணையடிமைகள் தாங்கள் விளைவித்த பொருட்கள் மட்டுமல்லாது, தங்களது சொந்த நிலத்தில் பயிரிட்டிருந்த பொருட்களையும், கைவினைப்பொருட்களையும் கூட நிலப்பிரபுக்களுக்கு கொடுக்கவேண்டியிருந்தது.
இதனால், நிலப்பிரபுக்களுக்கும் பண்ணையடிமைகளுக்கும் இடைவிடாத போராட்டங்கள் நடைபெற்றன. இச்சமயத்தில், ஆயுதங்கள் மற்றும் கருவிகள் உற்பத்திசெய்யும் கைவினைஞர்கள் உருவானார்கள். இவ்வளர்ச்சியின் காரணமாக, சுய நுகர்விற்கான நிலப்பிரபுத்துவ உற்பத்திக்கு ஊடாக சந்தைக்கான உற்பத்தியும் வளர்ந்தது. இந்தச் சுதந்திரமான கைவினைஞர்களானவர்கள், நன்கு பயிற்சிப்பெற்ற, கூலிக்கு வேலைசெய்யும் தொழிலாளிகளை பணியமர்த்திக்கொண்டு படிப்படியாக முதலாளிகளாக வளர்ச்சிபெற்றனர்.
இதன் நீட்சியாக, 16 ஆம் நூற்றாண்டுவாக்கில், தொழில் முதலாளி வர்க்கம் உருவாகியது. பண்ணையடிமைகள் தங்கள் சொந்த நிலத்தில் பயிர்செய்தனர். நிலப்பிரபுக்கள் தங்களுக்குத் தேவைப்படும் உழைப்புச்சக்தியை கூலிகொடுத்துப் பெற்றுக்கொண்டனர். இதற்கு, அடுத்த கட்டமாக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில், முதலாளித்துவ வர்க்கமானது நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது.
முரண்பட்ட வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே மனித சமூக வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்கின்றது என்ற பார்வையே வரலாறு குறித்த மாக்சிஸ்ட்டுகளின் அணுகுமுறையாகும். வர்க்கப்போராட்டம் நடைபெறுகிற அதேசமயம் இயற்கையை வெல்கிற மனிதஆற்றலின் அறிவியலும் வளர்கிறது. மனிதன் தொடர்ந்து தன் அறிவை வளர்த்துக்கொண்டேயிருந்தான்; தான் பெற்ற புதியஅறிவை உற்பத்தியில் பயன்படுத்தினான்; இதன்விளைவாக சமூகமாற்றம் நடந்துகொண்டேயிருந்தது. இந்தச் சமூக மாற்றங்கள் வர்க்க மோதல்களாக வெளிப்பட்டன; இம்மோதல்கள், கருத்துக்கள், பாராளுமன்றம், மதம் போன்ற நிறுவனங்கள் குறித்த மோதல்களாகவும் வெளிப்பட்டன. கருத்துக்களும் நிறுவனங்களும் எங்கும் எப்போதும் மனிதச் செயல்பாட்டின் விளைவாகவே வளர்ந்தன. புராதனசமூகம், அடிமைச்சமூகம், நிலப்பிரபுத்துவச்சமூகம் என்று அனைத்துச்சமூகங்களிலும் மனித வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் உற்பத்தி முறையைப்பொறுத்தே உள்ளன.
முதலாளித்துவ சமூகத்தில், பிரமாண்ட உற்பத்தி விரிவாக பரவுகிற நிலையில், மிகை உற்பத்தியின் காரணமாக, முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடியில் சிக்கி, சமூக முன்னேற்றத்திற்கு தடையாக விளங்கும். இச்சூழலில்தான் கற்பனாவாத சோசலிசத்திற்குப் பதிலாக விஞ்ஞான சோசலிசச் சிந்தனைகள் எழும்.
முதலாளித்துவ சமூகத்தின் இயக்கவிதிகளை கண்டுபிடிப்பதே மார்க்சின் ஆய்வு நோக்காக இருந்தது. முதலாளித்துவ உற்பத்திமுறையும் பிற உற்பத்தி முறைகளைப்போல மாறிக்கொண்டேயிருந்தது. அதாவது, நிலப்பிரபுத்துவ அலகுகள் உடையத்தொடங்கியபோதுதான் முதலாளித்துவ உற்பத்திமுறை மெல்லமெல்ல லாபத்திற்கான உற்பத்திக்கு வழிவிட்டது. லாபத்திற்கான உற்பத்தியே முதலாளித்துவத்தின் முக்கியமான அடையாளமாகும். லாபத்திற்கான உற்பத்திக்கு, உற்பத்திக்கருவிகளை கைவசம் கொண்டுள்ள முதலாளிகளும், முதலாளிகளின் இயந்திரங்களைக்கொண்டு உழைக்கின்ற உழைப்பாளிகளும் வேண்டும்.
ஒரு சரக்கு உற்பத்தியாகும்போதே லாபம் உருவாகிவிடுகிறது.. ஒரு சரக்கு உற்பத்தியாகும் போது அதன் அடக்க மதிப்பைவிட கூடுதல் மதிப்பை உருவாக்குகிற காரணிகள் பற்றி ஆய்வுசெய்யும்போது, முதலில் மதிப்பு என்றால் என்ன எனும் கேள்வி எழுகிறது. மதிப்பு என்பது ஒன்று பயன்பதிப்பாகவும், அடுத்தது பரிவர்த்தனை மதிப்பாகவும் காணலாம். ஒரு சரக்கினை (குளிர்பானம்) யாரேனும் ஒருவர் பயன்படுத்தும்போது ஏற்படும் உணர்வு ரீதியான மதிப்பினைப்பெறுவது பயன்மதிப்பு ஆகும். ஒரு சரக்கு சந்தையில் விற்கப்படும்போது உருவாகிற மதிப்பு பரிவர்த்தனை மதிப்பாகும். இவையிரண்டு மதிப்புகளுக்கும் உழைப்பே பொதுவான காரணியாக இருக்கின்றது. ஒவ்வொரு உற்பத்திப்பொருளிலும் அடங்கியுள்ள உழைப்பு நேரமே பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.
நவீன முதலாளித்துவ சமூகத்தில், ஒரு தொழிலாளி தனது உழைப்புச்சக்தியை உருவாக்க நாளொன்றுக்கு நான்கு மணிநேரம் மட்டுமே உழைத்தால் போதும். மீதமுள்ள நான்கு மணிநேரத்தினை உபரிமதிப்பினை உருவாக்குவதற்காக உழைக்கிறார். இந்த உபரிமதிப்பே முதலாளியின் லாபத்திற்கான ஆதாரம். ஆக முதலாளித்துவ உற்பத்திமுறை நீடிக்கும்வரை முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் ஓயாது.
இயந்திரம், கட்டடங்கள், நிலம், கச்சாப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உற்பத்திக்குத்தேவைப்படும் பிறப்பொருட்கள் மூலத்தனத்திற்குள் அடக்கம். உபரிமதிப்பினை உருவாக்கப் பயன்படுவதே மூலதனமாகும்.; அதாவது, உற்பத்தியின்போது பொருட்களோடு உபரிமதிப்பையும் உருவாக்கும் தொழிலாளிகளின் உழைப்பை வாங்கப் பயன்படுவதே மூலதனமாகும்.
முதன்முதலாக, முதலாளித்துவத்தின் நவீன ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சிய ஆய்வைத் தந்தவர் மாமேதை லெனின் ஆவார். சரக்கு ஏற்றுமதியிலிருந்து வேறுபட்டு மூலதனத்தை ஏற்றுமதி செய்தது என்பது ஏகாதிபத்தியத்தின் முக்கியமான குணாம்சங்களில் ஒன்று. முதலாளித்துவத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களின் விளைவே, இதற்கான காரணம் என்று லெனின் எடுத்துக்காட்டினார்.
ஏகாதிபத்தியத்தின் ஐந்துவகை இயல்புகளை சுட்டிக்காட்டும்போது, 1. ஏகபோகங்களை உருவாக்கும் அளவிற்கு மையப்படுத்தப்பட்ட உற்பத்தியும், மூலதனக்குவியலும் வளர்ந்துள்ளன. 2. தொழில் மூலதனத்தோடு வங்கி மூலதனமும் ஒன்றுசேர நிதி மூலதனம் உருவானது. 3. சரக்கு ஏற்றுமதியிலிருந்து மாறுபட்ட நிதிமூலதன ஏற்றுமதியின் முக்கியத்துவம் வளர்ந்தது. 4. முதலாளிகளின் சர்வதேச ஏகபோக குழுக்கள் உருவாகி, உலகை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டன. 5. பெரும் வல்லரசுகள் நாடுகளைப் பங்கிட்டுக்கொள்வது முழுமை பெற்றது.
ஒவ்வொரு நாட்டிலுள்ள நிதி மூலதனக்குழுக்களின் கையில் செல்வம் மையப்படுத்தப்பட்டு குவிவதன் காரணமாகவே பெரும் வல்லரசுகளுக்கிடையில் மிகப்பெரிய போர் ஏற்படுகிறது.
நவீன காலத்தில் வர்க்கப் போராட்டங்களைப்பற்றி கூறுகையில், உற்பத்திமுறையிலிருந்துதான் போராட்டங்கள் பிறக்கின்றன. உற்பத்திமுறை சமூகத்தை வர்க்கங்களாகப் பிரிக்கிறது. அவ்வர்க்கங்களில் ஒன்று, அடிமை, பண்ணையடிமை, கூலித்தொழிலாளி உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறபொழுது, மற்றொரு வர்க்கம் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாமல், உற்பத்திப்பொருளை சொந்தம் கொள்கிறது.

வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டங்கள், உற்பத்தியின் உயர்ந்த கட்டத்திற்கு மனிதன் முன்னேற உதவுகின்றன. வர்க்கங்களுக்கிடையிலான தொடர்போராட்டங்களின் உச்சக்கட்டத்தில் வெடிக்கிற புரட்சியானது, புதிய உற்பத்தியமைப்பில் புதிய வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்துகிறது. தொழில்வளர்ச்சி அதிகரிக்கும்போது பாட்டாளிகளின் எண்ணிக்கை கூடுகிறது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்கிறார்கள். இத்தொழிற்சங்கங்கள் தேசஅளவில் போராட்டங்களை கட்டுகிற வலிமை பெறுகின்றன.
முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைத்தூக்கி எறிகிற புரட்சிக்குத் தயார்படுத்துவது, அப்புரட்சியைக்கட்டுவது மற்றும் புதிய உற்பத்தியமைப்பை அதாவது, சோசலிசத்தை கட்டுவது தொழிலாளி வர்க்கக்கட்சியின் இலட்சியமாக மார்க்ஸ் பார்த்தார்.
போராட்டங்களின் வெற்றி உடனடி கோரிக்கைகளை வெல்வதிலில்லை; மாறாக, உண்மையான வெற்றி என்பது, தொழிலாளர்களின் பரந்துபட்ட ஒற்றுமை மேலும்மேலும் தொடர்ந்து வளர்வதில்தான் உள்ளது. இப்போராட்டங்களின் வளர்ச்சிப்போக்கில், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக, பொதுநலன் கொண்ட ஒரு வர்க்கமாக தொழிலாளர்கள் தங்களை உணரத்தொடங்குகிறார்கள்.
முதலாளித்துவ சமூகத்தைத்தொடர்ந்து வரும் சோசலிச சமூகமானது, தனக்கு முந்தைய சமூக வடிவங்களைப்போலவே, உண்மையான சோசலிச சமூகமும், ஏற்கெனவே இருப்பிலிருந்தவற்றின் அடிப்படையில்தான் உயித்தெழும்; அதாவது, முதலாளித்துவ சமூகத்திலிருந்து வெளிப்படும் ஒரு சமூகமாக சோசலிச சமூகம் இருக்கும்; எனவே, எந்தச் சமூகத்தின் கருப்பையிலிருந்து அது உயிர்பெற்றதோ, அந்த சமூகத்தின் முத்திரையை அனைத்துப் பொருளாதாரம், அறம் மற்றும் அறிவாற்றல் அம்சங்களிலும் சோசலிச சமூகம் தாங்கி நிற்கும்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்தி மேலும்மேலும் சமூகமயமாகும் போக்கு இருந்தபோதிலும், சமூகத்தின் கூட்டு உழைப்பால் உருவாகிற உற்பத்திப்பொருள், சமூகத்தின் சொத்தாக இல்லாமல் ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின் சொத்தாக உள்ளது. எனவே சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருளை சமூகத்திடம் கொடுப்பதே ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கும் முதல்படியாக இருக்க வேண்டும். சோசலிச சமூகத்தில் உற்பத்தியானது லாபத்திற்காக இல்லாமல் மக்கள் பயன்பாட்டிற்காக இருப்பதால், திட்டமிட்ட உற்பத்தி சாத்தியமாகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் விலையில் ஏற்படும் மாற்றமானது கிராக்கிக்கும்- விநியோகத்திற்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது. அதுவே, சோசலிச சமூகத்தில் விலையானது நுகர்வோடு தொடர்புடையதாக இருக்கிறது; திட்டமிடலுக்கேற்ப உற்பத்தி நடைபெறுகிறது.. முதலாளித்துவ சமூகமானது ஒருசிலரின் லாபத்தைப்பெருக்கி, பெருவாரியான மக்களின் வறுமையை அதிகரிக்கும் கருவியாகச்செயல்படுகிறது. சோசலிச சமூகத்தில் “சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற ஊதியம்” என்ற அடிப்படையில் உற்பத்தியும் வினியோகமும் நடைபெறுகின்றன.
மனித இனத்தையும் மனித சமூகத்தையும் இயற்கையின் ஒரு பகுதியாகவே மார்க்சியம் கருதுகிறது. எனவே, மனிதனின் தோற்றத்தை உலக வளர்ச்சிப்போக்கின் ஓர் அங்கமாகவே பார்க்கவேண்டும்.
இயற்கையை எவ்வித நிபந்தனையுமின்றி, இயற்கையாகவே கருதுவதுதான் பொருள்முதல்வாத உலகப்பார்வை என்கிறார் ஏங்கெல்ஸ். பொருள்முதல் வாதம் என்கிறபோது, மனித உணர்விலும், சிந்தனையிலும் புற உலக யதார்த்தம் இருக்கிறது எனப் பொருள்படுகிறது. பொருட்களின் பிரதிபலிப்பாகவே கருத்துக்கள் இருக்கின்றன. பொருட்கள் கருத்தின் தோற்றுவாய். எனவே மார்க்சியம் தனது அனைத்து கோட்பாடுகளுக்கும் பொருள்முதல் வாத உலகப்பார்வையை அடிப்படையாகக்கொண்டிருப்பதுடன், இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் உலகையும் ஆய்வு செய்கிறது.
இயக்கவியல் பொருள் முதல் வாதத்தினை அறிந்துகொள்ளும்போது, 1. இயற்கையோ அல்லது மனித சமூகத்தை உள்ளடக்கிய உலகமோ ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, முழுமையாக தனித்தனியானவற்றால் ஆனதல்ல என்கிறது. 2. உலகில் நிலையானது எதுவுமில்லை, ஒவ்வொன்றும் இயங்குகிறது; மாறுகிறது; வளர்கிறது அல்லது அழிகிறது. மேம்படுகிறது அல்லது தேய்கிறது. 3. ஒவ்வொன்றும் மாறுகிறது, வளர்கிறது என்கிறோம்; ஆனால், அவ்வளர்ச்சி எப்போதும் சீரான, படிப்படியான வளர்ச்சியாக இருப்பதில்லை. மாறாக, சில கட்டத்தில் அது கூர்மையான பாய்ச்சலாக இருக்கிறது. 4. பொருட்கள் எளிமையானதல்ல என்றும் இயக்கவியல் அணுகுமுறை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு பொருளும் தன்னுள் தனது நேர்மறை அம்சத்தையும், எதிர்மறை அம்சத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும், மேலும்மேலும் மேலாதிக்கம் பெறுகிற நிலைமாற்றம் சக்தியையும், அதேசமயம் மேலாதிக்கத்தை இழந்து வருகிற நிலைநிறுத்தும் சக்தியையும் தன்னுள் கொண்டுள்ளது. ஒருசக்தி எப்போதும் வளர்கிறது; மற்றொரு சக்தி அவ்வளர்ச்சியை எதிர்க்கிறது.
இறுதியாக, என்ன செய்ய வேண்டும் எனும் பகுதியில், தத்துவ ஞானிகள் உலகை பல வழிகளில் வியாக்கியானம் மட்டும் செய்திருக்கிறார்கள். ஆனால், உலகை மாற்றவேண்டும் என்பதே முக்கியமானது என மார்க்ஸ் கூறியுள்ளார். மார்க்சியம் என்பது ஏட்டளவிலுள்ள அறிவியல் அல்ல; மாறாக, உலகை மாற்றுவதற்கு மனிதன் பயன்படுத்த வேண்டிய ஆயுதமாகும். மனிதனின் செயல்பாடு இல்லாமல் மனிதகுலம் ஓர் உற்பத்திமுறையிலிருந்து வேறோர் உற்பத்திமுறைக்கு பாய்ந்துவிடாது.
