ச.சுப்பாராவ்
புத்தகக் காதலில் பல படிநிலைகள் உண்டு. புத்தகங்களின் மீது காதல் கொண்டோர் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்காக புத்தகங்களைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் வைக்க இடமில்லாத போதும், வாங்குவதற்கு பணவசதி இல்லாத போதும், வாங்கியவை அனைத்தையும் படித்து முடிக்க நேரம் இல்லாத போதும் புத்தகங்களை வாங்கிக் குவிப்பார்கள். தன் சேகரிப்பில் ஒன்று காணாமல் போனால் சரியாக சாப்பிட மாட்டார்கள். தூங்க மாட்டார்கள்.

இந்தக் காதலின் அடுத்த கட்டமாக தாமே எழுத ஆரம்பிப்பார்கள். கைக் காசை செலவழித்து, கடன் வாங்கி 500, 1000 பிரதிகள் அச்சடித்து அவற்றை விற்க முடியாமல் வீடு முழுக்க அடுக்கி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்தப் புத்தகக் காதலின் உச்சபட்சம், இருக்கும் வேலையைத் தொலைத்துவிட்டு, கடன் பட்டு ஒரு புத்தகக் கடையை ஆரம்பித்து, சொல்ல முடியாத துயரை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பது. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… என்று எல்லோரும் கேலி பேசினாலும், புத்தகக் கடை முதலாளி என்ற கெத்தை விட்டுக் கொடுக்காமல், மீசையைத் தடவிக் கொண்டு, அப்படியே மெய்ன்டெய்ன் பண்ணும் சூனாபானாவாகத் திரிவார்கள்.
அபூர்வமாக ஒரு சிலர் புலம்புவதுண்டு. அதிலும் மிக அபூர்வமாக ஒருவர் தன் புத்தகக் காதலால் கடையை ஆரம்பித்து சக புத்தகக் காதலர்களால் அல்லது புத்தகக் காதலர்களாகத் தம்மை நினைத்துக் கொண்டு திரியும் இம்சை அரசர் 23ம் புலிகேசி ரக வாடிக்கையாளர்களால் தான் பெற்ற இன்பத்தை, அதாவது துன்பத்தை ஒரு புத்தகமாகப் போட்டுவிட்டார். Weird Things Customers Say in Bookshops என்று Jen Campbell எழுதியிருக்கும் அந்த அனுபவப் பகிர்வைப் படிக்கப் படிக்க ஒருபுறம் சிரிப்பாக வருகிறது. மறுபுறம் பாவமாகவும் இருக்கிறது.
உண்மையான வாசகர்கள் புத்தகக் கடைக்காரரிடம் எதுவும் பேசுவதில்லை. தானே தனக்கானதை தேடி எடுத்துக் கொள்வார்கள். பில் போடும்போது தள்ளுபடி கேட்பதற்காக மட்டுமே வாய் திறப்பார்கள். என் போன்ற அப்பிராணிகள் அதற்காகவும் வாய் திறக்க பயப்படுவோம். அவர்களாக இரக்கப்பட்டு ஏதாவது தந்தால் உண்டு! தன்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொண்டு கடைக்குள் புகுவோர் மட்டுமே கடைக்காரரிடம் பேசுவார்கள்.
மற்ற கடைகளில் வாடிக்கையாளர் முதலாளியிடம் பேசினால் முதலாளி வாடிக்கையாளர் தன்னை நெருங்கி வருவது குறித்து மகிழ்ச்சி கொள்வார். ஆனால், புத்தகக் கடையிலோ முதலாளி இவன் பேச்சால் தனது வாசிப்பு கெட்டுப் போகிறதே என்று சங்கடம் தான் படுவார். அதிலும் வாடிக்கையாளர் கோக்குமாக்காக ஏதேனும் கேட்டால் அவ்வளவுதான். இது மாதிரியான வாடிக்கையாளர்களின் கேள்விகள் முதலாளியை திகைப்படைய வைப்பவை. அதிரச் செய்பவை. ஐயோ! இவனிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று கதறச் செய்பவை. (மனதுக்குள்தான் – வெளிப்படையாகச் சொல்ல முடியுமா என்ன? வாடிக்கையாளர் கடவுள் என்று நமக்கு மஹாத்மா காந்தி சொன்னது போல், அங்கு அவர்களுக்கு ஒரு ஆப்ரஹாம் லிங்கன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார் அல்லவா?)
ஜென் கடையைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரது நாடு சுத்தமான நாடு என்பதால் ஈக்கள் கிடையாது. எனவே ஈ ஓட்டும் வேலையும் இன்றி சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி வருகிறார். “இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்… படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்கிறார். “ஆமாம். நானும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன்,” என்கிறார் ஜென். ந.வ.பெண்மணி, “என் மகளுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துவிட்டது. அது எப்போது புத்தகமாக வரும்?” என்று கேட்கிறார். புத்தகம்தான் திரைப்படமாக வரும். திரைப்படம் எப்படிப் புத்தகமாக வரும்? என்று அவருக்கு புரிய வைத்து அனுப்பும் போது ஜென் ஒசாமா பின்லேடனின் முகவரி சொன்ன வடிவேலு மாதிரி நார்நாராக கிழிந்து போய்விடுகிறார். நம்மூரில் திரைப்பட வசனம் கேமரா கோணங்களுடன் புத்தகமாக வருவது போல் அவர்கள் ஊரில் கிடையாது போலும்.
தினமும் இப்படி “எக்ஸ்க்யூஸ் மீ, இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?” ரக வாடிக்கையாளர்கள் வந்தபடி இருக்கிறார்கள். கண்ணியமாக உடையணிந்த ஒருவர் வந்து பிரிட்ஜெட் ஜோன்ஸ் எழுதிய எட்ஜ் ஆஃப் ரீசன் இருக்கிறதா? என்கிறார். கடையில் பிரதி இல்லை. “ஆர்டர் போட்டு வாங்கி 48 மணி நேரத்திற்குள் உங்களுக்கு குரியரில் அனுப்புகிறேன்,” என்கிறார் ஜென். “என் வீட்டிற்கு குரியர் சரியாக வருவதில்லை. எனக்கு ஃபேக்ஸ் செய்ய முடியுமா?” என்கிறார் அந்த எக்ஸ்க்யூஸ் மீ பார்ட்டி! ஜென் மயக்கம் தெளிந்து சற்று சமநிலைக்கு வந்த நே்ரம் மற்றொரு கனவான்.
மார்க்கரெட் அட்வுட்டின் ஏதாவது ஒரு புத்தகம் வேண்டுமாம். ஜென் மகிழ்ச்சியோடு எடுத்துத் தருகிறார். கனவானின் மனைவி அட்வுட்டின் பரம ரசிகை. புத்தகத்தில் அட்வுட்டின் கையெழுத்து வேண்டுமாம். ஜென் அது சாத்தியமில்லை என்கிறார். நீங்களே ஒரு கள்ளக் கையெழுத்துப் போட்டுக் கொடுங்களேன் என்று பிடிவாதம் செய்கிறார் வந்தவர். ஜென்னுக்கு மீண்டும் தலைசுற்றல். மற்றொரு நாள் ஷேக்ஸ்பியரின் கையெழுத்து உள்ள புத்தகம் கேட்டு ஒருவர்.
ஒரு வசந்த கால பகல் பொழுதில் ஒருவர் வந்து இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளுக்குமான வானிலை முன்னறிவிப்பு உள்ள புத்தகம் கிடைக்குமா? என்று கேட்டு திகிலடையச் செய்கிறார். அப்படி ஒரு புத்தகத்தை எழுத வாய்ப்பே இல்லை என்று புரிய வைத்து துரத்துவது பெரும்பாடாகி விடுகிறது. வியாபாரமும் இல்லை. ஒன்றுமில்லை. மதிய உணவை முடித்து, கல்லாவிலேயே அரைத் தூக்கத்தில் ஜென் உட்கார்ந்திருந்த போது (அது தான் ஜென் மனநிலையோ?) மற்றொரு எக்ஸ்க்யூஸ் மீ வந்து, “இந்த இடத்தில் முன்பு ஒரு கேமரா கடை இருந்ததே?” என்கிறது. “ஆமாம். அவர்கள் இடம் மாறி போனபிறகு தான் நாங்கள் இங்கு வந்தோம்,” என்கிறார் ஜென். “அப்படியா, மகிழ்ச்சி.
அந்த கேமராக்களை எல்லாம் உள்ளே வைத்திருக்கிறீர்களா? எனக்கு அவசரமாக ஒரு கேமரா வேண்டுமே?” என்கிறார் அவர். “அவங்கதா காலி பண்ணிட்டு போயிட்டாங்களே!” “எல்லாத்தையுமா எடுத்துட்டுப் போய்ட்டாங்க? கொஞ்சம் உள்ள பாருங்களேன்.. ஒண்ணு கூட விட்டுட்டுப் போகலயா? எனக்கு அவசரமா ஒரு கேமரா வேணுமே?” என்கிறார் அந்த இம்சை அரசர். ஜென் அவரை எப்படி சமாளித்து அனுப்பினார் என்பதை எழுதவில்லை. சப்சப்பென்று கன்னத்தில் நான்கு கொடுத்து அனுப்பியிருப்பார் என்பது என் ஊகம்.
மற்றொரு நாள் யாருமற்ற ஒரு காலைப் பொழுதில் ஒரு கல்லூரி மாணவி வருகிறாள். “வார் அண்ட் பீஸ் இருக்கிறதா?” என்கிறாள். “அடடா ! ஒன்றே ஒன்று இருந்தது. நேற்றுதான் ஒருவர் வாங்கிச் சென்றார்,” என்கிறார் ஜென். “நீங்கள் அதைப் படித்ததுண்டா?” “அது எனக்கு மிகவும் பிடித்த படைப்பு. பல முறை படித்துள்ளேன்,” என்கிறார் ஜென் பெருமையாக. வந்தவள் தனது கைப்பையிலிருந்து ஒரு நோட்டையும், பேனாவையும் எடுத்துக் கொண்டு எதிரில் அமர்கிறாள். “மிகவும் நல்லது. அது பற்றி நாளை நான் ஒரு கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். கொஞ்சம் வார் அண்ட் பீஸ் பற்றி சொல்லுங்களேன். எழுதிக் கொள்கிறேன்,” என்கிறாள் அவள். பல முறை படித்ததுண்டு என்று பெருமைப் பட்டுக் கொண்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்னடா இது புத்தகக் கடைக்கு வந்த சோதனை!

அதிலிருந்து ஜென் புத்தகங்களை தான் படித்தது பற்றி பெருமை பேசுவதில்லை. ஆனால் அதுவும் ஆபத்தாகவே முடிகிறது. ஒரு வாடிக்கையாளர் தான் எடுத்துப் பார்க்கும் புத்தகங்களை எல்லாம் ஜென்னிடம் காட்டி, “நீங்கள் இதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்கிறார். ஜென் எச்சரிக்கையாக, “இல்லை.” என்கிறார். “அப்படியானால் வாடிக்கையாளருக்கு நல்ல புத்தகங்களை எப்படி அடையாளம் காட்டுவீர்கள்?” என்கிறார் அவர். ஜென் பதில் சொல்லவில்லை. தினமும் யாரேனும் ஒரு வாடிக்கையாளர் இப்படிக் கேட்டுவிடுவார். ஒருநாள் ஒருவர், “இங்கு இவ்வளவு புத்தகங்கள் உள்ளன. நீங்களும் சும்மாதான் இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் படித்திருந்தால்தானே என் மாதிரியான வாடிக்கையாளருக்கு ஆலோசனை சொல்ல முடியும்?” என்கிறார்.
அன்று ஜென்னுக்கு ஏனோ வழக்கமான பொறுமை இல்லை. “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று அவரைக் கேட்கிறார். அவர் ஜட்டி, பனியன் கடை வைத்திருப்பவராம். “நீங்கள் ஓய்வு நேரத்தில் கடையில் இருக்கும் ஜட்டி, பனியன்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து வைத்துக் கொண்டால்தானே, வாடிக்கையாளருக்கு எது நல்லது என்று சொல்ல முடியும்? கடையின் எல்லா ஜட்டிகளையும் போட்டுப் பார்ப்பீர்களா?” என்று கேட்கிறார். வந்தவர் எதுவும் பேசாமல் போய்விடுகிறார். இருந்தாலும் ஒரு வாடிக்கையாளரை ஜென் இழந்ததாகத் தானே பொருள்.
ஆனி பிராங்க்கின் டைரிக் குறிப்புகளின் இரண்டாம் பாகம் உள்ளதா? என்று கேட்டு ஒரு பெரியவர் வருகிறார். “ஐயா, அது ஆனி நாஜி வதைக் கூடத்தில் பட்ட சித்ரவதைகளின் ஆவணம். அவள் அங்கு உயிரை விடும் வரை எழுதி வைத்திருந்த குறிப்புகள். எனவே அடுத்த பாகத்திற்கு வாய்ப்பே இல்லை.” என்று எவ்வளவு சொன்னாலும் பெரியவர் விடுவதாக இல்லை. இத்தனை முக்கியமான ஆவணத்திற்கு ஏன் இன்னும் இரண்டாம் பாகம் போடாமல் இருக்கிறார்கள்? என்று கோபப்படுகிறார்.
இலக்கிய விமர்சனங்கள் என்ற பகுதியில் உள்ள புத்தகங்களைப் பார்த்து விட்டு, “புத்தகங்களைக் குறை கூறும் புத்தகங்களை இவ்வளவு வாங்கி அடுக்கி வைத்திருக்கிறீர்களே? இவற்றைப் படிப்பவர்கள் வாழ்க்கையில் மீண்டும் புத்தகமே வாங்க மாட்டார்களே.. உங்கள் வியாபாரம் அல்லவா பாதிக்கப்படும்?” என்கிறார் ஒரு அப்பாவி வாடிக்கையாளர். அடிக்கடி வந்து தனது புத்தகங்களை எடுத்து ஷோகேஸில் வாடிக்கையாளர் பார்வையில் நன்றாகப் படும் வகையில் வைத்து விட்டுச்செல்கிறார் உள்ளூரின் பரிதாபத்திற்குரிய எழுத்தாள நண்பர்.
என் மகளுக்கு டீன் ஏஜ் பகுதியில் உள்ள புத்தகங்கள் சில வாங்க வேண்டும். அவளுக்கு பதின்மூன்று வயது. பில் போடும் போது அவளது வயதுச் சான்று ஏதேனும் கேட்பீர்களா? நான் கைவசம் எதுவும் கொண்டு வரவில்லை. எனினும், எனது கைபேசியில் சமீபத்தில் அவளது பதின்மூன்றாவது பிறந்த நாளன்று எடுத்த புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றில் அவள் வெட்டும் கேக்கில் உள்ள மெழுகு வர்த்திகளை நீங்கள் எண்ணிப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம், என்கிறார் என் போன்று மகளுக்கு புத்தகம் வாங்கும் ஒரு ரூல்ஸ் ராமானுஜம் அப்பா. குழந்தை எந்தப் புத்தகத்தை எடுத்தாலும், “பாப்பா அது ஆய்… வேண்டாம்” என்றோ “பாப்பா, அது நம்ம வீட்டுல இருக்குப்பா… இது வேண்டாம்” என்றோ சொல்லி எதையும் வாங்க விடாத அம்மாக்கள்.
இங்கு லாட்டரி சீட்டு விற்பீர்களா? ஸ்குரூ ட்ரைவர் கிடைக்குமா? என்பது போன்ற விசாரணைகள். சமையல் குறிப்புப் புத்தகத்திலிருந்து தனக்கு வேண்டிய ஒரு குறிப்பை ஓசையின்றி கைபேசியில் புகைப்படம் எடுத்துச் செல்லும் ஆன்ட்டி. “கிராப்ட்ஸ் புக் இருக்கா?” “இருக்கு. என்ன மாதிரியான கிராப்ட்ஸ்?” “எனக்கு வீட்டிலேயே துப்பாக்கி செய்ய வேண்டும்,” என்று சொல்லி திகிலூட்டும் தீவிரவாத வாசகர். “கிண்டில் பற்றி ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்று ஒருவர். “தாராளமாகக் கேளுங்கள்.” “அதற்கு கெட்டி அட்டை புத்தகங்கள்தான் வாங்க வேண்டுமா? இல்லை பேப்பர் பேக் அட்டை புத்தகங்களே போதுமா?” என்று கேட்கும் பணக்காரக் கிழவர்.
“அன்னா கரீனினா எழுதிய புத்தகங்கள் கிடைக்குமா?” அன்னா கரீனினா என்பதே ஒரு புத்தகம்தான். அந்தப் பெயரில் எழுத்தாளர் யாரும் இல்லை.” “என் காதலி வாங்கி வரச் சொல்லியிருக்கிறாள். அவள் பெரிய படிப்பாளி. தவறாகச் சொல்லமாட்டாள். தயவு செய்து சற்று தேடிப் பாருங்கள்.” “நம்ம கடைல சிசிடிவி கேமரா இருக்குங்களா?“ “இருக்கே”. “நல்லது,” என்று சொல்லி சட்டைக்குள்ளிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து எதிரில் இருக்கும் அலமாரியில் செருகி வைத்துவிட்டுச் செல்லும் அறிவுத் திருடன்.
இத்தனை துயரங்களுக்கு நடுவிலும் யாரோ ஒருசில வாசகர்கள் சத்தமில்லாமல் வந்து புத்தகங்களை அள்ளிக் கொண்டு போய், ஜென் வயிற்றில் பீர் வார்க்கிறார்கள். பிழைப்பு தட்டுத் தடுமாறி எப்படியோ ஓடுகிறது.
தமிழ் கூறு நல்லுலகில் புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர்கள் யாராவது தமது அனுபவங்களை இப்படி எழுதினால், நான் அதற்கு அழகான முன்னுரை எழுதித் தர தயாராக இருப்பதைச் சொல்லி, இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.