பேரா. நா.மணி
‘டுஜக்.. டுஜக்..’ இதென்ன தலைப்பு!? இன்னும் கொஞ்சம் நல்ல தலைப்பு வைத்திருக்கலாம் என்று தோன்றியது. புகழ்மதியின் டுஜக் டுஜக் படித்த போது தான், அட! இந்த டுஜக் டுஜக், அரிஸ்டாடிலின் யுரேகா யுரேகா அல்லவா! என்று மனதில் பளிச்சிட்டது. அதற்கு ஏற்ற ஓவியம். அரிஸ்டாட்டில் போலவே புகழ்மதி டுஜக் டுஜக் என்று கத்திக்கொண்டே ஓடுவது போன்ற ஒரு பிரமையை அந்த ஓவியம் தருகிறது.

இந்தத் தொகுப்பு நூலாக்கம் பெறும் முன்னரே இதில் இடம் பெற்றுள்ள சில அவதானிப்புகளைப் படித்திருக்கிறேன். அவ்வப்போது சின்னச் சின்ன பின்னூட்டம் அளித்திருக்கிறேன். இது நூலாக வர வேண்டும் என்ற முதல் குரலும் என்னுடையதாகவே இருக்கும். என்னிடம் ஓர் அணிந்துரை கேட்டுக் கேட்டு நொந்து போனார் சுந்தர். இந்த நூலுக்கு அணிந்துரை தராமல் விட்டது சுந்தருக்கு மட்டுமல்ல. எனக்கும் ஓர் பெரும் மனக்குறையே..!
ஜான் ஹால்டின் “குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்?” என்ற நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை எப்படிச் சொல்வது? ஒவ்வொரு குழந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரைப் பார்க்கும் போதும் ஜான் ஹால்டின் நினைவுகள் வருகிறது. அவர்களின் உரையாடல் வழியாக ஜான் ஹால்டு வந்து போகிறார்.
ஜான் ஹால்டின் நூலுக்குப் பிறகு, எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன! எத்தனை அவதானிப்புகள் வந்திருக்க வேண்டும் உலகெங்கும். இந்த ஏக்கமும் இருந்தது. இதனைவிட பெரும் ஏக்கம் ஒன்று இருந்தது. அது குழந்தைகளின் கற்றலை பெற்றோர் படம் பிடிக்க வேண்டும், ஆவணப் படுத்த வேண்டும் என்பதே அது. குழந்தைகளுக்கு சிறகு முளைத்துப் பறக்கத் தொடங்கும் நேரத்தில் படம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை சுந்தர் நிறைவேற்றி விட்டார். அதற்கு சுந்தருக்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
சுந்தரின் டுஜக் டுஜக் என்ன சொல்கிறது? குழந்தைகளின் கற்றல் விதங்களைச் சொல்கிறது. கற்பனை ஆற்றலைச் சொல்கிறது. குழந்தை உலகின் ஆழ அகலத்தைச் சொல்கிறது. குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் எப்படிக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைச் சொல்கிறது. நில், என்னை நன்றாக கவனி… என் பேச்சை நன்றாகக் கவனி என்கிறது. என்னை நேருக்கு நேர் நன்றாகப் பார் என்கிறது. நான் சொல்வதை நன்றாகக் கேள் என்கிறது. இது புகழ்மதியின் குரல் மட்டுமல்ல. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளின் குரல் அது. இதனைப் படிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தாங்கள் நிராகரித்த, தங்களிடம் “என்னைப் பார். நான் சொல்வதைத் கேள்” என்ற அந்தக் அவலக் குரல்களின் ஓசையை உணர்வர்.
இதுவரை தோன்றி கவிஞர்களின் கற்பனைகளை எளிதாக விஞ்சி நிற்கும் கற்பனைவளம் குழந்தைகளிடம் இருக்கிறது என்பதற்கு புகழ்மதி சாட்சி. பெற்றோர் யுத்தி என்று கையாள்வதை மகா மொக்கையாக்கும் வீரியத்தை பெற்று இருக்கிறார்கள். மாற்றுக் கலாச்சார செயல்பாட்டைப் பின்பற்றும் பெற்றோர்களின் பிள்ளைகளிடம் முளைக்கும் ஆரோக்கியமான கலாச்சார சாளரம் தெரிகிறது.
அன்பைப் பரிமாறிக் கொள்ள நடக்கும் அடிதடி சண்டைகள். அன்பு தனி உடமை என்று தெரிந்தால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை டார்வின் – புகழ்மதி உரையாடல் நமக்குக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் ஆய்வு மனம் வழியே அவர்களின் ஆய்வு எல்லைகளை நாம் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கிறது சுந்தரின் இந்த ஆவணம்.! நாம் என்னதான் முனைந்து பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியாத மன உலகம் என்று நிறைய இருக்கிறது.
மாடிப் படி ஏறும் புகழ்மதிக்குள் ஓர் கற்றல் நடந்து கொண்டு இருக்கிறது. “நான்தான் எப்போதும் உங்க லெவலுக்கு இறங்கி வர வேண்டுமா”? என்ற டார்வினின் எத்தனை காலம் குழந்தைகள் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்த கேள்வி? எத்தனை குழந்தைகள் இந்தக் கேள்வியை தங்கள் பெற்றோரிடம் முன் வைத்து இருப்பார்கள். ஆனால் அதனை எளிதாய் புறந்தள்ளியதும் அதற்குமேல் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவங்களும் எத்தனை எத்தனை நடந்திருக்கும். ஆனால் சுந்தர் வழியாகவே அந்த ஜனநாயகத்தின் குரல் வெளி உலகுக்கு கேட்கும்படி ஒலித்திருக்கிறது.
குழந்தைகளின் ‘தொட்டு விளையாட்டு’ நடக்கிறது. தொட வரும் குழந்தை, தொடப் போகும் குழந்தை எங்கே ஒளிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? இந்த யுத்திகளை குழந்தைகள் எங்கே கற்றுக் கொண்டனர்? குழந்தைகள் ஒரு செயல்பாட்டைக் கற்றுக் கொண்டால் அந்த வெற்றிப் பெருமிதம் இருக்கிறதே! அந்த மகிழ்ச்சி இருக்கிறதே! அதனை வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் விதம் இருக்கிறதே! அப்பப்பா..! அது டுஜக் டுஜக் ஆகட்டும், ஒரு நாளில் அப்பா மாதிரி பனியனைக் கழட்டிக் கழட்டி நூறு தடவை மாட்டியது ஆகட்டும்; இப்படி பல இடங்களில் அது வெளிப்படுகிறது. இதுவும் ஓர் அளவீடு தான்.
ஒரு நாள் வேக வேகமாக டார்வின் தனது தந்தையிடம் வருவான். கையில் ஓர் காலி மிட்டாய் டப்பா. பிளாஸ்டிக் கவர். இதை வைத்து பாராசூட் செய்யத் துடிப்பான். எதுக்கு இந்த பாராசூட்? ‘இதுல பறந்து போய் அந்த புறாவைப் பிடிக்க’ என்கிறான். இந்த குழந்தை மனதை வைத்தே தனி ஆய்வு செய்ய முடியும். அவ்வளவு அதில் பொதிந்து கிடக்கிறது.
“தோனி எதுக்குப்பா நிறைய விளம்பரத்துல வரான்?” இது டார்வினின் கேள்வி. “அப்பத்தான் நிறைய விக்கும்” இது அப்பாவின் பதில். ஆனால் டார்வினின் மனதில் இதன் வழியாக விதைக்கப்பட்ட எண்ணத்தின் வழியாக ஓர் மிகப் பெரிய கேள்விக்கு விடை கிடைக்கிறது. அது, காணும் இடமெல்லாம் ஆண் குழந்தைகள் முதல் வாலிபர்கள் வரை குறைந்த பட்சம் தென்னம் மட்டையோடு நிற்பதன் வேர் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்கிறது. அவர்கள் எல்லோரும் கிரிக்கெட் போட்டிகளின் போது ஊடகங்கள் முன் அமர்வதும், அவர்கள் எல்லோர் மண்டையிலும் சுந்தர் குறிப்பிட்ட ‘நல்ல விற்பனை நல்ல லாபம்’ என்ற சுழற்சி என்னும் சூழ்ச்சிப் பின்னலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலேட்டில் போடும் முட்டைகள் பற்றி யாரேனும் கல்வியியல் முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்தினால் நல்லது. நான் பள்ளி செல்லத் தொடங்கிய தருணத்தில் தினமும் வெகு சிரத்தையோடு சிலேட்டின் இரண்டு பக்கமும் முட்டை போட்டு கொண்டுபோய் வீட்டுப் பாட வரிசையில் அடுக்கி வைப்பேன். டீச்சர் இரண்டு பக்கமும் பெரிய ரைட் போட்டுக் கொடுப்பார். அன்று அவர் தவறு போட்டு இருந்தால் இன்று இந்த நூல் மதிப்புரை தரும் அளவுக்கு வந்திருப்பேனா? தெரியவில்லை. அடுத்து எழுத்தாளர் தமிழ் செல்வன் பல கூட்டங்களில் சொன்னக் குழந்தைகள் முட்டை போடும் அனுபவம்.
இதோ! புகழ்மதியும் கீர்த்தியும் வரையும்/ போடும்/ எழுதும் முட்டைகள் வழியாக குழந்தைகள் உலகின் புதிய முட்டை கணக்குகள் தொடர்கிறது. இதனை நிச்சயமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
“சூரியன புடுச்சு தாப்பா. தொட்டியில படுக்கப் போட்டு தூங்க வைக்கப் போறேன்.”
“கீர்த்திய அவங்க வீட்டில விட்டுட்டு வர்றப்ப நெறய நட்சத்திரங்கள கூடவே கூட்டிக் கொண்டு வந்து விட்டேன்..”
கற்பனைக் குமிழிகள் கரைபுரண்டு ஓடும் போது புகழ்மதி போடும் டியான்.
பட்டாம்பூச்சியாக பறக்கத் துடிக்கும் குழந்தையின் உள்ளம். இப்படிக் குழந்தைகளின் கவிமனம் விரிவதை எத்தனை பேர் கேட்டு இன்புற்று இருக்கிறோம். “குழல் இனிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் பொருந்தும் தான்.
ஆனால் அந்த இனிய குரலுக்குள் தான் எத்தனை சந்தங்கள்? எத்தனை தாளங்கள்? கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் எத்தனை இருக்கிறது? குரல் இனிது என்று கொஞ்சிவிட்டு குரலுக்குள் உள்ளதை காது கொடுத்துக் கேட்காமல் இருந்து வருவது எவ்வளவு பெரிய அபத்தம். அஞ்ஞானம்?
ஆரோக்கியமான, பண்பாடுமிக்க குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இயல்பாக சில ஆரோக்கியமான பழக்கங்கள் தொற்றிக் கொள்கிறது என்பதையும் இங்கு அனைவரும் கவனிக்க வேண்டும்.
புத்தக விற்பனையை கற்பனையில் நடத்தி மகிழும் குழந்தைகள், புத்தகங்களோடு இருக்கும் குழந்தைகள் மத்தியில் நிகழும் இயல்பான கற்றல் அல்லது வளர்ச்சி. ஒரு நூலின் ஆசிரியர் வீட்டுக்கு வந்து செல்லும் போது அல்லது அந்தக் குழந்தைக்கு அறிமுகம் ஏற்படும்போது வளரும் ஆரோக்கியமான பண்பாட்டு நடவடிக்கைகள்… இப்படி ஒருபுறம் புகழ்மதி – டார்வின் வழியாக புரிந்து கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்கிறது.
“உடனே வாங்க” என்றால் நமக்கு தான், என்னமோ ஏதோ அவசரம் அல்லது ஆபத்து. ஆனால் குழந்தைக்கு தன்னிடம் இருக்கும் ஸ்பைடர் மேன் முகக் கவசத்தை தனக்கு மிக நெருக்கமான உள்ளங்களோடு பகிர்ந்து கொள்ளும் துடிப்பு. அப்படியோர் துடிப்பு குழந்தை மனம் கடந்தும் மனிதர்கள் நீடித்து நிலைக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் அது குழந்தைமையோடு தொலைந்து போய் விடுகிறதே ஏன்?
இவைதவிர நிகழும் ஒவ்வொரு உரையாடலிலும் ஓர் விசயம் நமக்கு இருக்கிறது. ஒவ்வொரு உரையாடல் குறித்தும் இப்படி விரித்துப் பார்த்தாலும். மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ள முயற்சித்தாலும் நூல் மதிப்புரையாக எல்லாவற்றையும் எழுதுவதும் அதனை வாசகர்கள் படிப்பதும் கடினமாகவே இருக்கும் என்று வாசகர்களை நூலைப் படிக்கும் படி கோருவதே பொருத்தமாக இருக்கும். அத்தோடு அவரவர் பாணியில் குழந்தை மனங்களைப் புரிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இறுதியாக, இந்த மதிப்புரை வழியாக ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு வேண்டுகோள். முடிந்த மட்டும் குழந்தை மனதை ஆவணப் படுத்தி வையுங்கள். அதனை இதேபோல் ஒரு நூலாக வெளிக் கொண்டு வர முடியுமா? ஒவ்வொன்றும் ஒரு நூலாக மலருமா எனக்குத் தெரியாது. ஆனால் நீங்களே அதனைப் போட்டுப்போட்டுக் கேட்டு குழந்தைகளின் இனிய குரலைத் தாண்டி என்னென்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனைத் தவற விட்டவர்கள் வேண்டுகோள் இது.
இதுதவிர ஆங்காங்கே நூல் மதிப்புரைக் கூட்டங்களை நடத்தலாம். அதன் வழியே ஆவணப் படுத்த முடியாதோர் மனங்களில் முடங்கிக் கிடக்கும் தங்கள் குழந்தைகளின் இனிய குரலின் அடிநாதமாக என்ன இருந்தது என்று அசைபோட்டு பார்க்கலாம். இந்த குழந்தைகளின் மனதை எனக்குத் தெரிந்ததுபோல் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேராசிரியர்கள் மாடசாமி மற்றும் இராமனுஜம் ஆகியோரின் மதிப்புரையை படிக்காமல் விட்டு வைத்தேன். அதனை வாசித்து விட்டு மீண்டும் ஒரு முறை இந்த குழந்தைகளின் உள்ளத்தை வாசிக்க வேண்டும்.
