நா.முத்துநிலவன்
உலகை விளக்கியவர் பலர்! இதை மாற்றுவது எப்படி என்பதுதான் மார்க்சியத்தின் வெற்றி என்பார்கள். தமிழ்ச் சமூகத்தை விளக்கிய தமிழறிஞர் பலர் என்றாலும் தமிழ் மண்ணுக்கான மார்க்சிய ஆய்வுகளைத் தந்ததில் தோழர் அருணன்தான் முன்வரிசையில் நிற்கிறார்.
தந்தையார் வாழைப்பழக் கடை வைத்திருந்தவர் என்பதைச் சொல்லத் தயங்காத அருணன், அவரது குடும்பத்தில் பட்ட மேற்படிப்புப் படித்த முதல்பிள்ளை இவர்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்!
மேலூர் அருகில் ஒரு சிறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அருணன், மதுரையில் பிறந்து, மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.முத்தையாவைத் தனது எழுத்துக்கும் இயக்கத்துக்கும் முன்னோடியாகக் கொண்டார். 47ஆண்டுகளாக தமிழ்ப் பண்பாட்டின் மனச்சாட்சியாகத் திகழும் தமுஎகசவின் அடிஉரமாகத் திகழ்ந்தவர். பணி நிறைவுக்குப் பின், மதுரையிலிருந்து புலம்பெயர்ந்து, சென்னையில் தன் மகனோடு இருந்தாலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், “அருணன் தமிழ்” வலைக்காட்சியிலும் மார்க்சிய ஒளிவீசித் திகழ்பவர் அருணன்.

மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் மறைந்த போது அவரைப் பற்றிய -1977- தீக்கதிர்க் கட்டுரைதான் தனது முதல் படைப்பு எனும் தோழர் அருணன், “ஒரு தலைவரின் மரணம், ஒரு எழுத்தாளரின் ஜனனத்துக்குக் காரணமானது” என்பதோடு, “அது அரசியல் எழுத்தின் துவக்கம், எனது இலக்கியஎழுத்து, செம்மலரில் எழுதிய நாவல் மதிப்பீட்டுடன் துவங்கியது” என்கிறார்! (“மனு தர்மத்துக்கு நேர் எதிரானது மார்க்சியத்தின் சமதர்மம்” – அருணன் நேர்காணல் – தமுஎகச அறம் கிளையின் ப.தி.ராஜேந்திரன் எழுதிய சிறு நூல்-பாரதி புத்தகாலயம் -2019)
நாற்பது நூல்கள் தந்திருக்கும் இவர் “படைத்ததில் பிடித்த பட்டியல்”இது: நாவல்களில் – “நிழல்தரா மரம்”
சமூக ஆய்வில் – “தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்”
தத்துவத்தில் – “தமிழரின் தத்துவ மரபு”
வரலாற்றில் – “காலந்தோறும் பிராமணியம்”
நாட்டுப்புறவியலில் – “கொலைக்களங்களின் வாக்குமூலம்”
இலக்கிய விமர்சனத்தில் – “வளரும் சிகரம் வைரமுத்து”
தமுஎகச மாநில மாநாடுகளில் தோழர் அருணனின் நிறைவுரை, தொகுப்புரைகளில் அடுத்த சிலஆண்டு உழைப்புக்கான “பேட்டரி சார்ஜ்” ஆகித் திரும்புவோர் – என்னைப் போல் தமுஎகச தோழர் – ஏராளமானோர்!
தோழர் கே.முத்தையாவுக்குப் பிறகு மாநிலப் பொதுச்செயலர், மாநிலத் தலைவர் என இவர் வழிகாட்டுதலில் வளர்ந்ததே இன்றைய தமுஎகச! அமைப்பும் படைப்பும் இரண்டு கண்களாகவே உணர்த்துபவர். “தமுஎகச எனது இன்னொரு பள்ளி, அதுதான் எனக்கு பள்ளியில் கிட்டாத கல்வியைத் தந்தது” எனும் அருணன், தமுஎகச மாநிலச் செயற்குழு, பொதுக்குழு விவாதங்களின் போது, குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி, முன்வைத்த கருத்துகள், ஒரு கருத்தை எப்படி அணுகவேண்டும் என்று இளையவர்க்கு நடத்திய பாடங்கள்! இதோடு, மாநாட்டு நிறைவில் “எழுதுவது அல்ல எழுப்புவதே எழுத்து” என்று, அவர் முழங்கியது, பலர் நெஞ்சில் இன்னும் பதிந்து கிடக்கும் கல்வெட்டு!
சங்க இலக்கியத்தில் ஆதித் தமிழ்ச் சமூக தரிசனம் கண்டவர், கம்பனை ரசித்தது எப்படி, சேக்கிழாரை ரசிக்க முடியாதது ஏன் என்பதை இவரது எளிமையும் வலிமையுமான நூல்களைப் படித்தால் புரியும்.
“இன்றைக்கும் ஒரு சாதிக்குள்தான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. பெண்ணைத் தாழ்ந்த பிறவியாக நோக்கும் சிந்தனையும், நடப்பும் உள்ளது. ஜோதிடம் பார்க்கும் பழக்கம் பரவியுள்ளது. இதெல்லாம் சேர்ந்ததுதான் பிராமணியம்” எனும் தோழர் அருணன், “பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் பிராமணியத்திற்கெதிராக பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இணைவதே திரிசூலமாகும்” என்பது இவரது ஆயுத எழுத்து!
தோழர் அருணன் அவர்களின் பன்முகத் திறனை அறிந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இவருக்கு விருது ஏதும் தராமல், விருதுக்குழுத் தலைவராக்கி அழகு பார்த்தார்! பல்கலைக் கழகம்தான் பட்டம் தரும், பல்கலைக் கழகத்துக்கே எப்படிப் பட்டம் தர முடியும்?
எழுபத்தொன்றைக் கடந்து, இப்போதும் எழுதி இயங்கி விவாதித்து வரும் தோழர் அருணன், இன்னும் பல பத்தாண்டுகள் வாழ்ந்து தமிழ்ச் சமூகப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதே தமிழ் கூறும் நல்லுலகின் நன்றி கலந்த எதிர்பார்ப்பு. “அருணன் தமிழ்” வளர்க!