எஸ் வி வேணுகோபாலன்

ஓர் இளவரசன் தனது தந்தை அனுப்பி வைத்தபடி, ஒரு குருவை சந்தித்துத் தனக்குப் போர்க்கலை கற்பிக்க கேட்டுக் கொள்கிறான்.
“உன்னால் தனி ஒருவனாக எத்தனை பேரை எதிர் கொள்ள முடியும்?” என்று அவனை வினவுகிறார் குருவானவர்.
ஆயிரம் பேரை ஒற்றை ஆளாக சமாளிக்க முடியும் என்ற அவன் பதிலைக் கேட்டதும், அப்படியானால் நாம் பயிற்சிகளைத் தொடங்கலாம் என்கிறார் அவர். சில மாதங்கள் பொறுத்து அதே கேள்வி அவனிடம் கேட்க, இப்போது அவன் நூறு பேரை என்னால் எதிர் கொள்ள முடியும் என்று சொல்லவும், அப்படியானால் இன்னும் அதிக பயிற்சி எடுப்போம் என்கிறார் குரு.
மாதங்கள் கடக்கின்றன. அதற்குப் பிறகு ஒரு நாள் அவன் சொல்கிறான், ‘சம பலமுள்ள எதிரி ஒருவனை என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியும்’. அவனைப் பாராட்டி மகிழும் குரு, ‘இன்னும் ஒரே ஒரு விஷயம் இருக்கிறது, அதைக் கற்பிக்க முடியாது, காலம் உணர்த்தும், நீ பயிற்சிகளை விடாது செய்’ என்று அவனது குடிலுக்கு அனுப்பி வைக்கிறார்.
ஒரு நாள் அவன் எண்ணெய்க் குளியல் போடுவதற்கு உடல் எல்லாம் எண்ணெய் பூசிக்கொண்டு இருக்கையில், வேறொரு சீடன் பதட்டமாக ஓடோடிவந்து, குருவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்வான். இளவரசன் அப்படியே விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான்.
குருவின் இல்லத்தினுள் நுழைகையில் திண்ணைகளில் எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஈட்டியோடு சிலர் அவன் மீது பாய்வார்கள், ஆனால், இவனோ கண்ணைத் திறந்து மூடுவதற்குள் அவர்கள் அனைவரையும் வீழ்த்தி விடுவான், குரு அப்போது அங்கே வந்து நின்று அவனைப் பாராட்டியபடி ஈட்டிகளின் நுனியைத் தடவிப் பார்ப்பார், ஒன்றிலும் எண்ணெய்க் கறை பட்டிராது.
“இது தான் உடம்பெல்லாம் கண்ணாயிருப்பது, எதிர்பாராத தாக்குதலைக் கூட எதிர்கொள்வது, உனக்கு எல்லாப் பயிற்சிகளும் கை கூடிவிட்டது, நீ நாடு திரும்பலாம்” என்று ஆசீர்வதித்து அனுப்புவார்.
ஒரு மருத்துவரின் அனுபவத் தொகுப்பில் எதிர்பார்க்க முடியுமா இந்தக் கதையை? ஆம், நெல்லையைச் சேர்ந்த மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம் அவர்களது ‘தூங்காமல் தூங்கி’ எனும் அருமையான புத்தகத்தின் ஓர் அத்தியாயம் இப்படித் தான் தொடங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், கண்ணதாசன் கவிதைகள் என தமது வாசிப்பு அனுபவத்தின் சுவாரசியமிக்க மேற்கோள்களோடு நோயாளிகளோடான தனது தொழில் முறை வாழ்க்கையின் சில பகுதிகளை அவர் அத்தனை அபாரமாக எழுதி இருந்தார்.
மருத்துவராக முதல் பணி நியமனம், மயக்க இயல் துறையில் வாய்க்க, அதை மனமில்லாமல் ஏற்று, முதல் பணியே, பள்ளித் தேர்வில் தவறிய அதிர்ச்சியில் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துவிட்ட மகனைத் துடிதுடிக்கக் கொண்டு வந்து சேர்த்த பெற்றோரிடம், அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை எப்படி சொல்வது என்று தவித்த கணத்தில் வேலையை விட்டே செல்லத் தோன்றிய மனநிலையில் தொடங்குகிறது புத்தகம்.
‘இனிமேல் நல்லாப் படிப்பேன்யா …தெரியாம மருந்து குடிச்சிட்டேன், என்னை எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்’ என்று கதறிய அந்தப் பையனின் குரல் அவரது இதயத்தை அறுத்தது போலவே வாசகர் நெஞ்சையும் அறுக்கும். தலைமை மருத்துவர் அவரை அழைத்து வாழ்க்கையின் வெற்றி தோல்விகள், மரணத்தை சந்தித்தே தீரவேண்டிய மருத்துவத் துறையின் தவிர்க்க முடியாத தன்மை எல்லாம் பொறுமையாக எடுத்துரைத்து சமாதானப் படுத்தி அனுப்ப, அறுபது வயது வரையிலும் தொடர்ந்த பல அரிய அனுபவங்கள் சிலவற்றின் தொகுப்பு தான் அந்தப் புத்தகம்.

இந்தத் தலைப்பே, மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்ற ஓர் அன்பர் எடுத்துக் கொடுத்த வாசகம் தான். ஊரில் செல்வந்தரான ஒருவர், தமக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறி வீடு திரும்பியதும், இவரை வீட்டுக்கு அழைத்து அன்பு பாராட்டுகையில், ஒரு முக்கியமான கேள்வி கேட்டிருக்கிறார். மயக்க மருந்து உட்கொண்ட பிறகு, என்னுயிர் உடலில் எங்கே தரித்திருந்தது, நான் இருந்தேனா, இறந்து மீண்டேனா, அந்த நிலைக்கு என்ன பெயர் என்பது தான் அவரது ஐயம்.
மருத்துவர் விளக்கி இருக்கிறார், அதைக் கேட்டதும், அந்த மனிதர், ‘இதைத்தானே சித்தர், ஐம்புலனைக் கட்டறுத்துத் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று பாடி இருக்கிறார்!’ என்று வியந்தாராம். அதிலிருந்து தான், மயக்க மருந்தில் இயங்கும் தருணத்தைத் ‘தூங்காமல் தூங்கி’ என்று தனது புத்தகத்தின் தலைப்பாக்கி இருக்கிறார் மாணிக்கவாசகம்.
எத்தனையோ கொலைகளைச் செய்ததான வழக்குகளைச் சுமந்த ஒருவர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தபோது, ‘டாக்டர் எனக்கு ஊசின்னா பயம்!’ என்று சொன்னாராம். மருத்துவமனையில் தலைமைச் செவிலியராக இருந்த ஒரு மூத்த பெண்மணி, தமக்கு அறுவை சிகிச்சை என்றபோது அத்தனை நடுங்கினாராம். இதெல்லாம் பேசும் இந்தப் புத்தகம், உண்மையில் ஒரு மருத்துவரது பார்வையில் விரியும் நோயாளிகள் குறித்த அக்கறை, கரிசனம், நேயம் இவற்றின் அற்புதமான வெளிப்பாடு.
அபாரமான புத்தகக் காதலரான அவர், தமது இல்லத்தில் எந்தெந்த புத்தகங்கள் எப்போது வாங்கியது, வாசித்தது என்று, அவரைக் காணச் சென்ற சமயம், மிகக் குறுகிய நேரத்தில் தமது புத்தக அலமாரிமுன் நின்று விளக்கியது அவரது ரசனையின் பிரதிபலிப்பு. உறவினரும், நெருங்கிய நண்பருமான எழுத்தாளர் வண்ணதாசன் தான், இவரை வற்புறுத்தி மருத்துவ வாழ்க்கை அனுபவத்தை நூலாக்கம் செய்யவைத்தது.
இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு அவரை அழைத்துப் பாராட்டியதும், சில பிரதிகள் இணைத்து நண்பர்களுக்கு அளியுங்கள் என்று சொல்லி ஓர் இணைப்புக் கடிதம் எழுதி இருந்தார். அந்த முதல் கடிதத்தில் தான் அதிர்ச்சியான அந்தச் செய்தியை அவர் தெரிவித்து விட்டிருந்தார், புத்தகம் விளைந்த ஓராண்டுக்குள் அவர் புற்று நோய்க்கு ஆளாகி இருந்தார், லா ச ராமாமிர்தம் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் HUNTER AND THE HUNTED எனும் சொல்லாடலைக் குறிப்பிட்டு, ‘வேட்டையாடுபவனே வேட்டைக்கு உட்பட நேரும் நிலை’ என்று வலியோடு விவரித்திருந்தார்.
புத்தகம் பேசுது இதழுக்கு சந்தாவும், சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து தனக்கு வாசிக்க என்று ஒரு பட்டியலும் அதற்கான காசோலையும் இணைத்திருந்தார் அடுத்த கடிதத்தில்!
பின்னர் சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த அவரை, அவரது நூலை அறிமுகப்படுத்திய மருத்துவர் வெங்கட்ராமன் அவர்களோடு சென்று சந்திக்கையில், பரந்த வாசிப்பு அனுபவத்தை இரண்டு பேரும் பரிமாறிக் கொள்வதைப் பார்க்க நேர்ந்தது. ஓமியோபதி மருத்துவரின் மருத்துவ ஞானத்தைத் தாம் வியந்து நோக்கியதை, ஊர் திரும்பியதும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மாணிக்கவாசகம். தனது புத்தகத்தை வாசித்துப் பாராட்டிய அன்புக்காக அத்தனை நட்பு பாராட்டியவர் அவர்.
அக்டோபர் 2009ல் நேர்ந்த அவரது மறைவு பேரதிர்ச்சியாக இருந்தது. வண்ணதாசன், பின்னர் விகடனில் எழுதிய ஒரு சிறுகதையில், ‘நண்பன் மாணிக்கவாசகம் இப்போது இல்லை, அதற்காக அவன் நம்பரை அலைபேசியில் அழித்துவிட முடியுமா என்ன?’ என்பது போல ஓரிடத்தில் எழுதி இருப்பார்.

அந்தப் புத்தகம் அவரை அறிமுகப் படுத்தியது எனில், அவரது அன்பின் ஆழத்தினால் அடுத்தடுத்து அறிய வந்த அவரது தோழமை உறவுகள், அவர்கள் மூலம் சங்கிலித் தொடராக இன்னும் விரிந்து கொண்டிருக்கும் நட்பு வட்டம் எல்லாம் வாசிப்பின் கொடையன்றி வேறென்ன?
மருத்துவ அனுபவ புத்தகத்தில், இளவரசர் போர்க்கலை கற்றுக் கொள்ளும் கதை எப்படி இடம் பெற்றது?
தனது அனுபவங்களில் ஒன்றை விளக்க, மருத்துவர் எடுத்துக் கொண்ட கதை அது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி ஒருவரது சுவாசம் தடைப்பட்டு உடல் நீலம் பாரிக்கவும், அறுவை சிகிச்சை செய்த இளம் மருத்துவர் திகைத்துச் செய்வது அறியாமல் இவர் உதவியை நாட, இவர் நேர்த்தியாகத் தலையிட்டு அவரைக் காப்பாற்றிய நிகழ்வை விளக்கவே அந்தக் கதை. ஆனால், அந்தச் சிறிய நொடிப்பொழுது அனுபவத்திற்கு இரண்டு பாகங்கள் உண்டு.
முதல் கட்டம், சமயோசிதமாக, இடுக்கியில் சிறிய காடாத் துண்டு எடுத்து, நோயாளியின் தொண்டையில் சிக்கிய கோழையைத் துடைத்து, மூச்சுக் குழலின் தடையை அகற்றி விடுகிறார் மாணிக்கவாசகம். மூச்சு சீராகிறது, இவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அதே கதை, திரும்பவும் மூச்சுத் திணறல்.
இப்போது அந்த இளம் மருத்துவர் இன்னும் பீதியடைகிறார், ஆனால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சட்டென்று ஊகித்து விடும் மருத்துவர் மாணிக்கவாசகம், பிரச்சனையைச் சரி செய்து சுவாசத்தை மீட்டெடுக்க உதவிக் காப்பாற்றி விடுகிறார்!
என்ன நடந்தது எனில், முதல் முறை இடுக்கியில் காடாவை எடுக்கையில், ஒன்றுக்குப் பதிலாக, ஒன்றோடு ஒன்று ஒட்டி இரண்டு சிறிய காடாத் துண்டுகள் இடுக்கியோடு வந்திருக்கின்றன.
ஒன்றை வைத்துத் துடைத்து வெளியே எடுக்கையில், கீழிருந்த மற்றொரு துண்டு இவர் பார்வைக்குத் தப்பித் தொண்டைக்குழியில் விழுந்து மூச்சுக் குழாயில் அடைத்திருக்கிறது. ஆனால் சட்டென்று அதை உணர்ந்து, ஸ்கோப் மூலம் பார்த்து, அதையும் வெளியே எடுத்ததைச் சொல்லும் இடத்தில், ‘மேலே பாய்ந்த ஈட்டி உடலில் தைக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான் என்றாலும், ஈட்டி முனையில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டது’ என்று நிறைவு செய்திருப்பார் அந்தக் கட்டுரையை. அது தான் உடம்பெல்லாம் கண்ணாயிருப்பது!