வெ.பிரித்திகா
மனித உயிரும் விலங்குகளைப் போல தனக்கான உணவை வேட்டையாடி உண்ணும் முறையைக் கையாண்டனர். அதனோடு காலப்போக்கில் தங்கள் வசதிக்கு ஏற்ப உணவை உற்பத்தியும் செய்து கொண்டனர். விதைத்தல், கிழங்கு அகழ்தல், வேட்டையாடுதல் போன்று தங்களுக்கான உணவைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். மேலும் அந்த உற்பத்திக்கு விலங்குகளை வேலையாட்களாக மாற்றினர். அவர்கள் வசதிக்கேற்ப அவைகளை மாற்றி உணவளித்து வளர்த்தனர். மனிதர்கள் விலங்குகளை நேசித்து அதனோடு ஒன்றி இயைந்த வாழ்வை ஏற்படுத்திக் கொண்டனர்.

இன்றைய நிலையில் அத்தகைய செயல்முறைகள் பரிணாம வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இன்று, இயந்திரங்கள் அவ்விடத்தை நிறைவு செய்தது. இதனால், இயற்கையோடு இயைந்த வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது. ஆனாலும் இயற்கை கைவிடுவதாக இல்லை. “ஆயர்கள்” வரலாற்றுப் பார்வையில் ஆதாரங்களோடு கால்நடைகள் எங்கெல்லாம் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வந்தது என்பதனை பற்றிய அறிவை இந்நூல் வழிப் பெறலாம்.
“மனிதர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ தலைப்பட்ட போது குடியிருப்புகளையும் புழங்கு பொருளையும் உருவாக்கிக் கொண்டனர்.” ஆயர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தனர். அந்தந்த ஊர்களைப் பற்றிய பதிவையும் காணமுடிகிறது. கால்நடைகளுக்கான போர்கள் புறப்பொருள் வெண்பாமாலையில் ஆநிரைகளைக் கவர்தல், அதை மீட்டு வருவதற்கு போரிடுதல் என்பதனைப் பற்றிய செய்தியைக் காண முடியும். முதல் அத்தியாயத்தில் இந்தியா முழுவதுமான கால்நடை வளர்த்தல் அதில் ஆரியர்கள் முதல் எந்தெந்தக் குழுக்கள் எத்தகு முறையைப் பின்பற்றினார்கள் என்பதனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, தக்கணத்து மேய்ச்சல் குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தனித்ததொரு ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
ஆயர் இலக்கிய வரலாறு என்பது மிக நீண்டது. ஆயர்களின் கால நிலைகள், இப்படி ஒரு குழு வாழ்ந்ததற்கான அடையாளங்களையும் அவர்களின் நடைமுறைகளும் அவர்கள் எப்படி தங்களது கால்நடைகளை முறைப்படுத்தி வளர்த்தனரென்றும் இலக்கியங்கள் வாயிலாக நம்மால் யூகிக்கவும் அறியவும் முடியும்.
“ஆயர்வேட்டுவர் ஆடுஉத்திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும்உளரே”
-தொல்காப்பியம்
தொல்காப்பியர் திணைக்களுக்கு உரிய முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகியனவை வகுத்துள்ளார். சங்ககால தமிழக ஆயர்கள் அத்தியாயத்தில் ஆயர்களின் வாழ்வியல் முறையை அறிந்து கொள்ள முடியும். உட்தலைப்புகள் அடங்கி ஒவ்வொன்றும் ஒரு காலத்தோடு கூடிய இலக்கியங்களை முன்வைத்து அதில் வழங்கப்பட்டிருக்கும் ஆயர்களின் முறைகளை விளக்குகிறது. அவர்களின் குழு வாழ்க்கை தொடங்கி குரவை ஆடல் வரை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளார். மேலும் அவர்களின் வரலாற்றை முழுவதுமாக அல்லது அவர்களின் படிநிலைகளை அறிந்து கொள்ள இந்த உட்தலைப்புகள் மிகவும் பயன்படக் கூடியதாக அமைகிறது. அவர்கள் வழிபடும் தெய்வங்கள் மற்றும் விருந்தோம்பல் நிலை அந்தந்த காலங்களில் அவர்களது மேய்ச்சல் முறை அத்தனையும் வழிகாட்டுகிறது.
“கல்லாக் கோவலர் கோவில் தொட்ட ஆணையர் பத்தல்”
என்று ஐங்குறுநூறு பாடல் அடிகள் கோடை காலங்களில் கால்நடைகளுக்கான நீர் எவ்வளவு முக்கியத் தேவையை வலியுறுத்துகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான செய்திகளைத் தெரிவித்து கால்நடைகளுக்கு என்றே வறட்சியான நிலத்தில் ஒரு கோலினால் பள்ளத்தைத் தோண்டி ஊற்று நீரைப் பரித்து அவர்களுக்கு அருந்த கொடுப்பார் என்பதே ஐங்குறுநூறு தெரிவிக்கும் செய்தி. இதன் பொருட்டு இந்த அத்தியாயம் முழுமையும் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் கால்நடைகளைப் பற்றிய செய்தியைத் தெளிவுபடுத்தி ஒரு வரலாற்று ரீதியாக நம்மை இட்டு செல்கிறது.
சங்க காலத்தில் தமிழக ஆயர்கள் என்னவெல்லாம் செய்து தங்களது நிலங்களை, உணவுகளை, வேலைகளைக் காத்து அவர்களுக்கான உணவு அளித்து அதன் பின்னர் தனக்கான ஒரு தேவையைப் பூர்த்தி செய்து வந்தனர் என்பதையும் புலப்படுத்துகிறது. அவர்களின் தோற்றம் காலில் செருப்பு அணிவது முதல் கைகளில் கோல், பாதுகாப்புக்காக கொள்ளிக் கட்டைகள், தோல் படுக்கை முதலாக அத்தனையும் நற்றிணை அகநானூற்றில் காண முடியும் என்பதனையும் ஆய்வாளர் தெளிவு படுத்தியுள்ளார்.
ஆயர்களும் கிருஷ்ணனும்:
கிருஷ்ணனுக்கும் ஆயர்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். கிருஷ்ணர் யார் என்பதே முதல் கேள்வியாக அமைகிறது. அவரை அவர்களோடு ஒப்பிட்டு ஒரு புதிய பார்வையைத் தந்துள்ளார். ஆயர்களைப் பற்றி அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பதனை பற்றிய கருத்து வேறுபாடுகளைக் காண முடியும். கிருஷ்ணனைப் பல இடங்களில் ஒப்பிட்டு தமிழகத்தில் கிருஷ்ணன் புராண இதிகாசங்களில் என்னவெல்லாம் குறிப்பிடப்படுகிறான் என்பதையும் நோக்கத்தக்கது.
ஒரு நூலுக்கான மிக முக்கியத்துவம் சமகால ஒப்பீடுதான். அவ்வகையில் எந்த நூல் பயணிக்கிறதோ அது ஒரு புதிய தளத்தை நோக்கி நகர்கிறது என்று அர்த்தம். அதுபோலத்தான் இதில் ஆறாவது அத்தியாயம் தற்காலத்தமிழ் ஆயர்கள் நம்மை இட்டுச் செல்கிறது. இன்றைய நிலைப்பாடு பற்றி அறியாமல் ஒரு பயணத்தை மேற்கொள்கிறோமானால் அந்தப் பயணம் விரைவில் முடியக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் நிலைப்பாடு இன்றும் அன்றும் எவ்வாறு பயணித்து வந்துள்ளது மற்றும் அதன் பரிணாம கோட்பாடுகளை அறிந்தோமானால் நம் பயணம் நிச்சயமாக ஒரு புதிய தடத்தைப் பதித்து விடும்.

தமிழகத்தில் வடுகர்கள் பற்றி இலக்கிய வழி செய்தியைச் சான்றுகள் மூலம் தந்திருப்பதைக் காணலாம். ஆயர் குழுவில் ஒரு முக்கியமான கொல்லர்களை பற்றிய செய்தியையும் அவர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள் என்பதும் அவர்கள் குடியிருப்புகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக இயற்கை வழி செய்தியையும் அதன் சான்றுகளும் வைத்தே அவர்களின் கால நிலையை நம்மால் யூகிக்க முடியும்.
குறும்பர், கொல்லர், கோபால் அஹிர்கள், அவர்களது மொழி, மண உறவு, பிறப்பு சடங்கு, பற்றிய முழுமையான கருத்துகளைத் தூண்டலிட்டு பிடிக்கிறது.
ஆயர்கள் பற்றிய முழுமையான நுணுக்கமான தகவல்களைப் பெற இந்நூல் வழிவகுக்கிறது. அவர்களைப் பற்றிய முழு தொகுப்பையும் அதுமட்டுமல்லாது இலக்கியம் மற்றும் ஓவியங்களையும் ஆய்வர் கருணாகரன் பதிவு செய்துள்ளார். நிலையான சான்றுகளை வைத்து இரு வகையாக ஆயர்களை பிரித்துள்ளார். ஒன்று இந்தியா முழுவதும் குடியிருக்கும் ஆயர் குழுக்களையும், தமிழக ஆயர்களையும் சான்றுகளோடு இணைத்துள்ளார்.
இரண்டாவதாக அவர்களின் நிலைப்பாடு, வாழ்வு முறை ஆயர்களின் குழு அமைப்பு, பெரும்பான்மையாக தற்காலத்தில் இருக்கும் ஆயர்களைப் பற்றிய செய்தியையும் “ஆயர்கள்” நமக்கு வழங்குகிறது. ஆயர் குலத்தைக் கால அடிப்படையில் வரலாற்று நோக்கில் அணுகி நம்மையும் அதன்வழி ஒரு தெளிவைப் பெற செய்கிறது. இதற்கு, அதாவது ஆய்வாளர் கருணாகரனுக்குப் பெரிதும் கை கோர்த்தது இவரது கள ஆய்வுகளே. ஆம். இந்நூல், “உள்ளதன் நுணுக்கமே ஆய்வு” என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
