நேர்காணல்: அ. சவுந்தரராஜன்
சந்திப்பு: வீ. பா. கணேசன்
மாணவப் பருவத்தில் தொடங்கி, தொழிற்சங்க அரங்கில் ஒருமுழு நேர ஊழியராக பரிணமித்து அகில இந்திய அளவிலான தலைவராக உருவெடுத்து தோழர்.
அ. சவுந்தரராஜன் தன் வாழ்க்கைப் பயணம் பற்றி புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி
தோழர் வணக்கம். தொழிற்சங்க அரங்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறீர்கள். இவ்வாறு ஓர் இடதுசாரி செயல்பாட்டாளராக நீங்கள் உருப்பெறுவதற்குப் பின்னால் இருந்த காரணிகள் எவை?
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் நான் பிறந்த ஊர். அது விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற ஊரும் கூட. எங்க அப்பா, அவங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவங்க, ரொம்ப நெருக்கமாக இருந்தவங்க எல்லோருமே விடுதலைப் போராட்ட வீரர்கள்தான். விடுதலைக்கு முன்பாகவே ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் சோஷலிஸ்டாக மாறிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்க ஊர்ல மூன்றே கட்சிகள்தான். 1. காங்கிரஸ். 2. சோஷலிஸ்ட் 3. தமிழரசுக் கட்சி (ம.பொ.சி). திமுக எல்லாம் ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் வந்தது.
எங்கள் குடும்பம் சோஷலிஸ்ட் கட்சியுடன் தொடர்புள்ளது என்ற வகையில் சோஷலிசம் சார்ந்த பலரும் எங்கள் வீட்டிற்கு வந்து போவார்கள். அப்போது எனக்கு 9-10 வயது இருக்கும்.வேப்ப மரத்திற்குப் பக்கத்தில் ஓலைவேய்ந்த ஒரு கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நான் அங்குமிங்குமாக விளையாடிக் கொண்டிருப்பேன். வந்தவங்க தண்ணி கேப்பாங்க. பீடி கேப்பாங்க. நான் வாங்கி வந்து கொடுப்பேன். அவங்க பேசுகிற, விவாதிக்கிற விஷயங்கள் எல்லாமே காதில் விழும். காந்தியைப் பற்றி… ஜவகர்லால் பற்றி… ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றி… லோஹியா பற்றி எல்லாம் பேசுவார்கள். அந்தக் காலத்துப் பெரியவர்களுடைய பேர்கள் எல்லாம் வரும். மற்ற விஷயங்களும் வரும். இவை எல்லாம் என் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

நான் ஆறாம் வகுப்பு போனபிறகு, என் அண்ணன் பழனிவேலுக்கு லைப்ரரிக்குப் போவது; நிறைய புத்தகங்கள் படிப்பது என்று பழக்கம் இருந்தது. போகும்போது என்னையும் கூட்டிப் போவார். அப்போது திமுகவின் பிரசுரங்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. லைப்ரரியில் எல்லா கட்சிகளின் பேப்பரும் போடுவார்கள். செங்கோல் (ம.பொ.சி) காஞ்சி (அண்ணா) என்பது போல எதிர்க்கட்சி பத்திரிகைகளும் இருக்கும். என் அண்ணன் அதையெல்லாம் படிப்பார். நான் என் வயசுக்கு ஏற்ற மாதிரி படித்துக் கொண்டிருப்பேன். அவையும் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. என் அண்ணனும் சின்ன சின்ன புத்தகங்களை தருவார்.
என் வீடும் முறையான அரசியல் பின்புலத்தோடுதான் இருந்தது. பின் நாட்களில் என் அண்ணன் என் மீது பெரிய செல்வாக்கு செலுத்தினார்.
62க்குப் பிறகு – எனக்கு அப்போது 13-14 வயது இருக்கும் – திமுக வின் பிரச்சாரம் போன்றவை வருகின்றன. கம்யூனிஸ்டுகளும் கூடத்தான். 67இல் பெரும் அரிசிப் பஞ்சம் வந்தபோது கடுமையான நெருக்கடி. வாரத்திற்கு ஒருநாள் ஒரு வேளைதான் அரிசிச் சோறு கிடைக்கும். மற்ற நாட்களில் கம்பு, கேழ்வரகு போன்றவைதான். அந்த அரிசியை வாங்க கியூவில ரொம்ப நேரம் நிக்கணும். விடிய விடிய நிக்கணும். நாங்க ஷிப்ட் போட்டுகிட்டு அண்ணன் தம்பிங்க நிற்போம். மிகக் கொடுமையான காலம் அது. ஆட்சிக்கு எதிரான உணர்வையும் அது ஏற்படுத்தியது.
57இல் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சியைப் பிடித்தபோது என் அண்ணனுக்கு 19 வயது. இவரு இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கம்யூனிஸ்ட் கட்சின்னு கூட்டத்திற்குப் போகும்போது எங்கப்பா பட்டம் தாணுப்பிள்ளையை..அதாவது கம்யூனிஸ்டுகளுக்கு நேர் எதிரான தலைவர்… அவர் ஒரு சோஷலிஸ்ட்… அவரை தலைவராக ஏத்துக்கிட்டிருந்தவர்.
எங்க ஊர்ல இருக்கிறவங்க, எங்கப்பா, சித்தப்பா எல்லாம் இப்படித்தான். ஒரு சித்தப்பா தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். அவர் திருத்தணி வரைக்கும் வந்து போராட்டம் செய்தவர். சாகிற வரைக்கும் அவர் மொழிப்போர் தியாகிகள் பென்ஷன் வாங்கினார். எதுக்குடா இவ்ளோ காசு குடுக்கறான்னு கேட்பாரு. இவையெல்லாம் என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில்தான் நான் பியுசி முடித்துவிட்டு 67இல் இங்கே (சென்னை) வருகிறேன். இங்கு வந்தபிறகு மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது SFI எல்லாம் கிடையாது. தமிழக மாணவர் சங்கம் என்று பெயர். எனக்கு அருணாசலம் என்று ஒரு நண்பர் இருந்தார். மாநில (பிரசிடென்சி) கல்லூரியில் என் வகுப்புத் தோழர். அவர் தஞ்சாவூரில் இருந்து வந்ததால் கட்சியின் அரசியல் எல்லாம் என்னைவிட அதிகமாகவே தெரியும். 67இல் கல்லூரியில் சேர்ந்தேன்.
68லிருந்து எங்கே போவது?யாரைப் பார்ப்பது? தலைவர்கள் யாரையாவது பார்க்கலாம் என்ற உந்துதல் ஏற்பட்டபோது, தீக்கதிர் ஆபீஸ் இங்கே தான் இருக்கு. அங்கே போகலாம் என்று அருணாசலம்தான் என்னை கூட்டிப் போனார். அப்போ ஐஸ் ஹவுஸில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடேசன் ரோடில் தீக்கதிர் இருந்தது. நான் நடந்தே போவேன். அங்கே தோழர் முத்தையா எப்போதும் இருப்பார். கட்சியிலும் எம்.ஆர்.வெங்கட்ராமன் போன்ற பலரும் இருப்பார்கள். அங்கு போய் அவர்களோடு பேசுவது வழக்கம். அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காலேஜ் படிக்கும் பசங்க தீக்கதிருக்குள்ள வர்றது பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். பல விஷயங்களை பேசுவாங்க.
அப்புறம் மாணவர் சங்கம் அமைத்தவுடனே நாம் போய் யாராவது நம்ம தலைவர்களை கூட்டிட்டு வரணும்னு பேசினோம். அப்போ India in crossroads என்ற தலைப்புல பேசுவதற்கு உமாநாத்-ஐ கூட்டி வந்தோம். உமாநாத் அப்போ எம்.பி. ரொம்ப பிரமாதமா பேசினார். எல்லா மாணவர்களும் வந்தாங்க. பொலிட்டிகல் சயின்ஸ் துறையில் இருந்துதான் அவரை கூட்டி வந்திருந்தோம். அதுக்கப்புறம் நாங்க முயற்சி செய்தோம். எங்க தமிழ்த் துறையில ஒத்துக்கல. அப்புறம் அவரை வரவே விடல. திமுக காரங்க வருவாங்க.. anti-communism என்பதெல்லாம் கல்லூரிக்குள் ரொம்ப subtle ஆ வேலை செய்கிறது என்பதுதான் காரணம்.
அப்போதுதான் மாணவர்களுக்கும் பஸ் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையில் ஒரு தகராறு ஆனது. இது ரெகுலரா அங்கங்க நடக்கும். ஸ்ட்ரைக் ஆகவும் மாறும். அந்தத் தகராறு ரொம்பத் தீவிரமானதாக மாறிப்போய், மாணவர்கள் ஒரு டிரைவரை ஹாஸ்டலுக்குள்ள தூக்கிட்டு போயிட்டாங்க. இரண்டு பக்கத்திலும் வன்முறை. நல்ல அடி. பசங்க அந்த டிரைவரை முதல் மாடியிலிருந்து தூக்கிப் போட்டதில் அவர் இறந்து விட்டார். அது பெரிய பிரச்சனை ஆகியது. போக்குவரத்து ஊழியர்கள் ஹாஸ்டலை அட்டாக் செய்வதில் இறங்கினார்கள். மாணவர்களும் அந்தப் பக்கத்தில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அந்தச் சண்டை எனக்கு ஒரு பெரிய கண் திறப்பு என்றே சொல்லலாம்.
இந்த விஷயத்தில் விபிசி பெரியதொரு பங்காற்றியது பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. நூற்றுக்கணக்கான பஸ்களை எடுத்துக்கிட்டு தொழிலாளிகள் கோட்டையை நோக்கிப் போனார்கள். ஆயுதங்களும் இருந்தன என்று கேள்வி. மூன்று நாட்கள் நகரம் அவர்கள் கையில் இருந்தது. அப்போது கருணாநிதி போக்குவரத்து அமைச்சர். அவர் வந்து பேசி தொழிலாளிகளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தபோது, அவர் தன்னோடு யாராவது கூட வர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது விபிசி நான் இங்கே இருக்கிறேன் என்றிருக்கிறார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்களான சி.கோவிந்தராஜன், ஜானகியம்மாள் எல்லாம் இருந்தார்கள் என்று நினைக்கிறேன். ‘நாங்களும் கூட வருகிறோம் வாங்க’ என்று அமைச்சரை அவர்கள் அழைத்தார்கள். அவர் வந்து பேசி அப்புறம்தான் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதெல்லாம் பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. இதெல்லாம் முடிந்து 4-5 நாட்களுக்குப் பிறகு நாங்கள் ஆபீசுக்குப் போனோம். ஆபீஸ்லதான் இதையெல்லாம் சொன்னாங்க. அந்த நேரத்தில் எல்லாம் நான் ஸ்ட்ரிங்கர் தெரு ஆபீசுக்கு வரத் தொடங்கி விட்டேன். ஹரிபட்,
பி.ஆர்.பரமேஸ்வரனுடன் எல்லாம் தொடர்பு ஏற்பட்டு பேசத் தொடங்கி இருந்தேன்.
இந்தச் சம்பவம் எல்லாம் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் ஊழியனாகவே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கியது. விபிசி அதில் மிகப்பெரிய செல்வாக்கை என் மீது செலுத்தினார். பொதுவாக அவர் என்ன செய்வார் என்றால், “நீ ஃப்ரீயாக இருக்கும்போது வா!” என்று கூப்பிடுவார். நாம் ஃப்ரீயா இருக்கும்போது அவரைப் போய் பார்க்கணும்னு தோணும். நான் கிண்டி (சி எம் கே) ஹாஸ்டலில் இருக்கும்போது கிண்டி யூனியன் ஆபீசுக்கு அவர் அடிக்கடி வருவார். அப்போது பெரிய தொழிற்சங்கமெல்லாம் கிடையாது. சிம்சன் எல்லாம் 1970க்குப் பிறகுதான். நான் சொல்றதெல்லாம் 67-68 வாக்கில்.
கிண்டியில் நிறைய யூனியன் இருந்தன. இந்துஸ்தான் டெலிபிரிண்டர், மேலும் கிண்டி எஸ்டேட்லியே ரொம்ப வலுவா இருந்தோம். அந்த ஆபீசில போய் அவரைப் பார்ப்போம். நிறைய நேரம் ஒதுக்கி எங்களிடம் பேசுவார். அப்புறம் எங்கள் கல்லூரிக்கும் வருவார். ஸ்ட்ரிங்கர் தெருவில் இருந்து கிளம்பி வீட்டிற்குப் போகும் வழியில் கண்ணகி சிலை அருகில் இறங்கிக் கொண்டு பிரசிடென்சி காலேஜுக்குள்ள வருவார். கையில் ஒரு பாக்கெட் சிசர்ஸ், தீப்பெட்டி இருக்கும். கடற்கரை வரைக்கும் கூட்டிட்டுப் போவார். என்னோட இன்னும் 2-3 பசங்க இருப்பாங்க. பேசிவிட்டு ஃபோர்ஷோர் எஸ்டேட் அருகிலுள்ள அவரது வீட்டிற்குச் செல்வார். வீட்டிற்குப் போகிற வழியில் நேரம் இருந்தா எங்களிடம் பேசிவிட்டுச் செல்வார். அந்த 3 வருஷத்துல 7-8 தடவையாவது இதுமாதிரி கல்லூரிக்கு வந்திருப்பார். இதெல்லாம் என்மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது.
நாங்கல்லாம் நிறைய கேள்வி கேட்போம். 68க்குப் பிறகு என்னை மாதிரி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும் என்று இஎம்எஸ், பசவபுன்னையா, ஹரிகிருஷ்ண கோனார் போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் வருவார்கள். அவர்கள் இந்தப் பக்கமாக வந்தால் எங்களுக்கும் வகுப்பு நடக்கும். பழைய எம் எல் ஏ ஹாஸ்டலில் 3ஆம் எண் அறையில்தான் இந்த வகுப்புகள் நடக்கும். அவற்றிலெல்லாம் நாங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பெல்லாம் கிடைத்தது. நாங்க இஷ்டம்போல கேள்வி கேட்போம். எப்போ புரட்சி வரும்? எப்போ ஆயுதம்லாம் குடுப்பீங்க? எப்போ ஆயுதப் பயிற்சி குடுப்பீங்க? இதற்கெல்லாம் மிகப் பொறுமையாக பதில் சொல்வார்கள்.
நக்சலைட் இயக்கம் அப்போதுதான் தொடங்குகிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இளைஞர்களுக்கு அந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பு அதிகரித்து வந்த நேரம் அது. நான் எல்லாம் மயிரிழையில் தப்பித்தேன் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு மாணவர்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. இதுபோன்ற வகுப்புகளும் நான் உருவாவதற்கான பின்னணியாக இருந்தது.
68இல் நடந்த வெண்மணி சம்பவம் எனது ஆன்மாவை உலுக்கி விட்டது. இந்த நேரத்தில்தான் பி.ஏ. முடித்த பிறகு சட்டம் படிக்கப் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன். விண்ணப்பித்தும் இருந்தேன். விபிசியிடம் நான் சட்டக் கல்லூரியில் சேரப் போகிறேன் என்று சொன்னபோது அவர் ஸ்ட்ரிங்கர் தெரு அலுவலகத்தில் உட்கார்ந்து என்னிடம் பேசினார்.“வக்கீலாகி என்ன பண்ணப் போற? சம்பாதிச்சு, கல்யாணம் பண்ணப் போற. பன்றி கூடத்தான் குட்டி போடுது….” இப்படியெல்லாம் நிறையப் பேசிப் பேசி, “படித்தது போதும். இனிமே தொழிலாளிக்கு வேலை செய். சமுதாயத்திற்கு வேலை செய். முழு நேர ஊழியராகு.” என்று கேன்வாஸ் செய்தார். எனக்கும் அது சரியென்றே பட்டது.அப்புறம், மேலும் படிக்கப் போறேன் என்று எங்க அப்பாவிற்கு லெட்டர் போட்டேன். சட்டக் கல்லூரியில் சேரப் போவதில்லை என்று அவரிடம் சொல்வதற்கு எனக்குத் தைரியமில்லை.
முழுநேர ஊழியர் ஆவது என்பது முடிவானபடியே நடந்தது. வீட்டில் நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவ்வாறு சேரவில்லை என்று ஒரு சில மாதங்களுக்குப் பிறகுதான் நான் மெதுவாக வீட்டிற்குத் தெரிவித்தேன். அவர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி. என் அப்பா உடனே கிளம்பி சென்னைக்கு வந்து விட்டார். விபிசி அவர் கிட்ட நிறைய பேசினார். உங்களை மாதிரியே நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அதன் பிறகு இரண்டு மாதத்திற்குப் பிறகு திருச்செங்கோட்டில் ஒரு கூட்டத்திற்கு அவர் போனபோது, மெனக்கெட்டு ஒரு வண்டி வைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குப் போய், வீட்டில் எல்லோருடனும் பேசியிருக்கிறார். அதன் பிறகுதான் அவங்களுக்கு ரொம்பவே நம்பிக்கை வந்தது.
முழுநேர ஊழியர் ஆன போது, விபிசி, போக்குவரத்து தொழிற்சங்கத்தில் இருந்து வேலை செய் என்றார். மாணவர்களுக்கும் பஸ் தொழிலாளிகளுக்கும் இடையே சச்சரவு நடந்ததில் இருந்தே அந்த சங்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. 70இல் படித்து முடித்த உடனேயே அந்த ஆண்டு மே மாதத்திலேயே முழுநேர ஊழியர் ஆகிவிட்டேன். சங்க அலுவலகத்தில் என்னிடம் ஒரு பெரிய லெட்ஜரை கொடுத்து தொழிலாளிகளின் பெயரை எழுதி, அவர்களின் எண்களை எல்லாம் பதிவு செய்யுமாறு சொன்னார்கள். உறுப்பினர் பதிவேடு. நான் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பேன்.
மனதிற்குள் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னமோ நெனச்சிட்டு வந்தா இங்க பேரேடு எழுதச் சொல்றாங்களே என்று. அப்போ (இந்து) என்.ராம், (நீதிபதி) சந்துரு எல்லாம் எனக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் எல்லாம் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். அவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு, என்னடா குமாஸ்தா வேலை செஞ்சிட்டிருக்க? எதுக்கு இந்த வேலை? பேசாம நீ SFIக்கு வந்துவிடு என்று சொன்னார்கள். நான் மெதுவாக விபிசியிடம் இந்த மாதிரி செய்றீங்களே என்று கேட்டபோது, “எவன் சொன்னான் இது குமாஸ்தா வேலைன்னு? டேபிள் வொர்க் இல்லாம எந்தப் புரட்சியும் நடக்காது. அது புரட்சிகரப் பணி இல்லைன்னு யார் சொன்னது? அதுவும் கூட ஒரு தொழிற்சங்கப் பணிதான்” என்றெல்லாம் விளாசித் தள்ளினார்.
இப்படித்தான் நான் தொழிற்சங்கப் பணியிலேயே நீடித்தேன். மிகவும் கிளர்ச்சி மிக்க காலமாகவும் அது இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த தொழிலாளிகள் எதுவுமே நிறைவேறாதபோது எழுச்சி உருவானது. வியட்நாம் யுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதுபற்றிய செய்தி-தகவல்கள் எல்லாம் மாணவர் சங்கத்திற்குள்ளும் வேலை செய்தது. அப்போது வியட்நாம் யுத்தத்திற்கு எதிரான போராட்டங்கள்-ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடக்கும்.
அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடக்கும். இல்லையென்றால், யாராவது அமெரிக்க அதிகாரி இங்கு வந்தால், அதற்கெதிராகப் போராட்டம் நடக்கும். அவற்றில் நாங்கள் போய் கலந்து கொள்வோம். வியட்நாம் யுத்தம் பற்றியும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், மை லாய் கிராமத்தில் நடந்த படுகொலை பற்றியும் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறும். என்னிடம் தாக்கத்தை உண்டாக்கிய பல காரணங்களில் அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
1967இல் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து, இந்த ஆட்சிகள் வித்தியாசமாக செயல்படுகின்றன என்ற தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அப்போது பீகாரில் ஒரு கூட்டத்திற்கு போயிருந்த ஜோதிபாசு சுடப்பட்டார். அப்போது நான் கிண்டி ஹாஸ்டலின் முன்னால் ஒரு தட்டி போர்ட் எழுதி வைத்தேன். “வங்கச் சிங்கம் ஜோதிபாசு சுடப்பட்டார்!” என்று அதில் எழுதியிருந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எஸ்டேட் நோக்கி கும்பல் கும்பலாக மக்கள் போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே எனது திட்டம். அதில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு ஒருவர் “ சிங்கம்னா சுட வேண்டியதுதானே!” என்று அதற்குப் பதில் கமெண்ட் கொடுத்தபோதுதான் இப்படியெல்லாம் யோசிப்பார்களா? என்று வியந்து போனேன்.
நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவும், பின்பு தொழிற்சங்கவாதியாகவும் உருவாவதற்கான பின்னணி இதுதான். என் குடும்பம்; பிறகு என்னைச் சுற்றி நடந்த சம்பவங்கள். அதுபோக நான் சென்னைக்கு வந்தது என்பதும் முக்கியமான காரணம். இங்கு நான் வராமல் இருந்திருந்தால் இந்தத் தொடர்புகள் கிடைக்காமல் போயிருக்கும். அதற்கும் மேலாக தீக்கதிர் தொடர்பு, முத்தையா தொடர்பு, விபிசி தொடர்பு அடுத்தடுத்து மிக வேகமாக நடந்தது என்பது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு என்றே கூறலாம். அப்படித்தான் முழுநேர ஊழியராகி போக்குவரத்து சங்கத்திற்கு வந்தேன்.
போக்குவரத்துத் துறையில்தான் நீங்கள் முதன்முதலில் செயல்படத் தொடங்கினீர்கள். அப்போது அங்கிருந்த தொழிலாளர்களின் நிலை என்ன? இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள தொழிலாளர்களின் நிலை என்ன?
1970இல் நான் சங்கத்திற்கு உள்ளே வரும்போது 70 அக்டோபரில் இரண்டாவது சம்பளக் கமிஷன் ரிலீஸ் ஆனது. அப்போது போக்குவரத்து தொழிலாளிகள் அரசு ஊழியர்கள். அந்த ஊதியக் குழுவில் தொழிலாளிகளுக்குக் கிடைத்த சம்பளம் இதுதான். டெக்னிக்கல் தொழிலாளிகள் (மெக்கானிக், க்ளீனர் போன்றோர்) ரூ. 140; கண்டக்டர் ரூ.150; டிரைவர் ரூ.160; பஞ்சப்படி ரூ. 7. இதுக்கு மேல் வீட்டு வாடகைப்படி 8முதல் 13% இருக்கும். மொத்தத்தில் பார்த்தால் ரூ.250 அதிகபட்சம் ரூ. 300ஐ தாண்டாது. இதுதான் அவங்க சம்பளம்.
சென்னை, கன்னியாகுமரி தவிர வேறு இடங்களில் அப்போது அரசு போக்குவரத்து இல்லை. அந்த நாட்களில் கண்டக்டர், டிரைவருக்கு ஆளெடுக்கும்போது தமிழ்நாட்டுப் பகுதியினரை விட நாகர்கோவில், கேரளப் பகுதி தொழிலாளிகள்தான் இந்த வேலைக்கு அதிகமாக வந்தனர். மற்ற பகுதியினர் இது என்ன சம்பளம்… கேவலம் அப்படியென்றுகூட நினைத்திருக்கலாம். பின்பு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அவங்க சிபாரிசில தமிழ் தொழிலாளிகளின் எண்ணிக்கை கூடியது. இல்லையெனில் ரொம்பவும் குறைவாகத்தான் இருந்து வந்தது.
நம் செங்கொடி சங்கத்தில் உறுப்பினர்களாக அதிகம்பேர் இருந்தனர். நான் சங்கத்தில் சேரும்போது, அவங்க முதலில் வேலையில் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாகர்கோவில்-கேரளா பகுதியினர்தான் சி.ஐ/டி.ஐ போன்ற அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் சுமார் 60-70% பேர் இருப்பார்கள். அதுதான் நிலைமை. இவர்களெல்லாம் நமது உறுப்பினர்களும்கூட. இவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியோடும் தொடர்பு இருந்தது. அதில் பிரசாத், நாராயணன், வி.சி.செரியன் போன்ற பலரும் இருந்தனர்.
அன்றைக்கு தொழிலாளிகளின் ஊதியம் மிக மிகக் குறைவு. பேட்டாவும் குறைவு. பேட்டா என்பது நாலணாதான். அப்போது கலெக்ஷன் பேட்டா என்பதெல்லாம் கிடையாது. பேட்டாவை உயர்த்திக் கொடு என்றெல்லாம் தொழிலாளிகள் தகராறு செய்வார்கள். கலைஞர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தொழிலாளிகளின் கூட்டத்திற்கு ஒரு நாள் வந்து இரண்டு கைகளையும் உயர்த்தி விரல்களை விரித்துக் காட்டினார். அதுக்கு என்ன அர்த்தம்னா பேட்டா பத்து பைசா உயர்வுன்னு அர்த்தம் (சிரிக்கிறார்) ஒரே தகராறுதான். ரொம்பப் பரிதாபமாகவும் இருக்கும். அதேமாதிரி 68-69 வரைக்கும் கூட அரைக்கால் டவுசர், தொப்பி இது மாதிரியான சீருடை இருந்தது. கடுமையான தண்டனைகள். இவையெல்லாம் போக்குவரத்தில் அன்றிருந்த நிலைமைகள். நான் வரும்போதும் அப்படித்தான்.
அந்த நேரத்தில் சந்திரன், மாயாண்டி போன்றவர்கள் இளம் தொழிலாளிகள். திமுக அனுதாபிகள். அதில் அவநம்பிக்கை ஏற்பட்டு பின்பு நம்மிடம் வந்தவர்கள். இப்படி நூற்றுக்கணக்கான உன்னதத் தலைவர்கள் இருந்தனர். அவங்களெல்லாம் இதற்கு முன்பு எப்படி நடந்தது என்றெல்லாம் என்னிடம் சொல்வார்கள். மிகக் கடுமையான வேலைப்பளுவை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு வலுவானதொரு தொழிற்சங்கமாக நாம் உருவானோம். அதற்கு முன்பே செங்கொடிச் சங்கம் வலுவான சங்கம்தான். ஏஐடியுசியிலிருந்து பிரிந்து சிஐடியூ உருவானது. போக்குவரத்தில் இருந்த செங்கொடிச் சங்கம் சிஐடியூ வில் வந்தது. துறைமுக சங்கம் ஏஐடியுசிக்குப் போனது. பேங்க் சங்கமும் அங்கேதான். இதுமாதிரியான மாற்றமும் அந்த நேரத்தில் நடந்தது.
நாம் முதலிலிருந்தே ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டிய நிலைதான் இருந்தது.
அப்போது விபிசி, எஸ். கிருஷ்ணமூர்த்தி(மேயர்), ஹரிபட், சாரி, அனந்தராமன் போன்றோர்தான் தொழிற்சங்கத் தலைவர்கள். நான் அங்கு போகும்போது உறுப்பினர் எண்ணிக்கை இருந்தது. கன்யாகுமரிதான் சென்னையை விட வலுவானதாக இருந்தது.அங்கே எம் எம் அலி என்ற தோழர்தான் தலைவர்.
ஹேமச்சந்திரன் அப்புறம்தான் வந்தார். அலி மிகவும் திறமையான தலைவர். நான் வந்த முதல் ஆண்டிலேயே 71-72இல் அரசு போக்குவரத்தை கழகங்களாக மாற்றப் போகிறோம் என்று கலைஞர் அறிவித்தார். 72இல் பல்லவன். பிறகு பாண்டியன், சேரன், சோழன் என்று வரிசையாக பல கழகங்கள் உருவாயின. அரசு ஊழியராக இருந்தபோது போக்குவரத்து தொழிலாளர்கள் பெற்று வந்த லீவ் போன்ற சலுகைகளை குறைத்தார்கள். அதை எதிர்த்த போராட்டம் வெடிக்கிறது.
ஜப்பான் திட்டம் என்று அழைக்கப்பட்ட இதற்கு எதிரான போராட்டம் முழுவதுமே நான் தலைமையேற்று நடத்தினேன். விபிசி தலைவர். அப்போது வாயிற் கூட்டங்களில் பேசுவது, நோட்டீஸ் எழுதுவது, போக்குவரத்து தொழிலாளி இதழை நடத்துவது, அதில் எழுதுவது என மும்முரமாக இரவும்பகலும் பாடுபட வேண்டியிருந்தது. டெர்மினஸ்-இல் படுத்திருந்துவிட்டு விடியற்காலை 4 மணிக்கு டெக்னிக்கல் தொழிலாளிகள் வந்தவுடன் அவர்களுடன் பேசுவது; அந்தப் போராட்டத்தில் தொழிலாளிகளை கைது செய்தார்கள். அவங்க ஜாமீன்ல வெளியே வந்த அன்று இரவோ அல்லது அடுத்த நாளோதான் அவசர நிலை அறிவிப்பு வெளிவந்தது.
அப்போது திமுக ஆட்சியில் இருந்ததால் இங்கே அவசரநிலை உடனடியாக அமலாகவில்லை. அதற்கு முதல்நாள்தான் தொழிலாளிகள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள்.
முதலில் ஸ்ட்ரைக் ஜப்பான் திட்டத்தை எதிர்த்து. அடுத்து போனஸ் வேண்டும் என்பதற்காக. அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடையாது என்பது அரசின் நிலைப்பாடாக இருந்தது. எங்களை தொழிற்சாலை தொழிலாளிகளாக பார்க்க வேண்டும் என்பது நமது நிலைப்பாடு. அதுபோலவே மாறும் பஞ்சப்படி வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. இப்படியான கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ட்ரைக். நமக்கும் அரசுக்கும் கடுமையான மோதல். இதற்கிடையில்தான் 68இல் வெண்மணி படுகொலை; அதை ஒட்டி நமது எம்.எல். ஏக்களின் தீவிர செயல்பாடுகள் என்று இருந்தது.
இந்தப் போராட்டம் முடிந்து அவசரநிலை தமிழ்நாட்டில் வந்தவுடன் அதில் ஒரு சிறிய மாற்றம் வருகிறது. திமுக ஆட்சியை கலைத்தவுடன் சங்கமே கூடாது; சந்தா வசூலிக்கக் கூடாது; கூட்டம் கூடக் கூடாது என்று நெருக்கடி தொடங்கியது. திமுக சங்கம் சுத்தமாகக் காணாமல் போனது. நாம் மட்டுமே களத்தில் இருந்தோம். 77இல் ஜனதா ஆட்சிக்கு வந்தவுடனே அதுவரை அடங்கிக் கிடந்த தொழிலாளிகளிடையே சுதந்திரக் காற்று தீவிரமாகப் பரவி, எதிர்பார்ப்புகள் அதிகமாகி, நிறைய போராட்டங்கள் நடக்கத் தொடங்கின.
அண்ணாநகரில் நடந்த போராட்டம் 3 நாள் போராட்டமாக உருப்பெற்றது. அந்தப் போராட்டத்தின்போது ஆளுநர் ஆட்சிக்கும் நமக்கும் சண்டை. விபிசி வந்து தலையிட்டு தீர்வு கண்டார். மற்ற தலைவர்கள் எல்லாம் தொழிலாளிகள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றனர். சிஐடியுதான் நம்மைக் காப்பாற்றியது; காப்பாற்றுகிறது என்ற எண்ணம் அப்போது தொழிலாளிகளின் மத்தியில் வெளிப்பட்டது. அப்போது ஏராளமான தொழிலாளிகள் நம்மிடம் உறுப்பினராக முன்வந்தனர். மற்ற சங்கங்களின் கொடிகளை எல்லாம் கீழே இறக்கி விட்டார்கள். மிகப்பெரும் எழுச்சியாக அந்தப்போராட்டம் இருந்தது.
இதற்கிடையில் போக்குவரத்து சம்மேளனம் உருவானது. பல்வேறு கழகங்கள் உருவாகி இருந்ததால், அனைத்தையும் இணைத்து சம்மேளனம் உருவாக்க வேண்டியிருந்தது. 1973லேயே பல்லவனில் என்னை பொதுச் செயலாளராக ஆக்கியிருந்தனர். ஹரிபட்டிற்கு பதிலாக. அப்போது எனக்கு 22-23 வயதிருக்கும். அவ்வளவு குறைந்த வயதில் ஒரு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனது நானாகத்தான் இருக்கும். அவசர நிலை முடிவுக்கு வந்ததும் சம்மேளனத்தை உருவாக்கியபோது அதற்குத் தலைவர் ஏ. பாலசுப்பிரமணியம். நான் பொதுச் செயலாளர். விபிசி உதவித் தலைவர். போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தை மதுரையில் அமைத்தோம். அப்போது எனக்கு 25 வயதிருக்கும். இப்படி வேகமாக போக்குவரத்து அரங்கத்திற்குள் நான் வந்தேன்.
பேச்சுவார்த்தைக்குப் போவது, விசாரணை நடத்துவது, விளக்கம் எழுதுவது, இந்த மாதிரி எல்லா விஷயத்திலும் தலைவர்களிடமிருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். இன்றைக்கு தொழிலாளிகளை ஒப்பிட்டால்…ஒரு போராட்டத்தில் தொழிலாளிகள் கைதாகிட்டாங்க. ஒரு மிலிட்டரி ஓட்டலில் தகராறு. அதையொட்டி ஸ்ட்ரைக். அதில் 98 பேர் கைதானார்கள். எல்லாம் ஜெயிலில் இருக்காங்க. ஜாமீன் கேட்டு நாங்க வாதாடுகிறோம். கோர்ட் ஜாமீன் கொடுக்குது. ஆனா சொத்து ஜாமீன்.
சொத்துக்கு எங்க போறது? பெரிய கேள்வி. அப்போ யாருக்கும் சொத்து கிடையாது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தோழர் என்.ராம் அவங்க வீட்டில் இருந்து – அது அவரது பங்கா என்று தெரியவில்லை – ஒரு பத்திரத்தை கோர்ட்டில் ஜாமீனுக்காக ‘இதை நான் ப்ளெட்ஜ்(அடமானம்) செய்கிறேன்’னு ஒப்படைத்தார். இப்படித்தான் அன்றைக்கு ஜாமீன் வாங்கினோம். ஒருத்தர் பேர்லயும் சொத்து கிடையாது. நமக்கு வேண்டியதற்குப் போராடவும் கூட சொந்த வீடு இல்லை. அப்போ பேங்க்ல, எல்.ஐ.சியில் வேலை பார்ப்பவங்க யாருக்குமே கிடையாது. இதுதான் அன்றைய நிலை.
அதுக்குப் பிறகு 20 வருஷம் கழித்து நீங்கள் பார்த்தால் நிலைமையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் போட்ட ஒப்பந்தங்கள், நடத்திய போராட்டங்கள் எல்லாமே அதற்குக் காரணம். சம்பள உயர்வு. அதற்குப் பிறகு இ எம் ஐ போட்டு வீடு வாங்குவது எல்லாம் வந்தது. அநேகமாக எல்லோருமே ஒரு அசையா சொத்து வைத்திருக்காங்க என்றுதான் சொல்லணும். அதேமாதிரி குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பதில் எல்லாம் பெரிய மாற்றங்கள் வந்திருக்கு.
இதெல்லாம் இந்தக் காலத்தில்தான் வந்தது.1977லிருந்து ஒரு 20 வருஷம் நாலைந்து ஒப்பந்தங்கள் – எல்லாமே சிறந்த ஒப்பந்தங்கள் – போட்டிருக்கிறோம். அதன் பிறகுதான் ஊதிய உயர்வில் ஒரு சின்ன இடைவெளி. அதனால்தான் இப்போது ஏராளமான போராட்டங்கள் நடக்கின்றன. இப்போது அவங்க நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு சொல்கிறது எங்களுக்கு நஷ்டம். வருமானமில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று. அது ஏற்கத்தக்கதல்ல. ஏனென்றால் இந்த மாதிரியான பொதுமக்கள் சேவைக்கான ஒரு தொழிலை அப்படிப் பார்க்கக் கூடாது. பல முறை அவர்களே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் லாப-நஷ்டக் கணக்கு பார்ப்பதில்லை என்று. தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டியதை தர வேண்டுமல்லவா?
இப்போதும் மற்ற துறைகளுக்கு இணையாக ஊதியம் தர வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஆளும் கட்சி சங்கம் கூட திருப்தியாக இல்லை என்பதுதான் நிலைமை. சிஐடியு இதில் முன் நின்று கூட்டியக்கத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்கிறது. ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பென்ஷன் கூட கிடைக்காத அவலம் நீடிக்கிறது. இப்போது அந்தத் தொழிலாளி, போக்குவரத்தில் இருக்கும் வரவுக்கும் செலவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அரசுதான் ஈடு கட்ட வேண்டும் என்று கோருகிறார்கள். நஷ்டத்திற்குத் தொழிலாளி பொறுப்பல்ல. அரசின் திட்டங்கள், அரசின் சமூக சேவை திட்டங்கள் ஆகியவைதான் காரணம். இதுதான் அவர்களின் கோரிக்கை. இந்த வகையில் போராட்டம் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.
இதற்கிடையில் போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்குவது என்ற முயற்சியையும் ஜெயலலிதா மேற்கொண்டார். பாதி பஸ்களை தனியாருக்குக் கொடுப்பது என்பது போன்ற ஒரு திட்டம். அதை எதிர்த்து நாம் கடுமையாகப் போராடினோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அதைக் காப்பாற்றினோம். இப்போது அது பொதுத்துறையில் நீடிக்கிறது. இது நீடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.
நான் வரும்போது மிக மோசமான நிலைமை இருந்தது. இடையில் சில மாற்றங்கள் வந்தன. மறுபடியும் இப்போது தொழில், அதன் மீதான பிரச்சனைகள் என்பது சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக அவர்கள் மீண்டும் பழைய நிலைமையை அடைவார்கள் என்பதுதான் எனது நம்பிக்கையாக இருக்கிறது.
70களில் சென்னையில் எம் ஆர் எஃப், சிம்சன், டிவிஎஸ் போன்ற ஏராளமான தொழிற்சாலைகளில் வீரஞ்செறிந்த போராட்டங்கள் வெடித்தன.அவற்றில் உங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன? அந்நேரத்தில் சென்னை மாநகரில் பல்வேறு தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வலிமையை நிலைநாட்டும் வகையில் எம் டி யு சி
(சென்னை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) செயல்பட்டது. இன்றைய சூழலில் அத்தகைய ஒரு கூட்டமைப்பிற்கான தேவை உள்ளதா? அதற்கான வாய்ப்பு என்ன?
நான் தொழிற்சங்கப் பணிக்கு உள்ளே வந்த நேரத்தில் அது கொந்தளிப்பு மிக்கதொரு காலமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன். பிறகு தொழிலாளிகளிடையே நிறைய எதிர்பார்ப்புகள் வந்தன. அப்போது முதலாளிகளுக்கு ஆதரவான ஐஎன்டியுசி போன்ற சங்கங்கள் அவர்கள் நினைத்தபடி நடப்பது; முதலாளிகளுடன் பேசிக் கொண்டு போடும் ஒப்பந்தம் என்பதெல்லாம் இருந்தது. தொழிலாளிக்கு அதில் எவ்வித உரிமையும் இல்லை. தொழிலாளிக்கு நியாயமாகக் கிடைக்க வாய்ப்பிருந்தும், அதை தொழிற்சங்கத் தலைவர்கள் தடுக்கிறார்கள் என்ற நிலையில், நமக்கு வேண்டிய சங்கத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அன்றைக்குத் தொழிலாளிகளிடம் இருந்தது. அதன் மீதுதான் சிம்சன், விம்கோ போன்ற பல போராட்டங்கள் வெடித்தன.
அந்தப் போராட்டங்கள் எல்லாம் என்னவென்றால், சங்கம் எனது சங்கமாக இருக்க வேண்டும்; முதலாளியோட சங்கமாக இருக்கக்கூடாது; சங்கத்திற்குத் தலைவர் யார் என்பதை நான் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் போராட்டம். சம்பள உயர்விற்கான போராட்டம் என்பது கூட அதற்குள் அடங்கியதுதான். இந்த உரிமைகோரல்தான் அடிப்படையாக இருந்தது.
அப்படிப்பட்ட போராட்டங்கள் நடந்தபோதுதான் நான் சங்கத்திற்கு உள்ளே வந்திருந்தேன். அதெல்லாம் மிகப்பெரிய, வீரஞ்செறிந்த முயற்சிகள். தொழிலாளிகளிடம் மிகப்பெரிய தாக்கங்களை, நம்பிக்கைகளை விதைத்தவை. இந்த போராட்டங்கள் எல்லாமே அடக்குமுறையை சந்தித்திருக்கின்றன. அது நெய்வேலியோ, ஆவடி ராணுவ தளவாடச் சாலையோ, டெலிபிரிண்டரோ எல்லாவற்றிலுமே அடக்குமுறை இருந்தது. ஆனால் அதை எதிர்த்து தொழிலாளி எப்படி போராடுகிறான் என்பதை ஒவ்வொரு கேட்டுக்கும் தலைவர்களோடு போய் நான் பார்த்திருக்கிறேன். தகராறு, அடிதடி நடக்கிற இடத்துல நான் இருந்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் மயிரிழையில் தப்பியிருக்கிறேன். தொழிலாளிகள்தான் என்னை காப்பாற்றினர். டிவிஎஸ்-ஸில் விபிசி தலைமையில் நடந்த போராட்டம். அதுலேயும் கத்திக் குத்து, வெட்டு எல்லாம் நடந்தது. சென்னை நகரம் என்பது தொழிலாளிகளின் போராட்டங்கள் நிரம்பிய நகரமாக உருவெடுத்திருந்தது என்று கூடச் சொல்லலாம்.
இவை எல்லாவற்றிலும் நான் மிக நெருக்கமாக பங்காற்றியிருக்கிறேன். இன்றைக்கும் எங்களுடைய தொழிலாளிகள், தலைவர்களுடைய படிப்பினைகள்தான் என்னை வழிநடத்துகின்றன. தலைவர்கள் என்னை தன் கூடவே வழிநடத்தி அழைத்துச் சென்றார்கள். தோழர் வி. மீனாட்சி சுந்தரம் சிம்சன் தொழிலாளியாக இருந்து, பின்னர் முழுநேர ஊழியராக வந்தவர். அவர் என்னை எல்லாவற்றிற்கும் அழைத்துச் செல்வார். போராட்டங்களின் பின்னால் உள்ள விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். இது ஏன் இப்படி நடந்தது என்பதையெல்லாம் சொல்வார். அவர் எனக்கு மிகப்பெரியதொரு ஆதர்சமாக இருந்தார். இந்த விஷயங்களை எல்லாம் கற்றுக் கொள்வதில், புத்தகங்களைப் படிப்பது, புரிந்து கொள்வது போன்றவற்றில் எல்லாம் அவர் எனக்கு நிறைய வழிகாட்டியிருக்கிறார். இந்தப் போராட்டங்கள் குறித்த விஷயங்களை அவர் எனக்குப் புரிய வைத்திருக்கிறார்.
அன்றைக்கு டி.எஸ்.ரங்கராஜன் தலைமையில் எம்டியுசி என்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று இருந்தது. அந்தக் கவுன்சில் மேதினத்தை ஒன்றாகக் கொண்டாடுவது; ஏதாவதொரு தொழிலில் போராட்டம் நடந்தால் அதற்கு ஆதரவாக மற்ற தொழிலாளிகளை அணிதிரட்டும் வேலை செய்வது போன்றவற்றை மேற்கொண்டது. இதுமாதிரி பல போராட்டங்களை அது ஓரளவிற்கு நடத்திக் கொண்டிருந்தது. அவசரநிலை காலத்திற்குப் பின்பு அது நீடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு பிரச்சனைக்கு பிரச்சனை என்ற அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கூடி விவாதிப்பது என்பதாக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நிரந்தரமாக அத்தகைய ஓர் அமைப்பு இல்லை.
பல்வேறு கொள்கைகளைக் கொண்ட சங்கங்களுக்கு இடையில் நிரந்தரமாக ஓர் அமைப்பை உருவாக்கி, அவ்வப்போது அதற்கு யார் அமைப்பாளராக செயல்படுவது என்பதை இறுதி செய்வது என்பதெல்லாம் பல பிரச்சனைகளைக் கொண்டுவரும். இதில் அவ்வப்போது கூட்டாக ஆதரவு இயக்கத்தை முன்னெடுத்து, முதலாளித்துவ வர்க்கத்தைத் தோற்கடிப்பதற்கு ஒன்றுபட்ட உத்தி என்ன என்பதற்காக, அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக உள்ளது. இன்று அத்தகைய ஒற்றுமை தேவைப்படுகிறது. அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் அத்தகையதொரு மேடையை உருவாக்கியுள்ளன. அதன் மூலம் இதுவரை 20 அகில இந்திய வேலைநிறுத்தங்களையும் இந்த மேடை நடத்தியுள்ளது. சமீபத்தில் நடந்தது அதன் 21வது வேலைநிறுத்தம் ஆகும்.
அதுமாதிரியான நிரந்தர அமைப்பு இங்கே தமிழ்நாட்டில் இல்லை. எனினும் அரங்க வாரியாக, உதாரணமாக போக்குவரத்தில் என்றால், ஒரு கூட்டமைப்பு உள்ளது. வேறு சில இடங்களிலும் இருக்கிறது. பல நகரங்களிலும் இதுமாதிரியான கூட்டமைப்பு உள்ளது. அது தேவையும் கூட. அப்படி இருப்பது தொழிலாளிகளுக்கு நம்பிக்கை தரும். போராடுவதற்கான தைரியத்தைத் தரும். அது முக்கியமான விஷயம்.
1975 அவசர நிலை காலத்தில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருந்தது?அன்றைக்கும் இன்றுள்ள நிலைமைக்கும் எத்தகைய மாற்றத்தைக் காண்கிறீர்கள்? நாட்டு நலனை சுட்டிக் காட்டி தொழிலாளர்களின் நலன்கள் அவசரநிலை காலத்தில் பறிக்கப்பட்டதைப் போலவே, இன்றும் புதிய தொழிலாளர் விதிகள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் இதை எதிர்த்து எப்படிப் போராடுவது?
1975 அவசரநிலை காலத்தில் ஒரு ஆறுமாத காலம் திமுக ஆட்சியில் இருந்ததால் அவசரநிலையின் தாக்கம் பெரிதாக இல்லை.1976 ஜனவரி இறுதியில் திமுக ஆட்சியை கலைத்து முக்கியமான தலைவர்கள் எல்லாம் கைது செய்து விட்டார்கள். ஹரிபட், து. ஜானகிராமன், சி.பி.தாமோதரன் போன்றோர் கைது செய்யப்பட்டு விட்டனர். எனினும் அந்த ஆறு மாத காலத்தின்போதே ஓரளவிலான தலைமறைவு வாழ்க்கைக்கு போக வேண்டும் என்று சிலரை அனுப்பி வைத்தனர். அதனால்தான் பலர் கைதாகாமல் தப்பித்தனர்.
திமுக ஆட்சியை கலைத்து விட்டார்கள். அன்று இரவே கைது செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.
நான் வழக்கம்போல் அன்றிருந்த 81 வடக்கு கடற்கரை சாலை அலுவலகத்திற்கு சென்றேன். இரவு நேரம். அப்போது தேசாபிமானி தோழர் கோபால் மாடிப்படியில் நின்றபடி, கதவைத் திறக்காமலேயே “நீ எங்காவது போயிடு.போலீஸ் வந்து அரெஸ்ட் செய்றாங்க. இப்போ கூட வந்துட்டு போனாங்க” என்று சொன்னார். நான் பக்கத்துல தெரிந்த ஒரு தோழரின் வீட்டிற்குப் போய் கதவை தட்டினேன். இரவு 11 மணி இருக்கும்.அங்கே இரவைக் கழித்தேன்.அடுத்த நாள் காலையில் வேறு ஏற்பாடு செய்து கொண்டோம். பின்பு தலைமறைவு ஆகிவிட்டேன். ஒரு வருஷம் தலைமறைவாக இருந்தேன்.
இந்தத் தலைமறைவுக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தேன். போக்குவரத்து சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் கூட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்போது சந்தா வசூல் செய்யக் கூடாது என்றும் கூட்டம் நடத்தக் கூடாது என்றும் தடை இருந்தபோது, அதை எதிர்த்து எப்படி வசூல் செய்வது என்றும், கூட்டத்தை அலுவலகத்தில் நடத்தாமல் நேப்பியர் பார்க் போன்ற பொது இடத்தில் நடத்தவும், அங்கு யாராவது போலீஸ் மாதிரி ஆளுங்க வந்து கேட்டால் ஐயப்பன் கோவில் ஃபண்டு கூட்டம் என்று சொல்லும்படியும் அறிவுறுத்தியிருந்தோம். இது மாதிரியான கூட்டத்திற்கு ஃபண்டு, சீட்டு என்று ஏதாவதொரு பெயர் வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. அதேபோல சந்தா புத்தகம் 100 இதழ் இருக்கும். அதுவரையிலும் அப்படித்தான் அச்சடித்தோம்.
இப்போது அதை 20 என்று அடிக்கச் சொன்னோம். அதை அப்படியே இடுப்பில் சுருட்டி வைத்துக் கொண்டபடி சந்தா வசூல் செய்யச் சொன்னோம். இப்படிப் பல விஷயங்கள் சொல்லிக் கொடுத்து வந்தோம். ஒரு மாதிரியான வீர, சாகச செயல்களாகத்தான் அவை இருந்தன. பல தோழர்கள் மிகுந்த தைரியத்துடன் இருந்தனர். மாறி மாறி வீடுகளில் தங்குவோம். நானும் விஎம்எஸ்ஸும் ஒரே இடத்தில் தங்கியிருந்தோம். நானும் விபிசியும் ஒரே இடத்தில் இருந்தோம். இரவில் தான் இடம் மாறுவோம். பல வீடுகள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தன. முதலில் ஒரு இரண்டு மாத காலம் ஒழுங்கா சோறு கிடைக்காம கஷ்டப்பட்டோம். அதற்குப் பிறகு பலரும் எங்களை பாசத்தோடு பாதுகாத்தனர்.
அப்போது பல புதிய சட்டங்கள் வந்தன. போனஸ்-ஐ பறித்தார்கள். பல உரிமைகளைப் பறித்தனர். கிட்டத்தட்ட இப்போதும் அதே மாதிரியான நடவடிக்கைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அது அறிவிக்கப்பட்ட அவசரநிலை என்றால், இது அறிவிக்கப்படாத அவசரநிலை காலமாக இருக்கிறது. அன்றைக்கு அதை முரட்டுத்தனமாகவும் அடக்குமுறைகளோடும் கையாண்டார்கள். இவர்கள் சாதி, மதம் மூலமான பிளவுகளின் மூலம் தொழிலாளிகளை அடக்கி வைக்க முயற்சி எடுக்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது மட்டுமல்ல; இவர்கள் முற்றிலுமாக தாராளமயத்தை அமலாக்குவது என்பதையும், அதே போன்று அவர்களுக்கு மிகவும் வேண்டிய முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் நலனை மாற்றுவது என்றும் தொடர்கிறார்கள்.
அன்றைக்கும் இன்றைக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், இன்றைக்கு கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரெண்டிஸ் என்று பல பெயர்களில் மிகக் குறைவான கூலிக்கு பணிப்பாதுகாப்பு எதுவுமில்லாத நிலைமைகளில் தொழிலாளிகளை வேலைக்கு வைக்கக் கூடிய வாய்ப்பை இவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். முதலாளிகளுக்கு இதன் மூலம் மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர்.
தமிழ்நாடு டெக்ஸ்டைல் தொழிலில் பார்த்தால் நிரந்தர ஊழியர் என்பதே இல்லை. சுமங்கலித் திட்டம், அந்தத் திட்டம், இந்தத் திட்டம் என்று பெண்களை உள்ளேயே அடைத்து வைத்து வேலை வாங்குவது என்பதுதான் நடந்து வருகிறது.பல கம்பெனிகளில் இதுதான் நடந்து வருகிறது. இதையெல்லாம் எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் இன்னும் பெரிய அளவிற்குப் போக வேண்டியுள்ளது.
நிரந்தரப் பணிக்குப் பதிலாக ஒப்பந்த, தினசரி கூலி முறை என்பது இன்று கிட்டத்தட்ட அரசுப் பணிகள் உட்பட அனைத்துத் தொழில்களிலும் வேரூன்றி உள்ளது. இதில் மாற்றத்தைக் கொண்டுவர வழிவகைகள் என்ன? நவதாராள மயம் தொழிற்சங்க அரங்கில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக காண்கிறீர்கள்?
தாராளமயம் வந்தபிறகு நிறைய மூலதனம் இந்தியாவிற்குள் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கும் வந்திருக்கிறது. சென்னைக்கும் வந்திருக்கிறது. பெரிய ஆட்டோமொபைல் தொழில்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்த்தாலே தெரியும். பிறகு ஐ.டி. தொழில். தாராள மயத்திற்குப் பிறகு பெரியதொரு மாற்றத்தைக் கொண்டுவந்த துறை அது. இது ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கு வேலை கொடுத்திருக்கிறது. பலருக்கு வருமானம் வரக்கூடிய ஒரு தொழிலாக வளர்ந்திருக்கிறது. அந்தத் தொழிலில் உள்ள சுரண்டல் தன்மையைப் பார்த்தால் மிக அதிகம்.
தொழிலாளிகளைப் பொறுத்தவரையில் இந்தப் புதிய தொழில்கள் எல்லோரையும் மிகக் குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்துகிறது. இரண்டாவதாக, தொழிற்சங்கங்கள் வரக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்தார்கள். ஒரு தொழிற்சாலையில் தொழிற்சங்கம் வருவதுபோல் இருந்தால், “இல்லை. நீங்கள் ஐந்து பேர் மட்டும் ஒரு கமிட்டி அமைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கமிட்டியும் நாமும் பேசிக் கொள்ளலாம்.” இதுபோன்ற ஓர் ஏற்பாட்டை செய்து கொள்கிறார்கள். இப்படி தொழிலாளிகளை தனிமைப்படுத்தி வைத்தார்கள். இது ஒரு பத்து-பதினைந்து வருஷம் தொடர்ந்தது.
இது இந்தியா முழுவதற்குமான நிலைமை. இன்றைக்கும் மிகப் பெரும்பாலான தொழிற்சாலைகளில் – முக்கியமாக பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளில் –இப்படித்தான் இருக்கிறது. இதில்தான் நாம் முட்டிமோதி தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அது ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரையில் 1990க்குப் பிறகு புதிதாக வந்திருக்கின்ற எண்ணற்ற தொழிற்சாலைகளில் குறைவான கூலிக்கு ஆளெடுப்பது போன்ற விஷயங்களில் ஒரு முறிப்பை உண்டாக்க வேண்டும் என்று நாம் முயற்சி எடுத்தோம். கிடைக்கும் சின்னச்சின்ன தகவல்களைப் பயன்படுத்தினோம். ஆங்காங்கே தொழிற்சாலைகளில் உருவாகும் அதிருப்தியை நாம் கணக்கிட்டோம்.
அதேபோல் இப்படிப்பட்ட நிலைமைகளில் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியும் கொள்கையும் கொண்டது சிஐடியுதான் என்ற பொதுப் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். தாராளமயம் தவறானது. அதுவே இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. தாராளமயம் நமது தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கிறது. தொழிலாளிகளை அடிமைப்படுத்துகிறது என்பதை எல்லாம் பொதுவாக நாம் பேசும்போது வேறெந்த தொழிற்சங்கமும் அவற்றைப் பேசுவதில்லை. அதைப் பேசுவது சிஐடியு மட்டும்தான். இது தொழிலாளிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. பலரும் எங்களிடம் வர ஆரம்பித்தார்கள்.
இந்துஸ்தான் மோட்டார்ஸ்-இல் இருந்தும், அப்புறம் விஸ்டியான் என்ற அமெரிக்க கம்பெனியில் இருந்தும் வந்தார்கள். சங்கம் அமைக்க வேண்டும் என்றார்கள். பிறகு ஹுண்டாயில் இருந்தும், ஃபோர்ட்-இல் இருந்தும் வந்தார்கள். இப்படி வர ஆரம்பித்தபிறகு அவர்களோடு நாம் பேசி, ஆங்காங்கே சங்கங்களை தொடங்கினோம். இன்றைக்கு பன்னாட்டு கம்பெனிகளில் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில் நாம் சங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். பலவற்றில் சங்கங்கள் அமைப்பதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சங்கம் அமைப்பதற்காகவே போராட வேண்டியுள்ளது.
நிர்வாகம் என்ன செய்கிறதென்றால் “அந்த சங்கத்திற்குப் போனால் என்ன கேட்பீங்க. ரூ.5000 ஊதிய உயர்வு கேட்பீங்களா? நான் ரூ.5050 தரேன். ரூ.6000 தரேன். சங்கம் இல்லைன்னு சொல்லுங்க. சிஐடியு கொடியை இறக்கி விடுகிறேன்னு சொல்லுங்க” என்ற அளவிற்கு நமது சங்கத்தை இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சில இடங்களில் தற்காலிகமாக அதுவும் நடந்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் நமது சங்கங்கள் வந்திருக்கிறது. வேறுபல சங்கங்களும் அங்கே உருவாகியிருக்கின்றன. அதாவது ஐஎன்டியுசி போன்று. அதற்கும் காரணம் சிஐடியூ வை தவிர்ப்பதுதான். சில இடங்களில் சிஐடியூ வை உடைப்போம் என்றும் வருகிறது. முதலாளிகள் என்ன செய்கிறார்கள் என்றால், சிஐடியூ வராமல் தடுக்க வேண்டுமென்றால், தங்களுக்கு அனுசரணையாக இருக்கிற சில சங்கங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்லி முயற்சிக்கின்றனர். இப்படித்தான் நிலைமை உள்ளது.
எனவே தாராளமயம் தொழிலாளிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதை எதிர்த்த முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.இப்போதும் அதன் பாதிப்புகள் நீடிக்கின்றன. இப்போது புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகளும் வருகின்றன. மோடியின் ஆட்சி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, அத்தகைய சட்டங்களில் 300 பேருக்கு மேல் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இனிமேல் இந்த சட்டங்கள் பொருந்தும் என்று கொண்டு வந்து முதலாளிகளுக்கு மிகப்பெரிய சேவையை செய்துள்ளது. இதன்படி 80 சதவீத உற்பத்தி தொழிற்சாலைகளில் எந்தச் சட்டமும் பொருந்தாது என்றே ஆகிவிடும். இவ்வாறுதான் இன்றைய நிலைமையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதில் இருந்தும் நிச்சயமாக பெரியதொரு வெடிப்புச் சூழல் உருவாகும். பிரிட்டனில் தொழிற்புரட்சிக் காலத்தில் இயந்திரங்களுக்கு எதிராக எழுந்த வெடிப்பு போல இங்கேயும் உருவாகும் சூழ்நிலையும் வரும்.

நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கியபோதுதான் தமிழ்நாட்டில் திமுக போன்ற திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது? உங்களின் எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது?
திமுக ஒரு சீர்திருத்த இயக்கமாக இருந்தபோது பல கோரிக்கைகளை வைத்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பல விஷயங்களில் அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். பெண்ணுரிமை போன்ற விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தியிருந்தார்கள். அதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் சமூகத்தில் ஒரு தகர்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றன. மாணவர்களுக்கு இலவச பயணம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடைசியாக இப்போது பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அவர்களுக்குள்ளே இருக்கும் போட்டி அரசியலின் தாக்கம் இருந்தாலும் கூட, அந்த சமூக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவைதான்.
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் இவை நடந்திருக்கின்றன. அதன் விளைவுகள் தமிழகத்தினுடைய வளர்ச்சியில் நிச்சயமாகப் பயன்பட்டிருக்கின்றன. பஸ் போக்குவரத்தை நாட்டுடமை ஆக்கியதென்பது ஒரு முக்கியமான, முன்னேற்றகரமான நடவடிக்கையாக உள்ளது. இன்று ஐ.நா.சபையே கூட பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துங்கள் என்று உலக நாடுகளுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஜிடிபியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அதற்கு ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் சுற்றுச்சூழல் பாதிக்கும்; வெப்ப மயமாகும் என்று சொல்கிறார்கள்.
அதுபோன்ற விஷயம்தான் இது. இன்றைக்கு தமிழ்நாட்டில் 22,000 பேருந்துகள் பொதுப் போக்குவரத்திற்குள் ஓடுகின்றன என்று சொன்னால், அது பாராட்டத்தக்க விஷயம்தான்.அந்த மாதிரியான விஷயங்களில் இந்த அரசை நாம் ஒன்றும் குறை சொல்வதிற்கில்லை. அவர்களால் இயன்றதை, ஓர் ஆட்சிக்குரிய வேலையை செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில் முதலாளி- தொழிலாளி என்ற விவகாரம் வரும்போது, மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிப்பது என்று வரும்போது, எனக்கு இந்த ஆட்சியில் அவ்வளவு திருப்தி இல்லை.
பண விஷயங்களில் மட்டுமின்றி, அந்நிய மூலதனம் வரவேண்டுமென்றால் நாம் தொழிலாளிகள், தொழிற்சங்கங்களை எல்லாம் அடக்கி வைக்க வேண்டும் என்ற அணுகுமுறைதான் இவர்களிடம் இருக்கிறது. அது கடுமையான அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இப்போது ஏராளமான தொழிலாளிகள் கேஷுவல், காண்ட்ராக்ட் முறையில் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். இவர்களுக்கு நியாயமான கூலியை கொடுக்க வைத்தால் தமிழகப் பொருளாதாரம் 2-3% அதிகமாகும். அதுவும் உடனடியாக உயரும்.
நீங்கள் எங்கு போனாலும் வியாபாரம் இல்லை; வருமானம் இல்லை என்று புலம்புகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. மூன்றாவதாக, தீப்பெட்டி, பட்டாசு, ரப்பர், நெசவு போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களைக் காப்பாற்றுவதில் இவர்கள் அக்கறை செலுத்துவது மிகவும் குறைவு. அது போதாது. அதற்கென்று நிதி ஒதுக்குவது; சலுகைகள் கொடுப்பது; அதை பாதுகாப்பது; அதன் மூலமாக வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது என்ற பார்வை போதுமான அளவிற்கு இல்லை. இந்தத் தொழில்களின் உரிமையாளர்களே கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய முதலாளிகள் ஜெயித்திருக்கின்றனர்; கொழுத்திருக்கின்றனர். அவர்கள் சிறு முதலாளிகளை அழித்து அதன் மீது தங்கள் சாம்ராஜ்யத்தை கட்டுவது மிகவும் தவறு. அரசு இதை அனுமதித்தது என்றால், அது தாராளமயத்தின் குறியீடுதான். இந்த அரசு அதில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பார்வை எனக்குண்டு. அதேபோல, விவசாயம், விவசாயம் சார்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள். இந்தப் பிரச்சனைகளில் அரசின் நடவடிக்கைகள் போதாது. ஏனெனில் விவசாயம் என்பது கட்டுப்படியாகாத ஒரு தொழில் என்று அவர்கள் வெளியே போவதைத் தடுப்பதற்கு என்ன செய்தது? ஏற்கெனவே உழவர் சந்தை என்ற ஒரு நல்ல முயற்சி எடுக்கப்பட்டது. எல்லாமே அடையாளபூர்வமாகச் சென்று கொண்டிருக்கிறதே தவிர, அதில் உள்ளார்ந்து செயல்படும்படியான போக்கு தொழிலிலும் இல்லை; விவசாயத்திலும் இல்லை. சிறு தொழிலிலும் இல்லை. இது கடுமையான பாதிப்பினை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வர்க்க ரீதியான விஷயத்தில், முதலாளி-தொழிலாளி விஷயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஆட்சி செய்தாக வேண்டும்.
உங்களின் முன்னத்தி ஏராக இருந்த தோழர் வி.பி.சிந்தன் உங்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்?
அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அதில் ஒன்று, அவர் எதைச் சொன்னாலும், அதில் சமூக மாற்றம், புரட்சி என்பவை எல்லாவற்றிலும் ஊடுபாவாக கலந்து வரும். அவருடைய பொதுக்கூட்டப் பேச்சைக் கேட்டாலே தெரியும். அது சாதாரணமாக எல்லோரும் பேசுவது போல இருக்காது. அதைப் போலவே அவரது வகுப்புகள். அடுத்து ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால், அதை முடிப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளக்கூடிய சிரமங்கள், காட்டக்கூடிய அக்கறை போன்றவை. இவர் ஒரு நேர்மையான, மிகவும் சின்சியரான தலைவர் என்ற ஒரு எண்ணப் போக்கை நம்மிடையே உருவாக்குவார். “நாம் நேரம் பார்க்காமல் வேலை செய்யணும்;
தொழிலாளிகளுக்காக வேலை செய்ய வரும்போது நேரம் காலம் பார்க்க வாய்ப்பே இல்லை; அதற்கு வழியே கிடையாது” என்பது போன்ற அர்ப்பணிப்பு அவரிடம் உண்டு. அதே மாதிரி இளைஞர்களை, என்னைப் போன்ற மாணவர்களை கவர்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட அக்கறை என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயம். என். ராம், மைதிலி போன்ற எண்ணற்ற பலரும் அவரது அறிவார்ந்த ஆளுமைக்கு ஆளானவர்கள்தான். அவர் அடிபட்டபோது, கத்திக் குத்திற்கு ஆளானபோது, அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான உறுதி இப்போதும் என்னை உந்திக் கொண்டிருக்கிறது. கத்திக் குத்தில் அவர் பிழைத்ததற்குக் காரணம் நாங்கள் மட்டுமல்ல; அவரது மன உறுதியும்தான் என்று டாக்டர்களே பாராட்டினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தொழிலாளிக்கு உரிய காசை ஒரு பைசா குறையாமல் வாங்கித் தர வேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் நான் அதைப் பார்த்திருக்கிறேன். அவர் கோபப்படாத மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஒருபோதும் அவர் விட்டுக் கொடுக்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில்தான் செயல்படுவார். நான் இயக்கத்திற்குள் வந்தவுடனேயே அவரது வகுப்புகளை கேட்பது என்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்த தொழிற்சங்கத்தின், அதாவது போக்குவரத்து சங்கத்தின், எல்லாமாகவும் அவர் இருந்தார். அவ்வாறு இருந்ததால், அவரோடு சேர்ந்து கேட் மீட்டிங் போவது, இணைந்து செயல்படுவது, அவர் கூட்டங்களில் பேசுவது இவையெல்லாம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. என்னுடைய பேச்சில், எழுத்தில், சிந்தனையில், ஒரு பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்ற விஷயத்தில் என, எல்லாவற்றிலுமே அவருடைய தாக்கம் உள்ளது.
நீங்கள் ஒரு தமிழிலக்கிய மாணவரும் கூட. அவ்வகையில் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
என் அண்ணன் லைப்ரரிக்குக் கூட்டிப் போய் பல விஷயங்களை அறிமுகப்படுத்தினார் என்று முன்பே சொன்னேன். பொன்னியின் செல்வன் போன்ற வரிசையில் பல புத்தகங்களை பைத்தியமாக பள்ளிப் பருவத்திலேயே படித்தேன். நான் சென்னைக்கு வந்தபிறகு எனது கல்லூரி பேராசிரியர் ராமையா ஃப்ரெஞ்சு இலக்கியங்களை எனக்கு அறிமுகம் செய்தார்.லே மிசரபிள் (ஏழை படும் பாடு) போன்றவை.
ரஷ்ய இலக்கியங்களின் பால் எனக்கு ஒரு காதலே ஏற்பட்டிருந்தது. இதுமாதிரியான புத்தகங்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக எங்கள் மாநிலக் கல்லூரி இருந்தது. சென்னையின் மிகச் சிறந்த லைப்ரரி என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். அங்கு இல்லாத நூலே கிடையாது. இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியாது. எனக்கு மிகுந்த வியப்பாக இருக்கும். வெள்ளைக்காரர்கள் எல்லாம் படிக்கிற கல்லூரி என்பதால் இவ்வளவு சிறப்பாக வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை. கல்லூரி லைப்ரரிதான் இந்த வாய்ப்பைக் கொடுத்தது.
முழுநேர ஊழியனாக ஆனபிறகு இலக்கியத்துடனான உறவு தொடர்ச்சியாக இருக்கவில்லை. அது ஒரு பெரிய இழப்புதான். டி. செல்வராஜ், சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற இடதுசாரி எழுத்தாளர்களின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தாலும், அது போதாது என்றுதான் கூற வேண்டும். எனது பணிகளுக்கு தேவையான அளவில் சமூகவியல், பொருளாதாரம், சட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நூல்களை தொடர்ந்து படித்து வந்தேன். கல்லூரிக் காலத்தில் ஜெயகாந்தன், விந்தன் இப்படி எழுத்தாளர்களை எல்லாம் தேடித்தேடிப் போய் வீட்டில் பார்ப்போம். அவர்களோடு பேசுவோம். சி.சு.செல்லப்பாவை அவரது அச்சகத்திலேயே போய் பார்த்தோம். பேசினால் விடவே மாட்டார். என்றாலும் தொழிற்சங்க வேலை என்று வந்தபிறகு போதிய நேரம் வாய்க்கவில்லை.
இலக்கியத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்ன என்பதை பலரோடும் பேசியும், அவர்கள் பரிந்துரைக்கும் நூல்கள் மூலமும் தொடர்ந்து தெரிந்து கொண்டு வந்தேன். நவீன தமிழ் இலக்கியத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடை – எழுத்து- கருத்துக்கள் என்பதிலும் முற்போக்கான, புரட்சிகரமான கருத்துக்கள் என்பதிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற்போக்கான, மவுடீகமான விஷயங்களுக்கான இலக்கியத்திலும் கூட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
கல்லூரியில் படித்த காலத்திலும், அதற்குப் பிறகு சுமார் பத்தாண்டுகள் வரையிலும், வார இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர்களில் வெளியாகியுள்ள கதை, கவிதை, கட்டுரைகள் மீதான விமர்சனங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தோம். அதில் உள்ள விஷயங்கள் குறித்து விவாதிப்போம். பிறகு அதுவும் விட்டுப் போய்விட்டது. இப்போது கடந்த 4-5 வருடமாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன்.
சுமார் 20-21 வயதில் நீங்கள் தொழிற்சங்க அரங்கில் செயல்படத் தொடங்கினீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது இந்த அரங்கில் இளைஞர்களின் பங்கேற்பு எப்படி உள்ளது? அதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? மேலும் அதிக இளைஞர்களை கவர்ந்திழுக்க உங்களின் முன்னெடுப்பு என்னவாக இருந்து வந்துள்ளது?
அப்போது அரசியல் களத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழல், திமுக குறித்த எதிர்பார்ப்பு, அதற்கு எதிர்ப்பு இவையெல்லாம் என் போன்றவர்கள் உருவாகக் காரணமாக இருந்தன. இன்றைக்கு முற்றிலும் புதிய சூழல் நிலவுகிறது. தான், தனது, தன்னைச் சுற்றியிருப்பவர்கள், தனது வருமானம் என்பது போன்ற எண்ணப் போக்குகள் வலுவடைந்துள்ளன. ஏனென்றால் வாழ்க்கைப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயமிருப்பதாக இளைஞர்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள். இதைக் கையகப்படுத்த வேண்டும். இது இல்லாமல் நடக்காது என்று நினைக்கிறார்கள். குறிப்பாக படித்த இளைஞர்கள் மத்தியில் இத்தகைய எண்ணம் வலுத்து வருகிறது என்பதையும் நான் பார்க்கிறேன்.
நீங்க என்ன படிக்கிறீங்க? என்று கேட்கும்போது இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் போன்ற ஹுமானிட்டி பிரிவில் படிக்கப் போகிறேன் என்று சொல்கிறவர்கள் எல்லாம் இப்போது இல்லை என்றே சொல்லிவிடலாம். நான் டாக்டர் ஆகணும்; இன்ஜினியர் ஆகணும் என்றுதான் நினைக்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. இருந்தாலும் நாங்கள் படித்தபோது இருந்த விகிதாச்சாரத்திற்கு இது நிறையவே அதிகமாகி உள்ளது.
அடுத்து படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நிறைய பணம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும் என்ற நிலை. அதனால் மன ரீதியாக ஏற்படக் கூடிய, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற அழுத்தம் தரும் விஷயங்கள் எல்லாம் உள்ளன. அடுத்து தாராளமயம் நிலைபெற்ற பிறகான காலத்தில், நாம் என்ன செய்ய முடியும் என்கிற சிறியதொரு இயலாமைப் போக்கும் வலுத்து வருகிறது.
அதே நேரத்தில் ஆங்காங்கே பிரச்சனையின் அடிப்படையில் ஏற்படக்கூடிய போராட்டங்கள், அவற்றின் வெடிப்பு என்று பார்த்தால், இன்னொரு பக்கத்தில் அது உருவாகிக் கொண்டுதான் வருகிறது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு மாதிரியான விஷயங்கள். ஏதேனும் ஒரு விஷயம் வெடித்து எழும்போது, அவர்கள் எப்படிப் பொங்கி எழுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.
இதற்குக் காரணம் அவர்களின் மனதிற்குள் இருக்கும் குறைகள் அல்லது குமுறல்களின் கூட்டு விளைவுதான். அதை தனித்து வெளிப்படுத்த முடியாது. இவ்வாறு ஒரு பெருவெடிப்பு நிகழும்போது, அதனோடு சேர்ந்து, தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம், அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் முழுவதிலுமே இத்தகைய எழுச்சிமிக்க சம்பவங்கள் நடக்கின்றன. அதைப் பார்க்கும்போது இன்றைக்கு நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்த்து அப்படிப்பட்ட எழுச்சிகள் உருவாகத்தான் செய்யும்.
குறிப்பாக, நான் தொழிற்சங்கத்தில் பார்க்கிறேன். தொழிலாளிகள் மத்தியில் கடுமையான கோபம் இருக்கிறது. அதை எப்போது வாய்ப்பு கிடைக்குமோ, அப்போதெல்லாம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். வேலைபோனால் போகட்டும் என்று களத்தில் குதிக்கிறார்கள். சமீபத்தில் சுமார் 15,000 பெண்கள் சாலையை மறித்து அமர்ந்ததை பார்த்திருப்பீர்கள்.பொதுவாக மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை.
வீடு – வேலை – விட்டா வீடு என்று இருப்பவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் தங்களை தங்க வைத்த இடம், சுரண்டப்பட்ட விதம், நடத்தப்பட்ட விதம், காணாமல் போய்விட்டார்கள் என்ற செய்தி இதையெல்லாம் பார்க்கிறபோது நாம் என்ன அடிமைகளா என்ற உணர்வோடு பெரியதொரு வெடிப்பாக அது எழுந்தது. இதை அமைப்பு ரீதியாக, முறையாகப் பயன்படுத்தினால் சிறப்பானதாக வரும். இப்படி தன்னெழுச்சியாக வெடித்து பின்பு வடிந்து போவதில் பயனில்லை. ஆனால் அந்த உணர்ச்சி இருக்கும்; உணர்வு இருக்கும். இப்போதும் இளைஞர்கள் அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
நாமும் நிறையவே சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு டைவர்ஷன் அதிகமாக இருக்கிறது. அவர்களைக் கெடுக்கின்ற விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. நாம் இளைஞராக இருந்தபோது நமக்குக் கிடைத்த தரவுகள் இருக்கிறதே, அதை விட பல மடங்கு தரவுகள் அவர்களுக்கு வந்து சேர்கிறது. அது போலவே கூட்டாகப் படிப்பது; விவாதிப்பது; கருத்துக்களை பரிமாறிக் கொள்வது போன்ற வாய்ப்புகளும் கூட இந்த நவீன கேட்ஜட்களால் தடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் மாறும். மாறாமல் இருக்கவே முடியாது. இதெல்லாம் தற்காலிகமான நிகழ்வுதான். நம்பிக்கை கொடுக்கக் கூடிய நிகழ்வுகள் உருவாவதை நாம் பார்க்கிறோம்.
உலக அளவில் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இத்தகைய மாற்றங்கள் உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். அது போன்ற மாற்றங்களை ஆசிய கண்டத்திலும் நாம் பார்க்கத்தான் போகிறோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது
