நாறும்பூநாதன்

கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நெல்லை புத்தகத்திருவிழா 2022 மிகச்சிறப்பாக பாளையங்கோட்டையில் நடைபெற்றது. உண்மையில் இது ஒரு திருவிழா போலத்தான் நடந்தது என்று சொல்ல வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்
மு.அப்பாவு அவர்கள் புத்தகத்திருவிழாவை துவக்கி வைத்தார்.
பதினோரு நாட்களிலும் மூன்றரை லட்சம் பார்வையாளர்கள் வரை கலந்துகொண்டனர். சுமார் 3 கோடிக்கான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. 125 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
சென்னை புத்தகக்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருநை நாகரிக அரங்கம் இங்கும் அமைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அருகாமையில் இருக்கும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை தொல்லியல் தளங்களை மாணவர்கள் நேரில் சென்று பார்க்க ஆர்வத்தை தூண்டும்வகையில், இந்த செயற்கை அரங்கம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர்கள் மட்டுமே சுமார் 68000 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் தயாரித்த “காணி” ஆவணப்படம் (30 நிமிடங்கள் ஓடக்கூடியது) காணிப்பழங்குடியினரின் வாழ்வியலை உயிரோட்டமாய் காட்டியது. பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு வந்து ரசித்தனர். கவிஞர் கனிமொழி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புத்தகத்திருவிழாவின் மற்றொரு அம்சம், 92 அரசு பள்ளி மாணவ, மாணவியர் தயாரித்த கையெழுத்து பத்திரிக்கைகள். மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை தூண்டும் வகையில், அவர்களை கையெழுத்து பத்திரிக்கை தயாரிக்க எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தலைமையில் கூடிய குழு பல்வேறு ஆலோசனைகள் தெரிவித்தது. அதற்கு உதாரணமாக, ஏழாம் வகுப்பு மாணவி மு.சூடாமணி தயாரித்த கையெழுத்து பத்திரிக்கை காண்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், பள்ளி மாணவர்கள் தாங்களே தயாரிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
தங்கள் ஊரின் சிறப்பு, பொருநை நதி செல்லும் பாதை, நெல்லை மாவட்ட சாகித்ய அகாடெமி விருதாளர்கள் பற்றிய குறிப்புகள், தற்கால சிறார் இலக்கிய எழுத்தாளர்கள், நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை, சொந்தமாய் எழுதிய பாடல்கள், ஓவியங்கள் என்று அருமையாய் தீட்டியிருந்தனர். தமிழ்நாடு பாடநூற்கழகம் இவற்றை வாங்கி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
வ.உ.சி. மைதானத்தின் உள்ளரங்கில், தினமும், மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. ஓவியப்பயிற்சி, பனை நாரில் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, மண் பாண்டங்கள் தயாரித்தல், சிரட்டையில் சிற்பங்கள் தயாரித்தல் என பத்து நாட்கள் நடைபெற்றன.
இதில் ஒவ்வொரு நாளும் சுமார் 250 பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
காலை பதினோரு மணிக்கு, தினமும், படைப்பாளிகள் மாணவர்கள் சந்தித்து உரையாடும் நிகழ்வு நடைபெற்றது. படைப்பாளிகளுடன் அருகே அமர்ந்து கேள்விகள் கேட்டு பயனடைந்தனர். இதில், எழுத்தாளர்கள் வண்ணநிலவன், மலர்வதி, கவிஞர் கலாப்ரியா, சிறார் எழுத்தாளர்கள் எஸ்.பாலபாரதி, ஆதி வள்ளியப்பன், பூங்கொடி, இசை வல்லுநர்கள் மம்மது, மருத்துவர் ராமானுஜம், ஜேசுதாசன், ஓவியர் சந்துரு, நாடக நடிகர் மு.சு.மதியழகன், இனியன், மார்க்சிய காந்தி, பேரா.நா.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியர்களுக்கு தினமும் பல்வேறு கலைப்போட்டிகள் நடந்தன. அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தினமும், கலை பண்பாட்டு துறை சார்பில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும், எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகள் நடைபெற்றன.
மாலை நேர கருத்தரங்கில், தமிழ்நாட்டின் முக்கிய படைப்பாளிகள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன், உதயசங்கர், நக்கீரன், காஞ்சனை ஆர்.ஆர்.சீனிவாசன், பாமயன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பாரதி கிருஷ்ணகுமார், மு.முருகேஷ் என பலரும் பங்கேற்றனர்.
மதுக்கூர் ராமலிங்கம், பேரா.கு.ஞானசம்பந்தன் ஆகியோர் தலைமையில் பட்டிமன்றங்கள் என விழா களை கட்டியது.
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மேடை உருவாக்கப்பட்டிருந்தது மற்றொரு சிறப்பு அம்சம். துணியில் தயாரிக்கப்பட்ட பேனர், மூங்கில், தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மேடையை அலங்கரித்தன.
புத்தகப்பாலம் என்ற அமைப்பு துவக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு மனிதரும் பதிப்பாளர்களை அணுகி ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நூல்களை வாங்கி, கிளை நூலகங்களுக்கு அனுப்பலாம். எல்லாமே ஆன்லைன் மூலமாக நடக்கிறது.
நெல்லை மாவட்ட சுதந்திரபோராட்ட வீரர்களின் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. தினமும் இரவு ஏழு மணிக்கு உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மொத்தத்தில், புத்தகத்திருவிழா நெல்லை மக்களின் கொண்டாட்டமாய் திகழ்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
நெல்லை மாவட்ட நிர்வாகமும், பபாசியும் இணைந்து நடத்திய இந்த புத்தகத்திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நெல்லை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.