எஸ். வி. வேணுகோபாலன்
அண்மையில் ஒரு நூல் அறிமுகம், ஓய்வு பெற்ற வங்கி தோழர்களது சந்திப்பு ஒன்றில் கேட்க வாய்த்தது. சென்டிரல் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர் சண்முகம், சுதீஷ் மின்னியின் ‘நரக மாளிகை’ புத்தகம் பற்றி உள்ளத்தைத் தொட்டுப் பேசும் வண்ணம் எடுத்துரைத்தார். இதற்கு முன் எங்கும் இலக்கியக் கூட்டங்களிலோ, அப்படியான தளங்களிலோ அவர் பேசி அறிந்தது இல்லை. முதல் அனுபவமாகத் தான் இருக்க வேண்டும்.
அருமையாக அமைந்த அவரது செறிவான அறிமுகம் பூரிப்பு அடைய வைத்தது. அந்தப் புத்தகம் அவரை வேறு எப்படியும் பேச இயலாதபடி செய்திருக்கிறது. தனது இதயத்தை ஒரு புத்தகம் தேர்ச்சியான வாசகரிடம் ஒப்படைக்கிறது. இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கி வாசித்த வண்ணம் இருக்கிறார் அவர்.
மத்திய சென்னை இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் அருண் குமார் (சீனாவின் வரலாறு), யுவ சாந்தி (தொழிலாளர் குடும்பம்) இருவரும் புத்தகங்களைச் சிறப்பாக அறிமுகம் செய்த கூட்டத்தில் பங்குபெற்ற பேராசிரியர் ஜெகஜீவன் ராம், கவிஞர் சைதை ஜெ இருவரும் இந்த இளம் வாசகர்களை உள்ளார்ந்த முறையில் பாராட்டி மகிழ்ந்ததை, பரிசல் சிவசெந்தில்நாதன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பிரியா விஜயராகவன் அவர்களது இரண்டாவது படைப்பான ‘ஆட்டுக் குட்டியும் அற்புத விளக்கும்’ நாவல் விமர்சன நிகழ்வு ஒரு கலந்துரையாடலாகவும் உருவெடுத்த எளிய கூட்டத்தில் திரை இயக்குநர் சந்திரா தங்கராஜ், முனைவர் அருள், தோழர் எம் ராஜேஸ்வரி பகிர்ந்து கொண்ட உணர்ச்சி பூர்வமான பிரதிபலிப்புகள் சிறப்பானவை.
‘புக் டே’ இணையதளத்தில் இளம் தோழர்கள் உள்ளிட்டு நிறைய அன்பர்கள் ஆர்வத்தோடு நூல் அறிமுகம் செய்து வருகின்றனர். பல்வேறு இலக்கிய அமைப்புகள் புத்தக வாசிப்பை வெவ்வேறு உத்திகளில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுபாஷினி அலி, ‘கனவு தேசமும் களவு போகும் சுதந்திரமும்’ என்ற தலைப்பில் சென்னையில் அண்மையில் சிறப்புரையாற்றிய கருத்தரங்கில் அவருக்கு நினைவுப் பரிசாக, அய்ஜாஸ் அகமது – விஜய்பிரசாத் உரையாடலின் தொகுப்பான NOTHING HUMAN IS ALIEN TO ME (மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – தமிழில் ராஜ சங்கீதன்) புத்தகத்தை வழங்கியபோது, ‘இதை நான் வாசித்துவிட்டேன், ஆனால் இதையே பெற்றுக் கொள்வேன், இந்தப் புத்தகத்தின் மீது எனக்கு அத்தனை காதல்…’ என்று நூலை முத்தமிட்டுப் பெற்றுக் கொண்டது ஒரு கவித்துவமான காட்சி.
அணிகொள் காவியம் ஆயிரம் கற்றால் மட்டும் போதாது, ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண வேண்டும் என்றார் மகாகவி பாரதி. உள்ளபடியே வாசிப்பைக் கொண்டாடும் காலம் இது.
வாசிப்பைக் கொண்டாடுவதில் படைப்பாளியை உடனே அழைத்து வாழ்த்துவது மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு தொகுப்பை வாசிக்க வேண்டும் என்பதில்லை. ஒரே ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை அல்லது ஒரு கவிதை சிறப்பாகக் கண்களில் பட்டால் அதைப் படைத்தவரைத் தேடிப்பிடித்து வாழ்த்துவதை விடவும் இன்பம் வேறென்ன வாய்க்க முடியும்?
பல நேரம் வார இதழில் வந்த சிறுகதைக்காக அல்லது கவிதைக்காக அதை எழுதியவரை வாழ்த்த அழைக்கையில், ‘அப்படியா இந்த இதழில் வந்திருக்கிறதா, வாசித்து விட்டீர்களா, பிடித்திருக்கிறதா?’ என்று பரவசத்தோடு ஒரு குரல் எதிர்முனையில் கேட்குமானால், இன்பம் இரண்டு மடங்கு ஆகிவிடும். படைப்பாளிகள் நினைவில் வைத்திருப்பார்கள் அப்படியான பாராட்டு கிடைக்கப்பெற்ற தருணத்தை.
‘கவர்மெண்ட் பிராமணன்’ (அது குறித்துத் தனியே எழுத வேண்டும்!) நூலை வாசித்ததும் கன்னடத்தில் முக்கிய சுயசரிதை நூலான அதை எழுதி இருந்த அரவிந்த மாளகத்தி அவர்களோடு பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின்னர் இணையத்தில் மைசூர் பல்கலைக்கழகத்தின் தொலைபேசி எண் தேடியெடுத்து, அவரது எண்ணைக் கேட்டுப்பெற்று அவரோடு பேசிய அனுபவம் மறக்க முடியாதது. அருமையான மொழி பெயர்ப்பில் அதைத் தமிழில் கொண்டு தந்தவர் பாவண்ணன். பணி நிமித்தம் மாற்றலில் சென்ற மாநிலத்தின் மொழியை விரைந்து கற்றுத் தேர்ச்சி பெற்று அங்கிருந்து படைப்பிலக்கியத்தைத் தமிழில் வழங்கத் தொடங்கிய அவரது உழைப்பு போற்றுதற்குரியது. ஆனால், அவரிடம் பேசியது இந்தப் புத்தகத்திற்காக அல்ல! அது ஒரு சிறுகதை. ஆனந்த விகடனில் வந்திருந்த
‘அன்னபூரணி மெஸ்’.
கதைக்குள் செல்லப் போவது இல்லை. அதை வாசித்த அனுபவம்தான் இங்கே சொல்ல வேண்டியது. அதையும் நேரடியாக அல்ல! பாவண்ணன் அவர்களுக்கு அக்டோபர் 6, 2015 அன்று அனுப்பிய மின்னஞ்சல் அதை விவரிக்கிறது.
அன்பின் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு
அன்னபூரணி மெஸ் சிறுகதையை வாசித்த அடுத்த நிமிடம் உங்களோடு பேசினேன். அதை வாசிக்குமாறு பல அன்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன்…இது ஒரு புறமிருக்க, எப்படியாவது என் மகனோடு இந்தக் கதை பற்றி விவாதிக்க அன்றிரவே எண்ணினேன். அது ஒரு வேடிக்கை தொடர்கதை.
14 வயது நிரம்பிய நந்தா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். சிபிஎஸ்இ பாடத் திட்டம். ஆங்கில வழியிலான கல்வி. ஆனாலும், தமிழ்ச் சொற்களே அதிகம் புழங்கும் மொழி அவனுடையது. தமிழில் பேசினால் தண்டிக்காத அந்தப் பள்ளிக்கூடம் எங்கள் இல்லத்திலிருந்து ஏழு கி.மீ தூரத்தில் இருந்தும் அவனை அங்கு அனுப்பிக் கொண்டிருப்பதற்கு இதுவும், வீட்டுப் பாடக் கொடுமைகள், அடி தடி அராஜகம் போன்ற புகார் எழாத இடம் என்பதும் காரணம். தற்போது கட்டிடக்கலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மகளையும் சரி, மகனையும் சரி சிறுவயதில் இருந்தே அண்டை அயலில் வீதிகள் நெடுக சுற்றி நடையான நடை நடத்தி அழைத்துப் போகும் காலை நேரங்களில் கதை, கவிதை, பாடல், நாடகம், வரலாறு, பொருளாதாரம், அரசியல், பண்பாடு, மொழி, ஆதிக்கமும் ஒடுக்குமுறையும், போராட்டங்களும், விடுதலையும்… என எத்தனையோ பேசிக் கழித்திருக்கிறோம் நாட்கணக்கில்….
மகனுக்கு எப்போதும் இரவு நேர உறக்கத்தின்முன் ஒரு கதை சொல்லியாக வேண்டும் அல்லது ஒரு பாட்டு பாடவேண்டும்… ‘கண்ணே கலைமானே’, ‘ஒன்ன நெனச்சு பாட்டு படிச்சேன்’, ‘உச்சந்தல உச்சியில’, ‘கிண்கிணி கிண்கிணி கிணி’,’ செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ போன்ற திரைப்பாடல்களும், ‘மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வைத்தவனே’ போன்ற தாலாட்டுப் பாடல்களும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. ‘மன்னுபுகழ்’ பாடல் அவன் தாயின் வயிற்றில் இருக்கையிலேயே கேட்டது என்பதால் அந்தப் பாசுர வரிகளை இசைக்கும்போதே சுகமாகத் தூங்கிப் போவான்.
அன்னபூரணி மெஸ் கதைக்கான வேளை நேற்றிரவே வாய்த்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக மூன்றாவது பத்தியைத் தாண்டுகையில் உறங்கிப் போயிருப்பான். நேற்று முழு கதை கேளாமல் உறங்கப் போவதில்லை என்றிருந்தான்.
விளக்கை அணைத்துவிட்டு அவனருகே உட்கார்ந்து முதுகைத் தட்டிக் கொடுத்தவாறு இந்த வார விகடனில் வந்திருந்த உங்களது அன்னபூரணி கதையை எனது சொந்த மொழியோ, குறுக்கீடோ, விமர்சனமோ இன்றி அதன் போக்கில் சொல்லிச் சென்றேன்….
அன்னபூரணி மெஸ்ஸில் நுழைகிறான் பாலகுரு. மெஸ்ஸில் உணவருந்திக் கொண்டிருப்போருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கிறான் ராஜாராமன். ஒரு ரூபாய்க்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் எளிய மெஸ். மெஸ்ஸின் மாடியறை ஒன்றில் வாடகைக்குக் குடியேற வந்திருக்கும் பாலகுரு. எப்படியாவது வாழ்க்கையில் நிறைய பணம் பண்ண வேண்டும் என்ற எந்திரம் பற்சக்கரங்களோடு ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறது அவனது மனத்திற்குள்.
எல்லாக் கஷ்டங்களையும் அனுபவித்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்த மெஸ் முதலாளியின் தயாள குணத்தை அநுபூதி போல பரவசத்தோடு எண்ணிக் கொண்டிருக்கும் உள்ளம் ராஜாராமனது. அறையில் குடியேறும் பாலகுருவின் இலக்கு ராஜாராமன் நெஞ்சில், ஒரு சம்பாதிக்கும் குதிரையை தட தடக்க ஓட வைப்பது. ராஜாராமனுக்கோ உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் எஜமானரின் நல்லெண்ணமே…
பெருச்சாளி ஊறக் கல்லும் தேய்கிறது…தத்துவம் பேசிக் கொண்டிருந்த ராஜாராமன் ஓரிரவில் காணாமல் போய்விடுகிறான். விடிந்ததும் மெஸ் தனக்கான பணியாளரைத் தேடுகிற இடத்தில் பாலகுரு சென்று பரிமாறத் தொடங்குகிறான். அவனது நெஞ்சில் குதிரை லாயம் இருந்த இடத்தில் இப்போது வாழ்க்கையின் அருளை ருசிக்கும் தத்துவவாதி குடியேறி இருக்கிறார்…
மிகச் சரியாகக் கதை முடிந்த மாத்திரத்தில், நந்தா, “அப்பா…என்ன அருமையான கதைப்பா…யாருப்பா எழுதினது…” என்று பரவசம் பொங்கும் குரலில் கேட்டான்…உங்கள் பெயரை மெதுவாகச் சொன்னேன்…
இன்று காலை அவனுக்கு காலாண்டுத் தேர்வின் மூன்றாம் நாள், ஆங்கிலப் பாடம். அதைப் பற்றி கிஞ்சிற்றும், லவலேசமும், எள்ளளவும், எள் முனையளவும் கூடப் பேசாது நாங்கள் எங்கள் இரவுப் பேச்சின் நிறைவை எட்டினோம். அவன் உறங்கத் தொடங்கியதன் இன்னிசை மெல்ல பரவத் தொடங்கிய நேரத்தில் நான் சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்தேன். ஒரு சிறுகதைக்குத் தனது உள்ளம் பறிகொடுக்கப் பழகும் அவனது வரம்பெற்ற வளர்ச்சிக்கு உச்சி முகந்தேன். அவன் கால்களைத் தழுவி, ‘தேர்வை நினைத்து அஞ்சாத என் செல்வக் குழந்தையே, உற்சாகமாக பள்ளிப் பருவத்தைக் கடக்கத் துணியும் என் அன்பே…’ என்று சொல்கையில் இரவின் இருள் எனது கண்ணீர் படர்ந்த கன்னங்களில் அதுவாக முத்தமிட்டுச் சென்றது.
பிறகு அவனது உறக்கம் கலையாத எச்சரிக்கையோடு மெல்ல எழுந்து கதவைச் சார்த்திவிட்டு ஹாலுக்கு வந்தேன். புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் என் வாழ்க்கை இணையர் ராஜேஸ்வரி. தனது வேலையில் ஆழ்ந்திருந்தார் என் மகள் இந்து. உங்களுக்கு அப்போதுதான் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
படைப்பாளிக்கு வாசகரின் கைத்தட்டல் ஒலி கேட்கவேண்டும் என்பதே எப்போதும் என் விருப்பம். இன்று மாலை என்னை அழைத்து, எத்தனை பேரானந்தம் பொங்க நீங்கள் பேசத் தொடங்கினீர்கள்…..
அதைவிட நான் எதிர்பாராது, “உங்களுக்காக அழைக்கவில்லை, உங்கள் மகன் அருகில் இருக்கிறாரா, பேசலாமா?” என்று கேட்டீர்கள். உங்களிடம் நேரடியாக கதையைப் பாராட்டி மிகச் சில சொற்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டாலும், இன்று உறங்கச் செல்கையில் உங்களைப் பற்றியும், உங்களது வேறு சில கதைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான் நந்தா. நான் இந்த மாத தீராநதியில் நீங்கள் விமர்சனம் எழுதியுள்ள ‘கடுகு வாங்கி வந்தவள்’ பற்றி இலேசாகச் சொன்னேன். நியூ செஞ்சுரி புத்தகக் கடையில் அதை வாங்கிப் படித்து வேறோர் இரவில் அவனோடு பகிர்ந்து கொள்வேன்…தமிழ் நேரடி வாசிப்புக்கு அவனைத் தூண்டிக் கொண்டிருக்கிறேன்…இன்னும் வெற்றி பெறவில்லை.
‘கடுகு வாங்கி வந்தவள்’ விமர்சனத்தில்,
கே வி நல்லதம்பி அவர்களது மொழிபெயர்ப்பை நீங்கள் பாராட்டி வழங்கி இருக்கும் அங்கீகாரம் அற்புதமானது. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மேலும் பல வரவுகளை அது உறுதி செய்யும்.
அரவிந்த மாளகத்தி அவர்களது கவர்மெண்ட் பிராமணன் சுயசரிதை நூலை உங்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கையில் உங்களது எழுத்தில் அத்தனை ஈர்ப்பு கிடைக்கப் பெற்றேன். தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்…உங்கள் படைப்புலகம் மேலும் விரியட்டும்…
அன்பில் ததும்புகிறது என் வாசிப்புக் குடம். அன்பில் விரிகிறது என் வாசிப்பு வானம். அன்பில் படர்கிறது என் வாசிப்பின் பசுங்கொடி….. பகிர்வில் ஓங்கரிக்கிறது வாசகப் பெருங்கடல்.
நன்றி தோழர்!
நந்தா இப்போது கல்லூரிப் படிப்பு முடிக்க இருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டாலும், அன்னபூரணி மெஸ் கதையை மறக்கவில்லை. வாசிப்பு ரசனை அலாதியானது.
