நிகழ் அய்க்கண்
இந்நூலானது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம், அதனைச் செயல்படுத்திய விதம், அதற்குப்பின்னால் உள்ள பொருளாதார அரசியல், இதனால் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் மீது ஏற்படுத்திய பாதிப்புக்களின் பல்வேறு அம்சங்களைப்பற்றி விரிவாக அலசுகிறது.
இன்று புழக்கத்திலிருக்கும் காகிதப்பணத்தின் முகமதிப்புக்குச் சட்டமுறை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், அதுவே அனைவராலும் பணம் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பணமதிப்பு நீக்கம் என்பது, அரசாங்கம் தான் வழங்கிய சட்டமுறையிலான நாணய அங்கீகாரத்தை ரத்து செய்வதாக புரிந்துகொள்ள வேண்டும்.

2016 நவம்பர் மாதம் 8 ந் தேதி இரவு, பிரதமர் நரேந்திரமோடி தொலைக்காட்சியில் தோன்றி, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நள்ளிரவு முதல் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம், ஊழலைத்தடுக்கவும், கறுப்புப்பணத்தை அழிக்கவும், எல்லைதாண்டிவரும் கள்ளநோட்டுக்களை ஒழித்து, தீவிரவாதச்செயல்களை முறியடிக்கவும் முடியும் என்றார்.
இந்தியாவில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் ரூபாய் நோட்டுக்களின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது என்பதிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் பெரிதும் பணம் சார்ந்த பொருளாதாரம் என்பது தெளிவாகும். நாட்டின் பொருளாதாரத்தில் பாதிக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் முறைசாரா தொழில் மூலமே நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 85 சதவீத முறைசாராத் தொழிலாளர்கள் இதைச் சார்ந்தே இருக்கின்றனர். இதையறியாமல், மொத்தப்பணப்புழக்கத்திலிருந்த 86 சதவீதமான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அன்றாடப் பரிவர்த்தனைகளுக்காக அந்த வருடமுழுக்க மக்கள் எந்த அளவுக்கு துயருற்றனர் என்பதை நாடே அறியும்.
ஊழலைத் தடுக்கவும், கறுப்புப்பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்தை அழிப்பதற்கும் பணமதிப்பு நீக்கம் பயனளிக்கும் என ஆரம்பத்தில் கூறிவந்த அரசானது, எதிர்பார்த்ததற்கு மாறாக, பெருமளவு பழைய பணநோட்டுக்கள் வங்கிகளுக்கு திரும்பிவருவதை உணர்ந்து கொண்டதற்குப் பிறகு, ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்துகொண்டு பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைப்பற்றி, மாற்றிமாற்றி பேச ஆரம்பித்தது.
அதாவது, முதலில் கள்ள நோட்டுக்களைக் கண்டறியும் நோக்கத்தை முன்னிறுத்தியது. அதன்பின், வங்கிகளில் பெறப்பட்ட டெபாசிட்டைப் பயன்படுத்தி வளர்ச்சிக்கு முதலீடு செய்வது என்றது. பின்னர், வரி ஏய்ப்பைத் தடுக்கலாம் எனவும், பொருளாதாரத்தை முறைப்படுத்தி வருவாயைப் பெருக்கலாம் என்றது. இறுதியாக, பணமில்லா மின்னணு பரிமாற்றத்தை பொருளாதாரத்தில் அறிமுகப்படுத்தலாம் எனக்கூறியது.
பொதுவாக, பிற நாடுகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளை குற்றச்செயல்களைத் தடுக்கவும், அல்லது வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அல்லது கணக்கில் காட்டப்படாத வருமானம் உடையவர்களின் இருப்பு மதிப்பை அழிக்கவும், சில சமயங்களில் பணவீக்கம் அதிகரித்துவந்த போதிலும் செயல்படுத்தினர். இதோடு கூட, மக்கள் மின்னணு பரிவர்த்தனை முறைக்கு மாறுவதை ஊக்குவிப்பதற்கான உள்நோக்கமும் இருந்தது.
இவையாவற்றிற்கும் மேலாக, பணமதிப்பு நீக்கத்திற்கான நடவடிக்கைகளை படிப்படியாகத்தான் செயல்படுத்தினர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது பணவீக்கம் அதிகம் இல்லாத சூழலில் மட்டுமின்றி, அவசரகதியாகவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
வரலாற்று ரீதியாக, இந்தியாவில் பணமதிப்பு நீக்கமானது 1946 ஜனவரி மாதம், உயர்மதிப்பு கொண்ட 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்களும், 1978 ஆம் ஆண்டு, 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுகளும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. இந்த இரண்டு வேளைகளிலும், பெரும்பான்மை மக்கள் யாரும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தால், பணமதிப்பு நீக்கத்திற்குச் சொல்லப்பட்ட தர்க்கம் என்னவென்றால்; அதாவது, ஊழல் மற்றும் நேர்மையற்ற, முறையில் சொத்து சேர்த்தவர்களுக்கு இந்நடவடிக்கை பாதகமாக அமையுமென்றும், ரொக்கப் பணத்தை கறுப்புப்பணம் என எண்ணியதும், பணமதிப்பு நீக்கத்தினால் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டு தீவிரவாதிகளின் நிதி ஆதாரம் முடக்கப்படுமென்றும், மக்கள் ரொக்கப் பரிவர்த்தனைகளிலிருந்து, காசோலை மற்றும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மாறிவிடுவார்களென்றும் நம்பப்பட்டது.
ஆனால் நம்பியதற்கு மாறாக, பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, கறுப்புப்பணம் அதிகரித்திருப்பதையும், சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்தவர்களுக்கு இந்நடவடிக்கையானது எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

இதேபோல், எல்லைக்கு அப்பால் அச்சிடப்படும் கள்ளநோட்டுக்களை பணமதிப்பு நீக்கத்தின் மூலம் ஒழித்து, தீவிரவாதிகளின் செயல்களை முடக்கலாம் என வாதிட்டு வந்தனர். ஆனால், இந்திய விசாரணை ஆணையமும், தேசிய புள்ளியல் நிறுவனமும் 2016இல் நடத்திய ஆய்வின்படி, கள்ளநோட்டுப்புழக்கத்தின் அளவு, 400 கோடி ரூபாய் (.022%) மட்டுமே என்கிறது.
மேலும், கடந்த நான்கு வருடங்களில் கள்ள நோட்டின் சதவீதம் அதிகரித்ததற்கான சான்று ஏதுமில்லை என்கிறது ரிசர்வ் வங்கி. இதிலிருந்து கள்ள நோட்டிற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்றாகிறது. பணமதிப்புநீக்கத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்திட்ட நடவடிக்கையில், இரகசியத்தன்மை மற்றும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசானது முக்கியத்துவமளித்து செயல்பட்டதின் காரணமாக, அதிகமான சீர்குலைவிலிருந்து பொருளாதாரத்தையோ, மக்களையோ பாதுகாக்க (இந்நடவடிக்கை) அனுமதிக்கவில்லை.
படிப்படியாக பணமதிப்பு நீக்கத்தை செயல்படுத்தியிருந்தால், மக்கள் அதற்குத் தகுந்தாற்போல் தங்களைத் தயார் செய்துகொண்டிருப்பர். இன்னும் சொல்லப்போனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இரகசியத் தன்மையில்லாமல் வெளிப்படையாகச் செய்திருந்தாலே சந்தேகத்திற்கிடமான அனைத்து முதலீடுகளையும் கண்டறிந்து, இத்திட்டத்தின் குறிக்கோளை அடைந்திருக்க முடியும்.
அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் கள்ளச்சந்தையில் நிலவும் பணப்பரிவர்த்தனையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதுதான் எனில், இருக்கக்கூடிய வரி நிர்வாகச் சட்டத்தின் மூலமே கறுப்புப்பணத்தை சரியான முறையில் திரட்டியிருக்க முடியும். ஆனால், யதார்த்தத்தில் அப்படிச் செய்யவில்லை.
பணமதிப்பு நீக்கம் குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தியிருக்கவேண்டும். அதாவது, பழைய ரூபாய் நோட்டுகளுக்குக்கு சட்டப்படியான உரிமையை ரிசர்வ்வங்கி அனுமதித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கருத்துக்களைக்கூட கணக்கில் கொள்ளாமல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர், அரசு – ரிசர்வ் வங்கி- வங்கிகளுக்கிடையே ஒத்திசைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் மக்களிடையே குழப்பம் மட்டுமல்லாது, பலவித இன்னல்களுக்கும் உள்ளாயினர்.

பணமதிப்புநீக்க நடவடிக்கையின் விளைவாக கறுப்புப்பணம் வங்கிக்கு திரும்பாது என அரசாங்கத்தினர் ஆரம்பத்தில் எண்ணியிருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, 2016 டிசம்பர் மாத இறுதிக்குள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் 90-97 சதவீதம் வங்கிகளுக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்து, அரசு நினைத்திருந்ததைவிட குறைவான அளவே கறுப்புப்பணம் இருந்திருக்கவேண்டும். அல்லது கறுப்புப்பணத்தை வைத்திருப்போர் தங்களது கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க வெவ்வேறு சட்டபூர்வமான, வங்கி உள்ளிட்ட பரிமாற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இதுதவிர, ஊழல்வாதிகள் வரிச்சட்டங்களில் உள்ள விதிவிலக்குகள் மற்றும் வங்கிகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்ட பணமாற்று விதிமுறைகள் ஆகியவற்றிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கறுப்புப்பண நோக்கத்தை தோற்கடித்துவிட்டனர்.
மக்கள் அன்றாடம் சந்தித்த வேதனைகள் ஒருபுறமிருக்க, பெரிய அளவிற்கான தொடர்விளைவுகளை பொருளாதாரத்தில் பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. பணத்தட்டுப்பாடு பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு குறைத்திருக்கிறது அல்லது நிறுத்தியிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவீத மக்களுக்கு வங்கிச்சேவை சென்றடையவில்லை என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கேற்றவாறுதான் பணப்புழக்கமும் இருந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முக்கியமான பேரியல் பொருளாதார விளைவு என்னவென்றால், அது உற்பத்திச்சுருக்கம்தான். இது அதோடு மட்டும் முடிந்து விடவில்லை. பணமதிப்பு நீக்கமும் அதனால் உருவான பொருளாதார மந்தமும் சேர்ந்து உருவாக்கியிருக்கிற அதிர்வலைகளானது, நேரடியாகவும் மறைமுகமாகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் பட்ஜெட் நடவடிக்கையில் நிகழப்போகும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் பொருளாதார மந்தமும் நேரடியானதாகும். பணமதிப்பு நீக்கமானது, வங்கித்துறையின் நம்பகத்தன்மை, மற்றும் அதன் செயல்பாடுகளைப் பாதித்ததன் காரணமாக, (பணப்புழக்கத்தட்டுப்பாடு) ஏற்படும் பொருளாதார மந்தம் மறைமுகமானதாகும்.
அரசின், தெளிவான புரிதலற்ற, திட்டமிடப்படாத, ஒரு புதிய கற்பனை உலகத்தின் உருவாக்கமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது மிகப்பெரிய பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதனால் பெருங்குழப்பமும், சீரழிவும் உருவானது. இதனையொட்டி, அரசானது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை மறைக்க பல்வேறுவகையான ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை முன்வைத்து தனது விளம்பர யுக்திகளை நகர்த்தியது.

ரொக்கமற்ற பரிவர்த்தனையே, நாட்டின் வளர்ச்சியை அதிகப்படுத்தும், லஞ்சத்தை ஒழிக்கும் எனக் கட்டமைத்ததோடு நில்லாமல், மக்களை மின்னணு பயன்பாட்டில் பங்கேற்கச்செய்வதன் மூலமே அவர்களுடைய நலனை உயர்த்த முடியும் எனக்கூறி, பயன்படுத்தப்படும் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு சலுகைகளையும் அரசு வாரி வழங்கியது.
இந்தியாவில் 90% மேலான கொடுக்கல் வாங்கல் என்பது ரொக்கப்பணம் மூலமாகவே நடைபெறுகின்றன. ரொக்கப் பணப்புழக்கமானது, நாட்டின் பொருளாதாரத்தையும், முறைசாரா தொழில் சார்பையும் பிரதிபலிப்பதாக இருக்கின்றன, ஒருபக்கம் நாடுமுழுக்க வங்கிச்சேவைகள் இன்னமும் பரவலாக்கப்படவில்லை. இன்னொருபக்கம் இணையச்சேவையில் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதோடு மட்டுமல்லாது, வாடிக்கையாளர்கள் மின்னணு பரிவர்த்தனைச்சேவையை பயன்படுத்திக்கொள்ளும் போது சேவைக்கட்டணமும் வேறு செலுத்தவேண்டும்.
சிலசமயங்களில், மின்னணு பரிவர்த்தனைகள் பாதுகாப்பற்றதாகவும், தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானதாகவும் ஆகிவிடுகின்றது. கணினி இணைய குற்றங்கள், ஊடுருவல் பிரச்சனை, அனுமதிக்கப்படாத தகவல் திருட்டுக்கள் ஆகியவற்றை இன்னும் முற்றிலுமாக தடுக்கப்படாத சூழலில், மக்களை இதுபோன்ற பரிவர்த்தனைக்குள் பழக்கப்படுத்துவது மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடவே செய்யும்.
கூர்ந்து கவனித்தால், அடிப்படையில் பணமதிப்பு நீக்கத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நீண்டகால கனவென்பது, சிறு மற்றும் குறு தொழில்களை முற்றிலுமாக அகற்றுவதென்பதுதாகவே இருக்கின்றது. சிறு தொழில்களை நசுக்குகிற கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் பொருளாதாரத்தின் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க நினைக்கும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளும் அதனை ஒத்ததாகவே இருப்பதைக் காணமுடியும்