ஆயிஷா இரா.நடராசன்

இருள் சூழ்ந்த இரகசியப் பாதை –
(சிறார் நாவல்) கே. பாலமுருகன்
புது எழுத்து பக்.126 ரூ.100/-
இது கடந்த 17 ஆண்டுகளாக மலேசியாவில் – தமிழில் – தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் சிறார் இலக்கிய படைப்பாளி கே. பாலமுருகனின் மற்றுமோர் படைப்பு. மலேசிய மண்ணின் வனப்பகுதிகளின் ரப்பர் தோட்ட தொழிலாளியாய் தினமும் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் தமிழ்ச் சமூகத்தின் மீதான கவனத்தை இந்த சிறார் நாவல் இழுத்து பயணிக்கிறது. அவரது “மர்ம குகையும் ஓநாய் மனிதர்களும்” ஏற்கெனவே வாசித்து இருக்கிறேன்.
இந்த நாவல் கோவிட் நோய் தொற்று காரணமாக இடம் விட்டு இடம்மாற்றப்படும் ஒரு மலேசிய அரசாங்க மருத்துவர், மலேசிய வன கிராமமான “கம்போஸ் கஸ்கோஸ்” எனும் ஊருக்கு தன் குடும்பத்தோடு ஜாகை மாற்றிச் செல்லும் விதமாக தொடங்குகிறது. அவரது மகன் வேலன் குரலில் கச்சிதமான மர்ம நாவலாக குழந்தைகளுக்கு விருந்து படைக்கிறார் பாலமுருகன்.
யாராலும் கண்டுபிடிக்க முடியாத கம்பத்து டுரியான் தோப்பு மனிதர்கள் அறிமுகம் ஆகிய இடத்தை நான் மிகவும் ரசித்தேன். காடி, கீளாங், சேவா, ஜாகா போன்ற மலேசிய மரபு சொற்களையும் அறிந்து நாம் வியந்தபடி பயணிக்கிறோம். இந்த சிறார் நாவலை புது எழுத்து பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது. ஓவியங்களும் அருமை.

வான பலன் (அறிவியல் கட்டுரைகள்)
நெல்லை சு. முத்து, திருக்குறள் பதிப்பகம் பக். 87 ரூ.60/-
தமிழ் இலக்கியத்தை அறிவியலோடு குழைத்துக் கொடுப்பதில் தனக்கென்று ஒரு பாதை கண்டவர் நெல்லை. சு.முத்து. இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர். கலாமின் இந்தியா 2020 நூலை தமிழாக்கம் செய்தவர். நம் தமிழின் முக்கிய அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர்.
இந்த நூல் மிகவும் வித்தியாசமானது “கிளாமண்டைன்” எனும் நாஸாவின் ஆய்வுக்கலம் (சாட்டிலைட்) சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டிகள் இருப்பதை 1994இல் கண்டுபிடித்ததில் தொடங்குகிறது. ஆனால் சந்திரனின் நிலத்தடி நீர் என்பது நமது இந்துமகா சமுத்திரத்தின் தண்ணீரில் ஒரு கோடியில் ஒரு பங்கு என்பதே உண்மை, அதை அபகரிக்க கடும் போட்டி நிலவுகிறது.
திங்கள் (சந்திரன்), புதன் கோள், செவ்வாய்கோள், ஏனைய குறுங்கோள்கள், வியாழன் கோள் சனி மற்றும் சூரியன் என வானின் புதிய கண்டுபிடிப்புகளை இந்நூல் விரிவாக அலசுகிறது.
இது நம் சராசரி இதழ்களில் வரும் வார பலன் அல்ல. அறிவியல் உண்மைகள் பலவற்றை தரும் “வான பலன்”. அறிவியல் ஆர்வமுள்ள எல்லாரும் வாசிக்கலாம். ஆழ்மோதி (Deepimpact) லூசிஃபர் சுத்தியல் (Lucifer’s Hammer) போன்ற வால் நட்சத்திரங்களை பற்றி வாசிக்கும்போது பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
நிருபரின் நினைவுகள்
ஆர். நூருல்லா, புதிய கோணம். பக். 64 ரூ.60/-
தோழர் நூருல்லாவை அறியாதவர்களுக்கு சொல்கிறேன். தினமலர் நாளிதழின் தலைமை நிருபராக (40 வருடம்) இருந்து ஓய்வு பெற்றவர். தனது அரை நூற்றாண்டு கால ஊடக அனுபவங்களை தொகுத்து இருக்கிறார். ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று பக்கம் வரும் சிறிய, ஆனால், மிகச் சிறப்பான கட்டுரையாக வந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அதை வெளியிட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை தாதா ஹாஜி மஸ்தான் தினத்தந்தி நாளிதழை தினம் வாசிப்பார் எனும் ஆச்சரியமான தகவலோடு நூல் தொடங்குகிறது. சுனாமிக்கான தமிழ் சொல்லாக ஆழிப்பேரலையை தேர்வு செய்ததில் தன்பங்கு, ராஜீவ் கொலை நடந்த இடத்தில் (உயிர்பிழைத்து) தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என பலவற்றை வாசித்து ஊடகவியலாளரின் உணர்வுகளை உணரமுடிகிறது. இதழியல் எனும் துறையை தமிழில் அறிமுகம் செய்ய நூருல்லா மேற்கொண்டமுயற்சிகளை நாம் கண்டிப்பாக பாராட்டவேண்டும். பாடத் திட்டமே அவர் வழங்கியதுதான் என்பது எத்தனை அற்புதம்.
சர்வதேச தொல்லியல் அறிஞர் கே.வி.ராமனை இணைத்து அவர் நடத்திய தமிழ்நாடு நாணயவியல் ஆய்வு மாநாடு பற்றி கண்டிப்பாக எல்லாரும் வாசிக்க வேண்டும்.
பொக்கணம் –
அ.உமர் பாரூக் – டிஸ்கவரி பக். 96 ரூ.120/-
“பொக்கணம்” என்றால் ஏதுமற்ற வெற்றிடம் என்று பொருளாம். அற்புதமான இந்த நூலில் தோழர் உமர் பாரூக் தான், தீக்கதிரில் எழுதிய தொல்லியல், மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை தொகுத்திருக்கிறார்.
எத்தனையோ புதையல்கள் இப்புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்றுப் பாடலை ஆசீவகம் எனும் சமயம் சார்ந்ததாக துல்லியமாக நிறுவுகிறார் அவர். இயற்கை போக்கை ஆதரிக்கும் மதமாக நாம் ஆசீவகத்தை அறிகிறோம். அதே போல வள்ளுவர் குறித்த அந்த கட்டுரை திருவள்ளுவர் ஒரு ஜைனத் துறவியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார். மேலும் ஒற்றை மருத்துவ திணிப்பு எனும் ஒற்றை மருத்துவ திணிப்பு எனும் சர்வாதிகாரம், கொரோனா தர்மயுத்தம் 2.0, இப்படியான நம் கால சிக்கல்களை தோலுரிக்கும் கட்டுரைகளும் உண்டு.
தி. ஜானகிராமனின் “அக்பர் சாஸ்திரி” கதை (1963) தொகுப்பை பற்றி விரிவான கட்டுரை பிற்சேர்க்கை சிறப்பான ஆய்வுநூல்.
தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கம் (1933) – ப. திருமாவேலன். பரிசல் பக். 92 ரூ.100/-
சோவியத் போலவே இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்பது 1930களில் தந்தை பெரியாரின் பெரிய கனவாக இருந்தது. பிரிட்டிஷ் அரசு அவரது சமதர்மக் கொள்கை ஈடுபாட்டைக் கண்டு பீதி அடைந்து குடி அரசு இதழின் தலையங்கங்களுக்கு தடை விதித்தது. அந்த ஒப்பற்ற பொக்கிஷங்களை நண்பர் திருமாவேலன் இப்போது நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் கொண்டு வந்தவர் பெரியார். “இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்” எனும் அவரது கட்டுரையை திருமாவேலன் நமக்கு வழங்குகிறார். அந்த தலையங்கத்திற்காக பெரியாரையும் (அவரது தங்கை) கண்ணம்மாவையும் கைது செய்கிறார்கள். அத்தோடு 1920இல் அக்டோபர் 17இல் தாஷ்கண்டில் (ரஷ்யா) தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழக அளவில் ம.வெ.சிங்காரவேலர் வளர்த்தெடுத்த முறை, அதற்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு என நூல் விரிவடைகிறது.
இன்றைய கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் நம் ஆரம்ப கால போராட்டங்களை மேலும் விமர்சனப் பூர்வமாக அறிய தோழர் திருமாவேலனின் இந்த நூலையும் வாசிக்க வேண்டும்.
மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அன்னியமானதல்ல
அய்ஜாஸ் அஹமத் விஜய் பிரசாத் – தமிழில்: ராஜசங்கீதன் – பாரதிபுத்தகாலயம் பக். 272 ரூ.260/-
காரல்மார்க்ஸிற்கு மிகவும் பிடித்தமான வரி மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அன்னியமானது அல்ல. இலக்கியம், இசை, வரலாறு, மொழி, கலை அறிவியல் எதுவுமே மார்க்சியத்துக்கு அன்னியமானதல்ல. மேற்கண்ட வரியின் உண்மைப் பொருளை உரையாடலில் நிகழ்த்திக் காட்டும் ஒருதனித்துவமான
புத்தகம் இது.
உலகின் முன்னணி மார்க்சிய சிந்தனையாளர் அய்ஜாஸ் அஹ்மத் லெஃப்ட்வேர்டு புக்ஸ் பதிப்பகத்தின் தலைமை பதிப்பாசிரியர் விஜய் பிரசாத் ஆகியோர் கலந்துரையாடும் விதமாக இந்தநூல் அமைக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, அரபுநாடுகள், லத்தீன் அமெரிக்கா என்று செல்லும் உரையாடல் அவ்வப்போது இந்திய மண்ணைத்தொடுகிறது.
சுமார் 50 புத்தகங்களை குறிப்பிட்டு சொல்லி உரையாடல் தொடர்கிறது. அய்ஜாஸ் ஒரு இடத்தில் சொல்வார் பாகிஸ்்தானில் அவர் உருதுமொழியில்தான் எழுதினார். இந்தியாவிலோ இந்தியில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறார். அதற்கான காரணத்தை அவர் சொல்லும் விதம் சிறப்பு. இப்படியான உரையாடல் நூல்கள் பலவும் வர வேண்டும்.

மனிதர்கள் (சிறுகதைகள்) –
நா.கிருஷ்ணமூர்த்தி – க்ரியா – பக். 104 ரூ.160/-
எழுபதுகளில் வெளிவந்த கசடதபற இதழின் ஆசிரியர் நா.கிருஷ்ணமூர்த்தி. அதே எழுபது ,எண்பதுகளில் அவர் எழுதிய ஆழமான கதைகளின் தொகுதி இப்போதுதான் வெளிவருகிறது. கசடதபற வெளிவந்த காலத்தில் அதில் “அக்கம் பக்கம்” என்று தன் எண்ணங்களை பதிவிட்டு ஒரு பத்தி எழுதினார் அவர்.
ஆறு கதைகள்தான். ஆனால் அற்புதமான கதைகள். கம்பீரமான மொழி. அலட்டல் இல்லாததொனி. பாத்திரங்கள் இத்தனை வருடம் கழித்தும் நம் மனதில் பதிகின்றன. இக்கதைகள் மிக இயல்பானவை. உதிரும் மலர்கள், மனிதர்கள் ஓர் இரவின் பிற்பகுதியில் ஆகியவை மனதில் நிற்கும் கதைகள். அதுவும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் அவலக்கதைகள். ஆற்றில் நீச்சல் தெரியாமல் தவிக்கும் ஒருவன் தன்னை காப்பாற்ற வந்தவனை பளுவாக எட்டி உதைத்து அவன் மூழ்கிய இவன் தப்பும் “மனிதர்கள்” இத்தொகுதியின் ஆகச் சிறந்த கதை.
மனித ஜினேம் – (மனித இனத்தின் மறைநூல்) – பேரா.க.மணி NCBH பக்.441 ரூ.370/-
தமிழில் வெளிவந்துள்ள மரபியல் குறித்த மகத்தான நூல்களின் வரிசையில் சிறப்பான இடம் இந்த நூலுக்கு தரலாம். கண்ணுக்கே தெரியாத நுண் உயிரிகள் முதல் பிரமாண்ட யானை, மனிதன் என யாவற்றையும் எப்படிப்பட்ட உருவமாக இருக்கலாம் என்று வடிவமைத்து உயிர் தரும் மரபணுவை கண்டுபிடித்து, அதன் கட்டமைப்பை விவரித்து உள்ளே உள்ள தகவல்களை அதாவது 3 பில்லியன் எழுத்துகளையும் கண்டுபிடித்து அவற்றை சரியான வரிசையில் எழுதியது மனிதன் சந்திரனில் இறங்கியதைவிட மகத்தான சாதனை என்றபடி நூல் தொடங்குகிறது.
பேராசிரியர் மணி ஒரு தலைசிறந்த பயோ இன்ஃபர்மேடிக்ஸ் அறிஞர். இ்லையேல் மரபியல் குறித்த இத்தனை சுவையான முழுமையான நூலை படைக்க முடியாது. நமது அறிவியல் எழுத்துக்கள் பெரும்பாலும் இறந்த கால கண்டுபிடிப்புகளின் தகவல் பதிவுகளாகவே உள்ளன. அறிவியல் முடிந்து போன, மூடிய வடிவமல்ல. அது அன்றாடம் வளரும் துறை. அதிவேகமாக வளரும் அறிவியலின் மரபியல் போன்ற ஒரு துறையின் ஆழமான தரவுகளை சுவைபட முன்வைத்திருப்பது மணியின் சாதனை.
டி.என்.ஏ. ரேகை பற்றிய அந்த பத்தாம் கட்டுரையில் (தன் நலம்) எனக்கு ஏற்பட்ட வாய்ப்பை சமீபத்திய வாசிப்பு உச்சமாக கருதுகிறேன். இப்படியான அறிவியல் நூல்கள் தமிழில் வருவது நம்பிக்கை தரும் புதிய போக்காக மாற்றப்படவேண்டும்.
சொல்லேர் – அண்டனூர் சுரா – பாரதிபுத்தகாலயம் பக்.159 ரூ.150/-
சொல்லேர் மிக வித்தியாசமான நூல். ஒரு சொல் அதன் வேர்களை தேடிச்செல்லும் மகா யாத்திரை. எனக்குத் தெரிந்து தமிழில் இதுபோன்ற நூல்கள் மிக அபூர்வம். அண்டனூர் சுராவிடம் நமக்கு பிடித்த விஷயம் புதினமாகட்டும், சிறுகதை, குறுநாவல், கட்டுரை எதை எழுதினாலும் தனக்கென்று ஒரு தனிப்பாதை அமைத்துக்கொள்வது.
இது ஒரு சொல் ஆய்வு நூல். உதாரணமாக பாராளுமன்றமா, நாடாளுமன்றமா…. எது சரி? கனம், மாண்புமிகு எது சரி.. நாடாளுமன்றம் எனும் சொல்லாக்கம் முதலில் எப்போது பயன்பட்டது. கனம் முதலமைச்சர், மாண்புமிகு முதலமைச்சர் ஆனது எப்போது. இப்படியாக ஒரு 50 சொற்களுக்கு விரிவான தகவல் மழை பொழிந்திருக்கிறார் அண்டனூர் சுரா.
ஐயன், வாலறிவன், தலித், மிசை போன்ற சொற்களின் வேர்கள் தமிழிலேயே இருப்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது. மோடி என்ற சொல்லுக்கு தமிழ் கூறும் அர்த்தங்கள் கூட திகைக்க வைக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் நம் சமகால அரசியலையும் பேசுவது சிறப்பு.

பூமியின் எதிர்காலம் நம் கைகளில் – பேரா. கே.ராஜூ.
மதுரை திருமாறன் வெளியீட்டகம் பக். 174 ரூ.180/-
பேராசிரியர் ராஜுவின் எட்டாவது அறிவியல் நூல் இது. தலைப்பே எவ்வளவு அற்புதமாக உள்ளது. தினமும் ஒரு அறிவியல் தகவலை தனது விமர்சனப்பூர்வமான பார்வைக்கு உட்படுத்தி இரண்டு மூன்று பக்க அறிவியல் கட்டுரையாக்கி வெளியிடும் அவரது அடங்கா தேடல் நம்மை திகைக்க வைக்கும் ஒன்று.
இந்த நூலின் அறிவியல் கட்டுரைகளை மூன்றாகப் பிரிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் வியத்தகு மாற்றங்கள் பற்றியவை முதல் வகை, அவற்றால் விளைந்த சிக்கல்கள் ஆபத்துகள் பற்றியவை அடுத்த வகை. மூடநம்பிக்கை, காவி அறிவியல் போலிகளை தோலுரிப்பது மூன்றாம் வகை. ஒவ்வொரு அறிவியல் எழுத்தாளரும் அறிய வேண்டிய நடை. எந்த வகை அறிவியலையும் நம் தமிழில் தர முடியும் எனும் நம்பிக்கை தரும் பாணி அவருடையது.
டாக்டர். ஜி.ராமனும் (உளவியல் அறிஞர்) இந்த நூலுக்கு சிறப்பான ஒரு முன்னுரை வழங்கியிருக்கிறார்.