ஜனநேசன்
வானம்பார்த்த வறட்சி மண்ணான இராமநாதபுர மாவட்டத்தில் விளைந்த வீரியவிதை க.நாகலிங்கம் என்ற எழுத்தாளர் கந்தர்வன். வறண்டமண்ணில் விளைந்த விளைபொருளின் ருசியும், சக்தியும் வளமையான மண்ணில் விளையும் பொருள்களுக்கு குறைவு என்பதை அனுபவசாலிகள் அறிவர். இன்றும் இராமநாதபுர மாவட்ட மக்கள் எதைப் பேசினாலும் ஒரு கதையின் சுவாரஸ்ய விவரிப்போடு பேசுவதை கவனிக்கலாம். எந்த அலங்காரச் சொற்களும் சோடிப்புகளும் இல்லாமல் இந்த மண்ணின் இயல்பை தன் வசப்படுத்திக்கொண்டு நேரடி எடுத்துரைப்பில் கவிதைபாடியாக, கதைசொல்லியாக மிளிர்ந்தார் கந்தர்வன்.
கந்தர்வன் கவிதைகள் காலம்கடந்தும் மேற்கோள் வாசகங்களாக உலாவுகின்றன. அவற்றுள் சில: “விதவிதமாய் மீசை வைத்தோம்; வீரத்தை எங்கோ தொலைத்தோம்!”
“நாளும் பொழுதும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” – கவியார்வலர்கள் கந்தர்வன் கவிதைகளைத் தேடி வாசிக்க இப்படியோர் பட்டியலுண்டு.
1969 ஜூலையில் சென்னையில் மக்கள் எழுத்தாளர் சங்க மாதக் கூட்டத்தில் இலக்கிய விமர்சகர் தி.க.சிவசங்கரன், “கந்தர்வன், இப்படி விமர்சிக்கிற தோரணையோடு நின்றுவிடாமல், அடுத்த மாதக்கூட்டத்தில் நீங்க ஒருகதை எழுதிவந்து வாசிக்கணும், சரியா” என்று எழுப்பிய அறைகூவலை சவாலாக ஏற்றுக்கொண்டு “சனிப்பிணம்” எனும் முதல் சிறுகதையை எழுதினார். அது அவ்வாண்டு செப்டம்பர் ‘தாமரை’ இதழில் வெளியாகி அன்றைய தமிழக படைப்பாளிகளையும், வாசக பரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன்பின் அவர் எழுதிய ஒவ்வொரு கதையும் விமர்சன மனமும் படைப்பு மனமும் இணைந்த படைப்புகளாகவே அமைந்தன.
ஒவ்வொரு சொல்லையும் கவனமாகவே எழுதினார். இந்த எச்சரிக்கை உணர்வால் அறுபது வயதில் அவர் மரணிக்கும் வரை அறுபத்து மூன்று கதைகளே எழுதினார். எனினும் இக்கதைகள் கந்தர்வனை, தமிழ்ச் சிறுகதையாளர்களோடு முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்க்கின்றன. அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சிறுகதையின் கலைநுட்பத்தைச் சொல்கின்றன.
கந்தர்வன் கவிதைகளும் சரி, கதைகளும் சரி நேருக்கு நேர் நின்று பேசும் மொழியில் அலங்காரமில்லாமல் சொல்லவரும் கருத்தை உணர்வு கலந்த காட்சியாக குறைந்த சொற்களில் மனதில் பதியவைக்கும் ஆற்றல் மிகுந்தவை. இந்தப் பொதுத்தன்மை கந்தர்வனின் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகம், பாடல்களுக்கும் உண்டு.
நேரடி புழங்குமொழி சொற்களைக் கொண்டு கவிதையில் உணர்வெழுச்சியைத் தூண்டும் கந்தர்வன், கதைகளில் ஆர்ப்பாட்டமில்லா ஆற்றொழுக்கு மொழியில் வாசகர் மனதோடு நேர்நின்று பேசுவார். அலங்காரம், அலட்டல் இல்லா மொழிநடை வாசகனோடு தோளோடு தோள்நின்று பேசும் பாணி கந்தர்வனின் கதைகளின் சிறப்பு.! இக்கதைகளில் நிழலோட்டமாய் படரும் எள்ளல்தொனி தனித்துவமானது. இவரது சிறுகதைகளில் ஊடாடும் பேசுபொருள்கள்; நிலபிரபுத்துவத்தின் சிதைவினை முகவை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பாங்கினை; “மங்களநாதர்”, “சாசனம்”, “தாத்தாவும் பாட்டியும்” போன்ற கதைகளில் காணலாம்.
மன்னராட்சியின் வீழ்ச்சியை பகடி செய்யும், “சிம்மாசனம்” “அரண்மனைநாய்” பெண்ணுரிமையைப் பேணுதல்; “அப்பாவும் அம்மாவும்” “தராசு” போன்ற கதைகள் நகர்ப்புறத்துப் பெண்களின் பாடுகள் குறித்து: “இரண்டாவது ஷிப்ட்” “காடுவரை” “பத்தினி ஓலம்” போன்ற கதைகள்.
நடுத்தரக் குடும்பத்தவர் வீடுகட்டும் கனவு நனவாகும் நிலையில் வீட்டுக்கடனை அடைக்க வாடகைவீட்டிற்கே மீண்டும் குடிபோகவேண்டிய நகைமுரணை: “ஒவ்வொரு கல்லாய்” கதையிலும்; முக்கி முக்கி சிரமப்பட்டு தொலைக்காட்சிபெட்டி வாங்கி இயக்கினால், அடுத்து நீங்கள் வாங்க வேண்டியது என்று குளிர்பதனப்பெட்டி விளம்பரம் கண் சிமிட்டி, நடுத்தர மக்களை ஆட்டுவிக்கும் நுகர்வு கலாச்சார மோகத்தை நையாண்டி செய்யும்” அடுத்த “கதை.”
கிராமப்புற மக்களின் பண்புகளை விளக்கும் கதைகள்;
தனது மக்களை, உடல்பொருள் அனைத்தும் கொடுத்து காப்பாற்றி விருட்சமாய் நிமிர்ந்து நிற்கும் காளிப்பிள்ளை என்ற வயதானப் பெண்மணியிடம் குடும்பப் போட்டோவைக் காட்டும்போது, காளிப்பிள்ளையின் கண்கள் தனது உருவத்தையே தேடிப்பார்த்து பார்த்து பிரமிக்கும் உளவியல் பாங்கை, ஆயிரம் தியாகம் செய்தாலும் மனம் தனது சுயத்தை தியாகம் செய்யவில்லை என்ற கிண்டல் எவரும் எழுதாதது.! இதே போல தன்னையும் தம் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்த அப்பத்தா முதுமையிலும், நோயிலும் படும் அவலத்தை பார்க்க சகிக்காமல், அப்பத்தா அலுங்காமல், சிணுங்காமல் மரணத்தை தழுவ வேண்டி மந்தை அம்மனுக்கு பொங்கல் வைக்கும் கையறு நிலையை “வேண்டுதல்” கதை சொல்லும். “அதிசயம்” “கொம்பன்” கதைகள் குறியீட்டு முறையில் உழைப்புசக்திகள் அலைக்கழிக்கப்படுவதை உணர்த்துவன.
தலித்துகளின் செய்நேர்த்தியை,விடுதலை வேட்கையை உணர்த்தும் “துண்டு” கதை
உதிரித் தொழிலாளார்களின் தொழில்திறனை, “சொல்லாமலே” கதையிலும், கடைநிலை மனிதர்களின் பாடுகளை “சவடால்”, “தனித்தனியாய் தாகங்கள்” கதைகளில் பகிரப்படும், எள்ளலும், அந்நியமாதலும் மனதைப் பிசைவன. இப்படியான உணர்வுகளை இங்கு சொல்லப்படாத கந்தர்வனின் பல கதைகளிலும் வாசகர்கள் படித்து உணரலாம்.!
இருகுடும்பப் பகை, சடவுகளுக்கிடையே முகிழ்க்கும் காதலை காவடி எடுக்கும் சடங்குகளின் ஊடே “காவடி” குறுநாவலில் கந்தர்வன் விவரித்திருப்பார்.
இது கந்தர்வன் எழுதத் திட்டமிட்டிருந்த விவசாய சமூகத்திலிருந்து பரிணமிக்கும் புதிய பொறியாளர்களின் வாழ்வை சித்தரிக்கவிருக்கும் நாவலின் மீது பெரும் ஆர்வத்தை நண்பர்களிடையே தூண்டியது. ஆனால் அந்த நாவலை கந்தர்வன் எழுத காலம் கைகொடுக்கவில்லை. அவர் எழுதிய நாடகங்களையும், கட்டுரைகளையும் தொகுக்க இயலாமல் போனது, மற்றொரு இழப்பு! “எழுத்தாளருக்கு இயக்கம் சிறையில்லை சிறகு” என்று மெய்ப்பித்த கந்தர்வன் உடல் மறைந்தாலும் தனது படைப்புகள் மூலம் உரையாடி, புதிய படைப்பாளிகளுக்கு வழிகாட்டிக்கொண்டே இருப்பார்.