முன்னாள் குஜராத் மாநில டிஜிபியும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் தோழர் தீஸ்தா செதல்வாட் ஆகியோரை கைது செய்ததன் மூலம் தனது பாசிஸ கோர முகத்தை மீண்டும் காட்டி இருக்கிறது ஒன்றிய அரசு. நாட்டையே உலுக்கிய குஜராத் மதவெறிப் படுகொலைகள், வெறி ஆட்டங்களை நேரில் ஆய்வு செய்து, உலகிற்கு அம்பலப்படுத்தியவர்கள் அவர்கள். குல்பர்கா சம்பவம் குறித்து இன்று அறியாதவர்கள் உண்டா?
குல்பர்கா சொசைட்டி எனும் இசுலாமியர் வாழ்விடத்தை இந்துத்துவ வெறியர்கள் சூழ்ந்து கொண்டு குழந்தைகள் உட்பட யாரையுமே தப்பவிடாமல் காவல்துறையின் துணையோடு நூற்றுக்கணக்கான அப்பாவிகளை எரித்தே கொலை செய்த அந்த 2002 பிப்ரவரி மாத ஓலங்கள் இன்றுவரை ஓயவில்லை. இப்படி ஒரு சம்பவம் மட்டுமல்ல; குஜராத் மோடி அரசே முன் நின்று நிகழ்த்திய நூற்றுக்கணக்கான பிற கொலைவெறி நிகழ்வுகளையும் தீஸ்தா செதல்வாட்டும் ஆர்.பி. ஸ்ரீகுமாரும் உயிரை பணயம் வைத்து சாட்சியங்களுடன் எழுதித் தொகுத்தார்கள்.
இந்தச் சம்பவங்கள் நடக்கும் முன், அப்பகுதியின் முன்னாள் எம்.பி. ஜாப்ரி, முதல்வர் மோடி உட்பட அரசின் அதிகார மையத்திடம் இவற்றைத் தடுத்து நிறுத்துமாறு மன்றாடியும்கூட, அரசு தனது காவல்துறை மூலம் வன்முறை வெறியும் கொலை வெறியும் பிடித்த இந்துத்துவ வெறியர்களுக்கே துணை நின்றது என்பதை தேசிய மனித உரிமை ஆணையம், குடிமக்கள் தீர்ப்பாயம் என பல்வேறு தேசிய புலனாய்வு அமைப்புகளும் நிரூபித்துள்ளன.
குற்றவாளிகள், கொலையாளிகளை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த போராளி தோழர் தீஸ்தா செதல்வாட்டின் வழக்கை பற்றியே தனி புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றதோடு, இந்த அநீதியான முறையிலான கைது நடவடிக்கையின் மூலம் மோடி அரசு நீதியையும் முடக்கி உள்ளது.
ஆயிரக்கணக்கான அப்பாவி சிறுபான்மை இசுலாமிய இந்திய மக்களின் செங்குருதியின் ஆவண சாட்சியங்களைத் தொகுத்த சமூகப் போராளிகளான, தீஸ்தா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், டிஜிபி அந்தஸ்து பெற்ற மற்றொரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் பாஜக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 2010இல் அவர் பிணங்களைத் தோண்டி எடுக்கிறார் என்று தீஸ்தா மீது குற்றம் சாட்டினர். “ஆம்… உண்மைகளை நான் தோண்டி எடுக்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார் அந்த வீராங்கனை.
அவருக்குத் தரப்பட்ட சோதனைகள் எண்ணில் அடங்காது. மோசடியாக நிதி திரட்டியவர்; பொய்சாட்சி தயாரித்தவர் என அடுத்தடுத்த அவதூறுகள் யாவற்றையும் தகர்த்தவர் அவர். இப்போது நேரடியாக அவரது குரலை முடக்கி விட்டார்கள். பாசிஸம் உலகில் எங்குமே வென்றதாக சரித்திரம் இல்லை. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் இந்தக் கைதுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எழுத்துரிமை, பேச்சுரிமை, செயல்பாட்டு உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாளும் எடுத்து வரும் பாஜகவுக்கு எதிராக, ஒன்றிய அரசுக்கு எதிராக, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இதில் கரம் கோர்க்கும் அனைவருக்கும் நன்றி.
