மணி மாறன்
இருளும் ஒளியும் முயங்கி கிடந்த குளிர்காலை நேரம். சலசலத்து ஓடும் வாய்க்கால் நீரில் குளித்துக் கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் க.சீ. சிவக்குமாருக்கு பாபநாசத்திலிருந்து பத்தமடைக்கு போகும் பேருந்திற்குள் முதல்நாள் இரவில் வீசப்பட்ட கல்லின் கணத்துக்கம் அகலாமல் இருந்தது. தெக்கத்தி காரங்க கலவரக்காரய்ங்கப்பா என இரவெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தான் சிவா. அப்போது அவன் கதை எழுதத் துவங்கியிருந்தான். எழுத்தாளர்கள் ஷாஜஹான், ஆதவன் தீட்சண்யா இன்னும் சிலரும் குளிர்நீரில் ஏது எதுவோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.
சிரிப்பலைகளுக்கு நடுவே திகைக்கச் செய்யும் அமைதி. மெதுவாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேச ஆரம்பித்தார். “இந்த அமைதியை, அதற்குள் உறைந்திருக்கும் அசாதாரணத்தை எழுதிவிட்டால் போதுமப்பா. வேற என்னத்த பெரிசா எழுதிறப் போறோம்” என்றார். பலரும் இருந்த சபையில் யாரும் கவனிக்காத அல்லது எல்லோரும் கவனிக்கத் தவறுகிற நுட்பங்களை அவர் கண்டுபிடித்துச் சொல்வார். அன்று மட்டுமில்லை. அன்றிலிருந்து நேற்று வரையிலும் இப்படி தன்னைச்சுற்றியிருக்கிற எழுத நினைப்பவனோடு எழுத்தின் சூட்சுமத்தை அவர்களே அறியாது கற்றுத்தருகிற வாத்தியார் அவர்.
முப்பது வருடத்திற்கு முன்பாக நடந்த இந்த காட்சிச் சித்திரம் என் மன அரங்கினில் மிக அழுத்தமாக பதிவாகியிருந்தது. அந்த அசாதாரண பேரமைதியின் நிழலைத்தான் எழுத்தாளர்கள் கதைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். பத்தமடை நீண்ட நாட்களுக்கு இலக்கியத்தை பலருக்கும் அறியத் தருகிற நிலமாக இருந்தது. அக்ரஹாரத்திற்குள் இருந்த அந்த வீட்டின் குளிர்தரையில் எத்தனை பேர், எவ்வளவு பேசியிருப்போம்.
எல்லோருக்கும் அண்ணணாக இருக்கும் பாக்கியம் பெற்றவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். ரொம்ப பெர்சனலாக பேசுவதாக தோன்றினாலும் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனை இப்படித்தான் அறிமுகம் செய்ய முடிகிறது என்னால். சாத்தூருக்கு பக்கத்தில் பதுங்கியிருக்கும் குறுகிராமமான என்.மேட்டுப்பட்டிக்காரர். நாடக மேதை மதுரகவி பாஸ்கரதாஸின் மகள்வழிப்பேரன். எழுத்தாளர் கோணங்கி, மணல்மகுடி மாயன் முருகபூபதியின் மூத்த சகோதரர் என பலரும் சொல்லிச் சென்ற வார்த்தைகளை விட எனக்கு அவரை எல்லோருக்குமானவர் எனச் சொல்வதே சரியென்று படுகிறது.
அவருடைய இலக்கிய அடையாளம் சிறுகதை. அப்படித்தான் அவரை அறிந்த யாவரும் சொல்கின்றனர். அது மட்டுமில்லை அவருடைய ஆளுமையின் சிறு புல் அது. அதைக்குறித்து பிறகு பேசலாம். அவருடைய கதைகளில் இருந்து துவங்கலாம் தவறில்லை. அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வெயிலோடு போய். ‘வெயிலோடு போய்’ கதைக்குச் சமமாக அந்த புத்தகத்திற்கான ரேப்பர் பலநாட்கள் தமிழ்க்கதை உலகில் சிலாகிக்கப்பட்டது. அந்தக் கறுப்புவெள்ளைப் படம் அத்தனை பாந்தமானது. அந்தத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் பேசுவது ஒதுங்கிக்கிடக்கும் கரிசக்காட்டு மனிதர்களின் வாழ்க்கையைத்தான். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களின் மன உலகம் பற்றிய வளமான கரிசல் இலக்கியத்தின் தனித்த பகுதிகள் அவரின் கதைகள்.
தீப்பெட்டி ஆபிசில் அடிப்பெட்டி, மேப்பெட்டி ஒட்டியதால் தடித்திருக்கும் ஆள்காட்டி விரலில் இருந்து உதிர்ந்த சொற்கள்தான் அவரின் கதைகளை எழுதியிருக்கிறது. வெயிலோடு போய், அசோகவனம் எனும் இரண்டு கதைகளிலும் வருகிற மாரி அன்புமயமானவள்.. எந்த எதிர்பார்ப்புமின்றி தன் சக மனிதர்களை நேசிக்கிற மனிதனும் மனுஷியும் அபூர்வமானவர்கள். பசி, மான அவமானம் பார்ப்பதில்லை. பசித்துக் கிடக்கும் மனிதர்களின் துக்கத்தை தன் கதைகள் எங்கும் எழுதியவர் பிரேம்சந்த். தமிழிலும்கூட கு.அழகிரிசாமி எழுதியிருக்கும் கதைகள் துக்கித்துக் கிடக்கும் மனிதர்களின் வாதையைத்தான்.
ஒருவிதத்தில் தோழர் தமிழ்ச்செல்வன் இவ்விரண்டு சிறுகதை மேதைகளின் தொடர்ச்சி என்றும் வைத்துக் கொள்ளலாம். அவருடைய பாவானை கதையில் மிக்சர் வண்டிக்குள் பதுங்கியிருக்கும் லட்டு, ஜிலேபிகளை எடுத்து தின்பதாக பாவனை செய்கிற சிறுவர் கூட்டத்தை காட்சிப்படுத்திய விதமும் கதை நகர்கிற தொனியும் மிக,மிக தனித்துவமானது. கதைக்குள் வருகிற சிறுவர்களுக்கு தங்களின் எதார்த்தம் புரியவே செய்கிறது. அவர்கள் வண்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஜிலேபிகளின் எண்ணிக்கை குறைகிற போது சொல்கிறார்கள். “ஜிலேபி குறையுது. தெட்சிணாமூர்த்தி தெருக்காரங்கதான் வாங்கியிருப்பார்கள். பாவனையாக தின்ற பையனுக்குத் தெரிகிறது, இது நம்ம தெரு பண்டமில்லை.

அய்யா வேலை செய்யும் எண்ணை செக்கில் இருந்து அண்ணன் எடுத்து வரப் போகும் கடலைப்புண்ணாக்குத்தான் நிஜம். நச்சுப்புடுங்கும் அன்றாடத்தை கடத்திட முடியாது, தடுமாறிக்கிடக்கும் கலைமனதுக்காரர்களின் மாதிரி வடிவம் கருப்பசாமியின் அய்யா. ஊரெல்லாம் சுற்றித்திரிகிற மனிதர்கள். கால் பாவ மறுத்து அலைகிற மனிதர்களின் தனித்துவத்தை எழுதிய கதையது. வெயிலோடு போய் கதைத் தொகுதிக்குள் போய் அது காட்சிப்படுத்தும் பொருட்களை எல்லாம் பட்டியல் போட்டேன்.
சினிமாவில் கூட கிராமங்களைப் பார்த்திருக்க வாய்ப்பற்ற குழந்தைகளிடம் வாசித்து ஏதாவது புரிகிறதா என்றேன். அது ஒரு துளிர் இல்லம் எனும் குழந்தைகள் சந்திப்பு மையம். மிக மிக நீண்ட அமைதி இருந்தது. இது நடந்தும் பல பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கிராம வாழ்க்கை குறித்தும் அதன் அசல் தன்மை குறித்தும் இனி வரும் தலைமுறைக்கு நிச்சயம் தெரியப் போவதில்லை. அந்த வகையில் தமிழ்ச்செல்வனின் கதைகள் கதை எனும் நிலையைக்கடந்து அறுபது, எழுபதுகளின் கரிசல் கிராமங்களின் இருப்பைக் குறித்த ஆவணமாகவும் உருமாறியிருக்கிறது.
முதல் தொகுப்பில் இருந்து முற்றிலும் வேறானது ‘வாளின் தனிமை’ எனும் அவருடைய இரண்டாவது தொகுப்பின் கதைகள். மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் இருத்தலியல் உளச்சிக்கல்களே தொகுப்பின் பலகதைகளின் சூட்சுமம். தொண்ணூறுகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட மேஜிக்கல் ரியலிச பாணியில் அமைந்த கதைகளும் உண்டு. வாளின் தனிமை கதையில் கூட வரலாற்றில், அதிலும் குறிப்பாக சுதந்திரப் போரில் பங்கெடுத்தமைக்காக தரப்பட்ட வீரவாளை சோப்புக் கட்டி நறுக்க, கருவாடு, மீன் நறுக்குகிற மொட்டைக்கத்தியாக பாவிக்கிற மூதாய் வாசகனுக்கு என்னவெல்லாமோ கடத்துகிறாள். அதுவரை பெண் உலகம் குறித்துப் பேசிய மொழியில் இருந்தும் கதை கூறும் முறையில் இருந்தும் தனித்துவமான கதைகள் என ஏவாளின் குற்றச்சாட்டுகள் மற்றும் குதிரை வண்டியில் வந்தவன் போன்ற கதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
முப்பது கதைகளையும் தொகுத்து இதமான காற்றும், மெதுவான கடலலையும் எனும் தொகுப்பாக்கியிருக்கிறார். அதன் முன்னுரையில் அவரே சொல்லியதைப் போல அவர் எழுத வேண்டிய கதைகள் அவர் வீட்டுத் திண்ணையில் காத்திருக்கின்றன. எப்ப எழுதப் போற என கதைகள் அவரைகேட்கத் துவங்கிவிட்டன. எங்கெங்கோ போய்த் திரும்பும் அவரை, கதைகள் எங்க? இப்டி ராப்பகலா சுத்திக்கிட்டு அலையிற எனும் அச்சலாத்திக்கு அவர் இப்பிடித்தான் பதில் சொல்லியிருப்பார்…
“எழுத்தாளர் சங்க வேலைக்கு போய்த்திரும்பினேன். நான் மட்டும் எழுதுனா போதுமா?.,அதான் ஊரு ஊரா அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். அவருடைய தலைமையில் நடந்த நெல்லை த.மு.எ.ச. மாநில மாநாடு எழுத்தாளர் சங்க வரலாற்றில் முக்கியமான மைல்கல். அங்கு நான் மட்டுமல்ல, பலரும் ரித்வி கட்டக்கின் மேகதாக தாரா எனும் வங்க மொழிப் படத்தின் வழியாக நவீன சினிமாவின் முகம் அறிந்தோம்.
கோவில்பட்டி இலக்கியக்கார்கள் பலரையும் நடிகராக்கியவர் தமிழ்ச்செல்வன். அவர் த.மு.எ.சவின் பொதுச்செயலாளர் ஆக திருவண்ணாமலை மாநாட்டில்தேர்வு ஆன பிறகுதான் இந்த வீட்டிற்கு பல வாசல் இருப்பதை சங்கமே உணர்ந்தது. அதன்பிறகு எழுத்தாளர் சங்கம் கலாச்சார, பண்பாட்டு வடிவமாக தன்னுருவை மாற்றி அமைத்துக் கொண்டது. புதிய புதிய வாசல்களை திறந்து வைத்தார் அவர்.
நாட்டார் வழக்காறுகளை தொகுத்திடல், உள்ளூர் வரலாறு எழுதுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திட தீவிர பயிற்சிகள். சங்க இலக்கியத்தை கற்க பயிலரங்குகள், திரைப்பட கழகங்கள், ஆவணபட, குறும்பட முயற்சிகள் என சங்கத்தின் எல்லைகளை விசாலமாக்கியதில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு தனித்த பங்குண்டு. அநேகமாக எனக்குத் தெரிந்து எழுத்தாளர் சங்கத்தின் கிளைச் செயலாளர் துவங்கி பொதுச்செயலாளர், தலைவர் என அநேகமாக எல்லா நிலைகளிலும் பொறுப்பு வகித்தவர் தமிழ்ச்செல்வன் மட்டுமே. அவருடைய கலைப்பயணத்தின் அசாத்தியமான பொழுதுகளையெல்லாம் சங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தவர் அவர்.
ஒரு எழுத்தாளரின் புத்தகம் தமிழ்நாட்டில் மூன்று லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது என்றால் எவரும் நம்ப மறுப்பார்கள்.
ச.தமிழ்ச்செல்வனின் அரசியல் எனக்குப் பிடிக்கும் எனும் கட்டுரை நூல் அனைத்து தரப்பாலும் கொண்டாடப்பட்ட புத்தகம். அந்த நூல் துவங்கி தெய்வமே சாட்சி எனும் நூல் வரையிலும் அவருடைய கட்டுரை புத்தகங்கள் புதிய வகைமாதிரிகள். புனைவற்ற எழுத்துகளில் புனைவு ஏற்படுத்தும் அதே ருசியை தன்னுடைய மொழியால் எல்லா நூல்களிலும் நிகழ்த்திக்காட்டியிருப்பார். ‘நான் பேச விரும்புகிறேன்’ என்கிற ச.தமிழ்ச்செல்வனின் கலை ஆளுமைகளைப் பற்றிய நூல் மகத்துவமானது. ஏனோ அந்த புத்தகத்திற்கு அதன் அசுர உழைப்பிற்குரிய வாசக கவனம் கிடைக்கவில்லை. அறிவொளி இயக்க நாட்களின் அனுபவத்தை அவர் எழுதிய ‘இருளும் ஒளியும்’ எனும் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு ஏற்படுத்தும் வாசக பரவசத்தை நிச்சயம் வாசிக்கும் எவருக்குள்ளும் கிளர்த்தும்.
எழுத்திற்கும் தனித்த வாழ்விற்கும் நடுவில் ஒரு துளி இடைவெளிகூட அற்ற வாழ்முறை தமிழ்ச் செல்வனுடையது. அவர் சங்கத்தில் இனிமையான நாட்களில் சமையலில் வீட்டு வேலைகளில் பால்பேதமின்றி பங்கெடுக்க வேண்டும் எனும் தீர்மானத்தை முன் மொழிந்த போது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என அவர் எழுதியது வெறும் புத்தகம் மட்டுமல்ல… அதை சமரசமின்றி வாழ்நாள் முழுக்க கடை பிடிப்பவர். பலரையும் கடைபிடிக்க பழக்கிக் கொண்டிருப்பவர்.
