ச.சுப்பாராவ்
புத்தகக் காதலர்களின் கல்யாண குணங்களை எல்லாம் பட்டியலிட்டு எழுதினால் அது எப்படி இருக்கும்? Daniel Gray எழுதிய Scribbles in the Margin என்ற புத்தகம் போல் இருக்கும். புத்தகக் காதலர்கள் எல்லோரும் வாசிக்கும் போது தத்தம் முகத்தையே அந்த நூலில் பார்க்கும்படியான அருமையான, ரசனையான எழுத்து.
புத்தகக் காதலர்களைக் கிளர்ச்சி கொள்ளச் செய்யும் புத்தகம் தொடர்பான சுமார் 50 விஷயங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள அழகான சின்ன சின்ன கட்டுரைகள். சில கட்டுரைகள் முற்றிலும் அமெரிக்க கலாச்சாரம் சார்ந்தவை என்பதால் நம்மால் அதில் நம்மை இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது. மற்ற அனைத்துக் கட்டுரைகளும் உலகம் முழுக்க உள்ள புத்தகக் காதலர்களின் நடத்தை, எண்ணம், ஆசைகள், விநோத பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உள்ளது உள்ளதுபடி காட்டுபவை. இந்த ஆள் நம்மைப் பார்த்து தான் இதை எழுதியிருக்கிறானோ என்று நினைக்க வைப்பவை.

ஒரு புத்தகக் காதலனுக்கு எவையெவை எல்லாம் கிளர்ச்சி தரும் என்பது பற்றிய அந்தப் பட்டியல்தான் எத்தனை அழகு! பழைய புத்தகங்களில் இன்னாருக்கு அன்புடன் என்று எழுதப்பட்டிருக்கும் வாசகம். அது பற்றிய கட்டுரையில் அவர் சொல்வது மிக முக்கியமானது. யாருக்கு புத்தகம் தந்தாலும் ஏதேனும் ஒரு வரி எழுதிக் கொடுங்கள். அந்த வரி அவருக்கு மட்டுமல்ல. அவர் பரம்பரையில் பிறக்கப் போகும் ஒவ்வொரு குழந்தைக்கும் அது மகிழ்ச்சியைத் தரும் என்கிறார். தெரிந்தவர் வீட்டுக்குப் போனதும் அவர்களது புத்தக அலமாரியை நோட்டமிடுவது பற்றி ஒரு கட்டுரை.
அலமாரியில் புத்தகங்களின் முதுகில் தலைப்புகளைப் படிக்க தலையைச் சாய்த்தவாறே நின்று நிஜமாகவே எனக்கு கழுத்து சுளுக்கிக் கொண்டதுண்டு. புக்மார்க்காக கண்டவற்றையும் வைப்பது. என்றேனும் ஒரு நாள் ஒரு புத்தகத்தை எடுக்கும்போது அதில் புக்மார்க்காக இருக்கும் ஒரு கண்டன ஆர்ப்பாட்ட நோட்டீஸ், நண்பனின் கல்யாணப் பத்திரிகை, என்னென்ன வாங்கி வரவேண்டும் என்று மனைவி சொல்லிவிட்டதை மறக்காமல் இருக்க, எழுதி வைத்துக் கொண்ட பட்டியல்…. புதிய எழுத்தாளர் ஒருவரைப் படிக்கும் போது இந்த ஆள எப்படி இத்தன நாள் கவனிக்காம இருந்தோம் என்று புலம்புதல். தலைப்புக் கட்டுரையான மார்ஜின் கிறுக்கல்கள். மார்ஜினில் ஒரு கட்டுரையே எழுதும் புத்தகக் காதலர்களை நான் அறிவேன்.
படுத்துக் கொண்டே படிப்பது… உலகில் இதை விட இன்பம் வேறொன்றுமில்லை. ஒரு நாளில் எத்தனை எத்தனையோ எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். நேர் பஸ்ஸை விட்டுவிட்டு, 2-3 பஸ் மாறிப் போக நேரிடுதல், செருப்பு அறுந்துவிடுதல், சாப்பாட்டு டப்பாவை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டுச் செல்லுதல், வீட்டுக்கு ஹோம் ஒர்க்காக கொண்டு வந்த அலுவலகக் கோப்பை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்து, ஹோம் வொர்க் செய்தும் பலனின்றி வீணாகுதல், டிராபிக் ஜாம், கடும்பசி அல்லது தலைவலி நேரத்தில் அலுவலகக் கூட்டம், நம்மை நிறுத்தி வைத்து கேள்வி கேட்பது, வீட்டில் வாங்கி வரச் சொன்னவற்றை மறப்பது, குழந்தைக்கு உடல்நலக் குறைவு, பாத்ரூம் குழாய் உடைந்து போவது… இந்த எல்லாமே படுக்கையில் சாய்ந்து 10 பக்கம் படிப்பதில் சரியாகும். அப்போது உங்கள் வீட்டுக் கதவு மூடப்பட்டு விடும். அந்த நாளே மூடப்பட்டுவிடும்.
உலகமே இயக்கத்தை குறைத்துக் கொள்ளும். உங்கள் புத்தகமும், உங்கள் கண்கள் மட்டுமே திறந்திருக்கும். இன்றைய நாள் முடிந்து விட்டது. நாளை இன்னும் வரவில்லை. முடிந்த நாள் உங்களை உங்கள் புத்தகத்தோடு விட்டுவிட்டு விடை பெற்றிருக்கும். புத்தகத்துடனான அந்தத் தனிமை அன்றைய துயர், ஏமாற்றம், அவமானம், எல்லாவற்றையும் தீர்க்கும், என்கிறார் டேனியல் கிரே.
பழைய புத்தகக் கடை செல்வது. இந்த அனுபவத்தை அவர் எழுதுவதைப் படித்தால் எல்லா ஊர்களிலும் பழைய புத்தகக் கடைக்காரர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்களே என்று தோன்றும். அந்தக் கடைக்காரரிடம் நீங்கள் 27 வருடமாக புத்தகம் வாங்கினாலும், தெரிந்தவர் என்று சிரிக்க மாட்டார். ஒரு தனி உலகில் இருப்பார். ஆனால் நாம் கேட்பதை 2-3 மணி நேரம் ஆனாலும் தனது கடையின் ஏராளமான அந்த புத்தக அடுக்குகளில் தேடி எடுத்துவிடுவார். ரொம்ப சிரமப் படவேண்டாம். நான் ஆன்லைனில் கிடைக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறேன் என்று நாம் சொல்வதை தமது தொழிலுக்கு விடப்பட்ட சவாலாக நினைத்து, நம்மகிட்ட இல்லாதது ஆன்லைன்ல மட்டும் எப்படி இருக்கும்? என்பார்.
புத்தகத்தை படித்து முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டு குற்ற உணர்வு கொள்ளல், குழந்தைக்குப் படித்துக் காட்டுதல், போகவே வாய்ப்பில்லாத இடம் பற்றிய பயண நூலை வாங்கி வருதல், புத்தக வாசனை என்று எல்லோரும் சொல்லும் விஷயங்களை இவரும் சொல்கிறார். கூடவே வேறு சில நுட்பமான உணர்வுகள் பற்றியும் எழுதியிருக்கிறார். புதிதாய் வாங்கிய புத்தகத்தை நம்மைப் போன்றே இருக்கும் நண்பன் கண்ணில் படாமல் ஒளித்து வைத்தல். ஆஹா…. இதை நான் எத்தனையோ முறை செய்திருக்கிறேன். சில புத்தகங்களை கண்ணனுக்கு முன்னால் நான் படித்து சாதனை புரிய வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணங்கள் இருந்த காலத்தில் அவன் வரும் நேரத்தில் புத்தகத்தை மறைத்து வைப்பது என் வழக்கம். அதை டேனியல் கிரே எங்கோ ஒளிந்து நின்று பார்த்திருக்கிறார். இது மாதிரி அவர் என்னை ஒளிந்து நின்று பார்த்து எழுதியவை நிறையவே இருக்கின்றன.
புத்தக அலமாரியை அடுக்க ஆரம்பித்து அரை நாளை வீணாக்குதல்… சுற்றிலும் புத்தகமாக இறைந்து கிடக்க, ஏதேனும் ஒன்றை படிக்க ஆரம்பித்து அதில் மூழ்கிவிடுதல், புத்தகத்தை படிக்கும் போதே கண் கலங்குதல். போன மாதம் கூட வழக்ககறிஞர் சுமதியின் கல் மண்டபம் படிக்கும் போது இப்படித்தான் ஆனது. தொடரின் அடுத்த புத்தகத்திற்காகக் காத்திருப்பது. கென் ஃபாலெட்டின் சென்சுரி ட்ரைலாஜி வந்த சமயத்தில் நான் 10 நாட்களுக்கு ஒரு முறை அவரது இணைய தளத்தில் அடுத்த புத்தகம் பற்றிய அறிவிப்பு இருக்கிறதா? என்று பார்த்தேன்.
புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்து ஒரு நல்ல எழுத்தாளரை அடையாளம் காணுதல். நான் விரும்பிப் படிப்பது லாரி பாண்டின் புத்தகங்களையே என்று டாம் கிளான்சி சொன்ன ஒரு வார்த்தைக்காக லாரி பாண்டின் புத்தகங்களை நான் தேடிப் பிடித்து வாங்கியது டேனியல் கிரேவிற்குத் தெரிந்திருக்கிறது. அலமாரியில் வைக்க முடியாத பெரிய அளவிலான புத்தகம், அல்லது உங்கள் சக்திக்கு மீறிய ஒரு விலையுயர்ந்த லக்சுரி மாடல் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்வது. சரியாகச் சொன்னீர்கள் டேனியல்.
சு.வெங்கடேசனின் சந்திரஹாசத்தை நான் இப்படித் தான் வாங்கினேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மற்றொன்று புத்தகம் வாங்கி வரும் நாளன்று வீட்டில் நடக்கும் உரையாடல். திரு. கிரே புத்தகம் வாங்கி வரும் நாளில் திருமதி டேனியல் கிரேவுடன் நடக்கும் உரையாடல் எனக்கும் காயத்ரிக்கும் அவ்வப்போது நடப்பதுதான்.
“என்ன புக் வாங்கிட்டு வந்தாச்சா?” “சும்மா 120 ரூபாதான்”. “இத ரொம்ப நாளா தேடிட்டே இருந்தேன். அதான் வாங்கினேன்.” “சின்ன வயசுலேர்ந்து இத வாங்கணும்னு ரொம்ப ஆச. அதான் வாங்கினேன்.” “ஏற்கனவே எங்கிட்ட இருந்ததுதான்… இந்த கண்ணன் எடுத்துட்டுப் போனான். திருப்பித் தரவே இல்ல. அதான் வாங்கினேன்.” “இந்த ரைட்டரோட எல்லா புக்ஸும் எங்கிட்ட இருக்கு. இது மட்டும்தா இல்ல. அதான் வாங்கினேன். இப்படி நான் சாக்கு போக்குகள் சொல்லும் போது “ஒன்ன திருத்தவே முடியாதுடா” என்பது மாதிரி காயத்ரி பார்க்கும் அந்தப் பார்வை அந்தப் புத்தகம் தரும் மகிழ்ச்சிக்கு இணையானது. கிரே வீட்டிலும் இந்த சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
இன்னும் நிறையவே சொல்கிறார் அவர். கதையில் பெரிய திருப்பம் வரும் போது உணர்ச்சி வசப்படுவது, அலமாரியில் இடமின்றி, கிடைத்த இடத்தில் புத்தகத்தை திணித்து வைப்பது, இந்த புத்தகத்தை படி என்று நண்பனையோ, மகளையோ, மனைவியையோ விடாமல் நச்சரிப்பது, பொதுப் போக்குவரத்தில் படித்துக் கொண்டே செல்வது, புத்தகத்தில் வரும் இடத்தை அட்லஸில் தேடுவது, புத்தக அலமாரியைப் பெருமையாக அவ்வப்போது பார்த்துக் கொள்ளுதல் என்று வரிசை வரிசையாய் சொல்லிக்கொண்டே போகிறார்.
இந்த ஒவ்வொரு தலைப்பு பற்றியும் அவர் ஓரிரு பக்கங்கள் பிரமாதமாக எழுதியிருக்கிறார். என்றாலும், அவர் எழுதியது முழுக்க மறந்து போய் அது தொடர்பான நம் அனுபவம் தான் முன்நிற்கிறது. 2 – 3 நாட்கள் விடுமுறை வரும் போது படிப்பதற்காக ஒன்றை அதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக நான் செய்து வருவது அது. பள்ளி நாட்களில் முழுப் பரீட்சை லீவிற்கு நிறையவே வாங்கி சேர்த்து வைத்ததும் நினைவுக்கு வருகிறது. அது போன்றதுதான் பஸ்சில், ரயிலில் பக்கத்து இருக்கைக்காரர் படிப்பதை சைடிலிருந்து எட்டிப் பார்த்து படிப்பது பற்றிய ஒரு கட்டுரை.

என்ன புத்தகம், யார் எழுதியது என்றே தெரியாமல், தலையும் இன்றி, வாலும் இன்றி அவர் படிக்கும் அந்த ஏதோ ஐந்தாறு பக்கங்களை நாமும் படிப்பது வாசிப்பு இன்பத்திற்காக அன்றி வேறென்ன? அதிலும், நான் அந்தப் பக்கத்தை படித்து முடித்துவிட்டு பத்து நிமிடம் காத்திருந்த பிறகு தான் அவர் படித்து முடித்து அடுத்த பக்கத்தை திருப்புவார். நமக்கு பொறுமையே இல்லாமல் கோபம் கோபமாக வரும். மற்றொரு கட்டுரை சிறுவயதில் படித்து ரசித்தவற்றை இப்போது மீண்டும் வாங்கி ரசித்துப் படிப்பது பற்றியது.
பிறந்த நாள் பரிசுக்கு புத்தகம் தேடும் படலம் பற்றி ஒரு கட்டுரை. அது அப்படியே எனது அல்லது நண்பன் கண்ணனின் அனுபவம். கண்ணனின் பிறந்த நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே புத்தகத் தேர்வு ஆரம்பமாகிவிடும். அந்த புத்தகம் அவன் படித்ததாக இருக்கக் கூடாது. அதே சமயம் அவன் வாங்க ஆசைப்படுவதாக, ஆனால் இன்னும் வாங்காததாக இருக்க வேண்டும். ஒரு புதிய படைப்பாளியை அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு 2-3 புத்தகங்களை இறுதிப் பட்டியலில் வைத்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் அவன் நான் குளிக்கும் போது, பாத்ரூம் போகும் போது மட்டும் தான் கூட வரமாட்டான் என்பதால், அவனுக்குத் தெரியாமல் வாங்குவது பெரிய கஷ்டம். அதே போல் வாங்கிய எதுவும் அவனது பிறந்த நாள் வரை அவன் கண்ணில்படாமல் பாதுகாப்பது அதைவிட சிரமம். புத்தக அலமாரியில், மேஜையில் எங்கும் வைக்க முடியாது. துணிமணி வைக்கும் பீரோவில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது. இந்த இறுதிப் பட்டியலில் இருக்கும் புத்தகங்களுக்கு அவனது பிறந்த நாள் வரை எந்த குழுவிலும் விமர்சனம் எழுத முடியாது. எழுதினால் கண்டுபிடித்து விடுவான். டேனியல் கிரே இந்த சந்தோஷத்தை அழகாகச் சொல்கிறார்.
இந்தக் கட்டுரைகளில் நடுநடுவே அவர் சொல்பவை எல்லாமே பொன்மொழிகள்தான். ஓரிடத்தில், சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்கும் போதும் வாசகன் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பார். மற்றொரு இடத்தில், அன்றாடத் துயரங்களிலிருந்து தப்பி ஓடுவதற்கான கதவு வாசிப்பு என்பார். அது எப்படி, எதனால் என்பது தான் அவருடைய அத்தனை வரிகளும். மற்றொரு இடத்தில் அவர் என் பெற்றோர் காலத்தில் யாருமே பணம் கொடுத்து புத்தகம் வாங்கியதாகத் தெரியவில்லை. எல்லோரும் எப்படியோ ஓசியிலேயே படித்தார்கள் என்கிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நான் வேலைக்குச் செல்லும் வரை சொந்தமாக ஒரு புத்தகம்கூட வாங்கியதில்லை. ஆனால் ஓசியிலேயே நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தவன். புத்தகத்தின் பக்கங்கள் நம்மை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் மந்திரக் கம்பளம் என்று ஒரு இடத்தில் சொல்கிறார். பழைய புத்தகம் பழைய விஸ்கி மாதிரியாம். பழமை ஏற ஏற மதிப்பு ஏறுமாம்.
எல்லாவற்றையும் விட எனக்கு பிடித்த வரி இதுதான். “புத்தகம் என்பது காகிதமும், மையும் மட்டுமல்ல. அதே போல் வாசிப்பு என்பதும் பொழுது போக்கு, அறிந்து கொள்ளும் முயற்சி என்பவற்றிற்கும் மேலான வேறொன்று” என்கிறார். வாசித்தால் மட்டுமே இதன் உண்மையான பொருளை உணர முடியும்.
