ஸ்ரீதர் மணியன்
இலக்கிய தளத்தில் சிறுகதைகள் தவிர்க்கவியலாத வடிவங்களாகின்றன. இன்று இலக்கிய தளம் பின்நவீனத்துவம், பிறழ்வெழுத்து, ஆட்டோ பிக்ஷன் என பன்முகம் கண்டு உருமாற்றம் பெற்று வருகிறது. மேற்கத்திய கலாச்சாரத் திணிப்பும், வெகுசன நுகர்வோர் தாக்கமும் இன்று கிராமங்கள் என்ற கருதுகோளினை முற்றிலும் அழித்துவிட்டன. அதன் எச்சங்களே இன்று காணக்கிடைக்கின்றன.

கிராமங்கள் இன்று வாழத் தகுதியற்றவனவாகக் கருதப்படுகின்றன. ஒரு பாக்குப் பொட்டலத்திற்கு விலை ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்து சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு சட்டபூர்வ உரிமையினை அரசு, ‘மக்களுக்கான அரசுகள் வழங்கியுள்ளன. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என உலகிற்கு எடுத்துரைத்த ஓர் எளிய விவசாயி தான் விளைவித்த பொருளுக்கு விலை கூறிட உரிமையில்லை. விளைவித்த பொருளை தெருவில் நின்று கிடைத்ததை எடுத்துச் செல்லும் அவலத்தினை அவன் கண்ட பலன்.
இவ்வாறான எளிய மக்களைப் பின்புலமாகக் கொண்டு வட்டார வழக்கில் எதார்த்தமான சிறுகதைகளைப் படைப்போர் தமிழ்மணி போன்ற வெகுசிலரே. இவ்வாறான சிறுகதைகள் அன்றாட வாழ்வின் சிறுசிறு கீற்றுகளை உள்ளடக்கியவை. எளிய மக்களின் நடைமுறை வாழ்வினை, அவர்களது வாழ்வு அவலங்களை இலகுவான மொழியில் வாசகனுக்கு அளிப்பவை.
அவற்றிற்கு அடுக்கு மொழியும், மிகை வர்ணனைகளும் சொற்கட்டும் அவசியமற்றவை, இயல்பான மொழியில் வாசகனை தன்னுடன் அழைத்துச் செல்பவை. இத்தகைய தனது பன்னிரண்டு சிறுகதைகளை நூலாக்கித் தந்துள்ளார் தமிழ்மணி. தனது வட்டார வழக்குச் சொல்லான “முகாமி” என்ற சொல்லைத் தலைப்பிட்டு தனது படைப்பினை உருவாக்கியுள்ளார். இச்சொல் பரவலாக அறியப்படாததே. இதன் பொருளை அறிய வேண்டி அதனை நூலில் கண்டடையத் தூண்டுகிறது.
தொடக்கக் கதையான கெடாவெட்டு ஆணினம் சார்ந்து வாழும், வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் பெண்களின் கையறு நிலையினை பின்னணியாகக் கொண்டது. கணவன் எவ்வாறிருந்தாலும் தன்னிச்சையாகக் குடும்பப் பொறுப்பேற்றுக் கொண்டு வாழ்வினை எவ்வாறேனும் நடத்திச் செல்ல விழையும் பெண்களை, பெண்ணினத்தை அது சித்தரிக்கிறது. முள்ளினை முள்ளால் எடுப்பதே சிறந்த முறை என்ற கருத்தினை அக்கதை மாந்தர்களின் மனப்பொருமலின் வழியாக, உரையாடல்களின் வழியாக அது கூறுகிறது. இருப்பினும், தங்களுக்கான வடிகாலினைத் அப்பெண்கள் தேடும் ஒரு படைப்பாக அதனைக் கொள்ளமுடியும்.
“நனச்சு அடிச்சா நாலு பக்கமும் தெறிக்கும்” என்ற கதை நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் அளவிற்கு செல்வாக்குடைய காவிகளைக் குறித்துப் பேசுகிறது. ஆண்டான் முதல் சாமானியன் வரை கோலோச்சிப் பிழைக்கும் வலிமை பெற்ற குருக்களை வாசகனுக்குக் காட்டிக் கொடுக்கிறது. எத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளும், குற்றங்கள் புரிந்தாலும் எள்ளளவும் அது குறித்து எண்ணாமல் தங்கள் வழி போகும் குரு, அவர்களது சீடர்கள் இக்கதையில் வருகின்றனர். சிதம்பரம் போன்ற எண்ணற்ற சாமானியர்களின் அரசியல் பகடி எங்கும் காணக்கிடைப்பது இக்கதையின் வழியாக உணரலாம்.
ப்ளாக்ஷீப் சிறுகதை காவி அரசியலின் உத்தியைத் தெளிவாகக் காட்டுகிறது. நாட்டுப்பற்று என்னும் நுண்ணரசியலைக் கையிலெடுத்துக் கொண்டு உண்மையான குற்றவாளிகள் ஓர் அப்பாவி மனிதனை மனவாதைக்குள்ளாக்கும் காட்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்ற சொல் வழக்கினை உறுதிப்படுத்துகிறது. இத்தகையோர் அதிகாரத்தினைக் கைக்கொண்டால் சாமானியனின் அடிப்படை விருப்பு வெறுப்புகளும், அரசியல் சட்டம் அவனுக்கு அளித்திருக்கும் உரிமைகளும் நடைமுறையில் எவ்விதமான சூழலை உண்டாக்கும் என்பது இக்கதை நம்முன் வைக்கும் காத்திரமான வினாவாக உள்ளது.

எளியவனின் இறுதிப் பற்றுக் கோடான நீதிமன்றமும், அதன் தீர்ப்புகளும் அரசியல் பிழைத்தோருக்கு என்றுமே பொருட்டல்ல என்பதும் இக்கதை கூறும் செய்தியாக உள்ளது.
புலம் பெயர்ந்து தங்கள் வசிப்பிடத்தைத் துறந்து அல்லலுறும் எண்ணற்ற மனிதர்களின் குறியீடாக நிற்கிறது ஒரு கதை. இந்துராஷ்டிரம் அமைந்துவிட்டால் தன் வாழ்க்கையே மாறிவிடும், தனது கட்சி ஆட்சியமைத்துவிட்டால் மண்ணெல்லாம் பொன்னாகும், பொற்காலம்தான் என எண்ணி வாக்களிக்கும் இந்தியக் குடிமகனின் நகலாக இக்கதை நாயகன் உருக்கொள்கிறான். வாக்கரசியலின் தந்திரத்தினை, உணர்வுபூர்வமான, மதத்தினை அடிநாதமாகக் கொண்ட அரசியலை இக்கதை சிறப்பாகக் கூறுகிறது. கொள்ளை நோய் ஊரடங்கு குறித்த எண்ணற்ற கதைகள் எழுதப்பட்டாலும் அவற்றில் ஆகச்சிறந்த கதையாக இதனை உறுதியாகக் கூறவியலும்.
இன்னும் சாதியைக் கொண்டு பணியினை ஒதுக்கீடு செய்யும் கதை, மகளிர் சுயநிலைக் குழுக்களின் மற்றொரு பரிமாணத்தை விளக்கும் கதை. சாதி அரசியல். கலப்புத் திருமணங்களின் எதார்த்தத்தினை விளக்கும் கதைகள் என பல்வகைப்பட்ட சிறுகதைகளில் ஓரிரண்டு மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெண் இனத்திற்கு சிறப்பளித்து அவர்களை முதன்மைப்படுத்தியுள்ளது பல கதைகளின் அடியோட்டமாய் உள்ளது குறிப்பிடத்தக்கது. நூலின். அனைத்துக் கதைகளையும் கட்டுரையில் விளக்கிக் கூறுதல் முறையன்று. வாசகர்கள் அதனை வாசித்திடுதலே படைப்பாளிக்கு நாமளிக்கும் பெருமையாகும்.
தனது தந்தைக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாக முகாமி சிறுகதை விளங்குகிறது. ஒரு மகனின் தவிப்பும், பாசமும் கதையின் இழையானாலும், இயக்கத்திற்கும், தோழர்களுக்கும் இக்கதை பெருமை சேர்க்கிறது. தன் மகன் இயக்கத்தில் பங்கேற்பதனையும், கவிதை எழுதுவதனையும் பெருமை பாராட்டிப் பேசும் ஓர் உன்னதத் தந்தையாக இப்படைப்பில் அவர் சித்திரம் கொள்கிறார்.
தனது மகனின் கவிதையைப் படித்துவிட்டு அது குறித்து அவர் கூறும் சொற்கள் ஆழ்ந்த பொருள் கொண்டவை. “நாம வாழுற எடம் குப்பதேன். ஆனா குப்பயாயிருச்சுன்தேன் எழுதனும்., குப்பயாவே இருக்குன்னு எழுதக்கூடாது., மாத்துறதுதான நம்ம வேல., இருக்குறதுதேன் எல்லாருக்குந் தெரியுமே., என்ற சொற்கள் “தனது மகனுக்கான சொற்கள் மட்டுமல்ல., இத்தகைய பிரச்சினைகள் குறித்தான நமது அனைவரின் பார்வையும், கோணமும் எவ்வாறிருக்க வேண்டும் என எடுத்துரைக்கிறது. அவரது முகாமி எது என்ற வினாவிற்கு அவர் அளிக்கும் விடையும் அருமையானது, சிறப்புடையதுமானது.
கவிஞராக, களச்செயல்பாட்டாளராக, நடிகர், இயக்குநர் என அறியப்பட்டாலும், த.மு.எ.க.ச வில் பல பொறுப்புகளில் செயலாற்றிவரும் தமிழ்மணி இப்புத்தகத்தின் வாயிலாக சிறந்த வட்டார வழக்குக் கதை சொல்லியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். தோழர் தமிழ்ச்செல்வன் இந்நூலிற்கு சிறப்பான அறிமுகவுரையினை அளித்துள்ளார்.
த.மு.எ.க.ச,வின் உமர் பாரூக் தனது வகுப்புத் தோழனும், படைப்பாளியுமான நூலாசிரியருக்கு வாழ்த்துரை அளித்து தனது நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். படைப்பாளிகள் பலருக்கு வழிகாட்டி, உற்ற தோழனாய் விளங்கும் பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தினை பதிப்பித்து வெளியிட்டுள்ளது.