வெ.பிரித்திகா
இயற்கையோடு இயைந்த சூழலென்பதே இதமான ஒரு பூர்வீக உறவுதான். அது நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு சில அடிப்படைகளை அறிய, நமக்கு பல வழிவகைகளை வகுக்கிறது. ஆம். இங்கு, சூழலியல் அறிவது என்பதே சுற்றுச்சூழலுக்கும் உயிர்களுக்கும் உள்ள பண்புகள் மற்றும் உறவுகளைக் கற்றுக்கொள்ளும் அறிவியலாகிறது.
அறிவியலைச் சூழலியல் சார்ந்த சிறுகதைகளோடு இணைத்து ஒரு புது உறவை செ.ஸ்டாலின் அவர்களின் சிறுவர்களுக்கான “வேகல் நடனம்” எனும் இந்நூல் ஏற்படுத்துகிறது. அறிவியலை சூழலியல் என்பதன் வாயிலாகச் சிறப்பாக எழுதியுள்ளார். மேலும் இதனோடு இணைந்து ஒரு கிளை உறவை ஷாலோம் தீங்குழலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் நமக்கு ஏற்படுத்துகிறது.

குழந்தைகளை இது செய்யாதே என்றால் அவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களாக நினைத்ததையே செய்வார்கள். நாமும் குழந்தைகளின் வழியே சென்று அவர்களை உற்சாகப்படுத்தி கற்றுத் தருவோம் என்பதாக இச்சிறுகதைகள் அமைந்துள்ளன. எளிதில் கதைகளைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
இயற்கையோடு இயைந்த சூழலியல் உறவுகளை, இந்நூலின் உட்தலைப்புகளின் வாயிலாகவே புரிந்து கொள்ள முடிகிறது. உயிரினங்களின் சூழலுக்கேற்ப அறிவியல் அடிப்படையைக் கொண்டு சிறுகதையாக வெளிப்படுத்துவது எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். இதன் பயனாக அவைகளைப் பற்றிய அறிவும் நமக்கு தானாக வந்துவிடுகிறது.
மின்மினி பூச்சி “லூசிபரஸ் என்சைம் அதனோடு ஏடிபி மற்றும் ஆக்சிஜன் இணைந்து வேதி ஆற்றல் ஒளியாக மாறுகிறது” என்பதைத் தன்னைப் பற்றி தானே முழுமையாக அறிந்து, குரங்கிடம் கூறுவது. அதை இருவரும் பேசுவது. இதன்வழியான அறிவியலையும் இச்சிறுகதை நமக்கு இயல்பாகக் கடத்துகிறது.
ஒவ்வொரு உயிரினங்களின் வளர்நிலை பண்பை எல்லோரிடமும் கொண்டு போகும் குழந்தைப் பாடல்களைப் போல் மாற்றி அமைத்து எளிதில் அதை அறிந்துகொள்ள அமைப்பதென்பது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது. இத்தகைய மகிழ்ச்சியை வாசிப்பின் வழியாக நம்மாலும் பெற முடிகிறது.
எறும்புகளைப் பற்றிய அறிவு, பொதுவாகவே வியப்பைத் தரும். நுட்பமாக அதையறியும் பொருட்டு மேலும் ஆச்சர்யம் தரும். அதன் மனம் பற்றியும் அதன் அறிவைப் பற்றியும் வகைகளாகப் படிப்படியாகக் கூறியுள்ளார். “எறும்புகளின் விவசாயம்” இன்னும் அழகு. நிஜத்தை கூறிய முல்லை, பாட்டியின் கண்ணுக்கு அவள் ஒரு கதையாகவே தோன்றினாள். ஆனாலும் சில நம்பிக்கைகளை எளிதில் உடைத்து விட முடியாது.
மாறாக மறுகட்டமைப்பு பொறுமையாக செய்துவிடலாம். புதிதாகவும் துவங்கலாம். அதனைப் பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகிறது. சில நேரங்களில் ரோட்டு குழாய்களை மூடாமல் சென்றால் நீர் வீணாகும். ஆனால் பல்வேறு உயிரினங்களும் சொட்டிடும் அந்நீரைப் பருகும் போது நமக்கும் மனநிறைவு கிடைக்கிறது. அதேபோல்,சூழலுக்கேற்றவாறு பல்வேறு உயிரினங்களும் நம் உறவாகிறது. சில நேரங்களில் அது பிரிக்க முடியாத ஒன்றாகவும் ஆகிறது.
“மரத்திற்குப் புது வலிமை வேண்டுமானால் தன்னுடைய இலைகளை இழந்துதான் ஆகவேண்டும் அதுதான் இயற்கை” ஆம், தொழில்நுட்பம் அவ்வளவாக அறியாத காலத்தில் இயற்கையோடு அதிகம் இயைந்தவர்கள் அறிவியலில் சிறந்து போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்வார்கள். இச்சூழலியல் உயிரினங்களோடு மட்டுமல்ல உலகத்தோடு எல்லா நிலைகளோடும் உறவு கொண்டுள்ளது.
கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம் என்று நம்பியவர்கள் பலர். அறிவியல் இப்படிக் கட்டப்படுவதைத் தகர்த்தெறிந்து எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்களை வைத்து ஆராய்ந்து உண்மையை அறிந்து மறுகட்டமைப்பு செய்கிறது வேகல் நடனம்.

மிக கச்சிதமாக வரவு செலவு கணக்குகளைப் பாட்டி முடிப்பார். ஒரு பத்து ரூபாய் குறைந்தால் கூட மனக் கணக்கில் கண்டுபிடித்து விடுவார் தாத்தா. அதை “கணக்குத் தாத்தா” சிறுகதையில் கேட்கப்படும் கேள்விகளைப் படிக்கும்போது பாட்டி தாத்தா நினைவு நமக்கும் வரும். அதுபோன்ற சூழ்நிலையை எவ்வாறு நல்ல நிலையிலிருந்து நாம் தவறவிடுகிறோம் என்பதையும் நம்மால் அறிய முடியும்.
தெரிந்தே செய்யும் தவறுகள் சூழலை எப்படி மாற்றியமைக்கிறது. நிமிர்ந்த பனைமரங்கள் நாம் தலை நிமிர்ந்து பார்த்தாலும் இன்று அவ்வளவாக காணப்படவில்லை. ஆனாலும் அதன் ஆயுட்காலம் பெரிது என்பதால் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதுமானது.
மாமாவும் வேகல் நடனத்தை, ஆடி காண்பித்து தேனீக்களின் பூக்கள் தேடலைக் காண்பித்து விட்டார். “தேனீக்கள் முக்கியம் வேகல் நடனமும் முக்கியம்” இயற்கைச்சூழலில் தேனீக்கள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அந்தந்த வெப்ப நிலைக்கேற்ப காலச்சூழல் மாறிக்கொண்டு தான் இருக்கும். அது மனங்களை மாற்றி அமைப்பது இல்லை.
நாம் பெற்றிருக்கின்ற அறிவு நாம் எழுப்பும் கேள்வியிலேயே தொடங்குகிறது. அந்த அறிவை நமக்குக் கல்வியே அளிக்கிறது. ஆசிரியர் மாணவர்கள் உரையாடல் இன்னும் பரந்துபட்ட அறிவை வளர்த்துக் கொள்ள வழி செய்கிறது. “கேள்வி” உரையாடல்களாக அமைந்துள்ளது.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான அறிவை அது மகிழ்ச்சியோடு அளிக்கிறது. வேகல்நடனம் எனும் இச்சிறுகதைகளின் மூலம் சூழலோடு இணைந்த அறிவியலை நாமும் எளிதாக அறிவோம்