சுரேஷ் இசக்கிபாண்டி
ஒரு வளர்ந்த மரத்தை அதன் வேருடன் பெயர்த்தெடுத்து அதற்கு பழக்கம் இல்லாத ஒரு புவியில் காலநிலை மாறுபட்ட மண்ணில் நட்டு மீண்டும் துளிர் விடுவது போலத்தான் புலம்பெயர்ந்த மனிதர்களின் வாழ்வும் வழியும்..

அப்படியாக புத்தகத்தின் அட்டைப்படம் வலியுறுத்தும் வைரம் பாய்ந்த மரம் என சொல்லும் பனைமரம் போல உறுதியுடன் தனது வாழ்வு தந்த இன்ப துன்பங்களை கடந்து வாழ்ந்த மனிதர்களின் கதைதான் இந்த நாவல்…வாழ்க்கை போராட்டமயமானது. ஆனால் போராட்டம் இன்பமயமாக இல்லாத ஒரு குடும்பத்தின் கதை தான் இந்நாவல்.
இலங்கையின் மன்னாரில் துவங்கி இந்தியாவின் மண்டபத்தில் “உயிர் வாழ்தல்” என்னும் ஒற்றை நோக்கத்திற்காக ஆழ் கடல் கடந்து வந்த இராசையா, தங்கம்மாள், விமலன் சகானா கதையில், தாய் தமிழ் மண்ணில் அவர்களும் அகதிதான். முகாமில் மனித பிறவியாக கூட எண்ணி அரவணைக்க மனமில்லாத அரசு எந்திரம், அதன் பருந்து பார்வையில் தனது வாழ்நாள்களை இழந்த அப்பாவி மனிதர்கள். ஆண், பெண், குழந்தை என யாரையும் விட்டுவைக்காத தீண்டாமை… அதை எப்போதும்போல நமக்கென்ன என கடந்து செல்லும் இச்சமூகம், கசிவுறா நெஞ்சையும் கண்ணீரோடு கசக்கிடும்..
“ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான்” என்ற சமத்துவம் பேசும் பாடல் வரிகளுக்கு ஏற்ப தலைப் பிள்ளையாய் பிறந்ததின் பலனாய் வீட்டின் அனைத்து கஷ்ட, நஷ்டங்களை தன் தலையில் தாங்க வேண்டிய பொறுப்புடனும் கணவர் சிவராஜா, “வாழ்க்கையுடன் போராடி அதன் வெற்றி தோல்வியில் விழுந்து எழாமல் வாழ்க்கையின் வழியிலேயே வாழ்ந்துவரும்” மகள் வேணியுடனும் நார்வே எனும் ஐரோப்பிய ஸ்காண்டிநேவியன் நாட்டில் வாழ்ந்தாள் மூத்தவள் வதனி..
சுட்டெரிக்கும் வெயிலின் அணலுடன் பனைவளர் நாட்டிலிருந்து பனிவளர் நாட்டிற்கு சென்றிருந்தாலும் பெண்பிள்ளைக்கு மட்டுமே என இச்சமூகம் சொல்லும் கட்டுப்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என புலம்பும் புலம்பெயர் தமிழ் தாயின்
மன நெருக்கடியும் அதன் வடிகாலாய் தனது பழம்பெரும் அடையாளங்களை துறந்து பறந்த பறவையாய், புதுமை நிறைந்த ஜீவனாய், இப்புதிய மண்ணோடும், புது மனிதர்களோடும் பழங்கட்டுப்பாடுகள் அடையாளங்கள் இன்றி வாழும் இக்காலகுழந்தைக்கு எப்படிப்பட்ட நெருக்கடியை கொடுக்கிறது என்ற வேறுபாட்டுடன் மிக அழகாக நம்மிடையே பேசுகிறார் நூலாசிரியர்.
“இதுதான் வாழ்க்கை என்று எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் வாழ்வில் சுவை இருக்காது” அதனால் தான் என்னவோ, கனவு காதலில் பிரிவு கண்ட பெண்ணான கோமதியின் வாழ்வில் கணவன் எனும் போர்வையில் வந்த கொடுங்கோலனால் வந்த வெறுப்பு, கோபம் பழிவாங்கும் உணர்ச்சி ஆகியவை கடந்தகாலம், நிகழ்காலம் என இரண்டையுமே வெறுமை என்னும் தீயில் தள்ளினாலும், எதிர்காலத்தில் சிங்கப் பெண்ணாக எழுந்து நிற்கிறார் கோமதி.
சமீபத்தில் திரைக்கு வந்த டாக்டர் படத்தில் வரும் ஒரு பிரபலமான உரையாடல், “கோமதி வலிக்குதா, கோமதிக்கு வலிச்சா சொல்லப்போகுது” என வரும் சொல்லாடலுக்கு ஏற்றார் போல் “வலிக்கிறது” என சொல்லும் போதெல்லாம்,
“புது செருப்பு அப்படித்தான் காலை கடிக்கும் போகப்போக சரியாகும்”
என்று பிறரிடமிருந்து வரும் பதிலும் ஒரு பெண்ணுக்கு எம்மாதிரியான வேதனையைத் தரும் என்னும் போதெல்லாம் நமது மனமும் வேதனை அடையும். கோமதியின் கணவனாக வரும் சுரேந்திரன் போன்ற ஒரு ஆணாக நானும் இருக்கக்கூடாது” என்ற எண்ணத்தை வாசிக்கும் வாசகனுக்கு ஏற்படுத்தும். அருமையான நாவல்..
அனைவரும் வாசிப்போம்..