எஸ் வி வேணுகோபாலன்

மக்சீம் கார்க்கியின் பெயரோடு சேர்த்துக் கண்ணில் பட்ட தலைப்பு, அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தூண்டியது, அமெரிக்காவிலே! ‘அதென்ன, அமெரிக்காவிலே’ என்ற ஆர்வத்துடன்தான் தமிழ் புத்தகாலயத்தின் அந்தச் சிறிய தொகுப்பைக் கையிலெடுத்தது. ‘கார்க்கி என்ன சொல்லி இருப்பார், முதலாளித்துவக் கோட்டையான தேசம்
பற்றி’ என்ற தீ பற்றிக் கொண்டது, அருமையான வாசிப்பு அனுபவம் அது.
மக்சீம் கார்க்கியின் அங்கத நடை, ஏகாதிபத்திய அமைப்பின் மீதான அறச்சீற்றம், முதலாளித்துவத்தில் எல்லாம் அமோகமாக இருக்கிறது என்கிற கற்பிதத்தின் மீதான எள்ளல் எல்லாம் அருமையாக இருக்கும். அந்தப் பிரதி இப்போது கைவசம் இருக்கிறதா என்று உடனே கண்டறிய முடியவில்லை, தமிழில் அதை வழங்கி இருந்தவர் புகழ்பெற்ற எழுத்தாளர்
கு.அழகிரிசாமி என்பதை எப்படி கவனிக்கத் தவறினேன் என்பது வெட்கத்தோடு சொல்லவேண்டியது.
சொர்க்கபுரி என்று சித்தரிக்கப்பட்ட அமெரிக்க மண்ணிற்குக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்றுவந்த அனுபவங்களை அவர் வெளிப்படுத்தி இருந்த விதம் அபாரமானது. இன்று எடுத்து வாசித்துப் பார்த்தாலும் மண்டையிலடித்தாற் போல் நின்று பேசக்கூடிய எழுத்து அது. குடியரசு வேந்தர் (ஆஹா என்ன தலைப்பு!) என்பது, அந்தத் தொகுப்பின் சுவாரசியமான ஒரு கட்டுரை.

பெரும் பணக்காரன் ஒருவனை நேரில் சந்திக்கப் போகிறார் கார்க்கி. உலகின் மிகப்பெரிய செல்வந்தன் எப்படி இருப்பான், ஆஜானுபாகுவாக நெடிய, அகன்ற, ஒளிவீசுகிற பகட்டான உருவமாக இருப்பான் என்றெல்லாம் கற்பனை செய்கிறார். அவனது மேலங்கி எப்படி இருக்கும், அவன் உயரத்திற்கேற்ற பெரிய மேல்சட்டையின் கணக்கற்ற தங்கப் பொத்தான்கள் எப்படி மின்னிக்கொண்டிருக்கும், எப்படி அவன் சூடாகவும் சுவையாகவும் சமைக்கப்பட்ட இறைச்சியைச் சுவைத்துக் கொண்டே இருப்பான், அவனுக்குத் தாடைகள் வலித்துவிடக் கூடாதே என்று எழில் கொஞ்சும் இளம்பெண்கள் தாங்கள் கடித்து எளிதில் விழுங்கத்தக்க உணவாக எப்படி அவனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருப்பார்கள், அவன் படுக்கை எப்படி மைல்கணக்கில் நீண்டிருக்கும்….என்றெல்லாம் விவரித்திருப்பார் கார்க்கி.
அந்தப் பெருமாளிகையினுள் அவர் நுழைகையில், ஒரு சாய்வு நாற்காலியில் வயதை மீறிய களைப்பும், முதுமையும் தாக்கி வற்றி உலர்ந்துபோன ஒரு சுருட்டைப் போல் காணப் பொறுக்க மாட்டாத ஓர் உருவம் அமர்ந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போவார் கார்க்கி. அவன் தான், உண்மையில் தாம் காணவந்த உலகின் ஆகப்பெரிய சொத்துக்கு அதிபதி என்று தெரியவும் மேலும் அதிர்ச்சியில் உறைந்து போவார்.
அவன் உருவத்தினும் படு மோசமான தன்மையில் அவனது சிந்தனைகள் இருப்பதை அவர் பின்னர் உரையாடலில் கொணர்வார்.
‘பணம் பண்ணுவது என் பழக்கம்’ என்பான் அவன் – காலையில் எழுந்ததும் பல் துலக்குவது போல்! பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வாய் என்றால், மேலும் பணம், மேலும் பணத்தைக் கொண்டு என்ன செய்வாய் என்றால், ஆசாமி என்ன ஒன்றும் புரிபடாது இருக்கிறார் என்ற நகைப்போடு, மேலும் மேலும் பணம் செய்வேன் என்பான்! மூலதனத்தின் இதயத்தில், இதயமே இல்லையே என்று உணர வைப்பார் கார்க்கி. உழைப்பைச் சுரண்டும் தத்துவத்திற்கு இதயம் இல்லாதிருப்பது மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் எப்படி அழுகி முடைநாற்றம் வீசுகிறது என்பதையும் நம் நாசியில் நெருடும்படி எழுதி இருப்பார் கார்க்கி.
‘உன் பொழுதுபோக்கு ஆசைகள் என்ன’ என்ற கேள்விக்கு, அந்தக் கேடுகெட்ட மனிதன் சொல்வான், ‘கழுத்துப் பகுதி தெரியும்படி கத்தரிக்கப்பட்ட கவுன்கள் அணிந்த இளம் நங்கையர் நாட்டியத்தைத் தக்க இடத்தில் அமர்ந்து பார்க்கவேண்டும்’ என்று!
திரைப்படங்களின் மசாலாக் கலவை எப்படி போதையூட்டும் நடன அசைவுகளும், வெறியூட்டும் வன்முறை அடிதடிகளும் அடுத்தடுத்து வைத்துத் தொகுத்துப் படைக்கப்படுகிறது என்பதன் வேர்கள், சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களது அராஜக உளவியலில் இருப்பதை அசாத்திய முறையில் கார்க்கியின் எழுத்து உணர்த்திவிடுகிறது.
சுவாரசியமான விஷயம், இந்த உரையாடலின் கடைசிப் பகுதியில் காத்திருக்கிறது, அந்தப் பெரு முதலாளி கேட்கிறான், ‘கீழை தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்களே, உங்கள் ராஜாக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், எங்களூரில் அவர்களையெல்லாம் வரவழைத்து குஸ்தி போட வைத்துப் பார்த்து ரசிக்க நெடுநாள் ஆசை, நாளொன்றுக்கு எத்தனை டாலர்கள் செலவாகும்?’

நிலப் பிரபுத்துவத்தை முதலாளித்துவம் எப்படிப் புரட்டிப் போட்டு அடித்து மேலேறி வரும் என்பதை மட்டுமல்ல; மல்யுத்த வீரர்களையும் தனது கேளிக்கைக்கான கூலி உழைப்பாளிகளாக மாற்றி வைக்கும் அதன் தன்மையை இலக்கியமாக வழங்கிச் சென்றிருக்கிறார் கார்க்கி.
அந்தப் புத்தகத்தின் அடுத்த முக்கிய பகுதி, ‘நல்லொழுக்க ஞானி’. சோவியத் இலக்கிய நுட்ப வாசகரான ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன், இந்தக் கட்டுரை லட்சக்கணக்கில் அச்சடித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய காலப் பொருத்தம் கொண்டது என்று சொல்லிக் கொண்டே இருக்கும் முக்கிய படைப்பு இது.
அமெரிக்காவில் கார்க்கி தங்கி இருந்த இடத்திற்கு அவரைப் பார்க்க வரும் ஓர் எளிய மனிதர்தான் கதாநாயகன். அவர் உள்ளே நுழைவதையும், நீண்ட உரையாடலுக்குப் பின் வெளியேறுவதையும் குறும்படக் காட்சிபோல் வாசகர் மனத்தில் விரியும்வண்ணம் எழுதி இருப்பார் கார்க்கி.
தன்னை அந்த மனிதர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் விதமே ஒரு நாடகபாணியில் தான் அமைந்திருக்கும். தன்னை கார்க்கிக்குத் தெரிந்திருக்க வேண்டுமே என்று தான் போகும் அந்த அறிமுகம்.
“பத்திரிகைகளில் ஓர் ஆசாமியைப் பற்றி, அதாவது ஒரு குடிகாரனைப் பற்றி ஒரு கதை வெளிவந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கூத்துக் கொட்டகையில் ரகளை செய்தானே, நான்தான் அந்த ஆள்! ‘குழந்தையை அடிக்கும் மிருகம்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியும் என்னைப் பற்றியதுதான். ‘மனைவியைக் கணவன் விற்கிறான்’ என்ற செய்தியும் என்னைப் பற்றிய செய்தியே. பொதுவாகச் சொல்லப்போனால், குறைந்தது வாரத்துக்கு ஒரு தடவை – பொது ஜன ஒழுக்கம் எப்படிக் கெட்டுப் போய்விட்டது என்பதை நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.’’
இப்படிப் போகிறது கதை.
கார்க்கிக்கு விளங்குவதில்லை, தன்னைத் தானே ஒரு மனிதன் எதற்காக இத்தனை மட்டமாக நடத்திக் கொள்ளவேண்டும், இது ஒரு நோயா என்று கேட்கிறார், ‘இல்லை என் பணி அது, சங்கம் எனக்கு இட்ட வேலைகளைச் செய்கிறேன்’, என்று அவரை வியக்க வைக்கிறார் அந்த மனிதர். என்ன சங்கம்? ‘நல்லொழுக்க ஞானிகள் சங்கம்’,
இப்போதும் பிடிபடுவதில்லை கார்க்கிக்கு! ‘உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன’ என்ற கேள்விக்கும், அந்த மனிதர் நேரடியான பதிலை அளித்துவிடுவதில்லை. ஒழுக்கம் என்கிற சமூக இலக்கணம் எப்படித் தோன்றியது என்கிற கேள்வியை அந்த உரையாடல் மூலம் வாசகர் நெஞ்சில் அபாரமாக விதைக்கிறார் கார்க்கி.
சொத்து உடையவர்களுக்கு அதை அடுத்தவர்கள் கவர்ந்துசென்றுவிடக் கூடாது என்ற தேவையில் இருந்து பிறக்கிறது ஒழுக்க போதனை. ஏனென்றால், அது அவர்களது சொந்த நலன்களைப் பாதுகாக்கத் தேவையாக இருக்கிறது. ஆனால், அப்படியில்லாமல் தலையில் முளைத்த மயிரைத் தவிர வேறு யாதொரு உடைமையும் இல்லாதவனாக ஒருவன் இருந்தால், நல்லொழுக்கத்தினால் அவனுக்கு என்ன பயனும் இல்லை என்கிற இடம் அபாரம்!
‘ஆனால், இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது, கீழ்த்தட்டில் உள்ள மக்கள் அதிகமாகப் பாவம் செய்வதில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை, வசதியும் இல்லை. சட்டம், தெய்வம் இரண்டும் அவர்களை வசமாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகப் பணம் படைத்தவர்கள் மேலும் பணம் திருட வேண்டி இருக்கிறது. அவகாசம் இருப்பவர்கள் அதிக பாவங்கள் செய்வதற்குத் தேவை இருக்கிறது. தங்கள் சொத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஒழுக்கத்தை போதிக்கவும் வேண்டி இருக்கிறது, அவர்களுக்குத் தான் பாவம், எத்தனை இக்கட்டான சூழ்நிலை – அதனால் தான், எங்கள் சங்கம் இந்த வேலைகளைச் செய்கிறது’ என்கிறார் அவர்.
‘அப்படியானால், உங்கள் சங்கத்தின் நோக்கம் தான் என்ன?’
‘அப்படிக் கேளுங்கள், மேல்தட்டின் ஒழுக்கக் கேடுகள், குற்றங்கள், அராஜகச் செய்கைகள் சமூகத்தில் உலா வந்தால் நன்றாகவா இருக்கும், அதற்காக, கீழ்மட்டத்திலும் சமூகம் அப்படித் தான் இருக்கிறது என்று நம்ப வைத்துவிட வேண்டும். அவர்கள் செய்யும் அதே போன்ற பாவங்களை எங்களைப் போன்ற எளிய மனிதர்களும் செய்வதை ஊடகங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்லும். ஒரு நதியில் சிறு சிறு எலும்புத் துண்டுகளாக நிறைய வீசிக் கொண்டே இருந்தால், அவற்றின் நடுவே பெரிய மரக்கட்டை மிதந்துபோனால் கூட அது பார்வைக்கு வராது! பெரியதனக்காரர்கள் செய்யும் பெரும் பாவங்களுக்கு உறை போட்டு மூடும் வேலையை எங்கள் சங்கம் செய்கிறது.’
‘இதனால் என்ன லாபம்?’
‘நிரந்தரமாக மக்கள் ஹிப்னாடிஸ சக்திக்கு அடங்கி மூளை மயங்கிக் கிடக்கிறார்கள். சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆகவே, பத்திரிகைகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு ஏமாந்து போகிறார்கள். பத்திரிகைகள் கோடீஸ்வரர்களுக்குச் சொந்தமானவை. எங்கள் சங்கமும் அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விஷயம் விளங்கியதா, அமைப்பு எவ்வளவு பிரமாதமாக இருக்கிறது!’ என்று கேட்கிறார்.
மக்சீம் கார்க்கியின் இந்த அசாத்தியப் படைப்பை வாசிக்கும் எவருக்கும், முதல் நாள் நாளேட்டில் வாசித்தது, இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு வார இதழில் படித்தது, தொலைக்காட்சி சானல் செய்திகளில் பார்த்தது எல்லாமே இப்போது மறு வாசிப்புக்கும், மறு பார்வைக்கும் வைக்க வேண்டிய தேவை ஏற்படும். விவாதப் பொருள்களை யார் தீர்மானிக்கின்றனர், சில விஷயங்கள் ஏன் பொதுவெளியில் விசாரணைக்கே வருவதில்லை, பல அராஜக நிகழ்வுகள் பற்றிப் பெருங்குரல் எடுத்து ஆர்ப்பரித்தாலும் ஏன் அது பரந்த விவாதத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதில்லை, அபத்தமான விஷயங்கள் சிலவற்றை ஏன் நாள் கணக்கில் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டே இருக்கின்றனர் என்பதெல்லாம் பற்றிய தொடர் சிந்தனைகள் மலரும்.
சில ஆண்டுகளுக்குமுன் குமுதம் வார இதழில், கடலைக் கொல்லைக்குக் காவல் போடுவது பற்றிய சுவாரசியமான கதை ஒன்று வாசித்தது நினைவுக்கு வருகிறது. நிலக்கடலை போட்டவர்கள் கொஞ்சம் அசந்தால், வேரோடு பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள் களவாணிகள். தேர்ச்சியான இருவரை இராக்காவல் போடுகிறார் வயல்காரர் ஒருவர்.
மறுநாள் காலையில் வந்தால், தம்முடைய களத்தில் நிறைய வேர்க்கடலைத் தோல் குப்பையைப் பார்த்து திடுக்கிட்டுக் கேட்பார், ‘வேலியே பயிரை மேய்ந்து விட்டீர்களா?’ என்று. அதற்கு அந்த காவலாட்கள், ‘இது உன் எடத்துல பிடுங்கின கடலை இல்லை, அதுல கொறஞ்சா கேளு, இது வேறெங்கையோ பறிச்சிட்டு வந்தது, நெலம் வச்சிருக்கவன் திருடக் கூடாதுன்னு தத்துவம் பேசுவ, எதுவும் அத்தவன் எப்படி திங்க?’ அசராமல் சொல்வார்கள்,! மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களது அற்புதமான கதைகளில் ஒன்று இது.
தத்துவப் பார்வையின் இலக்கியமும், இலக்கியப் புனைவில் பரிமாறும் தத்துவமும் எத்தனை அருமையானவை. சமூக மாற்றத்திற்கான சிந்தனைக் கொடை அல்லவா!
