காஞ்ச அய்லைய்யா | தமிழில்: கவின்மலர் | ரூ. 330
சுரேஷ் இசக்கிபாண்டி
“வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற சொல்லாடல் பின்னணியில் மறைந்திருக்கிறது இந்தியாவில் 2000 ஆண்டுகால அரசியல். ஏனெனில் இங்கு வெண்மை என்பது கடவுளின் நிறமாகவும், கருப்பு என்பது கீழானவர்கள் நிறம், அடிமையின் நிறம், சாத்தானின் நிறம் என்கிற எண்ணம் புராணங்கள், கதைகள் மற்றும் தற்போதைய சினிமாக்கள் மூலமாக தொடர்ந்து இங்கே விதைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இப்படி ஆண்டாண்டு காலம் விதைக்கப்பட்ட இந்தக் கீழான சிந்தனையை அது பேசிய கருத்துக்களையெல்லாம் மறுவாசிப்பு செய்து அதனை உயர்நிலைப்படுத்தவேண்டும் என்கிறார் நூலாசிரியர். ஏனென்றால் இந்தியாவிலும், பூர்வகுடி மக்களின் முக்கிய விலங்காக எருமை மாடு இருந்ததே தவிர நிச்சயமாக அந்த இடத்தில் பசு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறார். ஏனெனில் அவர் உருவகப்படுத்தும் தேசியம், திராவிடர்களின் தேசியம் என்கிறார்.
திராவிடர்களின் குறியீடான எருமையின் மூலமாக பூர்வகுடி மக்களின் [தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்] வருமானம், பொருளாதாரம் என்பது பசுவில் கிடைப்பதை விட அதிகம் என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது, மக்களின் பிரிவினைக்கு காரணமான கடவுள், ஜாதி, வர்ணம், மொழி, விலங்குகள், பறவைகள், உணவு பழக்கவழக்கங்கள் என இவற்றின் அடிப்படை பின்னணியை ஆராய்ந்து அதை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார். இங்கு இந்துத்துவ பார்ப்பனியம் கீழானவை என தீர்மானித்து நிர்மாணம் செய்த அனைத்தையும் மறுவாசிப்பு செய்து அவற்றை உயர்வு பெற செய்வதே நம் அனைவருடைய தலையாய பணி என்கிறார்.
ஜாதி மற்றும் மதக்கலவரங்கள், நாகரீகங்களின் மோதல், சமூக நீதி, ஜாதி, மதத்திற்கான உரிமை, தேர்தல் அரசியல், பண்பாடு, உலகமயமாக்கல் மற்றும் கல்வி ஆகிய ஒன்பது பகுதிகளை உள்ளடக்கியது இந்த நூல்.
90களின் பிற்பகுதியில் வந்த கட்டுரைகள் 2000-த்தின் துவக்க காலங்களில் இந்திய சமூகத்தில் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தின் பெயரில் நடந்தேறிய வன்முறை சம்பவங்கள் குறித்து பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தமிழாக்க தொகுப்பு இந்த நூல் ஆகும்.
ஏனெனில் இங்கு தற்போது பேசப்பட்டு வரும் இந்து தத்துவம் அல்லது இந்து பாசிசம் என்பது பிரித்தாளும் தத்துவமாகவே இருக்கிறது. அதை பின்பற்றுபவர்கள்,”தாங்கள் என்றும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகாரமற்ற ஏழை மக்களை மேலும் ஏழைகளாகவும், படிப்பறிவற்றவர்களாகவும் வைக்க வேண்டுமென்கிற குறிக்கோள்களை அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து முன்வைக்கிறது”. அதனுடைய நீட்சிதான் இன்றைக்கு வன்முறையிலேயே பிறந்து, வன்முறையிலே வளர்ந்து அதிகாரத்தை பிடித்தவர்களான மோடி, அமித்சா கார்ப்பரேட் கூட்டணி ஆட்சியின் கீழ் இன்றைக்கு நாம் அனைவரும் இருக்கிறோம்.
இங்கு அதிகாரத்திற்காக எதையும் செய்ய துணியும் இந்துத்துவ பாசிச சித்தாந்தத்தையும், அதனை பின்பற்றுபவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். அதனோடு சேர்த்து அதற்கான தீர்வையும் இந்த நூலில் முன்வைக்கிறார் ஆசிரியர். மேற்கண்ட அனைத்து ஆதிக்க அடக்குமுறைகளுக்கும் எதிராக தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்றைய அபரிவிதமான அரசியல் சூழ்நிலையையும், அந்நிலையை எதிர்கொள்ளவும் இப்புத்தகத்தை வாசித்து அனைவருடன் பகிரவேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
