ஆயிஷா இரா.நடராசன்

1.புனிதப் பாவங்களின் இந்தியா – அருண் எழுத்தச்சன்
தமிழில்: யூமா வாசுகி – காலச்சுவடு ரூ.325/-
புனிதப்படுத்தப்பட்ட பல அயோக்கியதனங்களில் ஒன்று சாமிக்கு நேர்ந்து விடுதல் எனும் பெயரில் குழந்தைகளை விபசாரத்திற்குள் தள்ளிவிடுதல் ஆகும். இந்த அவலம் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளிவந்த இந்த நூலை தமிழில் தந்திருக்கிறார் தோழர் யூமா வாசுகி.
மரபு ரீதியிலான ஆதாரங்களைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்ய வீசப்பட்ட பெண் கொடுமை என்பது பற்றி தனது விசாரணையை ஒரு பத்திரிகை துப்பறிவாளராக அருண் எழுத்தச்சன் விவரிக்க விவரிக்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. மங்களூருவின் நடனக்காரிகைகளிடம் தொடங்கி கர்நாடகாவின் உச்சங்கிமலை, கூட்லி, ராஜமுந்திரி (ஆந்திரா) ஒரிசாவின் பூரி ஜெகன்னாத் கோவில் என அவலம் விரிவடைகிறது. தாசி ஆக்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னமும் சட்டத்தின் நிழலில் அராஜகம் தொடர்கிறது. இந்த நூலை வாசித்து முடிக்கும்போது நமது இந்தியா, பாரம்பரியம், இந்து தர்மம் போன்ற சொற்களின் அர்த்தம் பொடிப்பொடியாகி நமக்குள் எரிமலை வெடிக்கிறது. அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் யூமா வாசுகி.
2.கடல்: உயிரியல் விந்தைகள் – பேரா எஸ். லாசரஸ்
பாரதி புத்தகாலயம் ரூ.210/-
கடல் பற்றிய நூல்கள் தமிழில் மிகக் குறைவு. பேராசிரியர் லாசரஸ் எழுதிய 81 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தேன் ஒலி எனும் மாத இதழில் இவை மாதா மாதம் வெளிவந்ததாம். இன்று தொகுப்பாக வந்துள்ளது.
கடல் விஞ்ஞானி லாசரஸ் குமரிக் கடல் வழியே நம் பயணத்தை சிறப்பாக தொடங்கி வைக்கிறார். இந்தியக் கடல்மீன்வளத்தின் தற்போதைய நிலையை ஓர் ஆய்வு மூலம் முன் வைக்கிறார். 27 லட்சம் மெட்ரிக் டன் மீன்கள் ஆண்டுதோறும் நம் இந்தியக் கடல்களில் பிடிக்கப்படுகின்றன. வங்கடை, குதிப்பு, நவரை போன்ற மீன் இனங்கள் அழிந்து வருவதை வாசிக்கும்போது மனம் பதறுகிறது.
இந்த நூல் கடல் உயிரிகள் பற்றி ஏராளமான தகவல்களை கொண்டுள்ளது. முதலை, ஓங்கி(டால்ஃபின்) முத்து சிப்பி, கடல்குதிரை, ஆமை என பல்வேறு உயிரினங்களின் அணிவகுப்பு இந்த நூல். கூடவே மீன்களின் வாழிடங்களும் அவற்றை பாதுகாக்கும் முறைகளும் சதுப்பு நிலக்காடுகள், நெய்தலைக் காப்போம் போன்ற அத்தியாயங்கள் மூலம் ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அறிவியல் நூலாக மிளிர்கிறது. நீர்யானைகள் பற்றிய 78ம் அத்தியாயம் தனிச் சிறப்பானது. நல்ல படங்கள். நேர்த்தியான வெளியீடு.
3.கடிகாரங்களைப் பற்றி சில செய்திகள் –
யாக்கவ் திலுகலேன்ஸ்கி தமிழில் : நா.தர்மராஜன்
உயிர்ப்பதிப்பகம் ரூ.100/-
மாஸ்கோவின் ராதுகரி பதிப்பகம் 1983இல் வெளியிட்ட மிகச் சிறப்பான நூல் இது. யாக்கவ் திலுகலேன்ஸ்கி சிறார்களுக்காக எழுதிய அறிவியல் நூல். சோவியத் ஓவியர்
வி. குள்கோவின் ஆகப் பிரபலமான ஓவியங்கள் இதில் தனிக் கவனம் பெறுகின்றன. யாருமில்லாத அறையில் டிக்டாக்கென ஓயாமல் பேசிக்கொண்டிருப்பேன் – நான் யார்? எனும் அழகிய விடுகதையோடு தொடங்குகிறது கடிகாரங்கள் பற்றிய இந்த நூல்.
முதலில் குழந்தைகளுக்கு நேரத்தை கணக்கிட அது சொல்லித் தருகிறது. தண்ணீரில் இயங்கிய சமவார் கடிகாரம், சுவர் கடிகாரம், தாத்தா கடிகாரம், மேசைக் கடிகாரம், கடைசியாக கைக்கடிகாரம் என விரிகிறது. ரொம்ப சுவாரசியமான கடிகாரங்களும் உண்டு. அக்காலத்தில் அலாரம் அடித்தபடியே பன்னீரைத் தெளித்த கடிகாரங்கள், குறட்டைவிட்டு தூங்கியவர்களை எழுப்பிய அலறிகள் என பட்டியல் நீள்கிறது. மீன் வயிற்றில் இவான் என்பவர் கண்டறிந்த கடிகாரம், போர்க்கப்பலையே சுட்ட கடிகாரம் என பலப்புதிய அதிசயங்களோடு அக்காலத்தின் நேரக்காப்பாளர்கள் குறித்த பல சுவையான விஷயங்களையும் இந்நூலில் திலுகலேன்ஸ்கி முன் வைக்கிறார். நா. தர்மராஜனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் உயிர் பதிப்பகத்தின் சிறப்பான வெளியீடு.
4.சாதி வர்க்கம் விடுதலை – பி.சம்பத் –
பாரதி புத்தகாலயம் ரூ.310/-
தீண்டாமை ஒரு குற்றம் மட்டுமல்ல அது ஒரு பெரும் சுரண்டல் கட்டமைப்பு. இந்தியாவின் வலதுசாரிகள் மீண்டும் மனுவையும் வர்ணாசிரமத்தையும் கட்டமைக்கத் துடிக்கிறார்கள். சாதி அமைப்பை புதுப்பொலிவு தந்து காப்பாற்ற சட்டங்கள் வருகின்றன. குலத்தொழில் முறையை அடிக்கோடிடுகிற புதிய கல்விக்கொள்கை முதல் ஆண்டான் அடிமை சாதி வெறியை மதவெறி முலாம்பூசி நாடு முழுதும் வெறுப்பு அரசியலை கட்டவிழ்க்க அவர்கள் பல்வேறு புதிய உத்திகளோடு களம் இறங்குகிறார்கள்.
எனவே இடதுசாரிகளான நாம் வர்க்கம் வர்க்கம் என்று அலறாமல் சாதியைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. சமத்துவத்தின் மீது மாறாத உறுதிகொண்ட பொதுவுடமை இயக்கம் சாதியக் கொடுமைக்கு எதிராக ஆற்றி உள்ள பங்களிப்பை தோழர் சம்பத் அவர்களின் இந்த நூல் பேசுகிறது.
சாதிய விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல ஒரு நீண்ட கால செயல் திட்டத்தையும் அவர் முன்மொழிகிறார். உடனடிக் கடமை சாதிய ஒழிப்பே. அருந்ததியர் போராட்டம், உத்தப்புரம் தீண்டாமை, சுவர் தகர்ப்பு, தலித் ஆதிவாசி எழுச்சி என்று பரந்துபட்ட விவாதம் இந்த நூலில் பதியப்பட்டது தனிச்சிறப்பு. ஒவ்வொரு சமூக விடுதலை ஆர்வலரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
5.நெல்மரப் பறவை – கன்னிக்கோவில் ராஜா–
நிவேதிதா பதிப்பகம் ரூ.100/-
கன்னிக்கோவில் ராஜா சிறார் கதையாளர்களில் இன்று குறிப்பிடத்தக்கவர். சென்னை வாசி. தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்பு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். நான் அறிந்த வரையில் சிறந்த கதை சொல்லி. இந்தத் தொகுப்பு குழந்தைகளுக்காக அவர் எழுதிய ஒன்பது கதைகள் அடங்கிய தொகுப்பு. கோழிகள் தங்கள் குஞ்சுகளின் உணவருந்தும் இடத்தில் சில புறாக்களும் சாப்பிட வருகின்றன. இதுகுறித்து குஞ்சுகள் விவாதிக்கின்றன. உணவு அனைவருக்கும் பொது. நம்மை விரட்டிவிட்டு அவர்கள் சாப்பிட்டால் தவறு. சேர்ந்து சாப்பிடுவதில் தவறில்லை என்று அம்மா கோழி சொல்வது அருமை.
எறும்புகள் குடியிருப்பு, கட்டுப்போட்ட முயல், அம்மாவைக் காணோம் போன்றவை குழந்தைகள் விரும்பி வாசிக்கத்தக்க எளிய நடை கதைகள். நெல்மரப்பறவை கதை நம் கல்வியின் பலவீனத்தை சுட்டும் அழகான கதை. பாடத்தில் வருவது, காதால் கேட்பது இவற்றை எல்லாம் விட நேரில் அனுபவிப்பதே மெய் என்பதை சொல்கிறது. ஓவியர் ஜமால் இந்த நூலுக்கு தன் அற்புத தத்ரூப படங்களால் உயிர்ப்பு ஊட்டி இருக்கிறார்.
6.அபிமானி சிறுகதைகள் – நீலம் ரூ.200/-
அபிமானியின் பன்னிரண்டு கதைகள் அடங்கிய தொகுப்பு இது. அவரது கவிதைகள், சிறுகதை நாவல் எனும் பரந்துபட்ட இலக்கிய பங்களிப்பை தமிழ் இலக்கிய உலகம் மறக்காது.
1990களில் இருந்து தலித் இலக்கியத்தில் தமிழில் தனக்கென்று ஒருமுத்திரை பதித்தவர். தலித் வாழ்வின் யதார்த்தவாத புனைவு இலக்கியம் அபிமானியுடையது. சாதாரணமாக “தீட்டு” என்று தன் வீட்டிற்குள் விடாதவர்களை பாம்பு அடிப்பதற்கு அனுமதிக்கும்போது நடக்கும் பகடியை பதிவு செய்யும் பாம்புக்கதை முதல், தாங்கள் வளர்க்கும் நாய், சேரி பொட்டை நாயை புணர்வது கண்டு கொதித்து சேரி நாயை கொல்லும் சாதிவெறியை பதியும் “வரி” கதை, வத்திப்போன கிணற்றுக்குக்கூட சாதி காரணம் தேடும் போலீஸ் – புகார் பற்றி பேசும் விசாரணை என விரியும் இந்தத் தொகுப்பின் பன்னிரண்டு கதைகளுமே தலித் வாழ்க்கை இழிவானது எனும் பொது புத்தியை எதிர்த்து நிற்பவை.
7.போருக்கு அப்பால் – ம.மணிமாறன்
பாரதிப்புத்தகாலயம் ரூ.210/-
இலங்கையின் தற்போதைய பொருளாதார சீரழிவு எதைக்காட்டுகிறது. மேலே மக்களை சுரண்டி கொழுத்த ஓரிரு குடும்பங்களின் ஆக்கிரமிப்பு (monopoly capitalism) தம்மை எங்கே அழைத்துச் செல்லும். நமது அம்பானி அதானி சூழலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியம் அல்லவா. இந்த நூலின் மலையக, இசுலாமிய இலங்கை தமிழ் மக்களது அவல வாழ்வை இலக்கியமாக வாசிக்கும்போது வேறு நாடு என்கிற உணர்வு இன்றி இயல்பாக நம் கதையாக பதற முடிகிறது.
24 நூல்கள் பற்றிய தோழர் மணிமாறனின் விமர்சன நூல் இது. மலையக மக்களின் வாழ்வை நெருக்கடிகளை, புலம்பெயர்ந்த மக்கள் இலக்கியங்களை, முஸ்லிம்களின் வாழ்க்கை நெருக்கடிகள் என்று இந்த புத்தகங்களின் ஊடாக நாம் ஈழத்தின் சேரிகளுக்குள்ளும் விளிம்பு நிலை வாழ்க்கைக்கு உள்ளும் செல்ல முடிகிறது. இன ஒடுக்குமுறை மட்டுமே அனுபவிக்கும் மேல்சாதி, இன ஒடுக்குமுறை மற்றும் சாதிய ஒடுக்குமுறை இரண்டையும் அனுபவிக்கும் கொடுமைக்கார கீழ்சாதி மக்கள் அவலம் இந்தநூல் முழுதும் அலறிக்கொண்டிருக்கிறது.
8.இந்திய வண்ணத்துப்பூச்சி இயலாளர்கள்–
ஏ.சண்முகானந்தம் – உயிர்பதிப்பகம் ரூ.210/-
இந்திய வண்ணத்துப் பூச்சிகள் பற்றி இப்படி ஒரு சிறப்பான புத்தகம் வந்திருப்பதே மகிழ்ச்சிக்கான செய்தியாகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் “துளிர்” மாத இதழில் இக்கட்டுரைகள் தொடராக வெளிவந்தவை. நமது வண்ணத்துப்பூச்சிகள் புதியவை அல்ல. நமது சங்க இலக்கியம் அவற்றைப் பற்றி பேசுகிறது. நமது பண்டை மன்னர்கள் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளை பறக்க விட்டு அரசு விழாக்களை தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் உயிரினங்கள் குறித்த அறிவியல் பார்வை என்பது நமக்கு எப்போது தொடங்கியது.
இந்தியாவில் வண்ணத்துப் பூச்சியாளர்கள் எனும் விஞ்ஞானிகள் எப்போது தோன்றினார்கள். இந்த நூல் 1767இல் தமிழகத்திற்கு வந்த டென்மார்க் மருத்துவர் ஜோஹானன் கோனிங் முதல் தொடங்கி இன்றைய வண்ணத்துப்பூச்சி பூச்சி பூங்காக்கள் வரை நமக்கு விரிவாக எடுத்துரைக்கிறது. பிரடரிக்மூர், சார்லஸ் சுவைன், ஜார்ஜ் டால்போட், இ.ஒய். வாட்சன் என பல அறிஞர்களை நூல் அறிமுகம் செய்கிறது.
உலக அறிவியல் அழிவின் விளிம்பில் உள்ள வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய தனிப் பதிவு குறிப்பிடத்தக்கது. ஏராளமான படங்கள் புள்ளி விவரங்களுடன் சிறப்பாக வந்துள்ளது இந்த அரிய புத்தகம்.
9.லெனின் என் நினைவுகள் – கிளாரா ஜெட்கின்-
தமிழில்: வி. சண்முகம் – பாரதி புத்தகாலயம் ரூ.170/-
உலகில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும். மக்கள் தலைவர் என்பவர் யார்? உண்மையான புரட்சி நாயகன் என்பவரின் அடிப்படை குணாதிசயங்கள் என்ன? இந்த நூலில் எழுச்சித் தலைவர் லெனின் அவர்களின் செஞ்சேனையில் பணிபுரிந்த கிளாராஜெட்கின் அம்மையார் உட்பட 16 பேர் அவரோடான தங்களது உறவுகளை நினைவு கூர்கிறார்கள். தமிழில் அழகாக தொகுத்து தந்திருக்கிறார் தோழர் சண்முகம். மார்க்ஸின் வார்த்தைகள் நம் காதுகளில் ரீங்காரம் இடுகின்றன. கம்யூன் போராளிகள் எப்போதும் புகழ்பெற்ற சொத்தாக உழைக்கும் வர்க்கத்தின் இதயங்களில் குடி இருந்து வருகின்றனர்? அது முழுக்கவும் தலைவர் லெனினுக்கும் பொருந்தும். அவரை தொண்டர்கள் போல்ஷிவிக் தலைவர் விளாதிமிர் இலீச் என்றே அழைத்தனர். ரகசிய குழுக்களில் அவர் வி.ஐ. என்று ஆனார். ஜான் ரீட் எனும் ஒப்பற்ற வீரரின் “பாய்ச்சலின் முன்னேற்றம்” கட்டுரை மிக சிறப்பானது. இக்கட்டுரைகள் யாவும் ஒரு நூற்றாண்டிற்குமுன் எழுதப்பட்டது என்பதே நம்ப முடியாத விஷயமாக உள்ளது. தலைமை மாண்பு அறிய நாம் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.
10.வாழ்வியலாகும் கல்வி – சாலை செல்வம் – புக்ஸ் ஃபார் சில்ரன் ரூ.130/-
சிறார் செயல்பாட்டாளர், குழந்தைகளுக்கான கதை சொல்லி. முப்பது ஆண்டுகளாக கல்வி உரிமை மாற்றுக் கல்வி குறித்த தேடல் கொண்டவராக நான், சாலை செல்வமை நன்கு அறிவேன். அம்மாவின் சூப், மனிதர்கள் குரங்கான கதை, பறவை வீடு என வாசித்தும் இருக்கிறேன்.
தோழர் ச.மாடசாமியின் சிறப்பான முன்னுரையோடு இந்த புதிய நூல் வந்திருக்கிறது. அதில் சாலை செல்வத்தின் சிறார் நூலகமான கூழாங்கல் பற்றி பதிவு செய்கிறார். பள்ளிகள் அதிலும் புதுமைப் பள்ளிகள் குறித்த சாலை செல்வத்தின் தமிழ் இந்து இதழ் கட்டுரைகளின் தொகுப்பு “ஆயிரம் வாசல்” அந்தத் தொடரின் தலைப்பு. கல்வியில் தமிழக சூழலின் ஆயிரம் வாசல்களை அறிமுகம் செய்யும் முயற்சிகள் பல இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பழங்குடி இன சிறார் முதல் மாற்றுத் திறனாளி குழந்தை வரை கல்வியின் புதிய பாதை புலப்படவே செய்கிறது. கல்வி எனும் களத்தில் இதுபோன்ற நூல்கள் தேவை.