உலக புத்தக தினம் தொடங்கப்பட்டு 25வது ஆண்டை கொண்டாடுகிறோம். வாசித்தல் பதிப்பித்தல் எனும் மனித இனத்தின் மகத்தான சொத்தை அறிவுசார் உரிமையின் அடையாளமாக அதன் போராட்டங்களை நினைவுகூறும் தினமே புத்தக தினம். 1995இல் முதன் முதலாக யுனெஸ்கோவின் சர்வதேச 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறிவைப் பரப்புவதற்கும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை குறித்த விழிப்புணர்வினை பெறுவதற்கும், புரிதல் சகிப்புத்தன்மை, அறிவியல் எழுச்சி போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை, ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் ஒப்பற்ற கருவி புத்தகமே என அந்தத் தீர்மானம் அறிவித்தது.
அனைத்துலக கூட்டமைப்பு மற்றும் சர்வதேச யுனெஸ்கோ தேசிய ஆணையகங்கள் இணைந்து புத்தக வாசிப்பை கொண்டாடுவதென்று முடிவு செய்தன. தமிழ் இலக்கிய வாசிப்பு சூழலில் பாரதி புத்தகாலயமும் புதிய புத்தகம் பேசுகிறது இதழும் இணைந்து கடந்த பத்தாண்டுகளாக எழுச்சிமிக்க உலக புத்தக தினத்தை பிரமாண்ட எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு நிகழ்வாக மெரினா (சென்னை) கடற்கரையில் கொண்டாடிவருகிறது.
புத்தக வாசிப்பு, விழிப்புணர்வு மராத்தான், வாசகர் புத்தக பகிர்வு, எழுத்தாளர் சங்கமம் என்று பல்வேறு நிகழ்வுகளை தமிழ் வாசகப் பரப்பில் கொண்டு சென்று பெருவெற்றி பெற்ற நாட்களை நினைவு கூறுவோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக முடங்கிய மனித (வாசக) சங்கமங்கள் இப்போது புத்துயிர் பெறுகின்றன. உலக இலக்கியத்திற்கான ஒரு குறியீடு ஏப்ரல் 23, உலக புத்தக தினம். மனிதனின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில், ஆகச் சிறந்தது புத்தகமே என்பது இன்றுவரை உண்மை. நமது அடுத்த சந்ததியை வாசிப்பு சந்ததியாக மாற்றிட வரும் உலக புத்தக தினத்தில் எழுச்சி கொள்வோம்.
பாரதி புத்தகாலயம், புத்தகம் பேசுகிறது இதழ் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு இணைந்து தமிழகத்தில் 100 இடங்களில் புத்தக கண்காட்சிகளை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு உலக புத்தக தினத்தில் உங்கள் ஊரில் நடக்கும் புத்தக – காட்சியில் பங்கேற்று வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்க உங்களை புத்தகம் பேசுகிறது இதழ் தோழமையோடு அழைக்கிறது. சர்வதேச புத்தகத்தின் அமைப்பு, குழந்தைகளிடம் சொல்லுங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளது.
25வது உலக புத்தக தினத்தில் குழந்தைகளிடம் “நீங்கள் ஒரு புத்தக வாசிப்பாளர்!” (you are a Reader) எனும் கொண்டாட்டத்தை எடுத்துச் செல்வதை அது நோக்கமாக அறிவித்துள்ளது. “நீங்கள் ஒரு புத்தக வாசிப்பாளர்” போட்டிகள் நடத்தப்பட உள்ளன. புத்தக விமர்சனம், புத்தக செல்ஃபி, புத்தக அலமாரி, புத்தக விவாதம், புத்தகத்தோடு தேநீர், புத்தக பரிசுமழை, புத்தக வேட்டை, புத்தக புதிர்கள் என்று நமது “புத்தகக் காட்சிகள்” குழந்தைகளுக்காக புதிய அவதாரங்கள் எடுக்கட்டும். பள்ளிகள் கல்லூரிகள்தோறும் புத்தகக் காட்சிகளை கொண்டு செல்வோம்.
அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள்!
