மோகனப் பிரியா. G
அறிவுக்கு ஆயிரம் கண்கள் – இந்து தமிழ்திசையில் தொடராக வந்த போதே ஹேமபிரபாவின் அறிவுக்கு ஆயிரம் கண்களை வாசித்திருக்கிறேன். புத்தகமாக வெளியிட்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
பள்ளிக்குழந்தைகளுக்கும் இளம் பெற்றோர்களுக்கும் அத்தியாவசியமான நூல்களுள் ஒன்று இது.
பெரும்பாலும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பதில் ஒருவித சலிப்பு தட்டி விடுவதற்கான காரணம் உண்மையில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடையே தக்க பதில்கள் இல்லாமலிருப்பதும் அல்லது தெரியாமல் இருப்பதுமாகத்தானிருக்கும்.

அப்படி சிறு பிள்ளைகளின் மனதிலிருந்து கேள்விகள் கேட்டு அவர்களுக்குப் புரியும் வண்ணம் பதிலுரைப்பதோடு இறுதியில் அர்களுக்குப் புதிதாய் சிலதை அதனின் அறிவியல் நீட்சியை அறிமுகம் செய்திருக்கிறார் ஹேமா. கடுகு பொரிவதற்கும் ஏவுகணைக்கும் தொடர்பு இருக்கிறதென்றால் ஒருகணம் புருவம் உயர்தத்தானே செய்வோம்? அப்படி சுவாரஸ்யமான கேள்விகள் மூலம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது இந்நூல்.
மெழுகுவர்த்தியில் திரி எரிவதால் வெளிச்சம் கிட்டவில்லை மெழுகுதான் எரிகிறதென்பது உண்மையில் கிடைப்பதற்கரிய செய்திதான்.
ஒரே புத்தகத்தில் உந்துவிசை, வைரஸ், நியூட்டனின் முதல் விதி, அழுத்த மின்சாரம், பிரேசில் நெற்று விளைவு, மின்காந்தம், பிளாஸ்மா என பல்வேறு அறிவியல் கருத்துக்களை கடுகு, மிளகு, நடை, கல்லை நூலில் கட்டி கையில் சுற்றுதல் என அன்றாட வாழ்வின் உதாரணங்களோடும் ஏவுகணை, செயற்கைக்கோள், குமிழி வலை முறையில் மீன் பிடித்தல் என அறிவியலின் பயன்பாடுகளோடும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஓரிடத்தில் துணிகாய வைப்பதிற்கும் விராட் கோலி பேட்டிங்கா பவுலிங்கா என்று முடிவு செய்வதற்கும் ஒரே அறிவியல் காரணம் என்று வியக்கையில், மற்றோரிடத்தில் மெழுகுவர்த்தி எரிவதும் வேரிலிருந்து நீர் இலைகட்குச் செல்வதும் தந்துகிக்கவர்ச்சியால்தான்(Capillary action) என்று தெளிவு கிட்டுகிறது.
மேகங்களை இரசித்திருப்போம். கீற்று, தாழ் அடுக்கு, திரள் முகில் என்று நாம் பகுத்திருப்போமா? வான் மேகங்களே
வில் உலவிப்பாருங்கள்-முகிலியல் (Nephology) பற்றிப் பேசுகிறது புத்தகம்.
விளக்கு எரிகிறது மட்டுமல்ல அது வெள்ளொளிர்கிறதும் கூட. இப்படி விளக்கின் வண்ணங்களின் ஜாலங்களோடு நாம் பார்த்த வாட்டர் கலர் ஓவியங்களின் பின் உள்ள காபி வளைய விளைவையும் நாம் அறிய நேருகிறது.

ஆய்வகங்கள், கருவிகள், இயற்கையின் நியதிகள் பற்றிப் பேசுமிடத்தில் இன்னும் இந்தியாவில் மாதவிடாய் தூய்மையற்றது எனும் தவறான கற்பிதம் நிலவிவருகிறது என்று ஆசிரியர் சுட்டிகாட்டுகையில் ஒரு அறிவியல் மனப்பாங்கிற்கான தேடலும் அதன் அத்தியாவசியமும் உணர்த்தப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு இடத்திலும் கொடுத்துள்ள ஆங்கிலக் குறிப்பு தேடலுக்கான மற்றுமொரு வினையூக்கி.
அறிவியல்சார் தமிழ் நூல்களின் தேவையை அது கொடுக்கும் அறிவின் தெளிவை இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் நிச்சயம் உணர்ந்திடுவர்