கொள்கையை, நம் தமிழகத்தில் திணித்து, நிரந்தர பிணியை ஏற்படுத்தி, பயிற்சி மைய கலாச்சாரத்தை வேரூன்ற வைக்க, தில்லி மோடி அரசு கவர்னர் மாளிகை வழியே பெருமுயற்சி செய்கிறது. கல்வி பற்றிய அடிப்படை புரிதல் இல்லாத காவிவாதிகளும், கார்ப்பரேட் தனியார்மய வெறியர்களும், அந்த முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதை பார்க்கிறோம். இதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கனவாகும். கல்வி இப்போது ஒத்திசைவுப் (concourance) பட்டியலில் உள்ளது. மாநில அரசின் ஒத்திசைவு இல்லாமல் எதையும் கல்வியில் அமல்படுத்தக்கூடாது என்பதே இதன் பொருள்.
ஆனால் இவை யாவற்றையும் புறந்தள்ளி விட்டு மும்மொழிக்கொள்கை, சமஸ்கிருதம் கட்டாயம், ஏழு பொதுத் தேர்வு, எல்லா கல்லூரி படிப்புக்கும் நுழைவுத்தேர்வு என்று அதிகாரத் திணிப்பை அது ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்காத, ஜனாதிபதி ஒப்புதல் பெறாத கல்விக்கொள்கையை, நாட்டின் மீது திணிக்கும் முதல் அரசாக மோடி அரசு திகழ்கிறது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான அம்சம் ஆகும்.
எல்கே.ஜி முதல் பி.எச்.டி வரை எல்லாவற்றிலும் தேர்வு என அலறிவிழும் சமூகமே அவர்களுக்கு தேவை. மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வை அறிமுகம் செய்து குழந்தைகளை இது சொத்தை, இது அழுகல் என கத்திரிக்காய் பொறுக்குவது போல புறந்தள்ளும் கொடுமையை நம் தமிழகத்தில் நாம் அனுமதிக்கமுடியாது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள நமது மண்ணின் கல்விக் கொள்கையை உருவாக்கும் கல்விக்குழு அறிவிப்பை நாம் மனதார வரவேற்கிறோம்.
ஏற்கெனவே மதிய சத்துணவுத்திட்டம், பள்ளி சுகாதாரத் திட்டம், 26 வகை விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கி ஒரு குழந்தையை பள்ளியில் தக்க வைக்கும் மதசார்பற்ற மனிதநேயக்கல்வி நம் தமிழகத்தின் பிரமாண்ட வெற்றி. அதைத்தான் நாம் கடந்த ஐம்பதாண்டு காலமாக பின்பற்றி வருகிறோம். சுந்தர்பிச்சை உட்பட பெரிய ஆளுமைகளையும், விசுவநாதன் ஆனந்த் உட்பட சர்வேதச வெற்றியாளர்களையும், கலாம் உட்பட நம் பாரத ரத்னாக்களையும் உருவாக்கிய தமிழக கல்வியை மேலும் “முன்னுதாரணம்” ஆக்கிட நமது தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கும் தற்போதைய கல்விக்குழு சாதிக்க வேண்டும் என்பதே நமது அவா.
கல்வியில் ஒன்றாம் வகுப்பில் அடி எடுத்து வைக்கும் அனைத்து குழந்தைகளையும் கல்லூரி வரையில் தக்க வைக்கும் கல்வியாக நம் தமிழகக் கல்வி மிளிரட்டும். எப்போதும் அச்சடித்த கேள்வி – பதில்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மேலும் புரையோட வைக்கும் நுழைவுத்தேர்வு கல்வியை நாம் விரட்ட வேண்டும்.
மந்தைகளாக நம் குழந்தைகளை நடத்திட நாம் அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளை, மாணவர்களை, ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை, தேர்வர்கள் என்றே அழைக்கிறது. நாம் அவர்களை மனித உயிர்களாக மதிப்போம். சுயசிந்தனை, கற்பனை வளம், அறிவாற்றல், சுதந்திர கற்றல், மனித நேய தேடல் கொண்டவர்களாக அவர்களை கட்டமைக்கும் கல்வியே தமிழக கல்வியாக மலரட்டும்.
தமிழக கல்விக் குழுவிற்கு முழு ஆதரவு கொடுப்போம். கல்வியில் தமிழகத்தை “முன்னுதாரணம்” ஆக்குவோம்.